மேற்கு இந்தியாவின் பயணத் திட்டம் தெளிவாக இருந்தது. கோவா, குஜராத், மகாராஷ்டிரம், டையு டாமன், நாகர் ஹவேலியை உள்ளடக்கிய இந்தப் பிராந்தியம் ஆரம்பக் காலத்திலிருந்தே தொழில் வளர்ச்சிக்குப் பேர்போனது. குறிப்பாக, சுதந்திரத்துக்குப் பின் தொழில்துறை வளர்ச்சியையும் நகரமயமாக்கலையும் படு வேகமாக முன்னெடுத்த மாநிலங்கள் மகாராஷ்டிரமும் குஜராத்தும். இதே முந்தைய காலகட்டமாக இருந்தால், மும்பையிலிருந்து பயணத்தைத் தொடங்குவதே பொருத்தமாக இருந்திருக்கும். இப்போது? ஆம், அகமதாபாத்திலிருந்தே பயணத்தைத் தொடங்கினேன்.
மேற்கின் ஆபரணம் என்று அழைக்கப்படும் குஜராத் வளத்துக்குப் பஞ்சம் இல்லாதது. அபார உழைப்பும் தொழில் உத்திகளையும் கொண்ட குஜராத்திகள் அந்த வளத்தைப் பயன்படுத்திக்கொள்ளத் தவறாதவர்கள். காந்தியும் படேலும் குஜராத்தில் பிறந்தவர்கள் என்பதைக் காட்டிலும் ஜாம்ஷெட்ஜி டாடாவும் திருபாய் அம்பானியும் இந்த பிராந்தியத்தில் பிறந்தவர்கள் என்பது குஜராத்திகளுக்கு இந்தியத் தொழில் துறையோடு உள்ள பிணைப்பைச் சரியாக அடையாளப்படுத்தும்.
நம்முடைய தேசிய சராசரி தனிநபர் வருமானத்தைவிடவும் குஜராத்திகளின் சராசரி தனிநபர் வருமானம் மிகவும் அதிகம். ஆனால், இவ்வளவு பணம் கொழிக்கும் சிறப்பு அடையாளங்கள் எதுவும் அகமதாபாதில் இல்லை. ஒரு சராசரி இந்திய மாநகரம் எப்படி இருக்கும்? அப்படியே அகமதாபாதும். ஊரில் இறங்கியதும் கேட்ட முதல் குரல், ரயில் நிலையத்தில் சிதறிக் கிடக்கும் நிலக்கரியைப் பொறுக்கும் ராஜு சோலங்கியின் குரல். தன்னைப் போலவே அகமதாபாதின் சாலையோரக் குடிசை வாழ்க்கையை அமைத்துக்கொண்ட பெரும் கூட்டத்திடம் அவர் அழைத்துச் சென்றார். எல்லோருமே கிராமப் பின்னணி உடையவர்கள். எனக்கு இது அதிர்ச்சி. ஏனென்றால், கிட்டத்தட்ட குஜராத்தின் எல்லாக் கிராமங்களும் சாலை வசதி உடையவை.
நீண்ட காலமாகவே வேளாண்மையும் நல்ல நிலையிலேயே இருக்கிறது. பின் ஏன் கிராமங்களிலிருந்து இவர்கள் வந்தார்கள்? “சாலைகள் இரண்டு காரியங்களைச் செய்தன. ஒன்று, வயலில் இயந்திரங்களைக் கொண்டுவந்து இறக்க உதவின. இன்னொன்று, நாங்கள் அங்கிருந்து வெளியேற உதவின. மேற்கின் வயல்களில் மனிதர்களைவிடவும் இயந்திரங்கள் அதிகம். வேளாண்மை நன்றாக இருக்கிறதுதான். ஆனால், செழிப்பவர்கள் யார்? முதலாளிகள். விவசாயத் தொழிலாளர்கள் இன்னமும் கையேந்தும் நிலையில்தான் இருக்கிறோம். கடந்த 10 வருஷங்களில் விலைவாசி எவ்வளவு கூடியிருக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும். எல்லோருக்கும் சம்பளமும் கூடியிருக்கிறது.
ஆனால், விவசாயத் தொழிலாளர்களின் கூலி? இங்கே நிலக்கரியையோ பிளாஸ்டிக் பாட்டில்களையோ சேகரிப்பதால் கிடைக்கும் வருமானத்தில் பாதிகூடக் கிராமத்தில் விவசாயத் தொழிலாளர்களுக்குக் கிடையாது என்பதுதான் உண்மை. கொஞ்சம் வீடு - தோட்டம் வைத்திருப்பவர்கள்தான் இன்னும் அங்கு பல்லைக் கடித்துக்கொண்டு இருக்கிறார்கள்” என்கிறார்கள்.
பகலில் ஒரு வேலை, இரவில் ஒரு வேலை!
அகமதாபாதில் மட்டும் அல்ல; சூரத், வடோதரா, ராஜ்கோட், பவநகர், ஜாம்நகர், ஜுனாகட் எனப் பெரும்பாலான குஜராத் நகரங்களில் பெரும்பாலானவர்கள் இரட்டை வேலை செய்கிறார் கள். அதாவது, பகலில் ஓரிடத்துக்கு வேலைக்குச் சென்றால், மாலையில் இன்னோர் இடத்துக்கு வேலைக்குப் போவது அல்லது சாலையோரக் கடைகள் போடுவது. “முதலாளிகள் ஒரு வேலை பார்க்கலாம்; தொழிலாளிகள் ஒரு வேலை பார்த்துக் காலத்தை ஓட்ட முடியுமா?” என்கிறார், பகலில் சூரத்தில் ஒரு ஆலையில் வேலை செய்துகொண்டு, இரவில் ஆட்டோ ஓட்டும் ராம் சிங். இது ஓர் உலகம். இன்னோர் உலகமும் இருக்கிறது.
“இன்றைக்கு நீங்கள் ஒரு பெட்டியில் பணம் எடுத்துக்கொண்டு குஜராத் வந்தால், அடுத்த ஒரு மாதத்தில் நீங்கள் விரும்பும் தொழிலைத் தொடங்கிவிடலாம். எந்த அலைச்சலும் இல்லாமல் பத்தே நாட்களில் அரசாங்கம் எல்லா வேலைகளையும் முடித்துக்கொடுத்துவிடும். மின்சாரம், தண்ணீர் எல்லாம் சலுகை விலை. அருமையான தொழிலாளர்கள் ஏனைய இடங்களை விடவும் குறைவான கூலிக்குக் கிடைப்பார்கள்” என்கிறார் அகமதாபாத் தொழிலதிபரும் முதலீட்டாளருமான நீரவ் படேல்.
இரு உலகங்களின் கதாநாயகன்
பொதுவாக, இந்த இரு உலகங்களுமே மோடியை விரும்பு கின்றன. “பணம் முக்கியம் என்றால், தொழில் முக்கியம். இங்கு எல்லா முதல்வர்களுமே தொழில் வளர்ச்சிக்குப் பாடுபட்டவர்கள். இன்றைக்கு மோடிக்கு இணையாகச் சொல்ல குஜராத்தில் ஆள் இல்லை” என்கிறார்கள். குஜராத் கிராமப்புறங்களில் மோடி அரசு செயல்படுத்திய நர்மதை கால்வாய்த் திட்டமும் சபர்மதி ஆற்றங்கரையை கான்கிரிட் கரையாக மாற்றும் திட்டமும் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்திருக்கின்றன.
ஆனால், எல்லோருமே மோடியைப் பற்றிப் பயத்துடனே பேசுகிறார்கள். “மோடிஜி மர்மமானவர்” என்கிறார்கள். பொதுவாக, குஜராத் எங்கும் இந்து முஸ்லிம் சமூகம் இரண்டாகப் பிளவுபட்டிருக்கிறது. இந்துக்களிடம் பேசும்போது, “மோடிதான் எங்கள் பாதுகாப்புக்கு உறுதுணை” என்கிறார்கள். முஸ்லிம்களிடம் பேசும்போது, “மோடி நாசக்காரர்; எங்கள் வாழ்வைக் குலைத்தவர்’’ என்கிறார்கள்.
இந்தியா நகரமயமாக முடியுமா?
குஜராத்துடன் ஒப்பிடும்போது - சுரங்க மாஃபியாக்கள் பிரச்சினை நீங்கலாக - கோவா சௌக்கியமாக இருக்கிறது. சுற்றுலா வாழவைக்கிறது. டையு டாமன், நாகர் ஹவேலி நிலைமையும் அப்படியே. ஆனால், மகாராஷ்டிரத்தை நோக்கி நகர்ந்தபோது நிலைகுலைந்துபோனேன். இந்தியாவின் அதிர்ச்சியான முகங்களை இங்குதான் சந்தித்தேன்.
ஒருகாலத்தில் நகரமயமாக்கலையும் சிறுதொழில் துறையையும் வளர்த்தெடுத்த மகாராஷ்டிரம், இன்றைக்கு நகர மயமாக்கலை ஊக்குவிக்கும் ஏனைய மாநிலங்களுக்கு ஒரு பாடம் என்பதுபோல இருக்கிறது. நாட்டின் மாபெரும் நகரமான மும்பையில் ஒருபுறம் அதன் அற்புதமான கட்டமைப்புக்கும் மறுபுறம் அது ஏழைகளுக்கு அளிக்கும் அசிங்கமான வாழ்க்கைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் தடயங்கள் ஏதும் தென்படவில்லை. நவிமும்பை, புனே, நாக்பூர், நாசிக், ஔரங்காபாத், கோலாப்பூர், தானே, சோலாப்பூர், அமராவதி, சாங்லி நகரங்கள் யாவும் அடிப்படை வசதிகளை அளிக்கவே போராடுகின்றன. எல்லாவற்றுக்கும் மேல் கிராமப்புற வாழ்க்கையை மகாராஷ்டிர ஆட்சியாளர்கள் எவ்வளவு சீரழித்திருக்கிறார்கள் என்பதற்கு விதர்பா விவசாயிகள் ரத்த சாட்சியம் அளிக்கிறார்கள். நாட்டிலேயே ஏழ்மையான வாழ்க்கை நிலவும் மேற்கு இந்தியாவின் எல்லையோரமான விதர்பா பிரதேசம் சுமார் 11 மாவட்டங்களை உள்ளடக்கியது.
இந்திய விவசாயிகளின் தற்கொலைத் தலைநகரமாக அறியப்பட்ட இந்தப் பிராந்தியத்தில், இதுவரை கிட்டத்தட்ட 1.4 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். “கடந்த மாதம்கூட 23 பேர் தற்கொலை செய்துகொண்டார்கள்” என்று தொடங்கினார் விவசாயியும் விதர்பா ஜன் அந்தோலன் சமிதியின் பிரதிநிதியுமான பாபு ராம். “மகாராஷ்டிரத்தின் மூன்றில் இரு பங்கு கனிம வளம் இங்கு இருக்கிறது. அரசாங்கம் அக்கறை காட்டியிருந்தால், இந்த வறண்ட பிரதேசத்தின் வறுமையைப் போக்கியிருக்க முடியும். ஆனால், அரசாங்கம் புறக்கணிக்கிறது... தொடர்ந்து புறக்கணிக்கிறது. மகாராஷ்டிர விவசாயிகளுக்குத் தண்ணீர் பெரிய பிரச்சினை. நியாயமாக நீராதாரங்களை உருவாக்குவதுதான் அரசியல்வாதிகளின் முதல் கடமையாக இருக்க வேண்டும். ஆனால், அவர்களைப் பொறுத்த அளவில் கொள்ளையடிப்பதற்கான துறை பாசனத் துறை.
ரூ. 70 ஆயிரம் கோடியைப் பாசனத்துக்கு என ஒதுக்கி 0.1% பாசன வசதியை மட்டுமே உருவாக்குபவர்களை நீங்கள் உலகில் எங்காவது பார்க்க முடியுமா? தண்ணீர் கேட்டுப் போராடும் மக்களுக்கு, ‘அணையில் நான் வேண்டுமானால் மூத்திரம் பெய்துவிடவா?’ என்று கேட்கும் அரசியல்வாதிகளை நீங்கள் எங்காவது பார்க்க முடியுமா? மகாராஷ்டிரத்தில்தான் பார்க்க முடியும். துணை முதல்வராக இருந்த அஜித் பவார் பொது மேடையில் அப்படிக் கேட்டார். பாசனத் திட்டங்களின் பெயரால் ரூ. 70 ஆயிரம் கோடியை அவர் காலிசெய்தார் என்பதைப் பின்னாளில் முதல்வரே சொன்னார். இவ்வளவு கொடூரமான வர்களை நீங்கள் எங்குமே பார்க்க முடியாது” என்கிறார் பாபு ராம்.
இன்னும் அதிரவைக்கின்றன ‘பிரயாஸ்’அமைப்பு சொல்லும் உண்மைகள். மகாராஷ்டிரத்தில் கடந்த எட்டு ஆண்டுகளில் 23 பாசனத் திட்டங்களின் கீழ் பெறப்பட்ட தண்ணீரில் 40% முதல் 80% வரை தொழிற்சாலைகளுக்குத் திருப்பிவிடப்பட்டதை ஆதாரத்தோடு அம்பலப்படுத்திய அமைப்பு இது. “அரசின் கொள்கை, மொத்தம் உள்ள தண்ணீரில் 72% விவசாயத்துக்கும் 7% தொழிற்சாலைகளுக்கும் ஒதுக்கப்பட வேண்டும் என்கிறது. நடப்பதோ தலைகீழ்” என்கின்றனர் இந்த அமைப்பினர். “இப்படி ஒருபுறம் எங்களை வஞ்சிக்கும் அரசாங்கம், மறுபுறம் பி.டி. பருத்தி சாகுபடி செய்யச் சொல்லி எங்களைப் பரிசோதனை எலிகளாக்கிக்கொண்டது. தண்ணீர் பாடு பெரும்பாடு. பத்துக் காசு வட்டிக்குக் கடன் வாங்கிதான் பருத்தி விவசாயத்தில் ஈடுபடுகிறோம். பத்தாண்டுகளில் உற்பத்திச் செலவு ஐந்து மடங்கு அதிகம் ஆகியிருக்கிறது. பருத்தி விலையோ முன்னைவிடவும் குறைந்திருக்கிறது.
இப்படிப்பட்ட சூழலில், விளைச்சலும் பொய்த்தால் ஒரு விவசாயிக்குத் தற்கொலையைத் தவிர என்ன வழி இருக்கிறது?” என்று கேட்கும் அம்பே தானூரா அடுத்துச் சொன்ன விஷயங்கள் மனசாட்சி உள்ள எவரையும் உலுக்கக் கூடியவை. “வெட்கத்தை விட்டுச் சொல்கிறேன். எங்களுக்குப் பல நாள் இரவு உணவு வெறும் தண்ணீர்தான். பசியில் இருக்கும் பிள்ளைகளுக்குத் தண்ணீரை உணவாகக் கொடுப்பதைவிடவும் ஒரு கொடுமை உலகில் கிடையாது. இங்குள்ள விவசாயிகளில் பாதிப் பேர் அந்தக் கொடுமையைத்தான் தினமும் செய்கிறோம். சிறுநீரகத்தை விற்றால் கிடைக்கும் காசில் கொஞ்ச நாள் சாப்பிடலாம் என்பதால், பலர் சிறுநீரகத்தை விற்றார்கள். அப்படி விற்றவர்களில் ஒருவன்தான் நானும்” என்று அறுவைச் சிகிச்சை தழும்பைக் காட்டுகிறார். சிங்னபூர், டோர்லி, லெஹேகான் போன்ற கிராமங்களில் சர்வ சாதாரணமாக மும்பையின் பெரு மருத்துவமனைகளின் சிறுநீரக விற்பனைத் தரகர்களை அணுக முடிகிறது. “விதர்பா தனி மாநிலம் ஆக வேண்டும். அதுதான் இப்போதைக்கு ஒரே தீர்வு” - இதுதான் விதர்பா எங்கும் ஒலிக்கும் ஒரே குரல்.
நீண்ட காலத்துக்கு முன் தமிழகத்திலிருந்து நாக்பூரில் குடியேறிய காஷ்யபனிடம் பேசியபோது சொன்னார்: “தொழில் வளர்ச்சியினால் மட்டுமே நாட்டை வளப்படுத்திவிட முடியும் என்று நினைப்பவர்கள் ஒருமுறை மகாராஷ்டிரத்துக்கு - விதர்பாவுக்கு வந்து செல்ல வேண்டும். எப்படிப்பட்ட நரகமாக இந்த நாட்டை உருவாக்க விரும்புகிறோம் என்பது அவர்களுக்குப் புரிந்துவிடும்!”
ஏப்ரல் 2014, ‘தி இந்து’
வணக்கம். இந்த கட்டுரை மூலம் நாம் தெரிந்து கொள்வது சுதந்திர இந்தியாவில் முன்னேரி இருப்பது வெரும் தொழில்துறை மட்டுமே.ஆனால் இந்தியா ஓர் விவசாய நாடு என்பது எத்தனை அரசியல்வாதிகளுக்கு தெரியும்.தெரிந்திருந்தால் விவசாயிகள் பலர் சிறுநீரகத்தை விற்க வேண்டிய கட்டாயம் இருந்திருக்காது.இந்தியாவில் உள்ள தொழிலதிபர்களும்,அரசியல்பாதிகளும் இதுவரை ஒருவராது சிறுநீரகத்தை விற்றதாக சரித்திரம் உண்டா? ஏன்னென்றால் தொழிலதிபர்கள் ஏதாவது ஒருவகையில் விவசாய கடன்களை பெற்றுக்கொண்டு அதை தொழில்துறையில் முதலீடு செய்கின்றனர். இப்படியே இன்னும் சென்றால் விவசாய பொருட்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து அதன்மூலம் கமிசனை அடித்து இன்னும் தொழிலபர்களும்,அரசியல்வாதிகளும் தான் செழிப்பாக இருப்பார்கள் ஆனால் தொழிலாளர்கள் இனிமேல் தொழிலாளியாகக்கூட இருக்க முடியாது என்பது உண்மை.
பதிலளிநீக்குவணக்கம், இப்போது அவசர நன்கொடை தேவைப்படுகிறது.
பதிலளிநீக்குநீங்கள் விந்து விற்க தயாராக இருந்தால், முட்டை, சிறுநீரக, கல்லீரல் $ 500,000.00 உடனடியாக மருத்துவமனையில் தொடர்பு: drellahospital@gmail.com
இது சிறுநீரகத்தை விற்பது / வாங்குதல் மற்றும் நன்கொடை செய்வதற்கான சரியான இடம்