வெற்றிக்குப் பணம்தான் காரணமா?


திமுக ஆட்சி அரியணையைக் கைப்பற்றிய 1967 தேர்தலில், விருதுநகர் தொகுதியில் காமராஜர் தோற்றார். காமராஜர் தோல்வியைத் தாங்க இயலாத தொண்டர் ஒருவர், “அய்யா! நீங்க தோத்துப்போனதக்கூடத் தாங்கிக்கிடலாம்யா. நம்ம ஜனம் யாரைத் தேர்ந்தெடுத்திருக்கு பாத்திங்களா? சாதாரண சீனிவாசன் எங்கே, நீங்க எங்கே?” என்று கையைப் பிடித்துக் கதறியழுதபோது, காமராஜர் சொன்னாராம், “ஏ.. சாதாரண ஆளு இப்படி மேல வந்து உட்காரணும்னுதான் இவ்வளவு நாளா ஓடிக்கிட்டிருக்கோம். தோத்ததுல எதாவது சந்தோஷம் உண்டுன்னா அது இதுதாம்னேன்!”

காந்தியின் காங்கிரஸ் இந்நாட்டின் ஏழை எளிய மக்களை அரசியல்மயப்படுத்தியது என்றால், தமிழகத்தில் விளிம்புநிலை மக்களை ஆட்சியதிகாரத்தை நோக்கி நகர்த்தியதில் திராவிட இயக்கங்களுக்கு முக்கியமான பங்கு உண்டு. காமராஜரின் காங்கிரஸுக்கு எதிராகத் திராவிட அரசியல் தலைவர்கள் அன்றைக்கு முன்வைத்த முக்கியமான குற்றச்சாட்டுகளில் ஒன்று, காங்கிரஸ் பண்ணையார் கட்சியாகிவிட்டது என்பது. இம்முறை தமிழகத்தில் பிடிபட்ட பணம் தேர்தல் நடந்த ஏனைய எல்லா மாநிலங்களிலும் பிடிபட்ட மொத்த தொகையைக் காட்டிலும் அதிகம். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சட்டப்பேரவையில் 76% உறுப்பினர்கள் அதிகாரபூர்வமாகவே கோடீஸ்வரர்கள். ஜெயலலிதா, கருணாநிதி போட்டியிட்ட தொகுதிகளிலும்கூடப் பணப்பட்டுவாடா நடந்திருக்கிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன என்றால், எங்கே ஆட்டத்தை ஆரம்பித்த திராவிடக் கட்சிகள், எங்கே வந்து நிற்கின்றன என்பதைப் புரிந்துகொள்ளலாம்.


பணம் இந்தத் தேர்தலில் பேயாட்டம் போட்டது எல்லோருக்கும் தெரியும். பணம் வாங்கியவர்கள் எந்தத் தரப்புக் கொடுத்தாலும் வாங்கிக்கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு, “பணம் எங்கே?” என்று கேட்பவர்கள், “ஆயிரமெல்லாம் ஒரு காசா?” என்று கேட்க நீண்ட நாள் ஆகாது. வீட்டுக்கு வீடு வாக்குச்சாவடிச்சீட்டு கொடுப்பதைப் போல நூறு, ஐந்நூறு, ஆயிரம் என்று அவரவர் வசதிக்கேற்ப விநியோகிக்கும்போது, வாங்குபவர்களுக்கு அது அதிகபட்சம் நூறு, ஐந்நூறு, ஆயிரம்தான்; கொடுப்பவர்களுக்கு?

மக்களுக்கு ஊழலையும் பேராசையையும் ஊட்டி வளர்ப்பதுபோல இழிவு இல்லை. மூட்டியவரையும் சேர்த்தழிக்கும் ஊழல் தீ. இப்போதே அது வேலையைத் தொடங்கிவிட்டது. எந்த இரு கட்சிகள் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதைத் தேர்தல் பணிகளின் அடிப்படைகளில் ஒன்றாக மாற்றினவோ அந்த இரு கட்சிகளையும் சேர்ந்த வேட்பாளர்கள் பலரே இப்போது கதறுகிறார்கள். கட்சி கொடுத்ததைத் தாண்டி, தங்களுடைய எல்லா ஆதாரங்களையும் பயன்படுத்தி, கடனும் வாங்கி தேர்தலில் அழித்துவிட்டுத் தோற்று நிற்பவர்கள் அநேகம். இரு கட்சிகளுமே பணத்தின் தீயருசியை இப்போது உணர ஆரம்பித்திருக்கின்றன.

நேற்றைய தினம் திமுக பிரமுகர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். “பணம்தான் காலை வாரிவிட்டது” என்றார். அதிமுகவைக் காட்டிலும் கூடுதலாகச் செலவிட்டிருந்தால் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கலாம் என்பது இதன் அர்த்தம். “பணம் கொடுக்கும் கலாச்சாரம் பரவ நீங்களும்தானே காரணம்? நீங்கள் ஊதிய தீ இன்றைக்கு உங்களையே வதைக்கிறது” என்றேன். அவருக்குச் சொல்ல பதில் ஏதும் இல்லை. நாளை அதிமுகவுக்கும் இது நடக்கும்.

அரசியல் தலைவர்கள் சாமானிய மக்களைச் சமூக ஒழுக்கத்தை நோக்கி நகர்த்துபவர்களாக இருக்க வேண்டும்; அரசியலுக்காக மேலும் கேடுகெட்டவர்களாக, ஊழல்வாதிகளாக ஆக்கும் அவலம் இங்கே நடக்கிறது. இதில் சுவாரஸ்யமான ஒரு திருப்பம், காசு வாங்குபவர்கள் ஓட்டு காசு கொடுப்பவர்களுக்குத்தான் எனும் உத்தரவாதம் கரைந்திருப்பது. இந்தத் தேர்தலில் பணத்தை மட்டுமே நம்பி அழித்தவர்கள் ஏராளமான இடங்களில் தோற்றிருக் கிறார்கள். பணம் மட்டுமே கரை சேர்த்துவிடும் என்றால், பணம் வெள்ளமாகப் பாய்ந்ததாகச் சொல்லப்படும் தொகுதிகளில் முன்னாள் அமைச்சர்கள் பலர் தோற்கக் காரணம் என்ன?

இந்தியத் தேர்தல்களில் பல காரணிகள் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கின்றன. சாதி, மதம், இனம் என்று நீளும் வரிசையில் பணத்துக்கும் எப்போதும் ஓரிடம் இருந்தேவருகிறது. அரசியலில் இவை ஏன் ஆதிக்கம் செலுத்துகின்றன என்றால், நம் மனங்களில் இவை எல்லாமும் ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதே பதில். பெரும் பகுதி மக்கள் இன்றைக்கும் நூறு ரூபாய்க்காக அல்லாடும் ஒரு சமூகத்தில், பணம் எப்படி விளையாடாமல் இருக்க முடியும்? அதேசமயம், இவை மட்டுமே தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பதாகச் சொல்ல முடியாது. அப்படிச் சொல்வது கோடிக்கணக்கான மக்களை வெறியர்களாக, திருடர்களாகச் சித்தரிக்கும் செயல். இவற்றை மட்டுமே முன்னிறுத்தியவர்களின் தோல்வியையும் பார்க்கத்தானே செய்கிறோம்?


திமுகவைச் சேர்ந்த முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜனின் மகன் தியாகராஜன், “வாக்காளர்கள் யாருக்கும் நான் பணம் தர மாட்டேன். மக்களுக்குச் சேவை செய்யத்தான் அரசியலுக்கு வந்திருக்கிறேனே தவிர, கொள்ளையடிக்க அல்ல” என்று கட்சிக்காரர்கள், மக்கள் மத்தியிலும் பகிரங்கமாகவே பேசியவர். மதுரை மத்திய தொகுதியில் வென்றிருக்கிறார். பழனிவேல்ராஜனுக்கு மக்களிடம் இருந்த செல்வாக்கின் நீட்சி இது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆறு தொகுதிகளிலுமே ஆளும் அதிமுக தோற்றிருக்கிறது. ஆறில் நான்கு தொகுதிகளில் மூன்றாவது இடத்துக்கு அது தள்ளப்பட்டிருக்கிறது. விளவங்கோடு தொகுதியில் நான்காவது இடத்துக்குத் தள்ளப்பட்டதுடன், வைப்புத்தொகையையும் இழந்திருக்கிறது. குமரி மாவட்டத்தில் ஆதிக்கம் செலுத்தும் காங்கிரஸ், இங்குள்ள ஒரு தொகுதியில்கூட வாக்காளர்களுக்குப் பணம் தரவில்லை என்பதை எதிர்க்கட்சியினரே ஒப்புக்கொள்கிறார்கள். ஒவ்வொரு தொகுதிக்கும் கட்சி சார்பில் ரூ.25 லட்சம் அளிக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். அதுவும்கூட டெல்லியிலிருந்து நேரடியாக வேட்பாளர் வங்கிக்கணக்கில் அதிகாரபூர்வமாகவே வரவு வைக்கப்பட்டிருக்கிறது. திமுக, அதிமுகவும்கூட தமிழகத்தின் ஏனைய தொகுதிகளுடன் ஒப்பிடுகையில் மிகச் சொற்பமான அளவே இங்கு செலவழித்திருக்கின்றன.

இவர்கள் எல்லாம் எப்படி ஜெயித்தார்கள்? முதலாவது காரணம், குமரி மாவட்ட அரசியல் கலாச்சாரமானது தமிழக அரசியல் கலாச்சாரத்தின் நீட்சி அல்ல; தேசிய/கேரள அரசியல் கலாச்சாரத்தின் எச்சம். இரண்டாவது காரணம் முக்கியமானது, மக்களோடு அரசியல் கட்சிகளுக்கு உள்ள நேரடித் தொடர்பு. எங்கள் நாகர்கோவில் செய்தியாளர் சுவாமிநாதனிடம் தேர்தலுக்கு முன்பு பேசிக்கொண்டிருந்தபோது, “கிள்ளியூரில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் வெல்வார்” என்று கூறினார். எப்படி என்று கேட்டேன். “அது காங்கிரஸின் பாரம்பரியமான தொகுதி என்பதோடு, இங்கே இணையம் கடற்கரையில் வர்த்தகத் துறைமுகம் அமைக்கும் முயற்சியில், பாஜக அரசு ஈடுபட்டிருக்கிறது. ஏனைய கட்சிகள் இதைப் பற்றி பெரிய அளவில் அலட்டிக்கொள்ளாதபோது, உள்ளூர் காங்கிரஸார் இதை எதிர்த்து கடுமையாகப் போராடுகிறார்கள். அதனால் ஜெயித்துவிடுவார்கள்” என்றார். தமாகா வேட்பாளர் 13,704 வாக்குகளைப் பிரித்திருக்கும் நிலையிலும், காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ்குமார், 46,295 வாக்குகள் வித்தியாசத்தில் அங்கு வென்றிருக்கிறார். இங்குள்ள ஒவ்வொரு தொகுதியிலும் பல்லாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில், இப்படி காங்கிரஸ்/கூட்டணி வேட்பாளர்கள் ஜெயித்திருக்கிறார்கள்.

பொதுவில் மக்கள் மத்தியில் எங்கே அரசியல்வாதிகள் களத்தில் நிற்கிறார்களோ அங்கே, அரசியல்வாதிகள் பக்கம் மக்கள் நிற்கிறார்கள். அதிமுகவும், திமுகவும் இன்றைக்குப் பல இடங்களில் பெருமளவு பணம் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட அடிப்படைக் காரணம் மக்கள் சேவையிலிருந்தும் களத்திலிருந்தும் அவர்கள் அந்நியமாகி ஊழலில் கரைந்து நிற்பது. இரு கட்சி நிர்வாகிகளும் உள்ளூரில் குட்டி ராஜாக்கள்போலச் சுற்றிக்கொண்டிருப்பது. ஏனைய கட்சிகளால் ஏன் இவர்களை நெருங்க முடியவில்லை என்றால், அமைப்புரீதியாக எந்தப் பலமும் இல்லாததோடு, அதே போன்ற பாவனை அரசியலில் இவர்களும் ஈடுபட்டிருப்பது. இரு பெரிய கட்சிகளைத் தாண்டி, மக்களுக்கு ஏனைய கட்சிகள் கண்ணுக்குத் தெரியாமல் இருக்க மிக முக்கியமான காரணம், உள்ளூர் அளவில், அவர்கள் ஊழல் அடாவடியற்ற அல்லது ஊழல் அடாவடி குறைந்த குட்டி அதிமுக, திமுகவாக மக்கள் கண்களுக்குத் தெரிவது. கட்சிகளின் பெயர் வித்தியாசத்தைத் தாண்டி அவர்கள் சென்னை அலுவலகங்களில் உட்கார்ந்துகொண்டு, விடும் அறிக்கைகளைத் தாண்டி, எப்போதாவது காலையில் 10 மணிக்கு ஆரம்பித்து மாலை 5 மணிக்குள் முடிக்கும் பாவனைப் போராட்டங்களைத் தாண்டி ஏனைய கட்சிகளுக்கும் அதிமுக, திமுகவுக்கும் கீழ்நிலையில் என்ன வேறுபாடு இருக்கிறது? மக்கள் மேலிருந்து பார்த்து மட்டும் கட்சிகளை மதிப்பிடுவதில்லை; கீழிருந்தும் பார்க்கிறார்கள்!


மே 2016, ‘தி இந்து’


11 கருத்துகள்:

  1. Super,இந்தியத் தேர்தல்களில் பல காரணிகள் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கின்றன. சாதி, மதம், இனம் என்று நீளும் வரிசையில் பணத்துக்கும் எப்போதும் ஓரிடம் இருந்தேவருகிறது. அரசியலில் இவை ஏன் ஆதிக்கம் செலுத்துகின்றன என்றால், நம் மனங்களில் இவை எல்லாமும் ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதே பதில். பெரும் பகுதி மக்கள் இன்றைக்கும் நூறு ரூபாய்க்காக அல்லாடும் ஒரு சமூகத்தில், பணம் எப்படி விளையாடாமல் இருக்க முடியும்? அதேசமயம், இவை மட்டுமே தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பதாகச் சொல்ல முடியாது. அப்படிச் சொல்வது கோடிக்கணக்கான மக்களை வெறியர்களாக, திருடர்களாகச் சித்தரிக்கும் செயல். இவற்றை மட்டுமே முன்னிறுத்தியவர்களின் தோல்வியையும் பார்க்கத்தானே செய்கிறோம்?

    பதிலளிநீக்கு
  2. கன்னியாகுமரியில் திமுக, காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றதற்கு மத ரீதியிலான அரசியல் ஒரு முக்கிய காரணம். சிறுபான்மையினர் அதிகம் வாழும் மாவட்டம் இது, காங்கிரஸ், திமுக கூட்டணியை ஆதரிக்கா விட்டால் பாஜக வெற்றி பெற்று விடும் என்பதால் தான் இங்கே காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கிறது. Religion is a huge factor in deciding poll results in Kanniyakumari district. Colachel harbour issue is a secondary reason here. Reconfirm these information with your KK reporter sir.

    பதிலளிநீக்கு
  3. உங்கள் கருத்தோடு முற்றிலும் மாறுபடுகிறேன். இடதுசாரிகள் செய்யாத மக்கள் போராட்டமா? ஆனால் தமிழகத்தில் அவர்கள் நிலை என்ன? ஏன் தாங்கள் குறிப்பிடுகிற குமரி மாவட்டத்தில் அவர்களின் இருப்பு அனேகமாக இல்லையே?

    பதிலளிநீக்கு
  4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  5. மக்கள் நலனுக்காக போராடியவா்கள் வென்றார்கள் என்றால்,மநகூ, உதயகுமார் ஏன் வாக்கு வாங்கமுடியவில்லை.

    பதிலளிநீக்கு
  6. பணமே எல்லா நேரத்திலும் வென்றுவிடாது என்பதற்கும் சான்றுகள் உள்ளது கொஞ்சம் ஆறுதலை தருகிறது .. தங்கள் தளத்தை கண்டத்தில் மகிழ்ச்சி https://ethilumpudhumai.blogspot.in

    பதிலளிநீக்கு
  7. கன்னியாகுமரியில் திமுக, காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றதற்கு மத ரீதியிலான அரசியல் ஒரு முக்கிய காரணம். சிறுபான்மையினர் அதிகம் வாழும் மாவட்டம் இது, காங்கிரஸ், திமுக கூட்டணியை ஆதரிக்கா விட்டால் பாஜக வெற்றி பெற்று விடும் என்பதால் தான் இங்கே காங்கிரஸ் வெற்றி பெற்றது,எந்த காரணமும் இல்லாமல் , மூன்று தொகுதிகளில் காங்கிரஸ் வென்றது. இனையத்தில் வர்த்தக துறைமுகம் ---விழிங்ஞம் துறமுக கட்டு மானத்தினால் எற்படும் விபரீதங்களை மாற்றிட ,மலையாளிகள் செய்யும் தகிடு தத்தங்களை ,இதை தெறியாததுபோல் பா.ஜ.க. தூண்டியதால் --தோல்வி,அதிகமான புதிய வாக்காளர்கள், எல்லாம் ஏதொ ஒரு தீய செய்தியைதருகிறது--ஆசிரியர் .

    பதிலளிநீக்கு
  8. 'இந்தியத் தேர்தல்களில் பல காரணிகள் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கின்றன.'

    இது தான் நிஜம். தேர்தல் வெற்றி தோல்விகளுக்கு தமிழகம் முழுவதற்குமாய் ஒரே காரணத்தை தேடுவதென்பது சாத்தியமில்லாத விஷயம். ஏனெனில் தமிழகம் முழுவதுமான மக்களின் வாழ்க்கை முறை ஒரே மாதிரியானது அல்ல. பணம், ஜாதி, போராட்டங்கள் என எந்தக் காரணத்தை நிர்ணயிக்க முயன்றாலும் எல்லாவற்றிற்கும் விதிவிலக்குகள் உள்ளன.

    மக்களை ஊழல் மயப்படுத்தும் இந்தப் போக்கு மாற வேண்டும். ஒவ்வொரு குடிமகனும் தன் வாக்கிற்கும் வாழ்விற்கும் உள்ள தொடர்பை உணர வேண்டும்.

    மக்கள் அரசியலை கீழிருந்து பார்ப்பதுபோல் ஊடகங்களும் கீழிருந்து பார்க்க முயல வேண்டும்.என்றாலே அவையால் மாற்றத்தை உண்டுபண்ண இயலும்.தரவுகளையும் புள்ளி விவரங்களையும் வைத்து விவாதிப்பதை விடுத்து களத்திற்கு நகர வேண்டும்.(உங்கள் 'கடல்' போல).
    ஊடகங்களும் சமூக வலைதளங்களும் ஒருவர் பாதிப்பிலிருந்து மற்றவர் விடுபட வேண்டும்.

    பதிலளிநீக்கு
  9. பணத்தின் வீச்சு வரும் காலங்களில் இன்னும் அதிகமாகிவிடுமோ என்ற ஐயம் எழுகிறது. பணம் தருவதும், வாங்குவதும் கொடுமை என்றால் அதனை நியாயப்படுத்துவது அதைவிடக் கொடுமை. எத்திசை நோக்கி பயணிக்கிறோம் என்றே புரியவில்லை.

    பதிலளிநீக்கு
  10. மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே. வீடு தேடி கொண்டு வந்து கொடுக்கும் பணத்தை வாங்க மறுப்பது இந்த தேசத்தில் முட்டாள்தனமென நகைக்கப்படுகிறது. 'அது நம் பணம்தான். நம்மிடம் பிடுங்கிய பணம்தான். நாம் வரியென செலுத்திய பணம்தான்' என மக்களால் நியாயப்படுத்தப்படுகிறது.
    'நான் எந்த ஆயுதத்தை எடுப்பது என்பதை எனது எதிரிகள்தான் தீர்மானிக்கிறார்கள்' என்று பிரபாகரன் சொன்னதை இங்கு நினைவு கூற வேண்டும். ஒரு கட்சி கொடுப்பதை ஆரம்பித்து விட்டால் மற்ற கட்சிகள் அதே வழியைத்தான் நாட வேண்டியிருக்கிறது. கட்சிகள் கொடுத்துப் பழக்கி விட்டன. மக்களும் வாங்கிப் பழகி விட்டனர். ஒருவருக்கொருவர் பழியும், நியாயமும் சொல்லிக் கொண்டே பழகிய பாதையிலேயே பயணித்துக் கொண்டிருக்கின்றனர்.
    இது ஏதோ இப்பொழுதுதான் ஆரம்பித்ததல்ல.1967 இல் அண்ணாதுரை காஞ்சிபுரத்தில் போட்டியிட்ட போது பெருமாள் படத்தின் முன் சத்தியம் வாங்கி கொண்டு பணப்பட்டுவாடா நடந்ததெல்லாம் நாடறியும்

    பணம் இந்தத் தேர்தலில் முக்கிய பங்காற்றியது உண்மைதான். ஆனாலும் பணமே பிரதானமென்றிருந்தால் சமஸ் சொல்வது போல் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் காசு கொடுத்தவர்களாகத்தான் இருக்க வேண்டும் ஆனால் மக்கள் சில இடங்களில் மட்டும் சில வேட்பாளர்கள் மீது பணத்தையும் வாங்கி கொண்டு தங்களின் கோபத்தைக் காட்டவே செய்திருக்கிறார்கள்.
    சாமானியனும் ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுக்க வேண்டும் என விரும்பிய ஜனநாயகம் இன்று தோற்றுக் கொண்டிருக்கிறது.

    பதிலளிநீக்கு