நீவாடுகளுடன் ஓர் ஆட்டம்!


டல் நீரோட்டம் என்பது எவ்வளவு பெரிய சக்தி, அதைப் புரிந்துவைத்திருப்பது எவ்வளவு பெரிய அறிவியல் என்பதை தோமையர் மூலமாக அறிந்துகொண்டேன். குமரியில் கடலில் காணாமல்போன மீனவர்களைத் தேடும் பணி நடந்துகொண்டிருந்தபோது, நான் தோமையரைச் சந்தித்தேன். கடலில் மீனவர்கள் இப்படித் தவறும்போது, அவர்களை மீட்கும் நடவடிக்கைகளில், நம்முடைய கடலோரப் பாதுகாப்புப் படையினர் முழு அக்கறையோடு ஈடுபடுவதில்லை என்று குற்றம்சாட்டினார் தோமையர்.

“பேரு என்னவோ மீட்புப் பணின்னு பேரு. நடத்துறது என்னவோ நாடகம். குமரியில ஒருத்தன் வுழுந்தா பாகிஸ்தான் கடக்கரை வரைக்கும் தேடணும். அதான் அசலான அக்கறை. நீவாடுன்னா சும்மா இல்ல பாத்தியளா...” என்றார்.

நான் கேட்டேன்: “ஐயா, ஒருத்தரை எங்கே தவற விட்டோமோ, அந்தப் பகுதியைச் சுத்திதானே தேடணும்? தவிர, தமிழ்நாட்டுல தவறின ஒருத்தரை பாகிஸ்தான் கடற்கரையில ஏன் தேடணும்?”

“தம்பி... நெலத்துல ஒருத்தரைத் தவற விட்டோம்னா, அந்தப் பகுதியைச் சுத்தித் தேடறது முறையா இருக்கலாம். இது கடல்லோ? மனுஷன் பொழைச்சுக் கெடந்தா, இங்கேயே சுத்துப்பட்ட எதாவது கரையில ஏறியிருக்கலாம். இல்லேன்னா, சவத்தைக் கடல் கரையில தள்ளியிரும். கடலம்மா தேவையில்லாத எதையும் உள்ளே வெச்சுக்க மாட்டா, பாத்தியளா...

இதுவரைக்கும் நூத்தியம்பது பக்கம் பேரு குமரி மாவட்டக் கடக்கரையில மட்டும் காணாமப்போயிருக்கான். ஊர்க்காரங்க தேடயில, சுத்துப்பட்டு கடலைச் சலிச்சுடுவாங்க. பெறகும், வருஷக் கணக்கா சவம் கூடக் கெடைக்கலையின்னா, என்ன அர்த்தம்? நாம தேடுற மொறை சரியில்லேன்னுதானே அர்த்தம்? நீவாடு தெரியாதவன் மீனவனில்லே. இந்தக் கடல் பாதுகாப்புப் படையில எத்தனை பேருக்கு நீவாடு தெரியும்? நீங்க கடல் பாதுகாப்புப் படையில, ஒவ்வொரு எடத்துலேயும் பாதிக்குப் பாதி மீனவனைப் போடச் சொல்லுங்கங்கிறேன். பெறவு, ஒரு மீனவன் இங்கே காணாமப் போக மாட்டான்.”

“ஐயா, நீங்க எப்படி நீவாடு பார்ப்பீங்க? எனக்குக் கொஞ்சம் காட்டுவீங்களா?”

“இது என்ன பெரிய சாதனை? இருங்க, உங்க கண்ணுக்கு எதுக்க நீவாடைக் காட்டுறேன்” என்றவர், படகை வேகமாகச் செலுத்தலானார். குறிப்பிட்ட ஒரு பகுதியை நெருங்கியதும் படகின் இன்ஜினை அணைத்தார். ஆச்சரியம்! நீரோட்டத்தின் போக்குக்கேற்ப படகு தானே ஓட ஆரம்பித்தது. ஒருகட்டத்தில் பேய் பிடித்தாற்போல அது வேகம் எடுத்தபோது, பதறிப் போனேன். தோமையர் இன்ஜினை முடுக்கிவிட்டு, படகின் போக்கை மாற்றலானார்.

“அந்தக் காலத்துலயே நம்மாளு நீவாடை நாலு விதமா பிரிச்சு வெச்சுருக்கான், பாத்தியளா... அரநீவாடு, கரைக்கணைச்ச நீவாடு, சோநீவாடு, வாநீவாடு. அதாவது, கரையிலேர்ந்து ஆழ்கடல் ஓடுற நீவாடு, அரநீவாடு. ஆழ்கடல்லேர்ந்து கரைக்கு ஓடுற நீவாடு, கரைக்கணைச்ச நீவாடு. மேற்குலேர்ந்து கிழக்கே ஓடுற நீவாடு, சோநீவாடு. கிழக்குலேர்ந்து மேற்கே ஓடுற நீழ்வாடு, வாநீவாடு.

ஒரு கடலோடி இந்த நீவாடை வகை பிரிச்சுப் பாக்கத் தெரிஞ்சுவெச்சிருக்கிறது ரொம்ப முக்கியம். அப்பம்தான் எந்த நீவாட்டுக்கு எந்த மீன் அகப்படும்னு தெரியும். எந்த நீவாட்டுல போனா, சீக்கிரம் போய்ச் சேரலாமுனு தெரியும். இந்த வள்ளம்னு இல்லை, எவ்வளவு பெரிய கப்பலாயிட்டு இருந்தாலும் சரி; நீவாட்டுல ஓட்டினா, சுளுவா ஓடும். எரிபொருளும் மிச்சம், நேரமும் மிச்சம். நீவாடோட சேர்த்து, காத்தும் சுழட்டுச்சு, எந்தக் கப்பலையும் சுழட்டிச் சொருகிரும் பார்த்துக்கங்க” என்றார்.

அன்றிரவு விடுதிக்குத் திரும்பியதும் நீரோட்டத்தைப் பற்றிப் படிக்க ஆரம்பித்தேன்.

கடலின் உந்துசக்தி
பெரியவர் சொன்னதைப் போல, கடல் நீரோட்டத்தை அறிந்துகொள்வது என்பது எவ்வளவு பெரிய அறிவியல் என்பது அதைப் பற்றித் தேடத் தேடத் தெரிந்தது. கடல் பயணங்களுக்கு மட்டும் அல்ல; கடலின் உயிரியக்கத்துக்கே மிகப் பெரிய உந்துசக்தி நீரோட்டம்!

ஒரு திசையை நோக்கிய தொடர்ச்சியான கடல்நீர் இயக்கத்தையே நீரோட்டம் என்று சொல்கிறோம் (நம் கடலோடிகள் மொழியில் நீவாடு). விஞ்ஞானிகள் நீரோட்டத்தைப் பல வகைகளாகப் பிரிக்கிறார்கள். நம்மவர்கள் நான்கு வகைகளுக்குள் அதை அடக்குகிறார்கள்.

இந்த நீரோட்டங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இயல்பைப் பெற்றிருப்ப தாகச் சொல்கிறார்கள். உதாரணமாக, மேற்கு நோக்கிய கடல் நீரோட்டங்கள் அனைத்தும் விரைவானவை, ஆழமானவை, மிகக் குறுகிய பரப்பிலானவை, ஏராளமான நீரைக் கொண்டுசெல்பவை. இவற்றுக்கு நேர் எதிரானவை கிழக்கு நோக்கிய நீரோட்டங்கள். இவை குளிர்ந்த நீரை பூமியின் மத்தியப் பகுதிக்குக் கொண்டுசேர்ப்பவை. ஆழம் குறைவானவை, அகலமானவை. சில வேளைகளில் இந்த நீரோட்டம் ஆயிரம் கி.மீ. பரப்புக்குக்கூட விரிந்து செல்லுமாம்.

கடலில் நீரோட்டம் உருவாகப் பல காரணங்கள். காற்று, புவியடுக்கில் ஏற்படும் சலனங்கள், பூமியின் சுழற்சியால் ஏற்படும் அசைவுகள், கடல் நீரின் அடர்த்தியிலும் வெப்பநிலையிலும் ஏற்படும் மாறுபாடுகள், சூரியன் - சந்திரன் போன்றவற்றின் ஈர்ப்புசக்தியால் கடல்பரப்பில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவை இந்தக் காரணங்களில் முக்கியமானவை.

பல்லாயிரம் மைல் பயணம்
கடலுக்குள் ஆயிரக் கணக்கான மைல்கள் நீண்டு பாய்ந்து செல்லக் கூடியவை இந்த நீரோட்டங்கள். கடலுக்குள் ஒரு ஆறுபோல, ஒரு கன்வேயர் பெல்ட்போலச் சுழன்று கடல்வாழ் தாவரங்களையும் ஏனைய உயிரினங்களையும் கனிம வளங்களையும் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குக் கொண்டு சேர்ப்பதில் நீரோட்டங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. சில வகை மீன்கள் பல்லாயிரம் மைல் வலசை செல்கின்றன அல்லவா, அதுவெல்லாம் நீரோட்டத்தின் உதவியாலேயே சாத்தியமாகிறது.

தவிர, ஆழ்கடலில் வாழும் உயிரினங்களையும் சில வகைக் கடல் தாவரங்களையும் இந்த நீரோட்டங்கள்தான் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குக் கொண்டுசென்று, கடலின் உற்பத்திக் கேந்திரத்தை உயிர்ப்போடு வைக் கின்றன. உலகின் பல இடங்களில் கடலின் தட்பவெப்ப நிலையை மாற்றுவதிலும் நீரோட்டங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்கிறார்கள். கடலின் தட்பவெப்ப நிலையை மாற்றுவதில் மட்டுமல்ல, நிலத்தின் தட்பவெப்ப நிலையை மாற்றுவதிலும் நீரோட்டங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு.

தோமையர் சொன்ன வார்த்தைகளைக் கடலுக்குள் மீனவர்கள் காணாமல்போகும் சூழலோடு பொருத்திப் பார்த்தேன். “நீவாடோட சேர்த்து, காத்தும் சுழட்டுச்சு, எந்தக் கப்பலையும் சுழட்டிச் சொருகிரும் பாத்துக்கங்க...”

ஒரு பெருங்கப்பலே ஈடுகொடுக்க முடியாத மாபெரும் சக்தியின் முன் சாதாரணமான கட்டுமர மீனவர் எம்மாத்திரம்? ஒரு சாண் வயிற்றை நிரப்பத்தான் எத்தனையெத்தனை சக்திகளுடன் ஒரு கடலோடி போராட வேண்டியிருக்கிறது? எத்தனையெத்தனை வித்தைகளைக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது?

ஜூலை, 2014,  ‘தி இந்து’
1 கருத்து:

  1. நீவாடு என்ற சொல்லை தற்போதுதான் அறிகிறேன். வாழ்க்கையே போராட்டமாக அமைந்துள்ள அவர்களின் அவலை நிலையை எடுத்துரைக்க வார்த்தைகளே இல்லை.

    பதிலளிநீக்கு