ஆறுனபாட்டன் என் பாட்டன்!


வாள்முனிக்கு, இப்படி அவருடைய முழுப் பெயரையும் குறிப்பிட்டு எழுதியிருப்பது தெரிந்துபோனால், என்னைச் சபித்துப்போடுவார். கையில் கிடைத்தால் அடிக்கவும் செய்யலாம். “கும்புடுற சாமி பேரை முழுசா சொல்லுவாகளா? சாமி கோச்சுகிட்டா என்னா செய்யுறதாம்? மனுசம்னா ஒரு பணிவு, மரியாதி இருக்க வேண்டாமா?” என்பார்.


முனி முதல் அஜித் வரை

அந்தக் காலத்தில் பெரும்பாலான கடலோடிகளுக்கு அவரவர் வணங்கும் தெய்வங்களின் பெயர்களே பெயர்கள். வாள்முனி, கபாலி, அஞ்சாப்புலி, உமையா, குமரி, மாரியம்மா... இந்தப் பெயர்களை முழுவதுமாகக் குறிப்பிட்டு அழைப்பதைக் கடவுளுக்குச் செய்யும் அவமரியாதையாக நினைக்கிறார்கள். முனீஸ்வரன் என்றால் முனி என்றும், மாரியம்மா என்றால் மாரி என்றும் அழைப்பது மரபு.

கடலோரச் சமூகத்துடன் வாணிபத்துக்கு வந்த அரேபியர்கள் மண உறவு கொண்டபோது, தமிழகக் கடல்புறத்தில் மதமாற்றத்தோடு, இஸ்லாமியப் பெயர்கள் அறிமுகமாயின. எனினும், ஏனைய பகுதிகளைப் போல, கடலோர முஸ்லிம்கள் சமூகம் தங்கள் முழு அடையாளத்தையும் மாற்றிக்கொள்ள வில்லை. தாங்கள் கடலோடிகள் என்பதை அடையாளப்படுத்திக்கொள்ள பெயர்களிலும் இன அடையாளத்தைக் கலந்தார்கள். உதாரணமாக, கடலோரத்தில் உள்ள முஹம்மதுவுக்குத் திருமணமானால், அவர் பெயர் முஹம்மது மரைக்காயர். அதேபோல், கதீஜாவுக்குத் திருமணமானால், அவர் பெயர் கதீஜா நாச்சியார்.

கடலோரத்தில் கிறிஸ்தவ மதம் வேரூன்றிய பின், கிறிஸ்தவப் பெயர்கள் உலவ ஆரம்பித்தன. அதேசமயம், கடலோர மொழிக்கேற்ப இந்தப் பெயர்கள் மருவின. ஜோசப் சூசையப்பர் ஆனார். பாரடைஸ் பரதேசி ஆனார். ரோஸ்லின் ரோஸம்மா ஆனார்.

எம்ஜிஆர் வருகைக்குப் பின் இந்த எல்லாப் பெயர்களையும் தாண்டி நம்முடைய சினிமாக்காரர்கள் கடல்புறத்தில் ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டார்கள். கோதண்டராமர்கோவில் சென்றிருந்தபோது சந்தித்த ஓர் இளைஞரின் பெயர் அஜித் குமார். வயது எத்தனை என்று கேட்டேன். பதினேழு என்றார். அறிமுகமான சில ஆண்டுகளிலேயே அஜித் கடலோர மக்கள் மனதில் இடம்பிடித்திருக்கிறார்.

மாறாத நம்பிக்கைகள்
இப்படியெல்லாம் கடவுளர்கள், மதங்கள், கலாச்சாரங்கள் மாறினாலும், தமிழகக் கடலோடிகளிடையே அடிப்படையான சில மரபுகள், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் மட்டும் அப்படியே நீடிக்கின்றன. இந்த நம்பிக்கைகளை முழுமையாக நம்பிக்கை என்ற வார்த்தைக்குள் மட்டுமே அடக்கிவிட முடியாது. சில விஷயங்கள் வானியலோடு பிணைந்திருக்கின்றன; சில விஷயங்கள் நீரியலோடு பிணைந்திருக்கின்றன; சில விஷயங்கள் பருவநிலையோடு பிணைந்திருக்கின்றன.

கடலில் ஒரு ராத்தங்கல்

கடலில் ஒரு ராத்தங்கலுக்குப் பெரியவர் வாள்முனியுடன் போனபோது, இந்த விஷயங்களையெல்லாம் புட்டுப்புட்டுவைத்தார். வாள்முனி அருமையான ஒரு கதைசொல்லி.

“பத்து வயசுலே எங்கய்யாகூட கடலுக்குப் போனேன். எத்தனை வயசுல போனேன்?”

“பத்து வயசுலே போனீங்க...”

“ஆமா, அப்போ மொத மொத ராத்தங்கலுக்கு அழைச்சுக்கிட்டுப் போனப்போ, பசி வவுத்தைக் கிள்ளுது. ஐயாகிட்டே மெதுவா வாயைக் கொடுக்குறேன். ‘சோத்துப்புட்டியில சோறு இருக்கு. ஆனா, நாழி ஆகலை. சோத்துவெள்ளி கூப்புடும். பொறுமையா இரு’ன்னுட்டார். வெள்ளின்னா என்னன்னு தெரியுமா?”

“தெரியலீங்களே...”

“நீங்க நட்சத்திரம்பீங்களே... அதைத்தான் நாங்க வெள்ளிம்போம். அப்பவெல்லாம் ஏது கடியாரம்? வானம்தான் கடியாரம். சூரியனும் சந்திரனும் வெள்ளியளும்தான் குறிசொல்லிய. எங்க வுட்டேன்? ஆங்... ஐயா அப்புடிச் சொல்லவும் நான் காத்துக்கெடக்கேன் வானத்தைப் பார்த்துக்கிட்டு. எப்போடா வரும் சோத்துவெள்ளின்னுட்டு.

ஏகப்பட்ட வெள்ளிய இருக்குவ. எந்த வெள்ளிடா சோத்துவெள்ளின்னு வானத்த ஆன்னு பாத்துக்கிட்டிருக்கன். ஐயா காமிச்சாரு சோத்துவெள்ளிய. அப்படித்தான் சோத்துவெள்ளியைக் கண்டேன். கடலோடிங்க இருட்டுல சோத்து நேரத்தைக் கணிக்க வெச்சுக்குறது சோத்துவெள்ளி. இப்படி ஒவ்வொரு வெள்ளிக்கும் ஒரு கணக்கு உண்டு. ஒரு அடையாளம் உண்டு.”

“இதையெல்லாம் எப்படிக் கண்டுபிடிப்பீங்க?”

“அரும்வெள்ளிங்கிறது குருசு (சிலுவை) மாரி இருக்கும். ரெட்டவெள்ளிங்கிறது ரெண்டுவெள்ளி சேர்ந்தா மாரி இருக்கும். ஆறாம்வெள்ளிங்கிறது ஆறு புள்ளிக் கூட்டம் மாரி இருக்கும். கப்பவெள்ளிங்கிறது கப்பல் மாரி இருக்கும். கூட்டுவெள்ளிங்கிறது கூட்டமா இருக்கும். விடிவெள்ளிங்கிறது விடியுறதுக்கு முன்னே வரும்.

இந்த வெள்ளிங்களுக்குத் தெசைக் கணக்கும் உண்டு. அருந்ததிவெள்ளி நேர் வடக்குல வரும். நடுக்கடல்ல சிக்கிக்கிட்டா, தெசை தெரிஞ்சிகிட அருந்ததியைத் தேடுவம். ஒரு வெள்ளி வானத்துலேர்ந்து மறைஞ்சு ஓடுனா, அறைஓடல். நல்ல குறி இல்ல அது. அன்னைக்கு மரத்தை உடனே கரைக்குத் திருப்பிடுவம். அண்டளிக்க முடியாத காத்து இருக்குன்னு அர்த்தம்.

சூரியனைச் சுத்தி பகல்ல சூரியவட்டம் விழுந்தாலும் அது நல்ல குறி இல்ல. சூறைக்காத்துக்குக் குறி அது. சாயங்காலத்துல சந்திரனைச் சுத்தி சந்திரவட்டம் தெரிஞ்சா நல்ல மழைக்கு குறி அது. சமயத்துல சூறவேடன் (மீன்), கடல்ல அடியாழத்துலேர்ந்து திடீர்னு மேல வரும். வாயை வாயைப் பொளக்கும். அப்படிப் பொளந்தா புயல் வர்றத்துக்கான குறி அது.”

“நடுக்கடல்ல இருக்கும்போது, அப்படிச் சூறைக்காத்து அடிச்சா என்ன பண்ணுவீங்க?”

“ஐயோ, பெருந்துயரமுல்லா? ஒருபக்கம் காத்து தூக்கும். இன்னொரு பக்கம் மாசா தூக்கும். கையில கடத்தண்ணிய அள்ளி கையெடுத்துக் கும்புடுவம். இந்தக் காத்தெல்லாம் யாருங்கிறீங்க? எல்லாம் நம்ம பாட்டன், முப்பாட்டனுங்க. ‘என்னடா பொடியனுங்களா, கண்டும் காணாமப் போறீங்க, எங்களை மறந்துட்டீங்களா’ன்னு நம்மளை ஒரு உருட்டு உருட்டத்தான் அப்படிச் சீறுவாங்க.

நாம ஒரு புடி தண்ணியைக் கையில மொண்டு, ‘ஆறுனபாட்டன் என் பாட்டன் சீர்பாட்டன்’னு சொன்னா, ‘நம்ம பய மக்க விட்டுடு’னு சொல்லி சாந்தமாயிருவாங்க. இந்த அறிவு, தெளிவெல்லாமே அவுங்க போட்ட பிச்சதானே?” என்றவர், கடலில் வலையை இறக்க ஆரம்பித்தார்.

நேரம் ஓடுகிறது. வலையை இறக்கியதும் ஒரு பீடியை எடுத்துப் பற்றவைத்தார். நேரம் ஓடுகிறது. வலையை இழுக்க ஆரம்பித்தார். உடம்பில் வியர்வை கொட்டுகிறது. ஐந்தாறு சின்ன மீன்கள் மட்டும் சிக்கியிருந்தன. அவற்றை வலையிலிருந்து எடுத்து எடுத்துக் கடலில் தூக்கிப்போட்டார். திரும்ப வலையை இறக்கினார். மீண்டும் ஒரு பீடியைப் பற்றவைத்தார்.

நேரம் ஓடுகிறது. வலையை இழுத்தார். சின்னதும் பெரியதுமாய்ப் பத்துப் பதினைந்து மீன்கள் சிக்கியிருந்தன. கும்பிட்டு மீன்களை வாரிக் கலத்துக்குள் போட்டார். “இன்னைக்குக் கடலம்மா படி அளந்துட்டா. இருநூறுவா கெடைக்கும்... போரும், போவோமா?” என்றார். கரையை நோக்கி தொளுவை போட ஆரம்பிக்கும்போது வானத்தைச் சுட்டிக்காட்டினார். “தோ, தெரியுது பாத்தீங்களா... அதாம் விடிவெள்ளி!”


ஜூலை, 2014, ‘தி இந்து’

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக