ஜெயகாந்தன் அப்படிச் செய்திருக்கக் கூடாது - ஜெயகாந்தன்


ஜெயகாந்தன் எழுதி ஆண்டுகள் பல ஆகின்றன. பேச்சும் அப்படித்தான். முதுமை நிறைய தளர்ச்சியைத் தந்திருக்கிறது. ஆனால், எந்தச் சூழலிலும் சிங்கம் சிங்கம்தான். எண்பதாவது பிறந்த நாள் விழாக் கொண்டாட்டத்துக்குத் தாயாராகிவிட்டது ஜெயகாந்தனின் உடல்நிலை.  “ம்...” என்று கனைத்துவிட்டு, மீசையை வருடியதும் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தேன்.

இந்த வயதில், தேசம் செல்லும் பாதை, எழுத்துலகத்தின் போக்கு இவற்றை எல்லாம் பார்க்கும்போது எப்படி இருக்கிறது?
காலந்தோறும் மாற்றங்களை நாம் பார்க்கிறோம். நாமும் மாறிக்கொண்டே இருக்கிறோம்.

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது நம் முன் காந்தி பாதை, நேரு பாதை என்று இரு பாதைகள் இருந்தன. இறுதியில் இரண்டாவது பாதையில்தான் நாம் பயணித்தோம். இப்போது அந்தப் பாதையை எப்படி மதிப்பிடுகிறீர்கள்?
நாம் தேர்ந்தெடுத்த பாதை சரியானது. ஆனால், எதை நாம் நேரு பாதை என்று சொல்கிறோமா அதற்கு அடித்தளமும் காந்திதான் என்பதை மறந்துவிடக் கூடாது.

இன்றைக்கும் காந்தி தேவைப்படுகிறாரா?
என்றைக்கும் காந்தி நமக்குத் தேவைப்படுகிறார்.

சுதந்திரம் அடைந்தபோது காங்கிரஸுக்கு மிகப் பெரிய சவாலாக இருந்தது இடதுசாரி இயக்கம். இன்றைக்கோ மிகப் பெரிய வீழ்ச்சியைச் சந்தித்து தேசியக் கட்சி என்கிற அந்தஸ்தைத் தக்கவைப்பதே சவால் எனும் நிலையில் இருக்கிறார்கள். இந்தப் பின்னடைவுக்கு என்ன காரணம்?
 பிரச்சினைகளைப் பேசிய அளவுக்குத் தீர்வுகளை இடதுசாரிகள் பேசவில்லை. எதிர்ப்பு அரசியல், நீடித்த பயணத்துக்கு உதவாது. அப்புறம், இடதுசாரி இயக்கத்தைச் சுயநலம் செல்லரித்துவிட்டது.

உங்கள் பார்வையில் சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனை எது? மிகப் பெரிய சவால் எது?
மகத்தான சாதனை - பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தது. மிகப் பெரிய சவாலும் அதுவே.

சுதந்திரக் காலகட்டத்திலிருந்தே மேற்கத்திய சிந்தனையாளர்களால் ‘இந்தியா உடையும்’ என்ற ஆரூடம் தொடர்ந்து சொல்லப்பட்டுவந்திருக்கிறது. இப்போது அருந்ததி ராய் போன்றவர்கள் அதைப் பற்றி மேலும் பலமாகப் பேசுகிறார்கள்…
இந்தியா ஒருபோதும் உடையாது. இந்தக் கூட்டாட்சி அமைப்பு உலகுக்கே முன்னுதாரணம் ஆகும்.

மொழி உணர்வு, இன உணர்வைத் தாண்டி வளர்ச்சி அடிப்படையிலான பிரிவினைக்கு வித்திட்டிருக்கிறது தெலங்கானா. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
 உங்கள் கேள்வியிலேயே பதில் இருக்கிறது. இனி வளர்ச்சி உணர்வுதான் தீர்மானிக்கும்.

அப்படி என்றால், வளர்ச்சிக்கான அரசியல் என்று சொல்லப்படும் அரசியலை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?
உண்மையான வளர்ச்சிக்கான அரசியலை ஆதரிக்கிறேன்.

மோடி அரசைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

மதிப்பிட இன்னும் கொஞ்சம் அவகாசம் தேவை என்று நினைக்கிறேன்.


விளிம்புநிலை மக்கள் வாழ்வை எப்போதும் கரிசனத்துடன் பார்த்தவர் நீங்கள். இன்றைய இந்தியாவின் வளர்ச்சியில் அவர்கள் பலன் அடைந்திருப்பதாக நினைக்கிறீர்களா?
ஏழைகள் வாழ்க்கை முழுமையாக மாறியிருக்கிறது என்று சொல்ல மாட்டேன். ஆனால், நிச்சயம் வளர்ச்சியில் அவர்களும் பங்கேற்றிருக்கிறார்கள். ஒருகாலத்தில் நான் ரிக்‌ஷாக்காரர்களைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறேன். இன்றைக்கு ரிக்‌ஷா தொழிலே அருகிவிட்டது இல்லையா?

இந்திய ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றால், என்ன மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும்?

அதிகாரவர்க்கத்தின் ஆதிக்கம், பிடிமானம் குறைக்கப்பட்டு, மக்களுடைய பங்கேற்பு அதிகரிக்கப்பட வேண்டும்.

சரி, தமிழக அரசியலை எப்படிப் பார்க்கிறீர்கள்?

(நீண்ட யோசனைக்குப் பின்…) ஆரோக்கியமாக இல்லை. ஆக்கபூர்வமானதாக மாற்ற வேண்டும்.

ஒருகாலத்தில் அரசியல் மேடைகளில் ஒலித்த எழுத்தாளர் குரல் உங்களுடையது. இன்னமும் உங்களிடம் அரசியல்வாதிகள் பேசுகிறார்களா? யாரெல்லாம் தொடர்பில் இருக்கிறார்கள்?
கலைஞர் பேசுவார். நல்லகண்ணு ஆஸ்பத்தியில் இருக்கும்போதுகூட நேரில் வந்து பார்த்துப் போனார்.

தமிழில் வேறு எந்தப் படைப்பாளிக்கும் கிடைக்காத சம கால மரியாதை - உங்கள் ஞானகுரு பாரதிக்கும் கூடக் கிடைக்காதது - உங்களுக்கு மட்டும் வாய்த்திருக்கிறது. இதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?

சாமானிய மக்களுடைய வாழ்க்கையை எழுதியதும், அந்த எழுத்தோடு ஒட்டி வாழ்ந்ததும் காரணம் என்று நினைக்கிறேன்.

ஊடகங்கள் எல்லாக் காலங்களிலும் கொண் டாடிய, கொண்டாடும் ஒரே தமிழ் எழுத்தாளர் நீங்கள். ஊடகங்களோடு உறவாடுவதில் சூட்சமம் ஏதும் இருக்கிறதா?
 என் எழுத்தினால் நின்றேன்; என் எழுத்தின் மீது நிற்கிறேன். இதுதான் ஒரே சூட்சமம். யாரிடமும் நான் மண்டியிட்டுக் கைகூப்புவது கிடையாது.

ஆரம்ப காலத்தில் சிறுபத்திரிகைகளே உங்கள் களம். சிறுபத்திரிகைகளில் தீவிரமான வாசிப்புத் தேடல் கொண்ட ஒரு சின்னக் கூட்டத்துக்கு எழுது வதற்கும் வெகுஜனப் பத்திரிகைகளில் பரந்துபட்ட வாசகர்களுக்கு எழுதுவதற்கும் என்ன வேறுபாடுகளை உணர்ந்தீர்கள்? இந்த மாற்றம் உங்கள் எழுத்துக்களில் ஏற்படுத்திய தாக்கம் என்ன?
வெகுஜனப் பத்திரிகைகள்தான் என்னை மக்களிடத்தில் கொண்டுபோய்ச் சேர்த்தன என்றாலும், வெகுஜனப் பத்திரிகைகளிடம் என்னைக் கொண்டுபோய்ச் சேர்த்தவை சிறுபத்திரிகைகள்தான். சிறுபத்திரிகைகளில் நான் எழுதிய எழுத்துகள் பிடித்திருந்ததால்தானே வெகுஜனப் பத்திரிகையாளர்கள் என்னைத் தங்களவன் ஆக்கிக்கொண்டார்கள்? என் எழுத்து என்றைக்கும் ஒரே எழுத்துதான். ஊடகங்கள் அதில் எந்த மாற்றத்தையும் உருவாக்கவில்லை.

ஆனால், பத்திரிகை ஆசிரியர்கள் திருத்தங்களை வலியுறுத்தும்போது ஏற்றுக்கொண்டிருப்பீர்கள் இல்லையா? அப்படியான திருத்தங்கள் கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் எழுத்துக்களில் மாற்றத்தைக் கொண்டுவந்திருக்கும் இல்லையா?
நான் மூர்க்கன் இல்லை. இது பரஸ்பரப் பகிர்தல். என்னிடமிருந்து அவர்களும் அவர்களிடமிருந்து நானும் கற்றுக்கொள்வது. நிச்சயமாக அந்தத் திருத்தங்கள் எழுத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. ஆனால், ஒருபோதும் எழுத்துக்கு விரோதமான திருத்தங்களுக்கு நான் செவிசாய்த்ததில்லை.

ஊடகங்களுடனான உங்களுடைய உறவில் ஓர் எழுத்தாளருக்கும் பத்திரிகையாளருக்குமான உறவு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைப்பது எந்தப் பத்திரிகையை, எந்தப் பத்திரிகை ஆசிரியரை?
விகடனை. அதன் அன்றைய ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியனை.

வாசிக்க நேரம் ஒதுக்க முடிகிறதா?
ம்… நிறைய பேர் எழுத வந்திருக்கிறார்கள், இல்லையா?

ஆனால், எழுத்தாளர்கள் எண்ணிக்கை உயர்வு மக்கள் இடையே மதிப்பை உண்டாக்கவில்லையே?
(சின்ன சிரிப்போடு…) பாவம்… என்ன காரணம்? ம்… இரு தரப்பினருமே காரணம். எழுத்தாளர்களுக்கும் கம்பீரமாக நடந்துகொள்ளத் தெரியவில்லை. மக்களுக்கும் மதிக்கத் தெரியவில்லை.

இப்போது என்ன படித்துக்கொண்டிருக்கிறீர்கள், அதாவது தமிழில்?
படிக்கிற மாதிரி எதுவும் இல்லை... அதாவது தமிழில்.

தமிழ் இலக்கியத்தில் 1990-க்குப் பிறகு ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்தது. ஒரு புதிய படையே உள்ளே புகுந்தது. தமிழ் நவீன இலக்கியத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசென்றது. ஆனால், நீங்கள் அதுபற்றியெல்லாம் மூச்சுவிடவே இல்லை. கிட்டத்தட்ட உங்கள் வயதில் மூன்றில் ஒரு பகுதி காலகட்டத்தில், உங்கள் மொழியில் புதிதாக எழுத வந்தவர்களைப் பற்றி ஒரு மூத்த படைப்பாளியான நீங்கள் எதுவும் பேசவில்லை. ஜெயகாந்தன், காலத்தின் வீட்டுக்குள் சென்று, எல்லாக் கதவுகளையும் பூட்டிக்கொண்டு, ஊரே இருண்டு கிடக்கிறது என்று சொல்கிறார் என்ற விமர்சனம் உங்கள் மீது உண்டு...
சரியில்லை.

எது சரியில்லை, விமர்சனமா, ஜெயகாந்தன் காலத்தின் எல்லாக் கதவுகளையும் பூட்டிக்கொண்டதா?
ஜெயகாந்தன் பூட்டிக்கொண்டது சரியில்லை. ஜெயகாந்தன் அப்படிச் செய்திருக்கக் கூடாது.

இன்றைக்கு உங்களுக்குப் பிடித்த தமிழ் எழுத்தாளர் யார்? என்ன காரணம்?
இன்றைக்கும் எனக்குப் பிடித்த தமிழ் எழுத்தாளர் மௌனி. நான் மொழியை ஆர்ப்பாட்டமாகப் பயன்படுத்தினேன் என்றால், அவர் ரகசியமாகப் பயன்படுத்தியவர். அதுதான் காரணம் என்று நினைக்கிறேன்.

உங்கள் ஆரம்ப கால எழுத்துக்கள் என்ன வடிவத்தில் இருந்தனவோ, அதே வடிவத்தில்தான் கடைசிக் கால எழுத்துக்களும் இருந்தன. நீங்கள் கொஞ்சம்கூட உங்கள் எழுத்து நடையை மாற்றிக் கொள்ளாததைப் புதிய மாற்றங்களுக்கு ஜெயகாந்தன் முகங்கொடுக்கத் தயாராகவில்லை என்று எடுத்துக்கொள்ளலாமா?
ஜெயகாந்தனின் எழுத்துக்களை ஜெயகாந்தனே விமர்சிக்க வேண்டாம் என்று நினைக்கிறேன். இந்த விமர்சனமெல்லாம் மற்றவர்கள் வேலை. தங்களை விமர்சகர்கள் என்று கருதிக்கொள்பவர்கள் வேலை.

முதுமையில் வாழ்க்கை கொடுமை என்கிறார் அசோகமித்திரன். முதுமையிலும் வாழ்க்கையை ரசிக்கிறேன் என்கிறார் கி.ராஜநாராயணன். ஜே.கே-வுக்கு எப்படி?
நான் கி.ரா. கட்சி. வாழ்க்கையை எப்போதும் உற்சாகமாகவே பார்க்கிறேன். ஆனால், உற்சாகத்துக்கு உடல் ஆரோக்கியம் முக்கியம்.

இந்த வயதில், இன்றைய சூழலில் ஜெயகாந்தனின் ஒருநாள் எப்படி இருக்கிறது?
நீங்கள் அந்த வயது, அந்தச் சூழல் என்று எதை நினைத்துக் கேட்கிறீர்களோ, அப்போது இருந்த மாதிரிதான் இந்த வயதில், இந்தச் சூழலிலும் ஒருநாள் இருக்கிறது. ஒரே ஒரு வித்தியாசம், அன்றைக்கு நான்கு மணிக்குப் பொழுது விடிந்தபோது, எனக்கும் நான்கு மணிக்கு விடிந்தது. இன்றைக்கு நான்கு மணிக்குப் பொழுது விடியும்போது, எனக்கு எட்டு மணிக்குத்தான் தெரிகிறது.

கோடைக் காலத்தில் பகல்களையும், மழைக் காலத்தில் இரவுகளையும் நீண்டதாக உணர்கிறோம். அதுபோல, இளமையில் ஒருநாளை உணர்வதற்கும் முதுமையில் ஒரு நாளை உணர்வதற்கும் வேறுபாடு ஏதும் தெரிகிறதா?
இளமையில் ஒரு நாள் பொழுது என்பதைச் சின்னதாக உணர்ந்திருக்கிறேன். முதுமையில் அது இன்னமும் சின்னதாகத் தெரிகிறது.

முதுமையில் பழைய காதலை நினைவுகூர்வது எப்படி இருக்கிறது?
நினைவுகூர வேண்டியது இல்லை. எந்த வயதிலும் காதல் கூடவே இருக்கிறது. எந்த வயதிலும் அது இனிமைதான். ஆனால், இந்த வயதில் ஒரு குழந்தையைக் கொஞ்சுவதுகூடக் காதலாகத்தான் படுகிறது.

முதுமையில் கடவுள் எந்த அளவுக்குத் தேவைப்படுகிறார்?

எல்லா பருவத்திலுமே தேவைப்படுகிறார். இப்போது மேலும் நெருக்கமாகியிருக்கிறார்.

அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகிறது; பெரும்பாலும் படுத்தே இருக்கிறீர்கள் என்றெல்லாம் சொல்கிறார்கள். ‘சபை’இல்லாமல் உங்களால் இருக்க முடியாதே… என்ன செய்கிறீர்கள்?

நான் இருக்கும் இடம் எதுவோ, அதுவே என் சபை. அதனால், சபை இல்லாமல் ஜே.கே. என்ற பேச்சுக்கே இடம் இல்லை. சபை எப்போதுமே இருக்கிறது. இங்கேயும் இருக்கிறது.

இளமையில் மரணத்தைப் பார்ப்பதற்கும் முதுமையில் மரணத்தைப் பார்ப்பதற்கும் வேறுபாடு இருக்குமல்லவா? ஆஸ்பத்திரியில் உயிர்ப் போராட்டத்தை எதிர்கொண்டபோது மரணத்தை எப்படிப் பார்த்தீர்கள்?

அந்த நினைப்பே வரவில்லை. ஏதோ ஆஸ்பத்திரிக்கு வந்திருக்கிறோம், மருத்து மாத்திரை கொடுக்கிறார்கள், உடம்பு சரியானதும் வீட்டுக்குப் போய்விடுவோம் என்று நினைத்தேன். அதேபோல, உடம்பு சரியானதும் வீட்டுக்கு வந்துவிட்டேன். மரணத்தின் மீது எந்தப் பயமும் இல்லை.

என்னென்ன கடமைகளை மிச்சம் வைத்திருக்கிறீர்கள்?

இந்தப் பிறப்புக்கு என் கடமைகளை முடித்து விட்டதாகவே நினைக்கிறேன்.

தமிழ்ச் சமூகம் முக்கியமாக எதைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

குறுகிய மனப்பான்மையிலிருந்து வெளியே வரக் கற்றுக்கொள்ள வேண்டும். ஏனைய சமூகங்களின் ஆக்கபூர்வ விஷயங்கள் ஒவ்வொன்றையும் கற்றுக்கொள்ள வேண்டும். முக்கியமாக தமிழ் வெறியை விட்டொழிக்க வேண்டும்.

உங்கள் வாசகர்களுக்குச் சொல்ல சிறப்புச் செய்தி உண்டா?

ஞானகுரு பாரதி அன்றைக்குச் சொன்னதுதான் என்றைக்கும் என் செய்தி: ஊருக்கு நல்லது சொல்ல வேண்டும், உண்மையைச் சொல்ல வேண்டும். ஒரே வேண்டுகோள்: தமிழையும் படியுங்கள், தமிழுக்கு நல்லது!

ஜூலை 2014, செப்டம்பர் 2013 இரு தருணங்களில் எடுக்கப்பட்ட பேட்டிகளின் தொகுப்பு.
‘தி இந்து’.

9 கருத்துகள்:

  1. தி இந்து தமிழ் நாளிதழிலும் படித்தேன். மகிழ்ச்சி. ஜே.கே.யின் சாதனைச் சிகரங்களே இன்றுவரை தமிழ்ச் சிறுகதையின் உச்சம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரல்லர். மிகுந்த மதிப்பிற்குரிய எழுத்துகளைத் தந்த அவரே தனக்குத் தானே முரண்பட்ட படைப்புகளைப் பற்றி அவரது கோபத்திற்கு அஞ்சி யாரும் விமர்சிப்பதில்லை என்றே நான் கருதுகிறேன். அவரது வாழ்வும் படைப்பும்பற்றிய எனது இந்தக் கட்டுரையைத் தங்கள் பார்வைக்கு வைக்கிறேன். நன்றி.
    பார்க்க - http://valarumkavithai.blogspot.in/2013/01/blog-post_7.html
    (ஜெயகாந்தன் படைப்புகள் - ஒரு முழு விமர்சனம்)
    அன்புடன், நா.முத்து நிலவன்

    பதிலளிநீக்கு
  2. ஜெயகாந்தன் அப்படி செய்திருக்கக் கூடாது என்ற மறுமொழி ஜெயகாந்தன் அவர்களிடமிருந்து வருமளவு உள்ளதை நினைக்கும்போது தங்களுடைய பேட்டியின் வீச்சினையும், ஈடுபாட்டினையும் நன்கு உணரமுடிகிறது. பல அரிய தகவல்களை இப்பேட்டி மூலமாகத் தெரிந்துகொண்டோம். நன்றி.

    பதிலளிநீக்கு
  3. /என்னென்ன கடமைகளை மிச்சம் வைத்திருக்கிறீர்கள்?
    இந்தப் பிறப்புக்கு என் கடமைகளை முடித்து விட்டதாகவே நினைக்கிறேன்./
    இந்தப் பதில் என்னை ஒரு சொல்லொண்ணா சோகத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டது. இதை மகிழ்ச்சியாக சொன்னாரா அல்லது மன இறுக்கத்தில் சொன்னாரா என்று தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  4. விகடன் நேர்காணல்களில் பெரிய மனிதர்கள் பலரும் அந்த இதழை மிகவும் பாராட்டிப் பேசுவார்கள். படிப்பதற்கே மிகவும் பெருமையாக இருக்கும். இருந்தாலும், நேர்காணல் செய்பவரே அந்த இதழிலிருந்துதான் வந்திருக்கிறார் என்பதால் ஒருவேளை முகநகுவதற்காக அப்படிக் கூறுகிறார்களோ என்கிற ஒரு சிறு நினைப்பும் கூடவே எழுவதைத் தவிர்க்க முடியாது. ஆனால், வேறு இதழிலிருந்து வந்து கேட்கும்பொழுதும் விகடன் பெயரையே கூறுவது, அதுவும் துணிச்சலுக்குப் பெயர் பெற்ற ஜெயகாந்தன் அவர்கள் கூறுவது இத்தனை ஆண்டுக்காலமாக விகடனைப் பாராட்டி விகடனின் பல்வேறு பகுதிகளிலும் பலரும் கூறிய வார்த்தைகளுக்கு ஒரு நடுநிலை நற்சான்றிதழை வழங்கி விட்டது!

    பதிலளிநீக்கு
  5. சிங்கம் ஓய்வெடுக்கச் சென்றுவிட்டது. ஜெயகாந்தன் மறைவையொட்டி மறுபதிவு செய்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. ஜே.கேவின் முதுமை காலத்திலும் கூன்விழாத பதில்கள். ஜே.கேவின் மறைவு மனதில் சற்று கனம்கூட்டுகிறது.

    பதிலளிநீக்கு
  7. சாத்தியமான வார்த்தை. தோழர்களுக்கு ஏற்று கொள்ள மனம் வர போவதில்லை.

    பிரச்சினைகளைப் பேசிய அளவுக்குத் தீர்வுகளை இடதுசாரிகள் பேசவில்லை. எதிர்ப்பு அரசியல், நீடித்த பயணத்துக்கு உதவாது. அப்புறம், இடதுசாரி இயக்கத்தைச் சுயநலம் செல்லரித்துவிட்டது.

    பதிலளிநீக்கு
  8. ஜேகே அவர்கள் மறையுமுன் அவருக்கும் என்க்கும் பொதுவான் நண்பரான ஆட்டோ ஒட்டுனரை அழைத்து ரகசியமாக ஜயகாந்தன் வீட்டுக்கு சென்றேன்... அவர் என்ன அடையாளம் கண்டுகொண்டாரே ஒழிய பேசவில்லை நான் பேசுவதை சிரித்துக்கொண்டே கேட்டார் அடுத்த 2 அல்லது 3 மாதங்களுக்குள் மறைந்து விட்டார்...ஆயினும் நம் நினைவில் நிற்கிரார் .. சாருஹாஸன்

    பதிலளிநீக்கு