அப்பா எங்கேம்மா?


நான் நீரோடிக்குச் சென்ற நாளில்தான் அந்தச் சம்பவம் நடந்திருந்தது. பள்ளம் கிராமத்திலிருந்து வழக்கம்போல், தங்கள் கட்டுமரத்தில் மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றனர் அருள் ஜோஸ் (31), ஜேசுதாஸ் (27) சகோதரர்கள். இன்னும் முழுக்க விடிந்திராத அதிகாலை. கடலில் ஒரு வள்ளம் கட்டுமரத்தின் மீது மோதியது. தூக்கி வீசப்பட்டார்கள் இருவரும். ரொம்ப நேரம் கழித்து, அந்த வழியே சென்ற மீனவர்கள் தூரத்தில் ஒரு உயிர் தத்தளிப்பதைப் பார்த்தார்கள். உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு காயங்களோடு கை நீட்டினார் ஜேசுதாஸ். அருள் ஜோஸைக் காணவில்லை.

கடல் தேடல்
பரபரவெனப் பற்றிக்கொண்டது பள்ளம். மீனவர்கள் அத்தனை பேரும் கடலில் ஜோஸைத் தேட ஆரம்பித்தார்கள். முதல் நாள் காலையில் தொடங்கிய இந்தத் தேடுதல் பணி, மறுநாள் இரவு வரை நீடித்தது. பொதுவாக, இப்படி மீனவர்கள் கடலில் சிக்கிக்கொள்ளும்போது முதல் இரு நாள் வரை ஊர்க்காரர்கள் எல்லோரும் தேடுதல் பணியில் ஈடுபடுவார்கள். நெருங்கிய உறவினர்கள், நண்பர் கள் ஒரு வாரம் வரைகூடத் தேடுவது உண்டு. ஒரு வாரம் கடந்தும் ஆள் கிடைக்கவில்லை என்றால், அப்புறம் விதி விட்ட வழி என்று அர்த்தம்.


கடலோரக் காவல் படையினர் களம் இறக்கப்பட்ட பின்னர், மீனவர்கள் காணாமல்போனதும் அவர் களுக்கு உடனடியாகத் தகவல் தரப்படுவது உண்டு. அவர்களும் களம் இறங்குவார்கள். ஆனால், பெரும் பாலான சமயங்களில் அது வெறும் சம்பிரதாய நடவடிக்கை. அருள் ஜோஸ் விவகாரத்திலும் அதுதான் நடந்தது. கடலோரக் காவல் படையினர் தேடுதல் பணியில் அலட்சியம் காட்டினார்கள் என்று சாலையில் திரண்டார்கள் பள்ளம் மீனவர்கள். இதற்கிடையே அருள் ஜோஸ் கட்டுமரத்தின் மீது மோதிய வள்ளம் குளச்சல் கிராமத்தைச் சேர்ந்த மீனவருக்குச் சொந்தமானது என்ற தகவல் பரவவும் பள்ளத்துக்கும் குளச்சலுக்கும் இடையே மோதல் வெடித்தது. இரு ஊர்களிலும் எப்போது வேண்டுமானாலும் வன்முறை தீப்பிடிக்கலாம் என்ற நிலை. காவல் துறையினர் வண்டி வண்டியாக இறங்குகிறார்கள். குமரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், இரு கிராமங்களுக்கும் மாறி மாறிப் போய்க்கொண்டிருக்கிறார். குளச்சல் பிரதான சாலையைக் கடக்கவே பல நிமிடங்கள் ஆகின்றன. எங்கும் பதற்றம்.

மோளே... மோளே...
அருள் ஜோஸைக் காணவில்லை. அதற்குப் பின் 20 நாட்கள் ஓடிவிட்டன. இன்னமும் கிடைக்க வில்லை. 31 வயது இளைஞன். திருமணம் ஆகி நான்கு வருடங்கள்தான் ஆகின்றன. மூன்றரை வயதில் பெண் குழந்தை இருக்கிறது. வீட்டில் மனைவி சுபாஷினி சித்தப்பிரமை பிடித்தவர்போல உட்கார்ந்திருக்கிறார். பேசத் திராணி இல்லை. இரு வார்த்தைகள் பேசு வதற்குள் கண்கள் உடைந்து கண்ணீர் தாரை தாரையாக வடிகிறது. குழந்தை சமிஹா ஜோ அம்மாவையே பார்த்துக்கொண்டிருக்கிறாள். என்ன நினைத்தாளோ ஓடிவந்து சுபாஷினியின் மடியில் உட்கார்ந்துகொண்டு, கண்களைத் துடைத்துவிடுகிறாள். அப்புறம் அவளும் சேர்ந்து அழுகிறாள். மகள் அழுவதைக் காணச் சகிக்காமல் தன் அழுகையை நிறுத்திக்கொள்ளும் சுபாஷினி, மகளின் கண்களைத் துடைத்துவிடுகிறார்.

நாளைக்கு நூறு தடவை ‘மோளே... மோளே...' என்று அழைக்கும் தன்னுடைய அப்பா இனி எப்போது வருவார் என்று சமிஹா ஜோவுக்குத் தெரியாது. ஆனால், சுபாஷினிக்குத் தெரிந்துவிட்டது... இனி, தன் ஆருயிர் கணவர் வருவதற்கான சாத்தியங்கள் மிகமிக அரிதானவை என்று. அவரும் முட்டத்தில், ஒரு கடலோடிக் குடும்பத்தில் பிறந்தவர். கடலுக்குப் போய் கலம் உடைந்து, அடிபட்டு, ஏதோ ஒரு பிடி கட்டையைப் பிடித்துக்கொண்டு, கடல் நீரையே குடித்து, பாசியைத் தின்று, நாள் கணக்கில் உயிரைப் பிடித்துவைத்துத் திரும்பியவர்களும் உண்டுதான். ஆனால், அந்த அதிர்ஷ்டம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.

எத்தனை நாளைக்கு “அப்பா வந்துடும், அப்பா வந்துடும்” என்று சொல்லி பிள்ளையை ஏமாற்ற முடியும்? நேற்றைக்கு முன்தினம் சமிஹா பக்கத்து வீட்டுப் பிள்ளைகளோடு விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு பையன் சொல்லி விட்டான்:
“ஹே... உங்கப்பா இனி வர மாட்டார். அவர் கடலோடு போய்ட்டார். செத்துட்டார்.”
சமிஹாவுக்கு அழுகை பொத்துக்கொண்டு வந்தது. நேரே அம்மாவிடம் ஓடி வந்தாள்.
“அம்மா... நம்ம அப்பா வராதா? செத்துட்டா? விஜிண்ணன் சொல்றான்...”
சுபாஷினிக்குச் சொல்ல ஒரு வார்த்தையும் இல்லை. பிள்ளையைக் கட்டிக்கொண்டு கேவிக் கேவி அழுதார். சமிஹாவும் அழுதாள். அழுது அழுது எப்போது தூங்கினோம் என்பதே தெரியாமல் இருவரும் அப்படியே தூங்கிப்போனார்கள்.
காலையில் சுபாஷினி எழுந்தபோது பக்கத்தில் பிள்ளையைக் காணவில்லை. சுற்றும்முற்றும் எங்கும் காணவில்லை. பதறிப்போய் வெளியே ஓடினால், கடற்கரையில் நின்று கடலையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறாள் சமிஹா. மூன்றரை வயதுக் குழந்தை.


குமரியில் மட்டும் எண்ணிக்கை 148
அருள் ஜோஸைப் போல, குமரி மாவட்டத்தில் மட்டும் இப்படி 148 மீனவர்கள் ‘மாயம்' ஆகியிருக் கிறார்கள்.

அருள் ஜோஸ்களின் கதை நம் யாருக்கும் தெரியாமல் நடப்பது அல்ல. நாம் எல்லோருமே அந்தச் செய்திகளைப் படித்திருப்போம். பத்திரிகைகளில், ‘மீனவர் மாயம்' என்று ஒரு மூலையில், ஒரு பத்தியில் செய்தி வெளியாகும். ஒரு அமைச்சரின் எருமை மாடுகள் காணாமல் போனதற்காக பஸ்ஸியாபுராவில் மூன்று போலீஸார் பணி மாற்றம் செய்யப்பட்டதை நாம் படித்திருக்கிறோம். எருமை மாடுகளைத் தேடி ராம்பூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தேடுதல் வேட்டை நடத்தி, கண்டுபிடித்ததைப் படித்திருக்கிறோம். “என்னுடைய எருமைகள் விக்டோரியா ராணியைவிடப் பிரபலமானவை” என்று அந்த அமைச்சர் ஆசம் கான் பேட்டி கொடுத்ததைப் பார்த்திருக்கிறோம். இந்த நாட்டில், ஒரு அமைச்சரின் வீட்டில், ‘மாயம்' ஆகும் எருமை மாடுகளுக்குக் கிடைக்கும் முக்கியத்துவமும் கவனமும்கூட, குறைந்தது 16 குடும்பங்களுக்கு வாழ்வளிக்கும் ஒரு மீனவ உயிருக்கு ஏன் கிடைப் பதில்லை? கடல்புறத்தில் என்ன நடந்தாலும் ஏன் நமக்குத் தெரிவதில்லை அல்லது தெரிந்து கொள்வதில் ஏன் நமக்கு ஆர்வம் இல்லை?

ஜூலை, ‘தி இந்து’ 2014

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக