விடை தர முடியவில்லை பி.கே. சார்!

பால கைலாசம்

நான் இதழியல் படித்து வேலைக்கு வந்தவன் அல்ல. நான் இன்றைக்குக் கற்றிருக்கும், பெற்றிருக்கும் பல விஷயங்கள் என்னுடைய ஆசிரியர்களிடமிருந்தே கற்றவை. முதன்முதலில் தினமலரில் சேகர் சார், தினமணியில் பாண்டியராஜன் சார், குருசாமி சார், அப்புறம் வைத்தியநாதன் சார், விகடனில் கண்ணன் சார், இப்போது தி இந்துவில் அசோகன் சார்...

எல்லா நல்லது கெட்டதுகளையும் தாண்டி - பணிப் பெயரால் அல்ல - உண்மையாகவே என்னுடைய ஆசிரியர்கள் இவர்கள். நான் அப்படித்தான் என்றைக்கும் பார்க்கிறேன்.

இந்த ஆசிரியர்களின் வரிசையிலேயே மிக முக்கியமான, நான் மிகக் குறைவான காலம் பணியாற்றிய, பேராசிரியர் திரு. பால.கைலாசம். சுருக்கமாக, பி.கே. சார்.


பிரதமருக்கும் முதல்வருக்கும் சவால் விட்டுக்கொண்டிருந்தாலும் - ஒரு அறைகூட இல்லாத வீடு, பிள்ளைகளுக்கு அரசுப் பள்ளி, அலுவலகத்துக்கு சைக்கிள் பயணம் என்று இந்த வாழ்க்கையை நேர்மையாக, எளிமையாக எதிர்கொள்ள என்னென்ன வழிகள் இருக்கின்றனவோ அவை அத்தனை வழிகளையும் கையாண்டாலும் - சம்பளம் போட்டு 10 நாட்களுக்கூடக் கையில் காணாத சம்பளத்தையே நான் எல்லா நிறுவனங்களிலும் வாங்கிக்கொண்டிருந்தேன். ஒரு தர்மசங்கடமான நிலையில், விகடனை விட்டு வெளியேற நினைத்தபோது, ‘புது யுகம்’ நிறுவனத்தில் நிர்வாகத் தயாரிப்பாளராகப் பணியாற்றிய சகோதரி ஜெயராணி தன்னுடைய அணியில் தயாரிப்பாளர் பணியிடம் ஒன்று இருப்பதாகக் கூறி அழைத்தார். பிகே சார் சந்திக்க அழைப்பதாகக் கூறினார். பி.கே. சாரைப் பார்த்தேன். சுமார் ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அந்தச் சந்திப்பின் முடிவில் அவர் எனக்கு அளித்த பணியிடம் தயாரிப்பாளர் பணியிடம் அல்ல; நிர்வாகத் தயாரிப்பாளர் பணியிடம். சம்பளம் நான் முன்னதாக வாங்கிக்கொண்டிருந்த சம்பளத்தைக் காட்டிலும் இரு மடங்கு அதிகம். ஒரு பத்திரிகையாளனாக எனக்குக் கிடைத்த கண்ணியமான முதல் சம்பளம் அது. வீட்டில் டிவியே கூடாது என்று வைத்துக்கொள்ளாதவனை ஒரு டிவி நிறுவனத்தின் முக்கியமான பொறுப்பில் அமரவைத்தார். உங்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்றார் சிரித்துக்கொண்டே.

உண்மையாகவே அவர் ஒரு பேராசிரியராக இருந்திருக்க வேண்டியவர். தன்னையும் எப்போதும் ஒரு மாணவனாகப் பாவித்துக்கொண்டு, தன் உடன் இருப்பவர்களையும் (தனக்குக் கீழ், மேல் என்று யாரையும் பார்க்க விரும்பாதவர் அவர்) சக மாணவர்களாகப் பாவித்தவர். இந்தியயியல் சார்ந்து நான் நிறைய உரையாடியதும் கற்றதும் அவரிடம்தான்.

அவர் கனவு கண்ட ‘புது யுகம்’ வேறு. தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில் உண்மையாக அது ஒரு பெரும் கனவு. முன்னதாக, ‘புதிய தலைமுறை’யின் இன்றைய மெச்சத்தக்க நிகழ்ச்சிகளை அவரே உருவாக்கியிருந்தார். ஆகையால், ஒரு இளைஞர் பட்டாளத்தையே, புதிய பட்டாளத்தையே அவர் களம் இறக்கியிருந்தார். ஆனால், நல்லவர்களைப் போட்டுப்பார்ப்பதுதானே நம்முடைய தனிச்சிறப்பு? யாரையும் படுத்தி வேலை வாங்கத் தெரியாத அந்த மனிதரிடம் வெறும் பவர் பாயின்டிலும் எக்ஸெல் ஷீட்டிலுமே நிகழ்ச்சிகளை நடத்திக்காட்டிக்கொண்டிருந்தார்கள் பலர். தனக்குக் கீழே இருந்தவர்களிடம் அவர் காட்டிய கருணையை அவருக்கு மேலே இருந்தவர்கள் அவரிடம் காட்டவில்லை. ஒரு சராசரி தமிழ்த் தொலைக்காட்சி அவரிடம் எதிர்பார்க்கப்பட்டபோது, ‘புது யுகம்’ தொடங்குவதற்கு முன்னதாகவே அவர் மனம் நொந்து பதவியிலிருந்து வெளியேறினார். இதெல்லாம் நடப்பதற்குப் பல மாதங்களுக்கு முன்னதாகவே - அதாவது ‘புது யுக’த்தில் சேர்ந்த சில மாதங்களிலேயே ‘தி இந்து’விலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. அவரிடம்தான் முதலில் சொன்னேன். “தமிழில் இந்து வந்தால் நீ அவசியம் அங்கு இருக்க வேண்டும்; இது ஒரு வரலாற்றுத் தருணம்” என்று எனக்கு வழிகாட்டினார். ‘தி இந்து’வில் சேர்ந்தபோது ஆசி கொடுத்து வழியனுப்பினார்.

அதற்குப் பின் அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போது அவர் சார்ந்தவர்களிடமிருந்து அழைப்பு வருகிறது, பிகே சாரைப் பார்க்க, இறுதியாக ஒரு முறை பார்த்துக்கொள்ள, வழியனுப்பிவைக்க.

எப்படி பி.கே. சார் உங்களை இப்படி வழியனுப்பிவைக்க முடியும்?

ஆகஸ்ட் 2014.


2 கருத்துகள்:

  1. //பிரதமருக்கும் முதல்வருக்கும் சவால் விட்டுக்கொண்டிருந்தாலும் - ஒரு அறைகூட இல்லாத வீடு, பிள்ளைகளுக்கு அரசுப் பள்ளி, அலுவலகத்துக்கு சைக்கிள் பயணம் என்று இந்த வாழ்க்கையை நேர்மையாக, எளிமையாக எதிர்கொள்ள என்னென்ன வழிகள் இருக்கின்றனவோ அவை அத்தனை வழிகளையும் கையாண்டாலும் - சம்பளம் போட்டு 10 நாட்களுக்கூடக் கையில் காணாத சம்பளத்தையே நான் எல்லா நிறுவனங்களிலும் வாங்கிக்கொண்டிருந்தேன்//


    சென்னை மண்ணடி நாட்கள் தூண்டி விட்டீர்கள்...

    பதிலளிநீக்கு