“அம்மா... முடியலையேம்மா... நான் என்ன பதில் சொல்வேன்?”
“என் ராசா, உங்களை இனிமே என்னைக்குப் பார்ப்பேன் ராசா... என்னைச் சிரிக்கச் சொல்லி அழகுபார்ப்பீங்களே... இன்னிக்கு முகமே தெரியாம சிதைஞ்சு கெடக்குறீங்களே...
ஏ, அய்யா, ஏ அய்யா...”
“பாவா, பாவா... யே... பாவா...”
“கடவுளே உனக்குக் கண்ணில்லையே... ஊருல பொழைக்க வழி இல்லாமத்தான இங்கே வந்தோம்... வந்த எடத்துல எங்களை வதைச்சுட்டீயே... நாங்க என்ன பாவம் செஞ்சோம்...”
“பாவி பாவி... விட்டுட்டுப் போயிட்டியே பாவி... இனி நான் எப்படி வாழ? ம்ம்ம்ம்...”
- இன்னும் தெலுங்கில், ஒடியாவில், இந்தியில் காதில் கேட்டுக்கொண்டே இருக்கின்றன அழுகுரல்கள், கேவல்கள், புலம்பல்கள், சாபங்கள். மீண்டும் மீண்டும் கண்களை மறைக்கின்றன சுக்குநூறாகச் சிதைந்து கிடந்த கட்டிடச் சிதறல்களும், கருப்பு பாலிதீன் உறைகளில் மூடப்பட்டுப் பிண்டங்கள் அரைகுறையாக வெளியே தெரிய தூக்கிச் செல்லப்பட்ட சடலங்களும். கிரிக்கெட் ஸ்கோர் போர்டுபோல, இறந்தவர்களின் எண்ணிக்கையை ஆந்திரம், தமிழகம், ஒடிசா, அடையாளம் தெரியாதவர்கள் என்று பிரித்து எழுதப்பட்டிருந்த அந்தக் கரும் அறிவிப்புப் பலகையைக் காலம் முழுவதற்கும் மறக்க முடியாது. மருத்துவமனைச் சுவரில் ஒட்டப்பட்டிருக்கும் புகைப்படங்களில் மூக்கு எது, வாய் எது என்று தெரியாமல் கூழாகிக் காட்சியளிக்கும் முகங்களைவிடவும் வேகமாகக் கண்ணீரை வரவழைக்கின்றன அவற்றைப் பதைப்பதைப்போடு பார்த்துக் கதறிய உறவினர்களின் முகங்கள். நாசியிலிருந்து பிணவாடையைப் பிய்த்து வீச முடியவில்லை. அந்த வாடை உடையில் ஒட்டிக்கொண்டிருக்கிறதா, உடம்பில் ஒட்டிக்கொண்டிருக்கிறதா, காற்றில் ஒட்டிக்கொண்டிருக்கிறதா என்று தெரியவில்லை. செல்லும் இடமெல்லாம் துரத்துகிறது.
என்னைவிடவும் தீவிரமாகப் பாதிக்கப்பட்ட நண்பர் அவர். சென்னை மவுலிவாக்கம் அடுக்குமாடிக் கட்டிடம் இடிந்து விழுந்த நாளில் தொடங்கி ஒவ்வொரு நாளும் செய்தி சேகரிக்கச் சென்றவர். “முடியலீங்க. சாப்பிடக்கூட முடியலை. எதைப் பார்த்தாலும் குமட்டுது, ராத்திரில தூங்க முடியலை. விதுக்கு விதுக்குனு இருக்கு. ஒரே வெறுப்பா இருக்கு. பிள்ளைங்களைப் பார்த்தா என்னமோ பயமா இருக்கு... ஏங்க, தூர நின்னு பார்த்த நமக்கே சகிக்கலையே... எப்படிங்க அவங்களால எல்லாம் நிம்மதியா இருக்க முடியுது? மனசாட்சின்னு ஒண்ணு இருக்குமா, இருக்காதா?”
விபத்தா, படுகொலையா?
ஒரு வாரம் ஆகிவிட்டது சம்பவம் நடந்து. அதை விபத்து என்று குறிப்பிட என் கை கூசுகிறது. 48 வீடுகளைக் கொண்ட 11 மாடிக் கட்டிடம், இன்னும் கொஞ்ச நாட்களில் திறப்பு விழா காணும் நிலையில் இருந்த கட்டிடம், ஒரு இடி மழைக்குச் சிதறி சின்னாபின்னாமாகிறது என்றால், அது விபத்தா; ஊழலின் வெடிப்பா?
நடந்தது படுகொலை. இந்த அமைப்பின் சகல மட்டங்களிலும் புரையோடியிருக்கும் ஊழல்வாதிகள் செய்த படுகொலை. நம் எல்லோருக்கும் இது தெரியும். நம் ஒவ்வொருவரின் மனசாட்சிக்கும் தெரியும். 61 பிணங்கள் விழுந்திருக்கின்றன. ஆனால், இன்றுவரை ஒரு பெயருக்குக்கூட, சம்பிரதாய நடவடிக்கையாகக்கூட ஒருவர்கூடப் பொறுப்பேற்று ராஜினாமா செய்யவில்லை. ஒருவர்கூடப் பதவி/பணிநீக்கம் செய்யப்படவில்லை. ஊழலின் பெயரால் அரசு நிர்வாகம் சம்பந்தப்பட்ட ஒருவர்கூடக் கைதுசெய்யப்படவில்லை. இந்தச் சம்பவத்துக்குப் பொறுப்பேற்க வேண்டிய சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் (சி.எம்.டி.ஏ.) தலைவர் - தமிழக வீட்டுவசதித் துறை அமைச்சர் - ஆர். வைத்திலிங்கம் சம்பவ இடத்தைப் பார்வையிடக்கூடச் செல்லவில்லை. அதிகாரிகள் தரப்பில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் முக்கியப் பொறுப்பான உறுப்பினர் - செயலர் ஏ. கார்த்திக் ஐ.ஏ.எஸ்., இந்தக் கட்டிடத்துக்கு அனுமதி கொடுக்கும்போது அந்தப் பொறுப்பில் இருந்த ஆர். வெங்கடேசன் ஐ.ஏ.எஸ் இருவரும் எந்தச் செய்தியாளரின் கேள்விகளுக்கும் பதில் அளிக்கத் தயாராக இல்லை. அமைச்சர் பேச மாட்டார், அதிகாரிகளும் பேச மாட்டார்கள்; யாரும் மக்களுடைய கேள்விகளுக்குப் பதில் அளிக்க மாட்டார்கள்; எல்லாவற்றையும் தீர்மானிக்கும் அதிகார வர்க்கத்தை இத்தகைய ஊழலுக்கான தண்டணையோடு பிணைப்பதைப் பற்றி அரசு இனிமேல்தான் யோசிக்க வேண்டும் என்றால், என்ன நாடு இது?
கொள்ளைக் கொள்கைகள்
இந்தியா நகர்மயமாக்கலை வெறிகொண்டு அணைக்கிறது. இந்தியாவில் வாழும் மூவரில் ஒருவர் நகரத்தில் வாழ்கிறார் என்று பெருமிதம் அடைகிறார் மத்திய நகர்ப்புற அமைச்சர். ஆனால், நகர்மயமாதலால் பெருகும் வீடற்றவர்களின் எண்ணிக்கையை (7.8 கோடி பேர்) எதிர்கொள்ள அரசிடம் சரியான திட்டங்கள் ஏதும் இல்லை. வீடுகளின் பற்றாக்குறை 1.87 கோடி. 53% பேருக்குக் கழிப்பறை வசதி இல்லை. தன்னுடைய குடிமக்களுக்கு வீடு அல்ல; குறைந்தபட்சம் கழிப்பறை வசதியைக்கூட இன்னமும் முழுமையாக உருவாக்கித் தர முடியாத தேசம், தம் ரத்தத்தைச் சிந்தி உழைப்பின் பலனைக் குருவி சேர்ப்பதுபோல சேகரித்து, தாமே ஒரு சொந்த வீட்டை உருவாக்கிக்கொள்ள முனையும் மக்களிடம் அதிகாரவர்க்கம் கொள்ளை அடிப்பதற்கேற்ற கொள்கைகளையே வகுத்துவைத்திருக்கிறது.
ஒரு அடுக்குமாடிக் குடியிருப்புக்கான நியாயமான விலை இவ்வளவுதான் என்பது யாருக்காவது தெரியுமா? எந்தெந்தப் பகுதியில் எத்தனை அடி அஸ்திவாரம் போட வேண்டும், கட்டுமானப் பொருட்களின் தரமான கலவை நிர்ணயத்தை எத்தனை பேர் கடைப்பிடிக்கிறார்கள் என்பதை யாராவது அறிவார்களா? இதுபற்றியெல்லாம் அரசுக்கு ஏதாவது அக்கறை உண்டா?
ஒரு வீடு கட்டுவதற்கான வரைபட அனுமதிக்குச் சதுர அடிக்கு இருநூறு ரூபாய் என்பதில் தொடங்கி அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு, வணிக நிறுவனங்களுக்கு, பெரும் அங்காடிகளுக்கு என்று ரகம்வாரியாகச் சட்டபூர்வ அனுமதிக்கு இவ்வளவு, சட்ட மீறல் அனுமதிக்கு இவ்வளவு என்று லஞ்ச நிலவரம் சொல்கிறார்கள் தரகர்கள். சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள் ஆளுக்கொரு அளவையும் கையுமாக ஆய்வு என்ற பெயரில் எதைத் தேடி அலைகிறார்கள் அல்லது யாருக்கு நாடகம் காட்டுகிறார்கள்?
தொழிலாளியா, யார் அது?
தேசிய அளவிலான புள்ளிவிவரங்களும் தரவுகளும் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு ஒருவர் என்கிற கணக்கில் பணியின்போது பாதிப்புக்குள்ளாவதாகச் சொல்கின்றன. தேசியக் குற்றச்செயல்கள் பதிவேடுகூட சென்னையில் 2013-ல் மட்டும் கட்டிடங்கள் இடிந்து விழுந்து 17 பேர் இறந்ததாகத் தெரிவிக்கிறது. ஆனால், தமிழ்நாடு கட்டிடத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் தகவல்கள்படியோ 2008-ம் ஆண்டிலிருந்து தமிழகத்தில் எந்தத் தொழிலாளரும் காயம் அடையவுமில்லை, உயிரிழக்கவும் இல்லை. தகவல் அறியும் சட்டப்படி, கேள்வி கேட்டவர்களுக்கு அப்படித்தான் பதில் சொல்லியிருக்கிறது வாரியம். தொழிலாளர்கள் நலனில் நமக்குத்தான் எத்தனை அக்கறை?
சுரணை எங்கே கிடைக்கும்?ஒரு சின்ன மழைக்கே இடிந்து விழும் கட்டிடம்; அப்படி இடிந்து விழுந்த ஒரு கட்டிடத்துக்கான மீட்புப் பணிக்கே ஒரு வார கால அவகாசம் தேவைப்படும் நகரம்; இங்கே ஒவ்வொரு நாளும் கட்டப்படுகின்றன பல நூறு கட்டிடங்கள். வழக்கம்போல யாவும் தொடர்கின்றன. ஞாயிற்றுக்கிழமை கட்டுமான நிறுவனங்களின் ஓசி சவாரியில் தொடங்கி மவுலிவாக்கத்தில் முதலீடு பண்ண இது தோதான நேரம் என்கிற கணக்குகள் வரை யாவும் தொடர்கின்றன. ஏன் துளி சலனம் இல்லை? ஏன் ஒரு கேள்வி எழவில்லை? நம் சகமனிதன் சதை தின்று, அவர்தம் உயிர்குடித்துப் பிழைக்கப் பழகுகிறோமா நாம்?
ஜூலை, 2014, ‘தி இந்து’
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக