எளிய மக்களின் வாழ்வை அவர்களுடைய மொழியிலேயே தந்து சமகாலத் தமிழுக்குச் செழுமை சேர்த்த படைப்பாளிகளில் முக்கியமானவர் இமையம். ‘கோவேறு கழுதைகள்’, ‘செடல்’, ‘மண்பாரம்’ எனத் தன்னுடைய படைப்புகள் வெளியாகும் போதெல்லாம் தமிழ் இலக்கிய உலகில் அதிர்வுகளை உருவாக்குபவர் இப்போது பொதுப் பள்ளிகளின் முக்கியத்துவத்தைப் பற்றி மேடைகளில் பேசி அதிரவைக்கிறார். அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் இமையம் கல்வித் துறைக்கு உள்ளிருந்தே கொடுக்கும் கலகக் குரல் ஆசிரியர்களோடு, கல்வித் துறையோடு, பெற்றோர்களோடு என நம் ஒவ்வொருவரின் மனசாட்சியுடனும் உரையாடுகிறது.
அரசுப் பள்ளிகளின் தொடர் வீழ்ச்சிக்கு எது அடிப்படைக் காரணம் என்று நினைக்கிறீர்கள்?
ஆசிரியர்களோட பொறுப்பற்றத்தனம், அதிகாரிகளோட அக்கறையின்மை, தனியார் பள்ளியில, அதுவும் ஆங்கிலத்தில படிச்சாதான் வேலை கிடைக்கும்கிற பெற்றோர்களோட மூடநம்பிக்கை எல்லாமும்தான் இதுக்குக் காரணம். ரொம்ப அடிப்படையா சொல்லணும்னா, அரசுப் பள்ளின்னா தரமற்றது, அரசு மருத்துவமனைன்னா தரமற்றது, அரசு நிர்வாகம்னாலே தரம் கெட்டது அப்படிங்கிற எண்ணம் சமூக உளவியலா இங்கே உருவாயிடுச்சு.
அப்படியென்றால் அரசு முக்கியமான காரணம் இல்லை என்கிறீர்களா?
நிச்சயமா அரசுதான் முக்கியமான காரணம். கல்வி அமைச்சர் பள்ளிக்கூடங்களை ஆய்வு செய்தார்ங்கிற செய்தியைப் படிச்சு எத்தனை வருஷங்கள் இருக்கும் ஞாபகப்படுத்திப்பாருங்க. அட, தொடக்கக் கல்வி இயக்குநர், அரசு செயலர்கள்கூட பள்ளிக்கூடங்களுக்கு ஆய்வுக்குப் போறதில்லையே? ஆசிரியர்களுக்கு பய உணர்வு இல்லை. அதிகாரிகளுக்கும்தான். அரசு எதுவும் செய்யாது, நிர்வாகம் எதுவும் செய்யாதுங்கிற நம்பிக்கை. அதுதானே உண்மையும்?
தனியார் பள்ளிகள் பெருக்கத்துக்கு எது முக்கியக் காரணம் என்று நினைக்கிறீர்கள்?
ஆங்கில மோகம்.
ஆங்கில மோகம் மட்டும்தானா காரணம்? தனியார் பள்ளிகளைப் பெற்றோர்கள் சும்மா நாடிப்போக வில்லையே? ஏட்டுக்கல்வியாவது அங்கு ஓரளவுக்கேனும் உத்தரவாதப்படுத்தப்படுகிறது இல்லையா?
ஆங்கில மோகம் முக்கியமான காரணம். கல்வியில மட்டும்தான் மோகம் இருக்குன்னு சொல்ல முடியாது. நம்மோட நடை, உடை, பாவனை, பேச்சு, செயல், வாழ்க்கைமுறை எல்லாத்திலுமே ஆங்கில மோகம் இருக்கு. தன்னோட குழந்தை தாய்மொழியில பேசறத விரும்பாத தாய்மார்கள் இன்னைக்குப் பெருகிட்டாங்கங்குறதுதான் உண்மை. கொடுமை என்னன்னா தனியார் பள்ளிகள்ல படிக்குற புள்ளைக்கு ஆங்கிலமும் தெரியலை; தமிழும் தெரியலை. உலகத் தரமான கல்வியைக் கொடுக்குறோம்னு சொல்ற தனியார் பள்ளிகள்ல எத்தனை பேருக்கு முறையா ஆங்கிலத்தில பேச தெரியும்? ஒரு கடிதம் எழுதத் தெரியும்? மொதல்ல உலகத் தரம்னு சொல்லி விளம்பரப்படுத்துறாங்களே அப்படின்னு ஒண்ணு இருக்கா? எல்லாம் கல்வியைத் தவறான பொருள்ல புரிஞ்சுகிட்டதால ஏற்பட்ட விளைவு.
ஆனால், நடைமுறையில் ஆங்கிலத்துக்கு என்று சமூகத்தில் ஒரு மதிப்பு இருக்கத்தானே செய்கிறது?
சர்வதேச அளவுல கல்வியாளர்கள், உளவியல் அறிஞர்கள் எல்லாருமே தாய்மொழி வழிக்கல்விதான் சிறந்ததுன்னு சொல்றாங்க. ஒரு விஷயத்தைப் பிற மொழியில படிச்சிப் புரிஞ்சிக்கிறதைவிட தாய்மொழியிலதான் எளிதா புரிஞ்சிக்க முடியும்ன்னு சொல்றாங்க. அது அறிவியல்பூர்வமான உண்மையுங்கூட. ஆங்கிலம் நமக்கு எதிரியில்லை. அரசுப் பள்ளிகள்ல படிக்குற புள்ளைங்க ஆங்கிலம் பேசுறது இல்லையா என்ன? ஒரு விஷயத்தைப் புரிஞ்சுக்கணும். ஆங்கிலம் ஒரு மொழி; அவ்வளவுதான். அதுவே, அறிவு இல்லை. எந்தச் சமூகத்திலேயும் திறமைக்குத்தான் முன்னுரிமை. பேசுற மொழிக்கு இல்லை. ஆங்கிலம் தெரிஞ்சாலே நாம அறிவாளி, நமக்கு எல்லாம் கிடைக்கும்னு நாம நம்புறது நம்மளோட கற்பனை. காலனியாதிக்க அடிமை மனோபாவத்தோட வெளிப்பாடு.
உலகமயமாக்கச் சூழலில் ஆங்கிலம் இல்லா விட்டால் பிழைக்க முடியாது என்ற கூற்று திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறதே?
ஆங்கிலம் தெரிஞ்சாதான் உலகத்துல பிழைக்க முடியும்ன்னு நம்புற மாதிரி முட்டாள்தனம் வேறு எதுவும் கிடையாது. இன்னைக்கு உலகத்தில தொழில்நுட்பத்திலேயும் பொருளாதாரத்துலேயும் மேலோங்கி இருக்கிற ஜப்பான்ல, சீனாவில இப்படிச் சொன்னீங்கன்னா சிரிப்பாங்க. அங்க எல்லாமே தாய்மொழியிலதான் படிப்பு. இந்தியாவுல தனியார் பள்ளிகள், தனியார் கல்லூரிகள் அப்படியொரு பொய்யைப் பரப்புறாங்க. காரணம், அதுலதான் அவுங்க பிழைப்பு இருக்கு!
அப்படியென்றால், எது உண்மையான கல்வி என்று சொல்கிறீர்கள்?
தெரிஞ்சுக்குறது. சுய சிந்தனையை வளர்த்துக்குறது, சமூகத்தைப் புரிஞ்சிக்குறது, சமூகத்தோட இணைஞ்சு வாழக் கத்துக்குறது, அறிவியல் மனப்பான்மையை, வரலாற்று மனப்பான்மையை வளர்த்துக்குறது, இயற்கையைப் புரிஞ்சுக்குறது, இயற்கையோட தன்மைக்கேற்ப வாழ, பழகக் கத்துக்குறது... இதெல்லாம்தான் கல்வி.
எந்த வகையில் சமூகத்தைப் படிக்க அரசுப் பள்ளிகள் முக்கியம் என்கிறீர்கள்?
ஒரு குழந்தைக்கு இடம் எவ்வளவு முக்கியம்னு உளவியலாளர்கள்கிட்ட கேளுங்க சொல்வாங்க. ஒவ்வொரு அரசுப் பள்ளிக்கூடமும் பல ஏக்கர் நிலப்பரப்பில் அமைஞ்சிருக்கு. இட வசதி, வெளிச்சம், காற்றோட்டம் உள்ள இடமா இருக்கு. கல்வி ஒரு உரையாடல். அரசுப் பள்ளிக்கூடங்கள்லதான் மாணவருக்கும் ஆசிரியருக்குமான உரையாடல் சாத்தியம். சமூகங்கிறது பல முகங்களை, பல குரல்களை உள்ளடக்குனது இல்லையா, அப்படிப் பல முகங்களையும் குரல்களையும் அரசுப் பள்ளிகள்லதானே பார்க்க, கேட்க முடியுது? அரசுப் பள்ளிக்கூடங்கள்ல பிரச்சினைகள் இல்லாமல் இல்ல. ஆனா, தனியார் பள்ளிகளைவிட மோசம் இல்லை. அரசுப் பள்ளிக்கூடங்களோட ஆக்கபூர்வமான செயல்பாட்டுக்கு உதாரணம்தானே அப்துல் கலாமும், மயில்சாமி அண்ணாதுரையும்? அட, நீங்களும் நானும் எங்கே படிச்சு வந்திருக்கோம்?
நீங்கள் இவ்வளவு பேசுகிறீர்கள். ஆனால், ஓர் ஆய்வு சொல்கிறது… அரசுப் பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளில் 70% பேர் தனியார் பள்ளிகளில் படிக்கின்றனர் என்று. இது உண்மையென்றால், வெட்கக்கேடு இல்லையா?
நீங்க சொல்றது 100% உண்மை. பெரிய வெட்கக்கேடு இது. தன்னையே கேவலப்படுத் திக்கிறோம்ங்கிற அறிவுகூட இல்லாமதான் இந்த வேலையைச் செய்யுறாங்க. மொதல்ல அரசுப் பள்ளியைப் புறக்கணிச்சது, தரமில்லைன்னு சொன்னது, தனியார் பள்ளிகளை உருவாக்குனது, எல்லாமே அரசுப் பள்ளி ஆசிரியர்கள்தான். அரசுப் பள்ளி வீழ்ச்சிக்கு ஆசிரியர் சமூகம் முக்கியமான காரணம்.
அரசுப் பள்ளி ஆசிரியர்களின் இந்தப் போக்குக்கு அப்படி என்னதான் காரணம்? ஒருவேளை உங்களுக்கு வேறு ஏதேனும் பிரச்சினைகள் இருக்கின்றனவா?
ஆமாம், நானும் ஆசிரியர்தான்; என் மனைவியும் ஆசிரியர்தான். ரெண்டு பேரும் சேர்ந்து மாசம் லட்ச ரூபாய் சம்பாதிக்கிறோம். நூறு ரூபாய்க்கு இந்த நாட்டுல மக்கள் எவ்வளவு கஷ்டப்படறாங்கன்னு நேர்ல போய்ப் பார்த்தோம்னா நாங்கள்லாம் பிரச் சினைங்கிற வார்த்தையையே உச்சரிக்கக் கூடாது. ஆசிரியர்களுக்கு அப்படி என்ன பிரச்சினை? உண்மையைச் சொல்லணும்னா அதிக சம்பளம் வர்றது பெரிய பிரச்சினை. மனை வாங்குறது, வீடு கட்டுறது, வாடகைக்கு விடறது, வட்டிக்கு விடறது, நாட்டுலேயே எது சிறந்த பள்ளி, கல்லூரின்னு விளம்பரம் வருதோ அதுல கொண்டுபோயி தங்களோட பிள்ளைகளைச் சேர்க்குறது, மேலும்மேலும் வருமானத்தைப் பெருக்கிக்க யோசிக்குறது இதெல்லாம் அடுத்தடுத்த பிரச்சினைகள். நான் கேட்டுக்கிறதெல்லாம் ஆசிரியப் பணியைக் கடவுளுக்கு அடுத்த நிலையில வைச்சுப் பார்த்தெல் லாம் நாம நடந்துக்க வேணாம், வாங்குற சம்பளத்துக்காகவாவது உண்மையா உழைங்கங்குறதுதான்.
அரசுப் பள்ளிகளை எப்படிதான் மீட்டெடுப்பது?
அரசுப் பள்ளிகள மீட்டெடுக்க முடியாதுன்னு ஒண்ணும் இல்லை. அரசு நெனச்சா ஒரு வருஷத் துல சரி செய்ய முடியும். மக்களாலேயும் மீட்க முடியும். அரசுப் பள்ளி பொதுச் சொத்து. அதைப் பாதுகாக்கிறது நம்ம ஒவ்வொருத்தரோட கடமை; இலவசமாக் கல்வி கெடைக்கும்போது-ஏன் பணம் கொடுத்துவாங்கணுங்கிற எண்ணம் உருவாகணும். ஆசிரியர்களாலேயும் முடியும். இன்னைக்கும் ஆசிரியர் தொழிலை ஒரு தவமா செய்யுறவங்க இருக்காங்க. அவங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. இந்த அமைப்பை அழிஞ்சுட விட மாட்டாங்க.
சரி, அரசுப் பள்ளியோ, தனியார் பள்ளியோ… படிப்புதான் சோறு போடும் என்ற எண்ணத்தையும் கல்வியைப் பிழைப்புக்கான கருவியாகப் பார்க்கும் மனோபாவத்தையும் எப்படி மாற்றுவது?
எல்லாத் தொழிலுமே முக்கியம்தான். மருத்துவர் ஒரு சமூகத்தில் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு விவசாயி முக்கியம். ஆனா, இது ஏன் நமக்கு உறைக்கலை? மருத்துவரும் பொறியிய லாளரும் மட்டும் ஒரு சமூகத்தில் இருந்தா போதுமா? அவுங்க சோறு எப்பிடிச் சாப்பிடுவாங்க? தொழில்ல ஏற்றத்தாழ்வு இல்லங்கிற எண்ணம் வந்தா-நமக்கு படிப்பு மட்டுமே சோறும் போடும்ங்கிற எண்ணம் வராது. கல்விங்குறது அறிவை விருத்திப் பண்ணிக்குறது. எந்தத் தொழிலுக்கு நாம போனாலும் நாம படிக்குறது ஏதோ ஒரு வகையில உதவத்தான் செய்யும். அதுக்காகப் படிப்பைப் பிழைப்புக் கருவியா மாத்திடுறது பிள்ளைகளைப் பணம் சம்பாதிக்குற இயந்திரமாக்குறதுக்குச் சமம். இந்த எண்ணத்தை மாத்துற வேலையையும் நாம பள்ளிக்கூடத்துலேர்ந்துதான் ஆரம்பிக்கணும்!
ஜூன், 2014, ‘தி இந்து’
A government school teacher takes leave today for coach his daughter for an entrance exam to join in a famous English medium school in erode. What do we say for this . . .
பதிலளிநீக்குHa ha ha
நீக்குChina , Japan people they proud to speak and learn their language i have seen many of them. But even we people know that opposite man from tamilnadu however he start speak in english. This is very worst i see in our people.
பதிலளிநீக்குஎன் பிள்ளைகள் அரசு பள்ளியில் தான் படிக்கிறார்கள் சமஸ்
பதிலளிநீக்குநானும் ஓர் அரசு பள்ளி ஆசிரியர்தான்.இமையம் அவர்களின் கருத்துகளை மறுத்தலின்றி வழிமொழிகிறேன்.அவர் பேசியுள்ள பிரச்சனைகள் வெகு சிலவே.தங்களுக்கென்று சில நியாயங்களை கற்பித்து கொண்டு பல முறைகேடுகளில் ஆசிரியர் சமூகம் ஈடுபடுகிறது
பதிலளிநீக்குநானும் ஓர் அரசு பள்ளி ஆசிரியர்தான்.இமையம் அவர்களின் கருத்துகளை மறுத்தலின்றி வழிமொழிகிறேன்.அவர் பேசியுள்ள பிரச்சனைகள் வெகு சிலவே.தங்களுக்கென்று சில நியாயங்களை கற்பித்து கொண்டு பல முறைகேடுகளில் ஆசிரியர் சமூகம் ஈடுபடுகிறது
பதிலளிநீக்குதிரு.இமையம் அவர்கள் தன் கருத்தின் மூலம் அனைவரின் மதிப்பில் இமயமாக உயர்ந்து விட்டார்.
பதிலளிநீக்குதிரு.இமையம் அவர்கள் தன் கருத்தின் மூலம் அனைவரின் மதிப்பில் இமயமாக உயர்ந்து விட்டார்.
பதிலளிநீக்குநினைவு கூறலாக இருந்தாலும் மிக ஆழமான உள்ளுணர்வுக்குச் சொல்லிய பதில் இது .உங்கள் நேர்மை உங்களை உங்கள் அன்பு குடும்பத்தை வாழ்த்தும் வாழவைக்கும் .வாழ்க வளமுடன் .
பதிலளிநீக்குANNE GOOD ANSWER
பதிலளிநீக்குvillage is our back borne of the country but no one who concentrate the agriculture education.
பதிலளிநீக்குஉங்களுக்கு தலை வணங்குகிறோம். அரசு பள்ளி வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் அரசு பள்ளி ஆசிரியர்களே. எது எதுக்கோ ஆர்ப்பாட்டம் செய்யும் ஆசிரியர்களே உங்கள் மகன் மகளை தனியார் பள்ளியில் சேர்க்க மாட்டோம் என்று சொல்ல எத்தனை பேருக்கு மனசாட்சி உள்ளது.
பதிலளிநீக்குகல்வித் துறையில் ஆய்வுகளுக்கும் ஆய்வுக் கூட்டங்களுக்கும் பஞ்சமில்லை. கல்வித் துறை செயலர் பற்றி நீங்கள் சரியாக அறிந்திருக்க வில்லை என நினைக்கிறேன். மிகக் கடுமையானவர்.கடுமையான வார்த்தைகளை பிரயோகிப்ப்பவர். இப்போதும் அவரை மாற்றம் செய்து விட மாட்டார்களா என்று கல்வித் துறையே காத்துக் கிடக்கிறது. 10 வகுப்பு 12 வகுப்பு தேர்வில் 90% மேல்தேர்ச்சியை தந்தவர். தன அதிரடி செயல்பாடுகளால் பல மாற்றங்களை கொண்டுவந்தவர் .நிற்க.
பதிலளிநீக்குவிலை கேட்டு வாங்கவா முடியும் கல்வி வேளை தோறும் கற்று வருவதால் படியும் என்றான் நறுக்கு மீசைக் கவிஞன் பாரதிதாசன். ஆனால் கல்வி இன்று சந்தைப் பொருளாக மாறிவிட்டது. எங்கே கல்வி அதிக விற்பனைக்கு விற்கப் படுகிறதோ அங்கிருந்து கல்வியை வாங்கவே பெற்றோர் விரும்புகின்றனர். விலை அதிகமுள்ள பொருளே தரமானது என்பது சந்தை சித்தாந்தம். அது கல்விக்கும் பொருந்தும் என்பதே பெற்றோர் எண்ணம். தன்னுடைய பொருளாதார நிலைக்கு மீறிய கல்வியை வாங்க துணிவதன் விளைவே பெருஞ்சுமையாக மாறி இன்று அச்சுறுத்துகிறது.
முந்தைய தலைமுறையினர் கல்வியின் அவசியத்தை உணர்ந்து அரசு பள்ளிகளில் சேர்த்து தங்கள் பிள்ளைகளை படிக்க வைத்தனர். ஆனால் இந்தத் தலை முறையினரோ கல்விக்கு மிக அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தனர். கல்வி இல்லையென்றால் வாழ்க்கையே வீண் என்று கருதுகின்றனர். தன்னுடைய பெற்றோர் அரசு பள்ளிகளில் தங்களை சேர்த்ததால்தான் தாம் நல்ல கல்வி பெற முடியவில்லை என்று ஆதங்கம் கொண்டவர்களாகவே இன்றைய பெற்றோரை காணமுடிகிறது.. அதனால் இந்தத் தலை முறையினர் அந்தக் குறை தங்கள் பிள்ளைகளுக்கு இருக்கக் கூடாது எனக் கருதி தனியார் பள்ளிகளில் சேர்க்க முற்பட்டனர். குறிப்பாக நடுத்தர முற்பட்ட இனத்தவர் பணக்காரர்களின் பள்ளிக்கு தங்களை பிள்ளைகளை அனுப்ப முயற்சி செய்தனர். இதற்காக தங்கள் தேவைகளை சுருக்கிக் கொள்ளவும் தயங்கவில்லை. அறிவுரை சொல்கிறோம் என்ற பெயரில் 'நல்லா படிக்கலன்னா பிச்சைதான் எடுக்கணும்' என்றெல்லாம் கூறி அச்சத்தை குழந்தைகள் மனதில் ஏற்படுத்தினர். முற்பட்ட இனத்தவரின் இந்த மனப்பான்மை மற்ற இனத்தவருக்கும் தொற்றிக் கொள்ள கல்வி வியாபாரம் சூடு பிடிக்கத் தொடங்கியது. பெரிய பணக்காரப் பள்ளிகளை நெருங்க முடியாத இவர்களின் நிலையை மெட்ரிக் பள்ளிகள் பயன்படுத்திக் கொண்டன. ஆங்கில மோகமும் கவர்ச்சிகரமான விளம்பரங்களும் ஈர்க்க விட்டில் பூச்சிகளாய் வீழ்ந்தனர். மூட்டை மூட்டையாய் புத்தகங்களையும் நோட்டுகளையும் முதுகில் சுமந்து செல்வதை பெற்றோர் பூரிப்பில் மிதந்தனர்.
ஓரளவிற்கு பொருளாதார நிலை உயர்ந்தபோது ஏழைகள் படிக்கும் பள்ளியில் தங்கள் பிள்ளைகளை படிக்க வைப்பதை கௌரவக் குறைவாகக் கருதத் தொடங்குவதும் அதிகரித்தது. அரசு பள்ளிகளில் பயின்றால் ஒழுக்கமும் கட்டுப்பாடும் கிடைக்காது என்று எண்ணத்தையும் வளர்த்துக் கொண்டனர் . ஆனால் தாங்கள் அரசு பள்ளியில்தான் படித்தவர்கள் என்பதை மறந்து விட்டனர் .தங்கள் பிள்ளைகள் அசாத்திய திறமை பெற வேண்டுமெணில் தனியார் பள்ளிகளே அதனை அளிக்க முடியும் என்று நம்பிக் கொண்டிருக்கின்றனர்
இப்படிப் பட்டவர்களில் இருந்து வந்தவர்கள்தானே ஆசிரியர்கள் அவர்களின் மனப்பான்மை வேறாக எப்படி இருக்க முடியும்?
அனைவருக்கும் கல்வி இயக்கம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறது. இதன் மூலம் உள் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப் பட்டன. பல்வேறு கல்வி செயல்பாடுகளும் பயிற்சிகளையும் ஆசரியர்களுக்கு இன்று வரை அளிக்கப் படுகிறது. ஆனால் இவையெல்லாம் 80களின் இறுதியில் மேற்கொள்ளப் பட்டிருந்தால் அரசு பள்ளிகளை மீட்டிருக்கலாம்.இவை பற்றி எனது கல்விக் கட்டணம் என்ற பதிவில் எழுதி இருக்கிறேன்.
ஆசிரியர்களுக்கு சம்பளத்தை முதலில் தரைமட்டமாக்க குறைக்க வேண்டும். லட்சத்தில் சம்பளம் வாங்குவதால் தான் தனியார் பள்ளியை நாட தோன்றுகிறது?
பதிலளிநீக்கு