மக்களின் ஆவணங்கள் வரலாறு இல்லையா?

பாம்பன் பால மறுக்கட்டமைப்புப் பணியைப் பார்வையிடும் ஸ்ரீதரன் (நடுவில்).

பாம்பன் பால மறுகட்டுமானப் பணியைத் தம் சொந்த வீட்டு வேலைபோல,
இழுத்துப்போட்டு செய்த மீனவ மக்கள்.

யிரோட்டமான தனுஷ்கோடி அழிந்த அத்தியாயத்தை வாசித்த ஏராளமான வாசகர்கள் கேட்ட கேள்வி: “இப்படி ஒரு பேரழிவைப் பற்றி நமக்கு ஏன் முழுமையாகத் தெரியவில்லை? இந்தச் செய்திகளெல்லாம் ஏன் நம்முடைய பாடப் புத்தகங்களில் இல்லை?”

நம்முடைய பெரும்பாலான வரலாறுகள் களத்தில் அல்ல; தலைநகரங்களில் சௌகரியமான இடங்களில் உட்கார்ந்திருப்பவர்களால் உருவாக்கப்படுகின்றன என்பது ஒரு காரணம். எது வரலாறாக வேண்டும் என்பதையும் எதுவெல்லாம் வரலாறு ஆகக் கூடாது என்பதையும் அவர்கள் தீர்மானிக்கிறார்கள் என்பது ஒரு காரணம்.  அரசின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பதிவுகளைத் தொகுப்பவர்கள், மக்களிடம் உள்ள பதிவுகளைச் சீந்துவதே இல்லை என்பது ஒரு காரணம்.  பதிவுசெய்யப்படாத எவ்வளவு பெரிய உண்மையும் வரலாறு ஆவதில்லை என்பது முக்கியமான காரணம்.

சில உதாரணங்கள்
நீர், நிலம், வனத்தையொட்டி வாழும் மக்களுக்கு நடக்கும் எந்த விஷயமும் நம்முடைய அரசுக்கும் அதிகாரவர்க்கத்துக்கும் ஒரு பொருட்டே இல்லை என்பதற்கு அப்பட்டமான உதாரணம்  தனுஷ்கோடி பேரழிவின் மரண எண்ணிக்கை. தனுஷ்கோடி மரணங்களை நம்மாட்கள் எப்படிக் கையாண்டார்கள் என்பதற்கு அன்றைக்குப் புயலில் சிக்கிய ரயிலில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஒரு எடுத்துக்காட்டு. இந்த ரயிலில் சென்று இறந்தவர்கள் என்று அரசு தரும் எண்ணிக்கை 115. அதாவது, 110 பயணிகள், 5 ஊழியர்கள். அன்றைக்குப் பயணத்தில் டிக்கெட் எடுத்தவர்களின் எண்ணிக்கையை வைத்துச் சொல்லப்படும் எண்ணிக்கை இது. உண்மை என்னவென்றால், வெளியூர்க்காரர்கள் மட்டுமே இரவு ரயிலில் டிக்கெட் எடுக்கும் வழக்கம் அன்றைக்கு தனுஷ்கோடியில் இருந்திருக்கிறது. உள்ளூர்க்காரர்கள் இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் ரயிலில் தினமும் வருவார்கள் என்று சொல்கிறார்கள். நாட்டுப்புறப்பாடல்களில் இந்த எண்ணிக்கை ஐந்நூறு வரை சொல்லப்படுகிறது. அரசு விவரங்களைத் தாண்டி களத்தில் கால் வைத்திருந்தால், உண்மையான எண்ணிக்கை தெரியவந்திருக்கும். நம் ஆய்வாளர்கள் செய்யவில்லை. இதேபோலதான் புயலில் இறந்த உள்ளூர்க்காரர்களின் எண்ணிக்கையும். எல்லாம் சேர்த்து அதிகபட்சம் இரண்டாயிரத்துக்குள் முடித்துக்கொண்டது அதிகாரவர்க்கம். அதுவும்கூட முறையாகப் பதிவுசெய்யப்படவில்லை. 

உண்மை என்ன? 1961 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி தனுஷ் கோடியின் மக்கள்தொகை 3,197. இதைத் தவிர, தனுஷ் கோடியை நம்பிப் பிழைத்த சுற்றுப்புற ஊர் மீனவ மக்கள் உண்டு. நாட்டுப்புறப் பாடல்கள் சொல்லும் தரவுகள்படி, புயலில் சிக்கிய மக்கள் எண்ணிக்கை 'ஐயாயிரம் ஜனத்துக்கு மேல்' இருக்கலாம். தனுஷ்கோடியிலிருந்து தப்பிப் பிழைத்தவர்களுக்குப் பின்னாளில், நடராஜபுரத்தில் மாற்று இடம் ஒதுக்கப்பட்டபோது 150 குடும்பங்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டதாகச் சொல்கிறார் தனுஷ்கோடியின் இப்போதைய ஊர் தலைவர் மாரி. எப்படிப் பார்த்தாலும் ஆயிரம் பேருக்கு மேல் பிழைத்திருக்க வாய்ப்பில்லை. ஆக, இறந்தவர்களின் எண்ணிக்கை அரசு சொல்வதைக் காட்டிலும் குறைந்தது இரு மடங்கு இருக்கும். ஆனால், வரலாற்றோடு சேர்த்து மக்களோடு மூழ்கடிக்கப்பட்டது.

இதைவிடவல்லாம்விட வெளிப்படையான உதாரணம் பாம்பல் பால மறுக்கட்டுமானம். முன்னதாக, பாம்பன் பாலம் உருவாக்கப்பட்டபோதே, அந்தப் பணியில் மீனவச் சமூகம் பெரும் பங்காற்றியது. அப்போது 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இது தொடர்பான பதிவுகள் கடலடியில் கொண்டுசெல்லப்பட்டன. தனுஷ்கோடியை மூழ்கடித்த புயலின்போது, பாம்பன் பாலம் உருக்குலைந்தது. பாலத்தைச் சீரமைக்க ரயில்வே நிர்வாகம் 6 மாதக் கெடு தந்து,  ஒரு அணியை இறக்கியது. வெறும் 46 நாட்களில் இந்தப் பணிகளை முடித்தார் பொறியாளர் இ.ஸ்ரீதரன். இதற்காக 1965-ல் நடந்த விழாவில் ரயில்வே அமைச்சர் பாட்டிலால் கௌரவிக்கப்பட்டார் ஸ்ரீதரன். பின்னாளில், டெல்லி மெட்ரோ உருவாக்கப் பணி ஸ்ரீதரன் கைகளில் வந்து சேர பாம்பன் பால மறுக்கட்டமைப்புச் சாதனைப் பின்னணி அவர் பெற்றிருந்த பலங்களில் ஒன்றாக இருந்தது.  இது வரலாறு. ஸ்ரீதரனின் பணி கொண்டாடப்பட வேண்டியது என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை. அதேசமயம், அந்தப் பணி அவ்வளவு சீக்கிரம் முடிவதற்கு முக்கியப் பங்காற்றியவர்கள் சுற்றுவட்டார மீனவ மக்கள். தங்கள் சொந்த வீட்டு வேலையாகப் பாலத்தின் கட்டுமான வேலையில் பங்கேற்றவர்கள் அவர்கள். இன்றைக்கு அவர்களுடைய பங்களிப்பு, மறக்கப்பட்ட கதை. காரணம் என்ன?

நம்முடைய பெரும்பாலான வரலாறுகள் களத்தில் அல்ல; தலைநகரங்களில் சௌகரியமான இடங்களில் உட்கார்ந்திருப்பவர்களால் உருவாக்கப்படுகின்றன என்பது ஒரு காரணம். எது வரலாறாக வேண்டும் என்பதையும் எதுவெல்லாம் வரலாறு ஆகக் கூடாது என்பதையும் அவர்கள் தீர்மானிக்கிறார்கள் என்பது ஒரு காரணம்.  அரசின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பதிவுகளைத் தொகுப்பவர்கள், மக்களிடம் உள்ள பதிவுகளைச் சீந்துவதே இல்லை என்பது ஒரு காரணம்.  பதிவுசெய்யப்படாத எவ்வளவு பெரிய உண்மையும் வரலாறு ஆவதில்லை என்பது முக்கியமான காரணம்.

நாட்டுப்புறப் பாடல்களில் வரலாறு

தனுஷ்கோடி மீனவ மக்களிடம் ஒரு மரபுண்டு. கரை வலை இழுக்கும்போது பாட்டுப் பாடுவது. அவர்கள் வாழ்வைச் சீரழித்த புயலுக்கு இந்தப் பாடல்களில் முக்கிய இடம் உண்டு. அந்தப் பாடல்கள் வில்லுப்பாட்டுக் கலைஞர்கள் வாயிலாக நாட்டுப்புறங்களில் ஊர்ஊராகப் பரவியிருக்கிறது. அதன் தாக்கத்தில் வெளியூர்க்காரர்களும் புயல்பாட்டு பாடியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட பாடல்களில் ஒன்று செ. போத்தி ரெட்டியின் ‘தனுக்கோடி நாட்டுப்புறப் புயற்பாடல்கள்' புத்தகத்தில் காணக்கிடைத்தது. கடலோரத்தில் ஊர்ஊராக அலைந்து, மக்களிடம் பேசி நாட்டுப்புறப் பாடல்களைத் தொகுத்திருக்கிறார் போத்தி ரெட்டி. இந்தப் பாடலுக்குச் சொந்தக்காரர் வேம்பார் பாக்கியம் எனும் பனைத் தொழிலாளி. புயல் அடித்த தேதியில் தொடங்கி, பார்வையிட வந்த எம்ஜிஆர் முதலானவர்களைத் தொட்டு, பாட்டெழுதியவர் பெயர் வரை சொல்லும் இந்தப் பாடல், நம்முடைய நாட்டுப்புறப் பாடல்கள் எந்த அளவுக்குப் புறக்கணிக்க முடியாத மக்கள் ஆவணம் என்பதற்கு ஒரு சான்று. 

தனுஸ்கோடி நாட்டுப்புறப் புயல் பாடல்

தனுஸ்கோடி பாம்பன் முதல்

தயங்காத இராமேஸ்வரம்

அநியாயப் புயலடித்து

அழிந்த கொடுமை பாடுகிறேன்

அமைதியாகக் கேளும்

இந்தக் கதையை எந்த நாளும்

*

கண்டோர் நடுநடுங்க

காற்றுமழை புயலடிக்க

மண்டலத்தில் இக்கதையை

மனத்தெளிவாகப் பாடுகிறேன்

மக்களைப் போல நினைத்து

சபை மன்னிக்கணும் பிழைபொறுத்து (தனுஸ்கோடி)

*

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து

அறுபத்து நாலாம் ஆண்டில்

வாய்மையுள்ள டிசம்பர் மாதம்

வளருந்தேதி இருபத்திரெண்டில்

அடித்ததே புயற்காற்று

பாம்பன் தனுஸ்கோடியைப் பாத்து (தனுஸ்கோடி)

*

ஐயாயிரம் ஜனத்துக்குமேல்

ஆணும் பெண்ணும் அவதிப்பட்டார்

பேய்மழையும் காற்றினாலே

பேதலித்து உயிரைவிட்டார்

ஐயோ துயரமாச்சே

சில ஊரழிந்து போச்சே (தனுஸ்கோடி)

*

மாலை எட்டு மணிக்கு மேலே

மதிப்படங்கா சாமத்திலே

வேலை சோலிதான் முடித்து

வீற்றிருக்கும் வேளையிலே

வருகுதையா ரயிலு

வண்டியைப் புரட்டுதையா

வடகடலும் தென்கடலும்

மண் மோதித் தான் கிளம்பி

தொடர்பாகச் சந்தித்துமே

சூறாவளிப் போல் கொதித்து

வண்டியைத் தூக்கி அடிக்க

மக்கள் மருவி மருவித்துடிக்க (தனுஸ்கோடி)

*

ஐந்நூறு ஜனத்துக்கு மேல்

ஆணும் பெண்ணும் ரயிலில் வர

கால்கள்தான் முறிந்து

கடலோடு போகுதய்யா

ஐயோ பரிதாபம்

இது யாருபோட்ட சாபம் (தனுஸ்கோடி)

*

தனுஸ்கோடி ஊர்களெல்லாம்

தலைக்கு மேலே தண்ணீர் வர

துணியுடைகள் இல்லாமலே

தொங்குதய்யா வீட்டின் மேலே

மதில் இடிந்து சாய

மக்கள் தண்ணீரில் குதித்துப்பாய (தனுஸ்கோடி)

*

ஐயையோ மனைவி மக்கள்

அநியாயமாய்ப் போகுதென்று

மெய்சோர்ந்து மன்னவனும்

மெதுவாக இழுக்கும்போது

குடும்பத்தோட புரட்டி வெள்ளம்

கொண்டு போகுதே சுருட்டி (தனுஸ்கோடி)

*

வள்ளங்களும் விலாஞ்சிகளும்

வளைக்கச் சென்ற தோணிகளும்

வெள்ளத்திலே அடியும்பட்டு

பள்ளத்திலே இழுக்குது பார்

ஐயோ மக்கள் அலற

அடிபட்டுக் குடலும் சிதற (தனுஸ்கோடி)

*

வெள்ளரிப்பழம் போல

வெடித்துப்பிணம் மிதக்குதைய்யா

அள்ளிக்கொண்டு புதைப்பதற்கு

ஆளுதவி கிடையாமல்

அலையடித்து ஒதுக்க

நாய்நரி கடித்து இழுக்க (தனுஸ்கோடி)

*

இராமேஸ்வரம் ஊர்களிலே

தெருக்களெல்லாம் தண்ணீர் ஓட

பூமான்கள் கோவிலெல்லாம்

புரட்டித்தூக்கி அடிக்குது பார்

ஐயோ மக்கள் வாட

அடுத்த திட்டில் ஏறி ஓட (தனுஸ்கோடி)

*

சித்தம் புகழ் நடிகரவர்

ஜெமினி கணேசன் சாவித்திரி

அத்த ராத்திரி வேளையிலே

அமைந்தாரே கோவிலுக்குள்

ஆயாசப்பட்டார்

நடிகர் அழுதும் கண்ணீர் விட்டார் (தனுஸ்கோடி)

*

உடுப்பதற்கோ உடையுமில்லை

உண்பதற்கோ உணவுமில்லை

படுப்பதற்கோ பாயுமில்லை

பறக்குதுபார் வெள்ளத்திலே

பார்க்க பார்க்க துக்கம்

பார்த்துப் போனாலுமே ஏக்கம் (தனுஸ்கோடி)

*

கக்கன்ஜி நெடுஞ்செழியன்

காமாராஜர் அண்ணாதுரை

முக்கியமாய் எம்ஜியார்

பாம்பன் செய்தி கேட்டார்

பாங்காகவே புறப்பட்டார் (தனுஸ்கோடி)

*

ஏரோப்பிளேன் மீதேறி

எல்லோருக்குமாய் சோறுகட்டி

வாறார்கள் தனுஸ்கோடி

வந்துபார்த்தார் இராமேஸ்வரம்

சோர்ந்து கண்ணீர் விட்டார்

சோற்றுமூட்டை தூக்கிப்போட்டார் (தனுஸ்கோடி)

«

சோறு சோறு சோறு என்று

சுழலுதய்யா மக்களெல்லாம்

ஆரு சோறு போட்டாலும்

அரை வயிறு நிறையுதில்லே

நைந்தோடுது சோறு

மண்ணில் புரட்டித் தின்பதைப்பாரு (தனுஸ்கோடி)

*

சண்டாளப் புயலடித்து

தனஉயிரும் வீடும் போச்சே

கண்டு கவர்மெண்டாரும்

கனகோடி நிதி கொடுத்தார்

காமராஜரைத் தேடு

வேம்பார் பாக்கியம் கவிபாடு!


ஜூலை 2014, ‘தி இந்து’

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக