சரியான திசையில் இயங்கும் அக்கறைகள்: ராஜன் குறை கிருஷ்ணன்

மஸ் குறித்து சிந்திக்கும்போது மகிழ்ச்சியாகவும் இருக்கிறது; கொஞ்சம் பொறாமையாகவும் இருக்கிறது. இவ்வளவு இளம் வயதில் இவ்வளவு பயன்மிக்க வாழ்வை வாழக் கற்றுக்கொண்டுவிட்டாரே என்பதுதான் பொறாமைக்கு காரணம். இப்படி ஒரு இதழியலாளர் தமிழில் இயங்குவது குறித்து மகிழ்ச்சி. அவருடைய அக்கறைகள் சரியான திசைகளில் இயங்குகின்றன என்பதற்கு இந்த தொகுப்பு நூல் முக்கிய சாட்சி.

இந்த நூலுக்கு மதிப்புரை வழங்கிய நான்கு பேருடைய சிறுபட்டியல் வியப்பளிப்பது. ஜெயமோகன், ஞாநி, எஸ்.வி.ராஜதுரை, அ.முத்துலிங்கம். இப்படியாக மிக வித்தியாசமான பார்வைகள் கொண்டவர்களை ஈர்க்கும்படியாக அவர் எழுதியிருக்கிறார் என்பது வியப்பாக இருக்கிறது. ஆனால் அதை சாதிக்க சமஸ் அவர் அதைச்சொன்னார், இவர் இத்தச்சொன்னார் என்று நிலைபாடுகள் எடுப்பதை தவிர்த்து ஒரு வலுவற்ற நடுநிலையை உருவாக்கவில்லை. மாறாக நடுநிலை என்பது ஒரு தார்மீகப் பார்வைதான் என்பதை சமஸின் எழுத்துகள் நிரூபிப்பதாகப் படுகிறது.சிறு, சிறு கட்டுரைகளிலும் கூட அவர் தெளிவான நிலைபாடுகளை எடுக்கிறார்
(உ-ம்) “காஷ்மீர் பிரச்சினையில் இந்தியா என்ன செய்ய வேண்டும்?” என்ற கட்டுரை. அது எனக்கு முழுமையாகத் திருப்தியளிக்காமல் இருந்தால் கூட, சமஸின் பார்வை அது என்று ஏற்றுக்கொள்ள வைப்பதாக இருக்கிறது. சமீபத்தில் அவர் எழுதி முகப்புத்தகத்திலும் பகிர்ந்த ஒரு கட்டுரையை நான் கடுமையாக விமர்சித்தேன். மிகுந்த பக்குவத்துடன் விமர்சனத்தை எதிர்கொண்டார். தமிழில் எழுதுபவர்களிடையே அதிகம் நான் எதிர்கொண்டிராத ஒரு அணுகுமுறை அது. அவர் நான் சொன்னதை ஏற்கவில்லை. ஆனால் நான் விமர்சிக்க முன்வந்ததை ஏற்றுக்கொண்டதுடன், அது குறித்து தொடர்ந்து சிந்திப்பார் என்ற எண்ணத்தையும் என்னிடம் ஏற்படுத்தினார்.

எனக்கு நம் ஊடகங்கள் கட்டமைக்கப்பட்டுள்ள விதத்தில் பெரிய மகிழ்ச்சி கிடையாது. கல்விப்புலம் சார்ந்த சிந்தனையாளன் என்ற முறையில் ஊடகங்கள் பிரச்சினைகளை எளிமைப்படுத்தும் களங்களாகவே தோன்றுவதை என்னால் தவிர்க்க முடியாது. ஆனால் ஊடகங்கள் தவிர்க்க முடியாதவை என்பதையும், அவற்றின் வீச்சு மிக முக்கியமானது என்பதையும் அறிவேன். அதனாலேயே எனக்கும் ஊடகத்துறையில் இயங்க வேண்டும் பல சமயம் தோன்றியதுண்டு. சமஸ் எழுத்துக்களை பார்க்கும்போது அந்த தேர்வினை மேற்கொள்ளாமல் விட்டது தவறோஎன்று தோன்றுகிறது. அவர் எழுத்துக்கள் சமூகத்தின் சிந்தனை முற்றிலும் வற்றிவிடாமல் இருக்க ஒரு குறைந்தபட்ச உத்தரவாதம் என்று தோன்றுகிறது. அவருடைய முன்னுதாரணத்தை பின்பற்றி மேலும் பல இளைஞர்கள் எழுத முன்வருவார்களேயானால், தமிழ் சமூகத்திற்கு ஆற்றும் சிறந்த தொண்டாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுரைகளிலிருந்து தேர்ந்தெடுத்த கட்டுரைகளின் தொகுப்பு என்று அவர் சொல்லும்போது அவர் உழைப்பின் தீவிரம் புரிகிறது. அவருடைய கட்டுரைகளில் சிறந்தது எது என்று தேர்ந்தெடுப்பது கடினம் என்றாலும் மிக முக்கியமான ஒரு மாதிரி கட்டுரை அவர் பிறந்த ஊரான மன்னார்குடியை முன்வைத்து அவர் எழுதியிருப்பது: “மன்னார்குடி ஏன் இப்படியானது?”. நம் காலத்தின் மிக, மிக முக்கியமான கேள்வியினை அவர் இதில் மக்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். அவர் தொடர்ந்து அதிகம் கவனம் செலுத்தவேண்டிய பிரச்சினை என்று என் மனதிற்கு படுவது நகர்மயமாதல், சூழலியல், வாழ்வாதாரங்கள் பறிபோதல் போன்றவையே என்று சொல்லத்தோன்றுகிறது. நம் காலத்தில் நெஞ்சு பொறுக்குதில்லையே என்று குமுற ஏகப்பட்ட விஷயங்கள் இருந்தாலும் மன்னார்குடிக்கு நேர்ந்த வளர்ச்சி என்ற அவலமே மிகவும் கொடூரமானது என்று எண்ணுவதை தவிக்கமுடியவில்லை. ஏனெனில், பிற அவலங்களை உடனடியாக அவலம் என்று புரிந்துகொள்கிறோம். ஆனால் சூழல் சீரழிவை அவலம் என்று அறியக்கூட இயலாதவர்களாய் இருக்கிறோம்.

சமஸ் கட்டுரைகளில் என்னை மிகவும் கவர்ந்த இன்னொரு கட்டுரை “பார்பனர்களை ஒழித்துவிட்டால் சாதி அழிந்துவிடுமா?” என்ற கட்டுரை. பார்ப்பனரல்லாதோர் செய்துகொள்ள வேண்டிய சுயவிமர்சனத்திற்கு சிறந்த முன்மாதிரி அந்த கட்டுரை. மிக முக்கியமான ஒரு குரல் என்று சொல்லலாம். பார்ப்பனர்களிடையே எந்தவிதமான சுயவிமர்சனக் குரலை நான் முன்னெடுக்க விரும்புகிறேனோ அதே போன்ற இடைநிலைச்சாதியினரிடையே ஒலிக்க வேண்டிய சுயவிமர்சனக் குரல் இது. இன்று அதன் தேவை உச்சத்தில் இருக்கிறது என்று சொல்லத் தயங்க மாட்டேன்.

இந்த நூலிலுள்ள எல்லாக் கட்டுரைகளையும் நான் முழுமையாக இன்னம் படிக்கவில்லை. அவற்றில் பலவற்றுடன் நான் கருத்து மாறுபடலாம். ஆனால் படித்தவரையில் எனக்கு உறுதியாக தோன்றுவது, அவ்விதம் கருத்து மாறுபட்டு பரஸ்பர மரியாதையுடன் விவாதிப்பதிற்கு உரிய தார்மீக அக்கறை கொண்ட இதழியலாளர் சமஸ் என்பதுதான். (முக்கிய குறிப்பு: புத்தகத்தை வாங்க, தொடர்புக்கு:
thuliveliyeedu@gmail.com
samasbooks@gmail.com
9444204501)

1 கருத்து:

 1. தைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்
  கைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்
  தையலை உயர்வு செய்திடல் வேண்டும்
  பைந்தமிழ் பூமி செழித்திடல் வேண்டும்

  தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும்
  எனது மனம் நிறைந்த
  இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.fr

  பதிலளிநீக்கு