கடலில் பாவிய பூதக்கால்கள்!


டலுக்கும் கடற்கரைக்கும் அழகான ஒரு நிறம் உண்டு. அது இயற்கையைச் சிதைத்துவிடாத, பாரம்பரியக் கடலோடிகளின் எளிமையான வாழ்க்கைக் கலாச்சாரத்தால் விளைந்த நிறம். இப்போது அந்த நிறம் வெளிரி புதிதாக வெளியிலிருந்து ஊடுருவும் நிறம் கடலையும் கடற்கரையையும் ஆக்கிரமிக்கிறது. பண வேட்கையும் சுரண்டும் வெறியும் நுகர்வுக் கலாச்சாரமும் சூழ்ந்த நிறம். பாரம்பரியக் கடலோடிகளை அவர்களுடைய பூர்வீகச் சொத்தான கடலிலிருந்தும் கடற்கரையிலிருந்தும் அடித்து விரட்டத் துடிக்கும் நிறம்.
 
நான் கன்னியாகுமரியைவிட்டுப் புறப்படும் நாளன்று என்னை நோக்கித் தலைதெறிக்க ஓடிவந்தார் பெரியவர் அந்தோணிசாமி.

“ஏய்யா, பத்திரிகையில எங்க கடப்புற மக்களப் பத்தி எழுத வந்தவரு நீங்கதான?”

மூச்சிரைப்பு நிற்காத அவரிடம் நான் ஒரு வார்த்தை பேசுவதற்குள் அவரே தொடர்கிறார்.

“ஏய்யா, எங்க மக்களுக்காவ நீங்க தயைபண்ணி ஒண்ணு எழுதணுமய்யா... இங்க கன்னியாகுமரியில ஒரு புத்துநோய் ஆசுபத்திரி கட்டிக்கொடுக்கணும்னு எழுதணுமய்யா...

ஐயா, உங்ககிட்ட எங்காளுங்க யாரும் இதப் பத்திச் சொன்னாங்களா இல்லையான்னு தெரியலீங்கய்யா. இங்க கடக்கர முழுக்கப் புத்துநோய் பரவிக் கெடக்கு. பாவி மக்களைக் கொன்னுப்போடுது. நாங்க பொழைக் கிற நூறு எரநூறு பொழப்புல இந்த நோயிலாம் வந்தா எப்டிங்கய்யா பாக்குறது? சாவத் தடுக்க வழியில்ல. சாவுற வரைக்கும் வலி தாங்குறதுக்குத் தூக்க மாத்தர வாங்கணும்னாலே, திருவனந்தபுரம் ஓட வேண்டிக் கெடக்கு. அங்கே நம்மாளுவோள மதிக்க மாட்டாங்கான். அவன சொல்லிக் குத்தமில்ல. அன்னிக்கு கேரள சர்க்காரு வேணாமின்னு போராட்டம் செஞ்சி, நாம தமிழ்நாட்டு சர்க்காரோட சேர்ந்துகிட்டம். இப்பம் போயி அவன்கிட்ட நின்னா, நியாயம் இல்ல பாருங்க... நீங்க எழுதணுமய்யா...”

தூத்துக்குடி கடற்கரையில் ஜானைச் சந்தித்தேன். “தூத்துக்குடின்னா, முத்துக் குளிக்குற நகரம்னு நெனைச்சுக்கிட்டிருக்கு ஒலகம். தூத்துக்குடில முத்துக் குளிக்குற தொழில் செத்து அம்பது அறுவது வருசம் ஆயிப்போச்சு, தெரியுங்களா? அப்புறம் வேற வழியில்லாம சங்கு குளிச்சுக்கிட்டு கிடந்தோம். இப்ப உயிர்ச் சங்குக்கும் வழியில்லாம, செத்த சங்கப் பொறுக்கி பொழைச்சிக்கிட்டுருக்கோம். இதுவும் எவ்வளோ காலத்துக்குன்னு தெரியல. எழுதுங்க...”

 
வேம்பார். மாரி. “நகரத்துல காசு கொடுத்துத் தண்ணி வாங்கிக் குடிக்கிறது உங்களுக்குத் தெரியும். இப்படிக் கடக்கரைப் பக்கம் உள்ள கிராமங்கள்ல தண்ணி வாங்கிக் குடிக்கிறது ஒலகத்துல எங்கேயாவது நடக்குமாய்யா? நீங்க அவசியம் இதை எழுதணும்!”

பாம்பன் சென்றுவிட்டு ராமேஸ்வரம் பஸ்ஸில் ஏறும்போது கால் வழுக்கியது. சட்டெனக் கை கொடுத்து இழுத்தார் பெரியவர் ஆறுமுகம். “யப்பா... பஸ்ஸா இல்ல ராமேஸ்வரத்துக்கு, பாத்து ஏறக்கூடாதாப்பா?” என்று உட்கார இடம் கொடுத்தார். வெறும் கால் மணி நேரப் பயணத்துக்குள் இருவரும் யார், எவர் என்று சகல கதைகளையும் பரிமாறிக்கொண்டிருந்தோம்.

“யப்பா, ரொம்ப நல்ல காரியம் செய்யுறீங்க. யாரும் கண்டுக்காத பாவி மனுசனாப் போய்ட்டோம். எழுதுங்க, நல்லா எழுதுங்க. கடக்கரையில நடக்குற எதுவும் வெளியே யாருக்கும் தெரியுறதில்ல.

அந்தக் காலத்துல ‘உள்ளதையெல்லாம் வித்தாவது உள்ளான் வாங்கித் தின்னு’னு சொல்லுவாங்க ராமேஸ்வரத்துல. அந்த ருசி உள்ளான் ருசி. ராமேஸ்வரம் கடல்ல இப்படிப் பல மீனுங்க உண்டு. இங்க மட்டும் வரும். வெளிக்கடல்ல கெடைக்குற மீனுங்களும்கூட இந்தக் கடத்தண்ணில கெடக்கும்போது ஒரு தனி ருசி ஏறிடும், பாத்துக்கங்க, அப்படி ஒரு தண்ணி இந்தத் தண்ணி. எல்லாம் பவளப்பாறையில தங்குற கூட்டம் வேறல்ல? அதனால, வெளியூர்க்காரனெல்லாம் இங்கெ வந்து தங்கி விதவிதமா மீன் தின்னுப் போவான். ஆனா, இப்பம் கத என்ன தெரியுமா? ராமேஸ்வரக்காரன் மீன் திங்க ஆசையெடுத்தாலே, வெளியூர் மீனை வாங்கித்தான் திங்கணும்.

ராமேஸ்வரத்துல மூணு படகை வெச்சி, தொழில் செஞ்சிக்கிட்டுருந்தவன் நான். ரெண்டு படகை வித்திட்டு, ஒத்த படகைப் பாம்பன்ல போட்டு, அங்க போயி தொழில் பாத்துக்கிட்டு வந்துக்கிட்டிருக்கேன். மீனே கெடையாது. பவளப்பாறையெல்லாம் அழிஞ்சுக் கெடக்கு. என் நெலமையாவது தேவலாம். கட்டுமரம் வெச்சிருந்தவனெல்லாம் வழியத்துப்போய்ட்டான். எல்லாம் பொழப்பத்துப்போய்க் கெடக்கோம். இதெல்லாம் எழுதுங்க...”

மிழ்நாட்டுக் கடற்கரை ஊர்களின் சாபங்களில் முக்கியமானது புற்றுநோய். பழவேற்காடு தொடங்கி நீரோடி வரை புற்றுநோயின் குரூர ஆட்டத்துக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள் தமிழகக் கடலோடிகள். காரணம் என்ன?

தூத்துக்குடி கடலில் முத்து வளம் அழிந்து, இப்போது சங்கு வளமும் சாகக் காரணம் என்ன? ஆற்றுத் தண்ணீரின் ருசியைக் கடற்கரை ஊற்றுத் தண்ணீர் தாண்டும் என்பார்கள். ஊற்றுநீர் தூர்ந்து நிலத்தடிநீர் உப்பள நீராகக் காரணம் என்ன?

ராமேஸ்வரத்தில் மட்டும் அல்ல; அங்கே நீரோடியில் தொடங்கி இங்கே பழவேற்காடு வரை என்றைக்கு மீன் வளம் அற்று பிழைப்பு அற்றுப்போகுமோ என்று கடலைப் பயத்தோடு பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் தமிழகக் கடலோடிகள். காரணம் என்ன?


ழவேற்காட்டில் கால் வைத்தபோது நல்ல பசி. ஒரு டீயைக் குடித்துவிட்டு நடக்க ஆரம்பித்தேன். சாமிப்பிள்ளை எனக்கு முன்னே போய்க்கொண்டிருந்தார்.

“ஐயா, கொஞ்சம் மெல்லமாப் போலாங்களா?”

“இதுக்கே அசந்துட்டா எப்பிடி? நெறையக் கேட்குறீங்க. ஆயிரம் வருசத்தைத் தாண்டிப் போவணும்ல? இந்த வேகம் எப்பிடிக் காணும்?” - சொல்லிக்கொண்டே காற்றில் தாவிக்கொண்டிருந்தார். வேறு வழியில்லாமல், நான் என் நடையை ஓட்டமாக்க ஆரம்பித்தேன்.

தமிழகக் கடலோடிகள், இன்றைக்கு எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளுக்கான ஆணிவேரை எனக்குப் பிடித்துக்காட்டியவர் சாமிப்பிள்ளை. எந்த ஒரு பிரச்சினைக்கும் வெறும் புறச்சூழல் காரணிகள் மட்டும் மூலகாரணங்களாக இருப்பதில்லை. சமூக உளவியலுக் கும் அதில் முக்கியமான ஒரு பங்கு இருக்கும். கடலோடிகள் விஷயத் தில் அதைச் சரியாக அடையாளம் காட்டியவர் சாமிப்பிள்ளை.

மீனவன் எனச் சொல்லாதே; கடலோடி எனப் பழகு!
“நீங்க மொதல்ல சரித்திரத்தைக் கொஞ்சம் தெரிஞ்சிக்கணும். அப்போதான் இங்கெ இருக்குற பிரச்சினைங்களுக்கான காரணத்தைப் புரிஞ்சுக்க முடியும். இப்பம் நீங்களாம் பத்திரிகைகள்ல கடக்கரை யில இருக்குற எங்களை என்னன்னு சொல்லி எழுதுறீங்க? பொத்தாம் பொதுவா மீனவன், மீனவச் சமூகம்னு எழுதுறீங்க இல்லையா? மொதல்ல அதுவே தப்பு. கடலோடிங்கிற வார்த்தைதாம் சரி.

பல்லாயிரம் வருஷத்துக்கு முன்னாடியே கப்பப் படை வெச்சிருந்தவன் தமிழன்னு சொல்லுறம். ராசேந்திர சோழன மாரி கடலை செயிச்சவன் யாரு உண்டுன்னு பேசுறம். சரி, அவன் யாரை வெச்சு செயிச்சான்? அந்தக் கப்பப் படையில் இருந்தவம்லாம் யாரு? திரைகடல் ஓடியும் திரவியம் தேடினவம்னு பேசுறம்; அப்படிக் கப்பல்ல ஓடி வாணிபம் செஞ்சவன் யாரு? முத்துக்குளிச்ச பரம்பரைங்கிறோம்; கடல்ல மூழ்குனவம் யாரு? எல்லாமும் இந்தக் கடக்கரையைச் சேந்தவன்தானே? மீனு புடிக்ககுறதுங்குறது ஒரு கடலோடிக்குத் தெரிஞ்ச பல கலைகள்ல ஒண்ணு. ஒரு விவசாயியானவன் எத்தன வித்தைங்களயும் தொழில்நுட்பங்களையும் கத்துவெச்சிருக்கான்? அவன வெறும் நெல்லுக்காரன்னு சொல்றது கொச்ச இல்லயா? அப்பிடித்தான் ஒரு கடலோடிய மீனவன்னு சொல்லுறதும். இது மொத தப்பு. அடுத்த தப்பு, வெளுத்ததெல்லாம் பாலுன்னு நம்புற மாரி, கடலுக்குப் போறவனெல்லாம் கடலோடின்னு நம்புறது.

ஐயா, நம்ம கடக்கரையில உள்ள ஆதி பழங்குடி இனக்குழுக்கள் பரவர், முக்குவர், பட்டினவர், வலையர், கரையர், கடையர் இப்பிடி 13 இனங்களுக்குள்ள அடங்கிடும். மொத்தமா, பரதவர் சமுதாயம்னு சொல்றோம்னு வெச்சுக்குங்களேன். பின்னாடி, அரபு வியாபாரிய நம்ம கடக்கரைக்கு வந்தப்போ, இஸ்லாம் வந்துச்சு. போர்ச்சுகீசிய பாதிரிமாருங்க வந்தப்போ கிறித்தவம் வந்துச்சு. தொழிலை வெச்சு இந்தச் சமுதாயங்கள் எல்லாம் பெருத்தப்போ, கடக்கரை மக்களோட இனக் குழுக்கள் எண்ணிக்கை இன்னும் பெருத்துச்சு. ஆனா, இந்த இனக்குழுக்கள் பழக்கங்கள்ல என்ன வேறுபாடுங்க இருந்தாலும், கடலைப் பொறுத்தவரைக்கும் அது எங்க அம்மா, சாமீ எல்லாம்.

சுய கட்டுப்பாடுகள்

இப்போ பாரம்பரியக் கடலோடிகளுக்குன்னு ஒரு சட்டதிட்டம் இருக்கு. கடலுக்குள்ள போறதுக்கும் கட்டுப்பாடு உண்டு, கடல்ல தொழில் பண்ணுறதுக்கும் கட்டுப்பாடு உண்டு. இந்தக் கட்டுப்பாடு எல்லாமே காலங்காலமா எங்க பெரியவங்க சொல்லிக்கொடுத்தது, நாங்களே வகுத்துக்கிட்டது.

இப்போ ஒரு பாரம்பரியக் கடலோடியோட வலைல சின்ன மீன் பட்டா கடல்ல தூக்கி விட்டுருவான். சினை நண்டு பட்டா கடல்ல தூக்கி விட்டுருவான். சங்குப் பூக்கள் உள்ள சங்கு சிக்கினா கடல்ல தூக்கி விட்டுருவான். இதெல்லாம் நாளைக்கி வர்ற நம்ம தலை முறைக்கு. நாம அழிச்சிடக் கூடாதுங்கிறது அடிப்படை.

சொந்த செலவில் சூனியம்
சுதந்திரத்துக்கு அப்புறம் என்னாச்சுன்னா, மீன் வளத்தை அதிகரிக்கிறேன்டா தம்பின்னு சொல்லி, அரசாங்கம் உள்ள நுழைஞ்சுச்சு. அதுவரைக்கும் பருத்தி நூலு, சணலு, தென்னை நாருன்னு வலை பின்னிக்கிட்டிருந்த மக்ககிட்ட நைலான் வலையைக் கொடுத்துச்சு. பிடிக்கிற மீனு தன் ஊரைச் சுத்தி; மிச்சம்பட்டது கருவாடுக்குன்னு ஓடிக்கிட்டிருந்தவன்கிட்ட ஐஸ் கட்டியைக் கொடுத்துச்சு. வெளியூருங்களுக்கும் வெளிமாநிலங்களுக்கும் மீனை எடுத்துக்கிட்டுப் போவ லாரிங்களை அனுப்புச்சு. நல்லா வசதியாப் போய் பெருவாரியா மீன் பிடிக்க விசைப்படகுகளை அறிமுகப் படுத்துச்சு. கூடவே, கடல்ல அடிமண் வரைக்கும் வாரி அள்ளுற மாரி இழுவை மடிகளையும் கொடுத்துச்சு.

இந்த இழுவை மடியோட கதை என்னான்னா, ரெண்டாம் ஒலகப் போர்ல கடலுக்கு அடியில எதிரிங்க போட்டுவைக்கிற குண்டுங்களை வாரி வெளியே எடுக்குறதுக்காகக் கொண்டுவந்த மடி இது. எப்பிடி ஒலகப் போருக்குப் பின்னாடி, வெடிமருந்து தயாரிச்சவனெல்லாம் தன் கம்பெனியை வெச்சு உரம் தயாரிக்கிறவனா ஆனானோ, அப்பிடி வெடிகுண்டை எடுக்குற மடியை வெச்சு, மீன் பிடிக்கச் சொல்லிக்கொடுத்தான். நம்மூரைக் கெடுத்ததுல நார்வேக்காரனுக்குப் பங்கு உண்டு.

இதெல்லாம் கடக்கரைக்கு வந்தவுடனே, வியாபாரத்துக்காக வெளி ஆளுங்களும் அதிகாரிமாருங்களும் கடக்கரைக்கு வந்தாங்க. இந்தப் பாரம்பரியக் கடலோடிகிட்ட இல்லாத முதலீடும் தொழில்நுட்பமும் அவங்ககிட்ட இருந்துச்சு. அவங்க கண்ணுக்கு, கடலு அம்மா மடியா தெரியல. தங்கச் சுரங்கமா தெரிஞ்சுது. அள்ள ஆரம்பிச்சாங்க. கடலோடி சமூகத்தையும் அள்ளப் பழக்கினாங்க.

பறிகொடுத்த பாரம்பரிய அறிவும் அறமும்
இப்பம் கடைசியில எங்கே வந்து நிக்குதுன்னு கேட்டா, இன்னைக்குக் கடலுக்குப் போவ ஒரு கடலோடிதான் தேவைன்னு இல்ல. உங்ககிட்ட விசைப்படகு இருந்து, நவீனத் தொழில்நுட்பம் தெரிஞ்சா நீங்களும் போவலாம். காத்து தெரிய வேணாம், நீவாடு தெரிய வேணாம், மீன் குறி தெரிய வேணாம். எல்லாத்துக்கும் கருவி வந்தாச்சு. அதனால, கடலுக்குப் போற ஆளுங்க இன்னைக்கு ரெண்டா பிரிஞ்சு நிக்குறாங்க. ஒண்ணு, பாரம்பரியக் கடலோடிங்க. இன்னொண்ணு, தொழில்முறை கடலோடிங்க. இந்த ரெண்டாவது ஆளுங்களோட எண்ணிக்கை ரொம்பக் கொறைச்ச. ஆனா, அவங்க கையிலதான் இன்னைக்குத் தொழில் இருக்கு, கடக்கரை இருக்கு, கடல் இருக்கு.

இப்பிடி வெளியிலேர்ந்து வந்து கடலைப் பார்த்து சுரங்கமா நெனைச்சவங்க கொண்டாந்ததுதான் அனல் மின்நிலையங்கள்ல ஆரம்பிச்சி, கனிம மணல் ஆலை, அணு உலை வரைக்கும்.

நீங்க எங்க வேணா போங்க, எந்தப் பிரச்சினையை வேணா எழுதுங்க. கடல்ல நடக்குற மாற்றங்களுக்கான அடிப்படை இதுதான் பார்த்துங்க!”

அநாயாசமாக ஒரு பெரும் கதையைச் சொல்லிவிட்டு, வெற்றிலையை எடுத்து, அதன் முதுகில் சுண்ணாம்பைத் தடவ ஆரம்பித்தார் சாமிப்பிள்ளை.

ஆகஸ்ட், 2014, ‘தி இந்து’





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக