செய்தி மேஜையின் மேல் வரிசையாக வந்து விழுந்துகொண்டே இருக்கின்றன பிரெஞ்சு பத்திரிகையான ‘ஷார்ல் ஹிப்டோ’வைப் பற்றிய செய்திகள். பயங்கரவாதிகள் எப்போது, எப்படி வந்தார்கள்... பத்திரிகை அலுவலகத்துக்குள் எப்படிப் புகுந்தார்கள்... எப்படிச் சுட்டுக் கொன்றார்கள்... எப்படிக் கைதுசெய்யப்பட்டார்கள்... எந்த அமைப்பு இந்தப் படுகொலைக்குப் பின்னணியில் இருக்கிறது...
செய்திகள் ஒன்றன் மீது ஒன்றாக விழுகின்றன. கூடவே படங்களும் வந்து விழுகின்றன. சிரித்துக்கொண்டிருக்கும் அதன் ஆசிரியரின் படம். அலுவலகத்தில் பரபரப்பான வேலையில் ஈடுபட்டிருக்கும் அதன் ஆசிரிய இலாகாவினரின் படம். கணினி முன் படம் வரையும் அதன் கேலிச் சித்திரக்காரர்கள் படம். கூடவே கேலிச் சித்திரங்களும் வந்து விழுகின்றன. உலகெங்கும் இந்தப் படுகொலைக்குக் கண்டனம் தெரிவித்து வரையப்பட்ட கேலிச் சித்திரங்கள். இடையிடையே துண்டு துண்டாகக் குறிப்புகளில் வந்து விழுகிறது அதன் வரலாறு.
அது, 1960-ல் ஜார்ஜஸ் புரொஃபசர் சோரோன் பெர்னியர், பிராங்குவா காவன்னா இருவராலும் ‘ஹரா-கிரி’ என்ற பெயரில் மாதப் பத்திரிகையாகத் தொடங்கப்பட்டது, ஒரு வாசகர் அதை “உங்கள் பத்திரிகை மடத்தனம் - அசிங்கம்” என்று விமர்சித்ததையே தன்னுடைய பிரகடனமாக மாற்றிக்கொண்டது, 1969-ல் பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஷார்ல் டி கால் மரணச் செய்தியைக் கிண்டலடித்து பிரான்ஸ் அரசின் தடையை எதிர்கொண்டது, பின்னாளில், ‘ஷார்ல் ஹிப்டோ’ எனும் காமிக்ஸ் பெயரைச் சூடிக்கொண்டது, 1981-ல் இழுத்து மூடப்பட்டு, 1992-ல் மீண்டும் உயிர் பெற்றது எல்லாம் அந்தக் குறிப்புகளில் இருக்கின்றன.
ஒரு அங்கதப் பத்திரிகையாக ‘ஷார்ல் ஹிப்டோ’ தன்னை நிறுவிக்கொண்டது, எந்தப் புனித பிம்பங்கள், மரபுகளுக்கும் கட்டுப்படாமல் கேள்விகுள்ளாக்கியது, கிறிஸ்தவம், இஸ்லாம், யூதம் என சகட்டுமேனிக்கு எல்லா மதங்கள், தீவிர வலதுசாரிகளுக்கு எதிராகத் தொடர்ந்து அது விமர்சனங்களை வெளியிட்டது, 2006-ல் ‘முஹம்மதை மிஞ்சிய அடிப்படைவாதிகள்’ என்ற தலைப்பில் முதல் பக்கத்தில் கேலிச் சித்திரத்தை வெளியிட்டது.
இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளின் எதிர்ப்பு வழக்குகளை எதிர் கொண்டது, பிரெஞ்சு அதிபர் சிராக் அதைக் கண்டித்தது, பின்னாளில் வந்த அதிபர்கள் நிகோலஸ் சர்கோஸியும் பிராங்குவா ஹொலாந்துவும் “அங்கதச் சுவையில் எழுதுவதும் வரைவதும் கருத்துச் சுதந்திரம், அதை நாங்கள் ஆதரிக்கிறோம்” என்று நீதிமன்றத்துக்கு அனுப்பிய கடிதத்தில் அதற்கு ஆதரவு தெரிவித்தது.
2011-ல், ஷரியத் அமைப்பைக் கிண்டலடித்து, ‘ஷாரியா ஹிப்டோ’ என்ற பெயர் மாற்றத்துடன் வெளியானது, அதன் கௌரவ ஆசிரியரின் பெயர் முஹம்மதுவின் பெயரைக் குறிப்பிட்டிருந்தது. கூடவே, ‘சிரித்துக்கொண்டே சாகாவிட்டால் உங்களுக்கு 100 கசையடிகள்’ என்று குறிப்பிட்டிருந்தது, இதன் தொடர்ச்சியாக, பத்திரிகை அலுவலகம் மீது தீக்குண்டு வீச்சு நடத்தப்பட்டது, பதிலுக்கு, “தங்களுடைய மதம் என்ன சொல்கிறது என்றே தெரியாத முட்டாள்கள்தான் தாக்குகிறார்கள், தங்களுடைய மதத்துக்கு அவர்களே துரோகம் செய்கிறார்கள்” என்று இப்போது சுட்டுக் கொல்லப்பட்ட அதன் ஆசிரியர் சார்ப் சாடியது... எல்லாக் குறிப்புகளும் ஒன்றன் மீது ஒன்றாக விழுகின்றன.
செய்தி மேஜையில், இப்போது இந்தக் கருத்துப் படுகொலைக்கு உலகின் அதிர்ச்சியும் கண்டனமும் அறிக்கை களாக வந்து விழுகின்றன. இந்தியாவின் அதிர்ச்சியும் கண்டனங்களும் வந்து விழுகின்றன. தமிழகத்தின் அதிர்ச்சியும் கண்டனங்களும் வந்து விழுகின்றன.
செய்தி மேஜையில், குவிந்திருக்கும் அறிக்கைகள் இடையே இப்போது ஓர் எழுத்தாளரின் செய்தி அறிக்கை எழுகிறது. தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகனின் அறிக்கை அது. கடந்த 25 வருஷங்களாக அவர் தீவிரமாக எழுதிக்கொண்டிருப்பதை அது சொல்கிறது, இலக்கியத்திற்காகப் பல்வேறு விருது களையும் பரிசுகளையும் அவர் வாங்கியது, கொங்குப் பகுதியில் வழங்கும் சொற்களைத் தனி ஒருவனாக அவர் தொகுத்துக் ‘கொங்கு வட்டாரச் சொல்லகராதி’யை வெளியிட்டது. அதற்குத் தமிழக அரசின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்தது, கொங்குச் சிறுகதைகளை அவர் தொகுத்தது, இப்படித் தன் எழுத்துக்கள் மூலமாகத் தன் சொந்த ஊரான திருச்செங்கோட்டுக்குப் பெருமை சேர்த்தது, ஒரு நாவலில் தன் ஊரைப் பயன்படுத்துவது ஊருக்குப் பெருமை சேர்க்கும் விஷயம் என்று அவர் நம்பியது, அப்படி அவரால் 2010-ல் ‘மாதொருபாகன்’ நாவல் உருவாக்கப்பட்டது, நான்கு ஆண்டு கள் கழித்து இப்போது இந்துத்வ - சாதிய அமைப்புகளால் அது குறிவைக்கப்படுவது, தீயிட்டு அந்த நாவலின் பிரதிகள் எரித்தழிக்கப்பட்டது, அவருக்கு எதிராகக் கூட்டங்கள் நடத்தி, அந்த நாவலின் சில பக்கங்களை மட்டும் நகல் எடுத்து, ஆயிரக்கணக்கில் அவர்கள் மக்களிடம் விநியோகித்தது. இந்த நாவல் ஊரைக் கேவலப்படுத்துகிறது என்றும் பெண்களைக் கேவலப்படுத்துகிறது என்றும் பிரச்சாரம் செய்தது. தொடர்ந்து பல்வேறு வகைகளிலும் அவரை அச்சுறுத்திக்கொண்டிருப்பது, உச்சகட்டமாக இன்று திருச்செங்கோட்டில் அந்த அடிப்படைவாதக் கும்பல் ‘பந்த்’ நடத்தத் திட்டமிட்டிருப்பது... எல்லாம் அந்த அறிக்கையில் இருக்கின்றன.
ஓர் எழுத்தாளன் தன் கையாலேயே தான் செய்யாத தவறுக்கு வருத்தம் தெரிவித்துக் கடிதம் எழுதும் நிர்ப்பந்தத்தை இந்துத்வ சாதிய அடிப்படைவாதிகள் உருவாக்கியது. இதன் தொடர்ச்சியாக, ‘திருச்செங்கோட்டையோ மக்களையோ மதத்தையோ சாதியையோ இழிவுபடுத்தும் நோக்கம் எனக்குச் சிறிதும் இல்லை. என்றாலும் திருச்செங்கோடு மக்களின் மன உணர்வைப் புரிந்துகொள்கிறேன். திருச்செங்கோடு பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையைவிட என் புத்தகம் ஒன்றும் பெரிதல்ல என்று கருதுகிறேன். ஆகவே நாவலில் திருச்செங்கோடு என்னும் ஊர்ப் பெயரையும் அதன் அடையாளங்களையும் பயன்படுத்தி எழுதியதைத் தங்கள் வாசிப்பின் வழி தவறு என உணரும் திருச்செங்கோடு பொதுமக்களிடம் அதற்காக மிகுந்த வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். அடுத்து வெளியாகும் பதிப்பில் ஊர்ப் பெயரையும் அடையாளங்களையும் நீக்கித் திருச்செங்கோடு என்பதற்கான எந்தக் குறிப்பும் இல்லாமல் பதிப்பிக்க உள்ளேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று அவர் குறிப்பிட்டிருப்பது... எல்லாம் அந்த அறிக்கையில் இருக்கின்றன.
செய்தி மேஜையின் மீது அடுத்தடுத்த செய்திகள் விழுந்துகொண்டே இருக்கின்றன.
ஜனவரி, 2015, ‘தி இந்து’
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக