காற்றில் எத்தனை காற்று?


கோவளம் சென்றிருந்தபோது, ரெமிஜியூஸைச் சந்தித்தேன். ரொம்பவும் வெள்ளந்தியான மனிதர். கோவளத்தில் அன்றைக்குக் கடலடி அதிகமாக இருந்ததால், யாரும் கடலுக்குப் போகவில்லை. அதற்குச் சில வாரங்களுக்கு முன்புதான் கடலடியில் ரெமிஜியூஸின் வள்ளம் சிக்கியிருந்தது. மனிதருக்குக் காலில் பலத்த அடி. ஊமைக்காயம். கடலுக்குப் போகக் கூடாது என்று சொல்லி, வீட்டிலேயே இருக்கச் சொல்லியிருந்திருக்கிறார் மருத்துவர். அப்படியும் மனிதருக்குக் கடலைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. கடற்கரையை விட்டுக் கொஞ்ச தூரத்தில் இருக்கும் வீட்டிலிருந்து விந்திவிந்தி நடந்து கடற்கரைக்கு வந்துவிட்டார். அறிமுகப்படுத்திக்கொண்டு பேச ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில், நெடுநாள் நண்பர்போல ஆகியிருந்தார். ஒருகாலத்தில் தொளுவைப் போட்டியில் முதலிடம் வந்து பரிசு வாங்கியிருக்கிறார். காலில் அடிபட்டது அவர் மனதைப் பெரிய அளவில் உலுக்கியிருந்தது.

“சின்ன வயசுலேர்ந்து நல்லா தொளுவப் போடுவன். நமக்குத் தொழில்ல கள்ளத்தனம் வராது. அதனால, தேடிக் கூப்பிட்டுப் போவாங்க. ஓடியோடித்தான் உழைச்சன். ராத்திரி ரெண்டு மணிக்குக் கடலுக்குப் போனோம்னா, காலையில எட்டு மணிக்குள்ள திரும்பிரணும். அப்பதான் சந்தையில மீனைச் சேர்க்க முடியும். அப்படி ஓடி வந்துட்டு, பகலுக்கு மேல திரும்ப ஒரு ஓட்டம் ஓடி, பொழுது சாயுறதுக்குள்ள திரும்புவன். ஒடம்பு களைச்சு செத்துக் கதறும். அப்படியெல்லாம் ஓடியும் ஒண்ணும் பெரிசா சம்பாதிக்க வழியில்ல. நூறுக்கும் இருநூறுக்கும் சந்தோஷப்பட்டுக்கிட்டதுதாம் மிச்சம். வயசு அறுபத்தியஞ்சி தாண்டிடுச்சு. இந்த வயசுலயா அடிபடணும்? கடவுளே... இனி இந்தக் காலைச் சுமந்துகிட்டு, எப்படிப் பொழைப்பேன்னு தெரியலை” என்கிறார். சில நிமிஷங்கள் தன் காலையே பார்த்துக்கொண்டிருந்தவர், “நல்ல மருந்து எதாவது இருந்தா சொல்லுங்க...” என்கிறார் உரிமையாக.

ஒரு கடலோடி கடைசிக் காலம் வரை ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் அல்லது வாரிசுகளை நம்பிப் பிழைக்க வேண்டும் என்பது நம் சமூகத்தின் எழுதப்படாத விதிகளில் ஒன்று. வாரிசுகள் வசதியாக இருந்தால் பிரச்சினை இல்லை; அவர்களே தங்கள் பிழைப்புக்குப் போராடிக்கொண்டிருந்தால், என்ன செய்வது?

“எந்த ஆஸ்பத்திரியில் காட்டுகிறீர்கள்?” என்றேன்.

“தர்மாஸ்பத்திரிதான்... ஊசி போடுறாங்க, அன்னைக்கு மட்டும் வலி தாங்குது, பொழுது சாஞ்சு விடிஞ்சா வலி வந்துடுது. கடலுக்குப் போவலைன்னா, சோத்துக்கே பிரச்சினைதான். இதுல மருந்து வாங்க எங்க போறது?” என்று வானத்தைப் பார்த்தவர், திடீரெனப் பதற்றமாகி, “ஐயா, நல்லா மழை பெய்யுது... வாங்க ஒதுங்கிடலாம்...” என்கிறார்.

எனக்குத் திகைப்பாகிப்போனது. மழை பெய்யவில்லை. நான் சுற்றும்முற்றும் பார்த்தேன். மழை இல்லை. “மழை பெய்யலீயே... தவிர இவ்வளவு காத்து அடிக்கும்போது மழை பெய்யுமா என்ன?” என்றேன்.

“அய்யே... என்ன இப்படிப் பேசுறீங்க? அந்தோ பாருங்க, என்ன மழை பெய்யுதுன்னு... வாங்க சீக்கிரம் ஒதுங்கிடலாம்” என்று மேற்குத் திசையை நோக்கிக் காட்டிவிட்டு, என் பதிலுக்காக எதிர்பார்க்காமல் என் கையைப் பிடித்து இழுத்தவாறே நடக்க ஆரம்பித்தார். நான் மறுக்க முடியாமல் கரையையொட்டி இருந்த மேட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். அங்குள்ள ஒரு கட்டிடத்தில் இருவரும் ஒதுங்கினோம். மேட்டிலிருந்து கடலையும் வானத்தையும் பார்த்துக்கொண்டிருந்தோம்.

“இப்ப பாருங்க... மழை நல்லாத் தெரியுது” என்றார்.

அவர் சுட்டிய திசையைப் பார்த்தேன். “எனக்கு ஒன்றும் தெரியலையே...” என்று சொல்லி முடித்திருக்கவில்லை. அந்த அதிசயத்தை நான் பார்த்தேன். கண்ணுக்கு முன், மேற்கிலிருந்து கொட்டிக்கொண்டே வந்து, எங்களைத் தாண்டி, நிலத்தை நனைத்துக்கொண்டே கடந்தது பெருமழை.

“இப்போ தெரியுதா?” என்றார் சிரித்துக்கொண்டே.

எனக்கு ஆச்சரியத்தை அடக்க முடியவில்லை.

“எப்படிங்கய்யா, உங்களுக்கு அவ்வளவு தொலைவுல மழை பெஞ்சுக்கிட்டுருந்தது தெரிஞ்சுது?”

“ஐயா, என் கண்ணு ரெண்டும் வலுவிழந்த கண்ணுங்க பாருங்க. உங்க அளவுக்கெல்லாம் கண்ணு தெரியாது. ஆனா, காத்து தெரியும். காத்தோட வாடை தெரியும். வானத்தைப் பார்க்க முடியும்” என்றார்.

ஒரு கடலோடி பள்ளிக்கூடத்தின் பக்கமே போகாதவராக இருந்தாலும், கொஞ்சம் நீரியல் நுட்பங்களும் கொஞ்சம் வானியல் நுட்பங்களும் அவரை அறியாமலேயே அவருக்குள் வந்துவிடுகின்றன. தொழில், கற்றுக்கொடுத்துவிடுகிறது.

“காத்தை எப்பிடிங்கய்யா பிரிப்பீங்க?”

“காத்துல பல வகை உண்டு. பெரும் வகை எட்டு. நேர்வாடைக் காத்து, நேர்சோளக் காத்து, நேர்கச்சான் காத்து, நேர்கொண்டல் காத்து, வாடைக்கச்சான் காத்து, வாடைக்கொண்டல் காத்து, சோளக்கச்சான் காத்து, சோளக்கொண்டல் காத்து.”

“ஒண்ணும் புரியலீங்களே?”

“அதாவது, இப்படி வெச்சுக்குங்க. வடக்குலேர்ந்து தெற்கே அடிக்குறது நேர்வாடை. தெற்குலேர்ந்து வடக்க அடிக்குறது நேர்சோளம். கிழக்குலேர்ந்து மேற்கே அடிக்குறது நேர்கொண்டல். மேற்குலேர்ந்து கிழக்கே அடிக்குறது நேர்கச்சான்.

இதேபோல, வடகிழக்குலேர்ந்து தென்மேற்குல அடிக்குறது வாடைக்கொண்டல். தென்மேற்குலேர்ந்து வடகிழக்குக்கு அடிக்குறது சோளக்கொண்டல். வடமேற்குலேர்ந்து தென்கிழக்குக்கு அடிக்குறது வாடைக்கச்சான். தென்கிழக்குலேர்ந்து வடமேற்குக்கு அடிக்குறது சோளக்கச்சான்.

இந்த ஒவ்வொரு காத்துக்கும் ஒரு குணம் இருக்கும். காத்துக்கேத்த மாரி நீரோட்டம் மாறும். மீன்பாடும் மாறும்.”

கண்கொட்டாமல் அவரைக் கவனித்துக்கொண்டிருந்தேன். அவர் தொடர்ந்தார்.

“இது பொதுக்கணக்கு. இன்னும் அந்தந்த ஊருல, அவங்கவங்களுக்குப் புரியுற மாரி உப்பங்காத்து, ஊளக்காத்து, கோடைக்காத்துன்னுல்லாமும் காத்தைப் பிரிப்பாங்க. காத்தைப் புரிஞ்சுக்காம கடல்ல கால் வெச்சவன், வாக்கரிசியைக் கையிலேயே எடுத்துக்கிட்டுப் போவணும்பாங்க பெரியவங்க” என்கிறவர், வெளியே கவனித்தவராக, “ஐயா மழ நிக்கப்போவுது. நீங்க சீக்கிரம் கெளம்புங்க... இன்னைக்கு இருட்டுல நல்ல மழ இருக்கு” என்கிறார். என்ன மறுத்தும் கேட்காமல், வண்டி வரை வந்து வழியனுப்புபவர் “ஊர்ல நல்ல மருந்தா கேட்டு எழுதியனுப்பணும், கேட்டியலா?” என்கிறார்.

குமரி வந்ததுமே வழக்கத்துக்கு மாறாக அன்றைக்கு வெகு சீக்கிரமாக இருட்டத் தொடங்கியது. ஒரு மணி நேரம் ஆகியிருக்கும். சரியான மழை அடிக்கக் தொடங்கியது.

ஜூலை, 2014,  ‘தி இந்து’

2 கருத்துகள்:

  1. கொற்கை நாவலின் பின்ணிணைப்பில் இந்தக் காற்றின் வகைகளும் நீரோட்டத்தின் வகைகளும் வரைபடமாகவே கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் சோளம் என்று வரும் இடத்தில் சோழவம் என்றுள்ளது. ஒருவேளை பெரியவர் பேசியது பேச்சுவழக்காக இருக்கலாம்.

    பதிலளிநீக்கு