கடவுள் ஊரின் அரசியல் கலாச்சாரம்


திருவனந்தபுரத்துக்குள் எங்கெல்லாம் சுற்றலாம் என்று உள்ளூர்க்காரர் யாரிடம் கேட்டாலும், “முதலில் பத்மநாப சுவாமி கோயிலைப் பார்த்துவிடுங்கள்” என்கிறார்கள். நியாயம்தான். ஊரின் பெயரே பத்மநாபர் பெயரில்தான் இருக்கிறது திரு + அனந்த + புரம். அனந்தரின் நகரம்.

உலகின் பணக்கார சாமி
தென்னிந்தியாவில் கோயில்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்துக்கு ஓர் அடையாளக் குறியீடு பத்மநாப சுவாமி கோயில். சேரமான் பெருமானால் எழுப்பப்பட்ட இந்தக் கோயில், ஆரம்பக் காலம் தொட்டே செல்வாக்குக்குக் குறைவில்லாதது. ராஜா மார்த்தாண்ட வர்மா 1750-ல் தனது அரசாங்கம், ராஜ்ஜியம், செல்வம் அனைத்தையும் அனந்த பத்மநாப சுவாமிக்குப் பட்டயம் எழுதித்தந்து, தன் உடை வாளையும் திருவடியில் வைத்துப் பரிபூரண சரணாகதி அடைந்த பின்னர், கோயில் இன்னும் செல்வாக்கு பெற்றதாகிவிட்டது. அதாவது, பத்மநாப சுவாமியே திருவிதாங்கூர் அரசின் தலைவர் ஆகிவிட்டார். ஆங்கிலேயர் காலத்தில், பத்மநாப சுவாமிக்கு 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதை செய்யும் வழக்கம் இருந்திருக்கிறது. சுதந்திர இந்தியாவில் மன்னர் மானிய முறை நீக்கப்படும் வரை இந்திய ராணுவமும் இந்தச் சடங்கைப் பின்பற்றியிருக்கிறது. இந்த வரலாற்றையெல்லாம் தாண்டி இப்போது உலகின் பணக்கார சாமி பத்நாப சுவாமி. கோயிலில் உள்ள ஆபரணங்களின் மதிப்பு மட்டும் சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய்.

கோயிலுக்குள் ஆண்கள் சட்டை அணிய அனுமதி இல்லை. போலீஸ்காரர்களுக்குக்கூட இங்கே துண்டும் வேட்டியும்தான் சீருடை. பெண்களுக்கும் புடவையுடன் மட்டுமே அனுமதி. ஆகையால், பேன்ட் அணிந்துவரும் ஆண் - பெண் பக்தர்கள் இருபாலரும் வித்தியாசமின்றி அதற்கு மேல் கோயிலில் தரப்படும் வேட்டியை அணிந்துகொண்டு சுற்றுகிறார்கள். “ஒருகாலத்தில் அரசப் பரம்பரையும் உயர் சாதி என்று சொல்லிக்கொண்டிருந்தவர்களையும் தாண்டி யாரையும் இந்தக் கோட்டை வீதிக்குள்கூட விட மாட்டார்கள். அவ்வளவு சாதிப் பாகுபாடு இங்கிருந்தது” என்று நினைவுகூர்ந்தார் ஒரு பெரியவர். கோயிலை ஒரு சுற்று சுற்றிவிட்டு, ஊரைச் சுற்ற ஆரம்பித்தேன்.

திருவிதாங்கூர் சமஸ்தான தலைநகரம் பத்மநாபபுரத்திலிருந்து மாற்றப்பட்ட 1795 முதல் தலைநகரமாகவே நீடிக்கும் திருவனந்தபுரம், ஒருகாலத்தில் காந்தியால், இந்தியாவின் பசுமையான நகரம் என்று அழைக்கப்பட்டது. இன்றைக்கும் அந்தப் பெருமையை நகரம் இழந்துவிடவில்லை என்றே தோன்றுகிறது. அழகான சாலைகள், தேவைக்கேற்ப வாகனங்கள், நல்ல தண்ணீர் - மின் விநியோகம், தேவையான அளவுக்குப் பூங்காக்கள், மைதானங்கள், அரசாங்கமே நடத்தும் திரையரங்குகள், கலையரங்குகள்…

இந்தியாவின் ஏனைய பெருநகரங்களின் பயங்கரப் பரபரப்பு, நெரிசல் நெருக்கடி இங்கு இல்லை. பாரம்பரியக் கட்டுமானங்கள் ஓரளவுக்கேனும் பாதுகாக்கப்படுகின்றன. ஆட்டோக்காரர்கள் 15 ரூபாய்க்கு வருகிறார்கள். சாப்பிட உட்கார்ந்தால், “போத்தல் தண்ணீர் வேண்டுமா?” என்று கேட்காமல், எல்லா உணவகங்களிலும் சீரகம் அல்லது கருங்காலிக் கட்டை போட்டுக் கொதிக்கவைத்த வெந்நீர் தருகிறார்கள். இவை எல்லாவற்றையும்விட திருவனந்தபுரத்தின் முக்கியத்துவம் எதில் இருக்கிறது என்றால், அது பேணும் அரசியல் கலாச்சாரத்தில் இருக்கிறது!

காழ்ப்புணர்வுக்கு விடைகொடு
திருவனந்தபுரத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன் குடியேறிய தமிழர்கள் ஆயிரக் கணக்கில் இருக்கிறார்கள். ‘கௌரிசங்கர் மெஸ்’ ராஜன் அவர்களில் ஒருவர். பால் சேர்க்கப்பட்ட உருளைக்கிழங்கு மசால், தயிர்ப் பச்சடி, நார்த்தங்காய் ஊறுகாய், சட்னி சகிதம் பூரி கிடைக்கிறது இவர் கடையில். குட்டிக் கடை. எந்தப் பகட்டும் இல்லை. ஏராளமான சாமி படங்கள் நடுவே ராஜா ரவிவர்மாவின் ஓவியமும் தொங்குகிறது.

பக்திப் பழமாகக் காட்சியளிக்கும் ராஜன் ஒரு மார்க்சிஸ்ட் என்று தன்னை அடையாளப்படுத்திக்கொள்கிறார். ஆளும் காங்கிரஸ் ஆட்சியைக் காரசாரமாக விமர்சிக்கிறார்; அதேசமயம், அவர்கள் செய்திருக்கும் முக்கியமான பணிகளையும் அங்கீகரித்துப் பேசுகிறார். “என்னதான் அடித்துக்கொண்டாலும் பொதுக் காரியங்களில் நாங்கள் நோக்கம் மாற மாட்டோம். போகும்போது ரயில் நிலையத்துக்கு அருகில் பாருங்கள். புது பஸ் நிலையம் கட்டிக்கொண்டிருப்பார்கள். முந்தைய கம்யூனிஸ்ட் அரசு கொண்டுவந்த திட்டம். காங்கிரஸ் அரசாங்கம் உற்சாகமாக நிறைவேற்றுகிறது. பாகுபாடு கிடையாது” என்கிறார். திருவனந்தபுரத்தில் எந்த ஓர் அரசு நிகழ்ச்சியானாலும் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவரும் சேர்ந்து பங்கேற்கும் கலாச்சாரம் வெறுமனே மேடைக் காட்சியாக உருவாகிவிடவில்லை.

காங்கிரஸ், கம்யூனிஸ்ட் இரண்டையும் மாறி மாறி ஆட்சியில் அமர்த்துகிறார்கள் மலையாளிகள். பா.ஜ.க. இப்போதுதான் வேர் விட ஆரம்பித்திருக்கிறது. ஆச்சரியமாக சிவசேனா ஆட்களையும் பார்க்க முடிந்தது. இயக்கத்தின் சார்பில் இங்கு கட்டணமற்ற ஆம்புலன்ஸ் வேன் சேவை நடத்துகிறார்கள்.

பேசுவதற்கு ஓர் இடம்
திருவனந்தபுரத்தின் கௌரவ அடையாளங்களில் ஒன்றான ‘இந்தியா காபி ஹவுஸ்’ போனபோது கவிஞர் சுகுமாரனைச் சந்தித்தேன். திருவனந்தபுரவாசி. மனிதர் ஒரு காபியை ஒரு மணி நேரம் ரசித்து, ருசித்துக் குடித்துக்கொண்டிருந்தார். “நாட்டுக்குக் கேரளம் கொடுத்த நல்ல விஷயங்களில் இந்தக் கடையும் ஒன்று. கூட்டுறவு அமைப்பு. ஒரு காபியோடு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் உட்கார்ந்திருக்கலாம். நண்பர்களோடு கதை பேசலாம். ஒரு நகரத்தில் இப்படியான இடங்களெல்லாம் அவசியம் இல்லையா?” என்கிறார்.

ஜனநாயகத் தளம்
கேரளத் தலைமைச் செயலகத்துக்குப் போனபோது, அந்த வளாகத்தின் சுற்றுச்சுவரையொட்டி, பல்வேறு கோரிக்கைகளுடன் வரிசையாகக் குடில் அமைத்து உட்கார்ந்திருந்த போராட்டக்காரர்களைப் பார்க்க முடிந்தது. போராட்ட நாள் 206 என்ற அறிவிப்புப் பலகையுடனும் பழங்குடியின அடையாளங்களுடனும் அமர்ந்திருந்த பெண் போராட்டக்காரர்களிடம் பேசினேன்.

செங்கரா எனும் இடத்தில் அவர்களுக்கு வசிப்பதற்குப் பட்டயம் தருவதாகச் சொன்ன அரசு, இப்போது இங்கே அங்கே என்று இழுத்தடிப்பதை எதிர்த்துத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிவித்தார்கள். இப்படி ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு கோரிக்கையோடு கூடாரம் அடித்திருக்கிறார்கள். போலீஸார் துரத்தியடிக்கவில்லை.

மக்கள் அந்நியர்கள் அல்ல
ஊரைச் சுற்றி வந்துகொண்டிருந்தபோதே திருவனந்தபுரம் காங்கிரஸ் வேட்பாளரும் அமைச்சருமான சசி தரூரை ஆதரித்துப் பேசிக்கொண்டிருந்த முதல்வர் உம்மன் சாண்டி காணக்கிடைத்தார். நான்கு கார்கள். கொஞ்ச நேரம் பேசுகிறார். கடந்துவிட்டார். கேரள அரசியல்வாதிகள் மக்களோடு எவ்வளவு நெருக்கமாக இருக்கிறார்கள், அணுகுவதற்கு எவ்வளவு எளிதாக இருக்கிறார்கள் என்பதற்கு உதாரணமாக அமைந்தது ஒரு சந்திப்பு. கார் ஓட்டுநர் ஜான் கேட்டார்: “பெரிய தலைகள் எதையும் பார்க்க விரும்புகிறீர்களா?”
கேரள அரசியலில் இன்றைக்குப் பெரிய தலைகள் என்றால், இரண்டு பேர். ஒருவர் முதல்வர் உம்மன் சாண்டி. மற்றொருவர் முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன்.

எனக்கு உம்மன் சாண்டியைவிடவும் அச்சுதானந்தனைச் சந்திப்பதில்தான் அதிக விருப்பம். கேரள அரசியலில் எப்போதுமே சுவாரஸ்யங்களுக்கும் பரபரப்புக்கும் குறைவைக்காதவர் அச்சுதானந்தன் என்கிற காரணம் மட்டும் இல்லை; இந்தத் தேர்தலில் படைகளை வழிநடத்துபவர்களில் நாட்டிலேயே மூத்த தலைவர் அச்சுதானந்தன். ‘கன்டோன்மென்ட் ஹவுஸ்' புறப்படுகிறோம். கேரள எதிர்க்கட்சித் தலைவருக்கு அரசு தந்திருக்கும் வீடு இது. வாசலில் ஏழெட்டு போலீஸார் நிற்கிறார்கள். வீட்டில் ஐந்தாறு கட்சிக்காரர்கள் இருக்கிறார்கள். காத்திருக்கச் சொல்கிறார்கள். தூங்கி எழுந்த பத்து நிமிடத்தில், பொலிவாகிக்கொண்டு அழைக்கிறார் அச்சுதானந்தன். மனிதருக்கு 91 வயது ஆகிறது. துள்ளலுக்குக் குறைவில்லை. “இந்த வயதிலும் எது அசராமல் ஓடவைக்கிறது?” என்று கேட்டால், “காற்றுதான்” என்று கலாய்க்கிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்து மார்க்சிஸ்ட் கட்சியை உருவாக்கியவர்களில் ஒருவர் அச்சுதானந்தன். “இந்தியாவில் இன்றைக்கும் இடதுசாரிகள் அப்படிப் பிரிந்து செயல்பட வேண்டிய தேவை இருக்கிறதா?” என்று கேட்டேன்.
கொஞ்ச நேரம் யோசிக்கிறார். “உலகெங்கும் காலமெல்லாம் கம்யூனிஸ்ட்டுகளுக்கான தேவை இருக்கத்தான் செய்யும். இந்தியாவில் ஒரு சமதர்ம சமுதாயம் அமைய வேண்டுமானால், அதை கம்யூனிஸ்ட்டுகளால்தான் செய்ய முடியும். நோக்கம் ஒன்றுதான். பாதை வேறுபடும்போதும் இணைந்து செயல்படுகிறோம்” என்றவர் “பிரச்சாரத்துக்கு வாருங்களேன்” என்று அழைத்தவாறே புறப்படுகிறார். நான் சிரித்தவாறே மறுத்துவிட்டுப் புறப்பட்டேன்.

ஏப்ரல், 2014, ‘தி இந்து’

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக