கரும் பிசாசு!


ன்னியாகுமரி மாவட்டம். மணவாளக்குறிச்சி. உயரமான சுற்றுச்சுவர்களால் வளைக்கப்பட்டிருக்கும் அந்த வளாகத்தில், ‘இந்திய அரிய மணல் ஆலை' எனும் பெயர் பலகையைத் தாண்டி, உள்ளே ஒரு ஆலை இயங்குவதற்கான எந்த அடையாளமும் வெளியே இல்லை. உள்ளே மலை மாதிரி குவிக்கப்பட்டிருக்கும் மணலைப் பார்க்கும் வெளியூர்க்காரர்கள் எவருக்கும் அவர்களுடைய சிறு பிராயத்து மணல் ஆட்டம் ஞாபகத்துக்கு வரும். கடற்கரை யோர மக்களோ அதைக் கரும் பிசாசு என்கிறார்கள்.

கனிம மணல் என்றால் என்ன?
தமிழகத்தின் தென்பகுதி கடற்கரையின் மணலைக் கருமணல் என்று சொல்கிறார்கள். ஏராளமான கனிமங்களை உள்ளடக்கிய இந்த மணலிலிருந்து இலுமனைட், ரூட்டைல், சிர்கான், மோனசைட், சிலிமினேட், கார்னைட் உள்ளிட்ட கனிமங்கள் பிரித்தெடுக்கப்படு கின்றன. சர்வதேச அளவிலான சந்தையைக் கொண்ட தொழில் இது.

இந்தக் கருமணல் இயல்பிலேயே கதிரியக்கத் தன்மை கொண்டது. அதைத் தோண்டிக் கையாளும்போது, அதிலுள்ள கதிரியக்கம் மேலும் பல மடங்கு அதிகரிக்கும். புற்றுநோய்க்கான முக்கியமான காரணிகளில் கதிரியக்கமும் ஒன்று என்பதுதான் கருமணலைக் கரும் பிசாசு என்று கடற்கரை மக்கள் அழைக்கக் காரணம்.

தமிழகக் கடற்கரைக்கு வந்த முதல் அபாயம்
தமிழகக் கடற்கரையில் இன்று நிறுவப்பட்டிருக்கும் எல்லா நவீனத் தொழிலகக் கட்டமைப்புகளுக்கும் தொடக்கப் புள்ளி மணவாளக்குறிச்சி ஆலை. “1908-ல் ஜெர்மனியிலிருந்து இங்கு வந்த ஹெர்ஸ் ஸ்கோன்பெர்க் என்பவர்தான் தமிழகக் கடற்கரைக்கு இந்த ஆலை வந்த கதையின் சூத்திரதாரி. வெகு விரைவில், ஆங்கிலேய அரசு இதைப் பெரிய அளவில் விஸ்தரித்தது. சுதந்திரத்துக்குப் பின், 1963-ல் தன்னுடைய நேரடிக் கட்டுப்பாட்டில் இந்திய அணுசக்தித் துறை கொண்டுவந்தது” என்று ஆலையின் வரலாற்றைச் சொல்கிறார் ஆய்வாளரும் ‘தாது மணல் கொள்ளை' நூலாசிரியருமான முகிலன். இன்றைக்குத் தென்தமிழகக் கடற்கரையைச் சூறையாடிக்கொண்டிருக்கும் கனிம மணல் கொள்ளையர்களெல்லாம் இந்த ஆலையைப் பார்த்துதான் தொழில் கற்றிருக்கின்றனர்.

ஆண்டுக்கு 90,000 ஆயிரம் டன் இலுமனைட், 10,000 டன் சிர்கான், 10,000 டன் கார்னெட், 3,500 டன் ரூட்டைல், 3,000 டன் மோனசைட்டைக் கருமணலிலிருந்து பிரித்து இந்த ஆலை உற்பத்தி செய்கிறது. கோடிகளில் புரளும் இந்நிறுவனம், தொழிலை மேலும் விஸ்தரிக்க சுற்றுப்புறக் கிராமங்களைத் தேடுகிறது.

முதல் களபலி
ஒரு நாட்டுக்கு வளர்ச்சித் திட்டங்கள் அவசியம். எந்த ஒரு நவீனக் கட்டமைப்பும் இயற்கையின் சூழல் கட்டமைப்பில் சில சேதங்களை உருவாக்கவே செய்யும். ஆனால், அந்தக் கட்டமைப்புகள் முற்றிலுமாக இயற்கையைச் சிதைக்கும் அளவுக்கு மோசமானவையாக மாறி விடக் கூடாது. மக்களின் வாழ்வைச் சீரழிப்பதாக மாறிவிடக் கூடாது. ஒரு வரையறைக்குள் செயல்படுத்தப்படுவது அவசியம். இந்தியாவின் சாபக்கேடு என்னவென்றால், வளர்ச்சியின் பெயரால் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் பலவும் மக்களின் வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் முதல் களபலி கேட்பதும் வரையறைக்கு அப்பாற்பட்டு சூறையாடுவதாக மாறுவதும்.

இந்திய அரிய மணல் ஆலை, தனக்காகத் தம் ஊரையும் நிலத்தையும் உழைப்பையும் அர்ப்பணித்த மக்களுக்குச் செய்தது என்ன? ஆலையையொட்டி உள்ள சின்னவிளை கிராமம் உதாரணம்.

சுரண்டல் கதைகள்
அடிப்படையில் கடலோடிகளின் கிராமமான சின்னவிளையில் ஆகப் பெரும்பான்மையினர் கத்தோலிக்க மக்கள். விரல் விட்டு எண்ணிவிடும் இந்து, முஸ்லிம் குடும்பங்கள் ஊரில் வசிக்கின்றன. ஊர் மக்கள் கதைகதையாகச் சொல்கிறார்கள். என்றாலும், நல்லது கெட்டது எல்லாவற்றையும் தீர்மானிக்கும் ஊரின் மதகுரு அருட்தந்தை பெஞ்சமினை நோக்கி விரலைக் காட்டுகிறார்கள்.

“இந்த ஆலை இயங்குறதுக்கான இடம் கொடுத்ததுல ஆரம்பிச்சு, இங்கே கூலி வேலைக்குப் போய் இந்த ஆலை இயங்குறதுக்கான எல்லா அடித்தளமும் நம்ம ஊர் மக்கள்தான். ஆனா, பதிலுக்கு ஆலை என்ன பண்ணுச்சுன்னு மட்டும் நான் சொல்றேன்” என்று ஆரம்பித்தார் பெஞ்சமின்.

“ஆலை தொடங்குனப்போ ஊரோட எல்லா இடத்தையும் ஆலை எடுத்துக்கிட்டு, மக்களுக்கு குடும்பத்துக்கு ரெண்டரை சென்ட் மட்டும் கொடுத்துச்சு. இன்னைக்குத் தலைமுறை ஓடிப்போச்சு. அன்னைக்கு இப்படி ரெண்டரை சென்ட் எடத்துல வாழ ஆரம்பிச்சவங்களுக்கு இன்னைக்குப் பேரப்பிள்ளை ஆகிப்போச்சு. இன்னும் அந்த எடத்தைத்தான் உடைச்சி உடைச்சி வாழ்ந்துகிட்டிருக்காங்க. ஊருல வேற எடம் இல்லை. வயசுப் பிள்ளைங்களை வெச்சுக்கிட்டு எப்படி இத்தனை சின்ன எடத்துல வாழ முடியும். ஒரு ரெண்டு ஏக்கர் நெலத்தை மக்களுக்குக் கொடுங்க; நாங்க பகிர்ந்துக்குறோம்னு ஆண்டுக் கணக்கா கேட்குறோம். ஆலை என்ன செய்யுது தெரியுமா? பதிலுக்கு எங்ககிட்ட இருக்குற கொஞ்ச நஞ்ச எடத்தையும் கேட்குது.

மழை கொட்டுற நாள்லகூட இங்கே நெலத்துல கால் சுடும். அவ்வளவு கதிரியக்கம். இதோ, இப்பகூட செல்சியானு ஒரு குழந்தை புற்றுநோயால பாதிக்கப்பட்டிருக்கு. ஏழாவது படிச்சுக்கிட்டுருந்தது. நல்லாப் படிக்கக் கூடிய பிள்ளை. ரத்தப் புற்றுநோய்னு தாய் - தகப்பன் தூக்கிக்கிட்டு சென்னைக்கும் திருவனந்தபுரத்துக்கும் மாத்திமாத்தி அலையுறாங்க. அன்னாடம் நூறு இருநூறுக்குப் பிழைக்குற மக்கள், தொழிலை விட்டுட்டு ஊர் விட்டு ஊர் போய் அறை எடுத்துத் தங்கி, பல்லாயிரக் கணக்குல மருத்துவச் செலவு பாக்குறதுன்னா சாமானியமா? இந்த ஊர் மக்கள் எவ்வளவோ இழந்திருக்காங்க இந்த ஆலைக்காக.

ஆனா, இப்பவும் இந்த ஆலைக்கு எதிரா நானோ, ஊரோ பேசலை. ஆலை வேணாமின்னு சொல்லலை. காரணம், இந்த ஊரைச் சேர்ந்த பெரும்பாலானவங்க அங்கதான் கூலி வேலைக்குப் போறாங்க. பிழைப்புக்கு அதைத்தான் நம்பியிருக்காங்க. அதனால, எல்லாத்தையும் தாங்கிக்கிறோம். ஆனா, குறைஞ்சபட்ச நியாயமின்னு ஒண்ணு இருக்கணுமா வேணாமா?

ஊர்லேர்ந்து கூலி வேலைக்குப் போறவங்க, சொற்பத் தொகைக்கு ஒப்பந்தக் கூலியாத்தான் போறாங்க. உள்ள நிரந்தரமா வெச்சிருக்குற தன்னோட அதிகாரிங்களுக்கு மூணு மாசத்துக்கு ஒரு மொறை கதிரியக்கப் பாதிப்புப் பரிசோதனை நடத்துது ஆலை. அவங்களுக்குக் கதிரியக்கப் பாதிப்பு அதிகமானா, தேவையான சிகிச்சைகளைத் தருது. புற்றுநோய் பாதிப்பு வந்தாக்கூடப் பணிப் பாதுகாப்பு அவங்களுக்கு உண்டு. கூலித் தொழிலுக்குப் போற எங்க ஊர் மக்கள்ல இப்படி ஒருத்தர் பாதிக்கப்பட்டா, அத்தோட அவர் கதை முடிஞ்சுது. வருஷத்துக்கு ரெண்டு லட்ச ரூபாய் ஊர் வளர்ச்சி நிதின்னு சொல்லி பேர் பண்ணுறதோட ஆலையோட கடமை முடிஞ்சுது. வெளிய பாருங்க. இந்தச் சாலையைத்தான் ஒரு நாளைக்கு ஆயிரம் மொறை பயன்படுத்துது ஆலை. என்ன லட்சணத்துல கெடக்குது பாருங்க” என்று சாலையைக் காட்டும் பெஞ்சமின் சொல்கிறார். “வளர்ச்சித் திட்டங்களை ஆதரிக்கிற மக்களோட கதியே இப்படின்னா, எதிர்க்குற மக்களோட நெலைமை நம்ம நாட்டுல எப்படி இருக்குனு யோசிச்சுப்பாருங்க!”

சின்னவிளையிலிருந்து கடியப்பட்டினம் போனபோது கதிரியக் கத்தின் தாண்டவம் கலங்க வைத்தது.

ஆகஸ்ட், 2014, ‘தி இந்து’ 

1 கருத்து:

 1. பல ஆண்டுகளாக ஒரு மருத்துவராகவும் சமூக ஆர்வலராகவும் நான் கண்ட அனுபவத்தை நீங்கள் கட்டுரையாக தந்துள்ளீர்கள்....கண்ணீருடன் நன்றிகள்..
  கடியப்பட்டணம் ,முட்டம் ,பிள்ளைதோப்பு ..போன்ற கிராமங்கள் புற்று நோய் கிராமங்கள் என்றே கூறலாம்..
  மணவாளக்குறிச்சி ஊரில் என்னுடைய தாய் மாமனும் மாமியும் புற்று நோய்க்கு பலி ஆனார்கள்..
  நெய்யூர் என்ற ஊரில் புற்று நோய் மருத்துவமனை ஓன்று உள்ளது..இதையும் தங்களின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்..
  இன்னும் பல பல சோகங்கள்..
  அரசு கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஆபத்தான அணு கதிர்வீசுகள் ...

  "இது கடலோர" கவிதைகள்" அல்ல ..கடலோர ஒப்பாரிகள்..

  டாக்டர் .ஜே.முகைதீன் ..
  (தங்களை சென்னை பெரம்பூரில் உள்ள சமரசம் பத்திரிக்கை அலுவலகத்தில் ஊடக பயிலரங்கத்தில் சந்தித்து உள்ளேன்..குமரி மாவட்டத்தில் பிறந்து..உங்கள் மன்னை நகரில் மருத்துவராக பணி செய்து இப்போது சென்னையில் உள்ளேன் 9445613021..)

  பதிலளிநீக்கு