அரிய சமன்பாடுதான் சமஸிடம் பிடித்தது: பி.ஏ. கிருஷ்ணன்

மஸ் எழுதிய ’யாருடைய எலிகள் நாம்’ புத்தகத்தைப் படித்து முடித்தவுடன் தோன்றியது இதுதான்: அவருடைய வயதில் எனக்கு அவருக்கு இருக்கும் தெளிவும் சமன்பாடும் ஏன் இல்லாமல் போய்விட்டது? புத்தகம் முழுவதும் அவருக்கு நமது சாதாரண மக்களின் மீது இருக்கும் அக்கறை தெளிவாக வெளிப்படுகிறது. அந்த அக்கறையைத் தாரை தம்பட்டங்கள் இல்லாமல் வெளிப்படுத்தியிருப்பதே சமஸில் வெற்றி என்று நான் கருதுகிறேன். அவரோடு ஒத்துப்போக முடியாத பல இடங்கள் புத்தகத்தில் இருக்கின்றன. ஆனால் அவரிடம் பேசி அவரை மாற்ற முடியும் அல்லது அவரால் தெளிவு பெற்று நான் மாறலாம். என்ற எண்ணத்தை எனக்கு அவரது எழுத்து அளிக்கிறது.



உதாரணமாக அவருடைய “யாருடைய எலிகள் நாம்?” என்ற கட்டுரையையே எடுத்துக் கொள்ளலாம். மனிதர்கள் மீது பரிசோதனை செய்து அதன் விளைவுகளை அறிந்துகொள்ளாமல் எந்த மருந்தையும் மனிதர்களிக்டையே மருந்து நிறுவனங்கள் (மேற்கத்திய மருந்துகள்) விற்பனை செய்ய முடியாது. அமெரிக்கா வெளிநாடுகளில் மருந்து பரிசோதனைகள் நடத்த அனுமதி அளித்திருக்கிறது என்றால் அந்த அனுமதி ‘நல்ல பரிசோதனை முறை' (good clinical practice) வரம்புகளுக்கு உட்பட்டது. பரிசோதனைகள் இந்தியாவில் நடைபெற்றால் இந்தியாவும் நல்ல பரிசோதனை முறையை மிகுந்த கண்டிப்புடன் கையாள வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது. ஆனால், இந்தியாவில் இருக்கும் பெற்றோர்கள் மரணத்தின் பிடியில் இருக்கும் தங்கள் குழந்தைகள் பிழைக்க வேண்டும் என்ற அவாவில் சோதனைகளுக்கு தங்கள் குழந்தைகளைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிபப்தில் இருக்கும் நியாயத்தையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். மனித எலிகள் இல்லாமல் புதிய மருந்துகள் வர முடியாது. அந்த எலிகள் நாமாகவும் இருக்கலாம். அமெரிக்கராகவும் இருக்கலாம். ஆப்பிரிக்கராகவும் இருக்கலாம். பன்னாட்டு மருந்து நிறுவனங்களை கழுகுக் கண்கள கொண்டு கண்காணிப்பது நிச்சயம் அவசியம். அதே சமயத்தில் பரிசோதனைகளே வேண்டாம் என்று கதவை அடைப்பது சரியாக இருக்காது. சமஸ் அப்படிச் சொல்லவில்லை. அவரே இன்னொரு கட்டுரையில் இந்திய ஆராய்ச்சி எவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறது என்பதைச் சொல்லியிருக்கிறார். இந்த அரிய சமன்பாடுதான் எனக்கு அவருடைய எழுத்துகளில் பிடித்திருக்கிறது. நேருவைத் தெளிவாகப் படித்து அறிந்து கொண்டதால் வந்த சமன்பாடு அது. அவருக்கு எனது வாழ்த்துகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக