தனுஷ்கோடி புயல்: ஒரு கண்ணீர் சாட்சியம்!

புயலில் சிக்கிய ரயிலை அனுப்பிவைத்த அப்போதைய
ராமேஸ்வரம் ரயில் நிலைய அதிகாரி ராமச்சந்திரன்.

னுஷ்கோடி புயல் மனரீதியாக அடித்துப் போட்டவர்களில் பி. ராமச் சந்திரன் முக்கியமானவர். புயலில் அடித்துச் செல்லப் பட்ட பயணிகள் ரயிலை அனுப்பிவைத்தவர். அப்போதைய, ராமேசுவரம் ரயில் நிலையத்தின் நிலைய அதிகாரி. அங்குள்ள மீனவ மக்களோடு மிக நெருக்கமான உறவைப் பராமரித்த ராமச்சந்திரனை ராமேசுவரத்தைவிட்டு மாற்றக் கூடாது என்று மனு மீது மனு போட்டு 9 ஆண்டுகள் அந்த ஊரிலேயே தக்கவைத்திருக்கின்றனர் உள்ளூர் மக்கள். ராமச்சந்திரனுக்கு இப்போது 93 வயதாகிறது. தனுஷ்கோடி புயலைப் பற்றிப் பேச ஆரம்பித்ததும், ஒரு குழந்தையைப் போலத் தேம்பித் தேம்பி அழுதவர் கண்ணீரின் இடையே பேசினார். புயலோடு மறைக்கப்பட்ட வரலாற்றின் இன்னொரு பக்கத்தை ராமச்சந்திரனின் சின்ன பேட்டி தருகிறது.


புயல் நாளை நினைவிருக்கிறதா? அதை எப்படி மறக்க முடியும்?
இப்படிப் புயலடிக்கும்னு இந்தப் பாவிக்கு யாரும் சொல்லலீயே… புயல் தெரியலீயே... ரயிலை அனுப்பிட்டேனே… (அழுகிறார்)
 
ஆனால், பாம்பனுக்குத்தானே நீங்கள் ரயிலை அனுப்பினீர்கள்?
ஆமா, அந்த ரயில் ராமேஸ்வரத்துலேர்ந்து பாம்பன் ஸ்டேசன் போகும். அங்கிருந்து ராமேஸ்வரம் ரோடு ஸ்டேசன் போகும். அங்கிருந்து தனுஷ்கோடிக்குப் போகும். பாம்பனுக்கு நான் அனுப்பிச்சேன். அங்கேயிருந்து பாம்பன் ஸ்டேசன் மாஸ்டர் அனுப்பிச்சார். அங்கிருந்து ராமேஸ்வரம் ரோடு ஸ்டேசன் மாஸ்டர் அனுப்பிச்சார். யாருக்குமே புயல் இப்படிச் சுருட்டும்னு தெரியலையே… (அழுகிறார்)

அந்த ரயிலில் டிக்கெட் பெறாமல் பயணிக்கும் எண்ணிக்கை வழக்கத்தில் இருந்ததா?
ராத்திரில பாதி ஜனம் டிக்கெட் எடுத்து, ரயில்ல போகும்னா பாதி ஜனம் டிக்கெட் எடுக்காம போகும். உள்ளூர் ஜனம். அவா யாருக்கும் தொந்தரவு கொடுக்காம ஓரமா நின்னுக்குவா. அதனால, ரயில்வே நிர்வாகமே அத கண்டுக்குறது இல்ல.  


புயலுக்குப் பின்  சம்பவ இடத்துக்குப் போனீர்களா?
அதிகாரிகளோட படகுல போனேன். எங்கே பார்த்தாலும் மனுச ஒடம்பு மிதக்குது. ஐயோ, கொடுமை, கொடுமை… (மீண்டும் அழுகிறார்)

சரி, நாம் அதை விட்டுவிடலாம்... பாம்பன் பால மறுகட்டமைப்பில் மீனவ மக்கள் பங்களிப்பைச் சொல்ல முடியுமா?
(கண்களைத் துடைத்துக்கொண்டு…) அவா ஒத்தாசை இல்லேன்னா நடக்குற கதையா அது! உள்ளூர் மீனவா மட்டும் இல்லை; வெளியூர் மீனவாவும் வந்தா. மாப்ளாஸ் வந்தா. எல்லாருமா ஓடி ஓடி ஒழைச்சுதான் பாலத்தைத் திரும்ப தூக்கி நிறுத்தினா.

கடலோர மக்களிடையே நீண்ட நாட்கள் வேலை செய்திருக்கிறீர்கள். அவர்களுடனான உங்கள் உறவைச் சொல்லுங்களேன்…
ரொம்ப நல்ல மனுஷா. நான் தஞ்சாவூர் ஜில்லாக்காரன். ஊரை மறந்துட்டு அவாளோடேயே இருந்துடலாமானு நெனைச்சுருக்கேன். அவ்ளோ நல்ல மனுஷா.
அவாளுக்கு நான் ஸ்டேசன் மாஸ்டர் மட்டும் இல்லை. மனு எழுதிக் கொடுக்குறவன், கடுதாசி படிச்சுக் காட்டறவன், பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்துல சேர்க்க யோஜனை சொல்லுறவன்… கூடையோடு மீனைத் தூக்கிட்டு வந்துட்டு, ‘சாமி… உங்களுக்குக் கொடுக்க எங்களுக்கு இங்கே மீனைத் தவிர என்ன இருக்கு? மீன் சாப்பிடாதவராப் போயீட்டீங்களே'ன்னு வருத்தத்தோடு போவா. அவாள விட்டு வந்துட்டேனேயொழிய இன்னும் எம் மனசுல அவா அப்படியே இருக்கா!

ஜூலை, 2014 ‘தி இந்து’

4 கருத்துகள்:

  1. ‘சாமி… உங்களுக்குக் கொடுக்க எங்களுக்கு இங்கே மீனைத் தவிர என்ன இருக்கு? மீன் சாப்பிடாதவராப் போயீட்டீங்களே'ன்னு வருத்தத்தோடு போவா. அவாள விட்டு வந்துட்டேனேயொழிய இன்னும் எம் மனசுல அவா அப்படியே இருக்கா!

    பதிலளிநீக்கு
  2. காலத்தின் சுழற்சியில், அணைத்தையும் கடந்து முடிவுறா பயணம் தொடர்கிறது

    பதிலளிநீக்கு
  3. திரு. ராமச்சந்திரன் அவர்களின் மனவேதனையை, அழுத்தத்தை அவரது சத்தியமான வார்த்தைகள் வெளிக்கொணர்கிறது.

    பதிலளிநீக்கு