மரணத்தின் அருகே ஏன் வாழ்கிறார்கள்?

குமரி மாவட்டம், இறையுமண்துறையில் பொங்கும் கடல் அருகே இருக்கும் மீனவர் வீடுகள்.
நீங்கள் கடலைப் பற்றி எழுத ஆரம்பிக்கும் முன் கட்டாயம் கடற்கரையை ஒருமுறை பார்க்க வேண்டும். இந்தத் தொடருக்காகப் பலரையும் சந்தித்து, ஆலோசனை கலந்தபோது, மீனவ இனத்தைச் சேர்ந்த பேராசிரியர் வறீதையா கான்ஸ்தந்தின் எனக்குச் சொன்ன முதல் ஆலோசனை இது.

நான் சிரித்துக்கொண்டே சொன்னேன், “சின்ன வயதிலிருந்து நான் நிறைய முறை கடற்கரைக்குச் சென்றிருக் கிறேன் சார். மேலும், சென்னையில் நான் பணியாற்றும் ‘தி இந்து' அலுவலகத்திலிருந்து கூப்பிடு தூரத்தில்தான் மெரினா கடற்கரை இருக்கிறது என்பதும் உங்களுக்குத் தெரியும்தானே?”

வறீதையா சிரித்துக்கொண்டே மறுத்தார், “மன்னித்துக் கொள்ளுங்கள். எனக்காக நீங்கள் ஒருமுறை அசல் கடற் கரையைப் பார்க்க வேண்டும். அப்போதுதான் உங்களுக்குக் கடல் உணர்வு வரும். கடலோடிகள் பிரச்சினையை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றால், நீங்கள் கடல் உணர்வைப் பெறுவது அவசியம்.”

இது என்னடா வம்பாப் போச்சு என்றாகிவிட்டது எனக்கு. அவருடன் உரையாடுவதற்காக அவர் கொடுத்த நேரமே குறைவாக இருந்தது. அந்த நேரமும் கடற்கரையில் கழிந்து விட்டால் என்ன செய்வது என்ற கவலை என்னை அரிக்கத் தொடங்கியது. வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. சம்பவம் நடந்துகொண்டிருப்பது குமரி மாவட்டத்தில். தூத்தூரில். அவர் பணியாற்றும் கல்லூரியில்.

“சரி... போவோம்... எங்கே போகலாம்?” என்றேன்.

மரண பயம்தான் கடல் உணர்வா?
அவர் அழைத்துச் சென்ற இடம் இறையுமண்துறை. தூத்தூர் தீவின் ஒரு பகுதி. அதாவது, தூத்தூர் தீவின் ஆரம்பம் நீரோடி என்றால், முடிவு இறையுமண்துறை. தூத்தூரிலிருந்து வண்டியில் அழைத்துச் சென்றார். கடைசி யாக, நாங்கள் இரண்டு பக்கமும் வீடுகள் உள்ள ஒரு தெருவில் நுழைந்தபோது, அந்தத் தெருவின் முக்கில், ஒரு பெரும் அலை அடித்ததைக் கவனித்தேன். ஆனாலும், கடலைப் பார்க்கும் உற்சாகத்தில், மண்டையில் எதுவும் உறைக்கவில்லை. தெருக் கடைசியில் பேராசிரியர் வண்டியை நிறுத்தி, நாங்கள் இறங்கியபோது அது நடந்தது. பனை மரம் உயரத்துக்கு ஒரு பெரும் அலை. எங்கள் முன் வந்து விழுந்தது. திடுக்கிட்டுக் கண்களை மூடித் திறந்தால், என்னைச் சுற்றிலும் தண்ணீர்.

அப்போதுதான் கவனித்தேன். அந்த ஊர், அந்தத் தெரு, அந்த மக்கள் எல்லாம் கடலையொட்டி இருக்கிறார்கள். வீட்டுக்குக் கொல்லைப்புறத்தில் கடல். நான் இதுவரை பார்த்திருந்த அமைதியான கடல் அல்ல; ஆவேசமாகப் பொங்கிச் சீறும் கடல். வீட்டுக்கும் கடலுக்கும் இடையே ஒரே பாதுகாப்பு, அரசால் கருங்கற்களால் அமைத் துத் தரப்படும் 'தூண்டில் வளைவு' என்றழைக்கப்படும் தடுப் பரண். அலைகள் தடுப்பரணைத் தாண்டி, வீடுகளைத் தாண்டி தெருவில் வந்து விழுந்துகொண்டிருக்கிறது. அப்படியே சர்வநாடியும் ஒடுங்கிவிடுவதுபோல இருந்தது எனக்கு. வாழ்வில் இப்படிப்பட்ட அலைவீச்சை நான் பார்த்ததே இல்லை.

முதல்முறையாக மரண பயம் என்னைச் சூழ்ந்தது. வறீதையாவை அதிர்ச்சியோடு பார்த்தேன்.
“இந்தத் தூண்டில் வளைவு கட்டியிருக்கிறார்களே அதற்கும் பின்னால், நான்கு தெருக்கள் இருந்தன. கடந்த வருடங்களில் அந்தத் தெருக்கள் மூழ்கிவிட்டன. குமரி மாவட்டக் கடலோரம் முழுக்க இப்படிப் பல ஊர்களில் பல தெருக்கள், பல வீடுகள் ஜலசமாதியாகிவிட்டன. நாளைக்கு இங்கும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்...” என்கிறார் கடல் அலைகளைப் பார்த்துக்கொண்டே.

எனக்கு வாழ்விலேயே முதல்முறையாகக் கடல் அலைகள் மரண அலைகளாக அப்போது தெரிந்தன. அதற்கு முன் எவ்வளவோ முறை கடலை, கடல் அலைகளைப் பார்த் திருக்கிறேன். நான் இப்படி உணர்ந்ததேயில்லை.

“சென்னையிலும் புதுவையிலும் வேளாங்கண்ணியிலும் கன்னியாகுமரியிலும் ராமேஸ்வரத்திலும் சுற்றுலாப் பயணி களைக் கவர்வதற்காகச் சகல வசதிகளோடும், பாதுகாப்பு ஏற்பாடுகளோடும் அரசு பராமரிக்கும் கடற்கரைகள் வேறு; கடலோடிகள் வாழும் கடற்கரைகள் வேறு. இதுதான் கடற்கரையின் உண்மையான முகம். கடற்கரையே இப்படி இருக்கும் என்றால், கடல் எப்படி இருக்கும் என்று நினைத்துப்பாருங்கள்...”

“மரண பயம்தான் கடல் உணர்வா?” - பேராசிரியரிடம் கேட்டேன்.

“ம்ஹூம்… மரணமே துணையாவதுதான் கடல் உணர்வு...”
- அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, என் எதிரே இருக்கும் வீட்டைப் பார்க்கிறேன். கையில் மிக்சருடன் டி.வி. பார்த்துச் சிரித்துக்கொண்டிருக்கிறாள் பள்ளிக்கூடம் போய்விட்டு திரும்பிய ஒரு ஐந்து வயதுச் சிறுமி. மூன்று வயது இருக்கலாம். பக்கத்தில் நிற்கும் தம்பி அவள் மடியில் ஏறி உட்கார்ந்துகொள்கிறான். பார்வையை அப்படியே வீட்டுக்குப் பின்னால் கொண்டுபோனால், கருங்கல் சுவரில் வெறிகொண்டு மோதித் தெறித்து, அவள் வீட்டைத் தாண்டி வாசலில் வந்து விழுகிறது அலை. எந்த நம்பிக்கையில் இவர்கள் இங்கு வாழ்கிறார்கள்?

கடல் சீறினால் என்னவாகும் என்பதற்கான முன் அனுபவங்கள் தமிழ் மீனவர்களுக்கு ஆதிகாலம் தொட்டு இருக்கின்றன. கண் முன்னே உள்ள உதாரணங்களே பூம்பூகார் முதல் சுனாமி தாக்குதல் வரை இருக்கின்றன. கோடி ரூபாய் கொடுத்தாலும் நம்மால் அங்கு ஒரு நாள் நிம்மதியாகப் படுத்துத் தூங்க முடியாது. எந்த நம்பிக்கையில் இவர்கள் இங்கு வாழ்கிறார்கள்?

வறீதையாவிடம் கேட்டேன், “இங்கு வாழ்வது பெரிய அபாயம் அல்லவா? ஏன் கடலை விட்டுக் கொஞ்சம் தள்ளி வீட்டை அமைத்துக்கொள்ளக் கூடாதா?”

“கடலோடிகள் சமூகத்துடன் கொஞ்சம்கொஞ்சமாக நெருக்கமாகும்போது, இதற்கான பதிலை நீங்களே கண்டடைவீர்கள்.”

நான் அவரை மலங்கமலங்கப் பார்த்தேன்.

விடாமல் துரத்திய கேள்வி
நிலத்தில் எவ்வளவோ இடம் இருக்கும்போது மீனவர்கள் ஏன் கடலையொட்டியே வாழ்கிறார்கள்? மரணம் எந்நேரமும் வாரிச் சுருட்டும் என்று அறிந்தும் ஏன் கடலை விட்டு அகல மறுக்கிறார்கள்? எது கடலையும் மீனவர்களையும் பிரிக்காமல் பிணைத்திருக்கிறது? இந்தக் கேள்விக்கான விடை எனக்கு அப்போது புரியவில்லை. ஆனால், கடலோரத்திலேயே திரிய ஆரம்பித்த சூழலில் வெகுசீக்கிரம் கொஞ்சம்கொஞ்சமாகப் புரிபட ஆரம்பித்தது. நீரோடியிலிருந்து என்னை விடாமல் துரத்திய அந்தக் கேள்விக்கான பதில் தனுஷ்கோடியில் எனக்குக் கிடைத்தது.
ஜூலை, 2014 ‘தி இந்து’

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக