பாரீஸ் ஏன் பாரீஸாக இருக்கிறது?


தொலைக்காட்சியில் பார்த்தபோது, எழுந்து நின்று அந்தப் பெருங்கூட்டத்தின் கூடவே சேர்ந்து உச்சஸ்தாயியில் கத்த வேண்டும் போல் இருந்தது: “நானும் ஷார்ல்!”

ஒரு மொழியில் ‘மக்கள் எழுச்சி’ என்பதுபோல, ஜனநாயகத்தை உந்தித் தள்ளும் இரு சொற்களின் சேர்க்கைக்கு இணை இல்லை. வரலாற்றில் மிக அரிதான தருணங்களே இந்த ஜோடி சொற்களை உண்மையாகப் பயன்படுத்தும் வாய்ப்பை வழங்குகின்றன. இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாலஸ்தீன அதிபர் முஹம்மது அப்பாஸ் என 40 உலகத் தலைவர்கள் மத்தியில் நின்று பிரான்ஸ் அதிபர் பிரான்ஸிஸ் ஹோலந்த் “இன்று பாரீஸ் உலகின் தலைநகரம்” என்று முழங்கியது கூடுதலான வர்ணனை அல்ல; ‘பாரீஸ் ஷார்ல் ஹிப்டோ பேரணி’ வரலாற்றில் என்றென்றைக்கும் நிலைத்திருக்கக் கூடிய மக்கள் எழுச்சி. கருத்துச் சுதந்திரம் மீதும் படைப்பாளிகள் மீதும் தாங்கள் கொண்டிருக்கும் மதிப்பை வெளிப்படுத்தி, பிரெஞ்சு மக்கள் வெளியிட்டிருக்கும் சர்வதேசப் பிரகடனம்!


பிரான்ஸ் வரலாற்றிலேயே மிகப் பெரிய பேரணி என்கிறார்கள் பிரெஞ்சு ஊடகவியலாளர்கள். பேரணியில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கையை ஒருவர் 10 லட்சம் என்கிறார்; இன்னொருவர் 20 லட்சம் என்கிறார்; மற்றொருவர் 30 லட்சம் என்கிறார்; வேறொருவர் இரண்டாம் உலகப் போரில் நாஜிக்கள் பிடியிலிருந்து பிரான்ஸ் விடுவிக்கப்பட்டபோது வீதிகளில் கூடிய எண்ணிக்கையைக் காட்டிலும் இது அதிகம் என்கிறார். ‘சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்’ எனும் மூன்று வார்த்தைகளைத் தன்னுடைய புரட்சி முழக்கமாக்கிக்கொண்ட தேசம், இந்தப் பேரணியில் மூன்று வாக்கியங்களில் அந்த மூன்று வார்த்தைகளைப் புதைத்து முழங்கியது: “நாங்கள்தான் ஷார்ல், நாங்கள்தான் காவலர்கள், நாங்கள்தான் பிரான்ஸின் யூதர்கள்!”
அவர்கள் உச்சரிக்காமல் உரக்க முழங்கிய இன்னொரு முழக்கம்: “வா, முடிந்தால் எங்களையும் சுடு!” (வரலாறு இதை மறக்காதிருக்கட்டும்: பேரணியின்போது சில இடங்களில் மசூதிகள் தாக்கப்பட்டதையும் தாண்டி, ஒருமித்து வெளிப்பட்ட பேரணியின் முழக்கத்தில் கலந்திருந்த பல்லாயிரக் கணக்கான குரல்கள் முஸ்லிம்களுடையவை.)

உலகின் அரசியல் பொருளாதார அதிகாரத் தலை நகரத்தின் இடம் மாறிக்கொண்டே இருக்கலாம். பண் பாட்டுத் தலைநகராக ஏன் பாரீஸ் அசைக்க முடியாமல் நீடிக்கிறது என்பதற்கான காரணம் இதுதான்!

பிரெஞ்சுக் கலாச்சாரத்தில் எப்போதுமே முதல் மரியாதைக்குரியவை புத்தகங்களும் எழுத்தாளர்களும். படைப்பாளிகள்தான் ஒரு சமூகத்தின் முன்னத்தி ஏர்கள் என்பதை முழுமையாக உணர்ந்தவர்கள் அவர்கள். வரலாறு தெரிந்தவர்களுக்கு பிரான்ஸின் ‘மே 1968 இயக்கம்’ தெரிந்திருக்கும். அதிபர் ஷார்ல் டி காலின் ஆட்சிக்கு எதிராக சகல ஜனநாயக சக்திகளும் ஒன்று திரண்டு நடத்திய போராட்டம். எதிர்ப்பாளர்கள், கிளர்ச்சியாளர்களைக் கட்டம் கட்டியது டி கால் அரசு. இந்த எதிர்ப்பு இயக்கத்தின் பின் நின்றவர்களில் பிரெஞ்சு அறிவுஜீவி சார்த்தர் முக்கியமானவர். “முதலில் சார்த்தரையல்லவா பிடித்து உள்ளே போட வேண்டும்? ” என்று கேட்டபோது, டி கால் சொன்னார். “சார்த்தார் படைப்பாளி. அவரைச் சிறையில் வைப்பது, பிரான்ஸையே சிறையில் வைப்பதாகிவிடாதா?” ஒருகட்டத்தில் காவல் துறை சார்த்தரைக் கைதுசெய்தபோது, டிகால் இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்டு, அவரை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுத்தார். அப்போது டிகால் சொன்னார்: “நீங்கள் வால்டரைக் கைதுசெய்ய முடியாது! (வால்டர்போலவே சார்த்தர் நம் காலத்தின் மனசாட்சி. நம்மால் அவரைக் கைதுசெய்ய முடியாது).”

இன்றைக்கும் எழுத்தாளர்களுக்கான அந்த மரியாதை குறைந்துவிட்டதாகத் தெரியவில்லை.  ஒரு ஊழியர், “ நான் நாவல் எழுதப்போகிறேன்; எனக்கு ஒரு வருஷம் விடுமுறை வேண்டும்” என்று கேட்டு, முழுச் சம்பளத்தோடு வீட்டில் உட்கார்ந்து பிரான்ஸில் நாவல் எழுத முடியும். பிரெஞ்சு சமூகமும் அரசும் அந்த வாய்ப்பை வழங்குகின்றன.

“பிரான்ஸில் அடித்தட்டு மக்கள் வீடுகளில்கூடக் குறைந்தது 500 புத்தகங்களைப் பார்க்க முடியும். ஒரு நல்ல செல்வாக்குள்ள எழுத்தாளருக்கும் தொழிலதிபருக்கும் சினிமாக்காரருக்கும் சம்பாத்தியத்தில் அங்கு வேறுபாடே இருப்பதில்லை” என்று சொல்வார் பிரெஞ்சு சூழலுடன் மிக நெருக்கமான உறவைக் கொண்டவரான நண்பர் வெ. ஸ்ரீராம்.  பிரெஞ்சுப் பண்பாட்டுத் துறைச் சந்தையில் இன்றைக்கும் அதிகம் வருமானம் ஈட்டித்தருவது பதிப்புத் துறை (400 கோடி யூரோ). இதுவரை அதிகம் விற்ற பிரெஞ்சு படைப்புகளான ‘அந்நியன்’, ‘குட்டி இளவரசன்’ இரண்டுமே பிரெஞ்சில் மட்டுமே ஒரு கோடி பிரதிகளைத் தாண்டியவை.

தமிழகத்தை நாம் பிரான்ஸுடன் ஒப்பிட முடியும். தமிழகத்தின் மக்கள்தொகை 7.2 கோடி. பிரான்ஸின் மக்கள்தொகை 6.6 கோடி. 2014-ல் அதிகம் விற்ற பிரெஞ்சு நாவலான வாலரி த்ரியேவெயியேவின் ‘தாங்கஸ் ஃபார் திஸ் மொமென்ட்’ 6 லட்சம் பிரதிகள் விற்றிருக்கிறது. 2014-ல் அதிகம் விற்ற தமிழ் நாவலான ஜோ டி குரூஸின் ‘கொற்கை’ (சாகித்ய அகாடெமி விருது பெற்றது) எத்தனை பிரதிகள் விற்றது என்று விசாரித்தேன். 3,000 பிரதிகள் என்கிறார்கள்.

தமிழ்ச் சமூகத்துக்கும் பிரெஞ்சு சமூகத்துக்கும் இடையேயான இடைவெளி இங்கே 5,97,000 பிரதிகள். ஒரு சமூகம் லட்சக் கணக்கில் சுதந்திர, ஜனநாயகக் குரலோடு எழுத்தாளருக்கு ஆதரவாகக் குவிவதற்கும், ஒரு சமூகம் ஒரு எழுத்தாளரை ஊர்விலக்கம்செய்வதற்கும் இடையே கடக்க வேண்டிய தொலைவும் அது!

ஜனவரி, 2015, ‘தி இந்து’

6 கருத்துகள்:

 1. பாரீஸை தலைநகராகக் கொண்ட பிரான்ஸ் நாடுதான் ஆப்ப்ரிக்காவிலுள்ள அனேக நாடுகளில் பல்வேறு விதமாக உள்நாட்டு பிரச்சனைகளை தூண்டிவிட்டு, அம்மக்களை பசி பட்டினியில் வாடவைக்கிறது. அளவுக்கும் தேவைக்கும் மீறி ஆயுதங்களை உற்பத்தி செய்து வைத்திருக்கும் பிரான்ஸ் நாடு, கெட்டுப்போகும் நிலையில் இருக்கும் இரண்டாம் தர ஆயுதங்களை ஆப்பரிக்க நாட்டு போராளிகளுக்கு விற்று லாபம் கொழிக்கிறது. அந்நாடுகளில் அமைதிக்கு வழிவகுக்காமல் போராட்டங்களை தூண்டி விடுகறது.

  ஆறு லட்சம் புத்தகங்களை விற்கும் பிரான்ஸ் நாடு தான் பல நாடுகளின் அமைதியை குலைக்கிறது. மூவாயிரம் புத்தகங்கள் விற்கும் தமிழ்நாடு எந்த நாட்டிற்கும் குந்தகம் விளைவிக்கும் செயல்களை செய்யவில்லை. ஆறு லட்சம் புத்தகங்கள் வழிநடத்தும் பிரான்ஸ் நாடு வன்முறையை விரும்பிகறது. தாய், தந்தை, ஆசிரியர்கள் வழிநடத்தும் தமிழ்நாடு பிற நாடு அமைதியை குலைக்கவில்லை.

  எது பேச்சு மற்றும் எழுத்து சுதந்திரம்? மத நம்பிக்கைகளை புண்படுத்துவதா? தீவிரவாதம் தவறு என்பதில் மறு பேச்சில்லை. அதைவிட கொடியது எழுத்தின் மூலம் தீவிரவாதம் பரப்புதல். தீவிரவாதத்தை விட கொடியது பாரீஸில் நடைபெற்ற மாபெரும் பேரணியில் வெளிப்பட்ட அப்பட்டமான இனவாதம். இதை நீங்கள் கவனித்தீர்களா?

  பேச்சு மற்றும் எழுத்து சுதந்திரத்துக்கு ஆதரவளிக்கும் பத்தரிக்கைகள் பல, தங்கள் மேல் எழும் விமர்சங்களை தாங்கும் சக்தி இல்லாதவைகளாக இருக்கின்றன. தங்கள் பத்திரிக்கையை விமர்சனம் செய்பவர்களை தடை செய்கின்றன. விமர்சனகளை வெளியிடுவதும் இல்லை. இவர்கள் பேச்சு சுதந்திரத்தைப் பற்றி பேசினால் எப்படி?

  இவ்வளவு பேசும் நீங்களோ, பிற பத்திரிக்கைகளோ, ரஜினி பற்றி எழுதியதால் முகநூல் பக்கம் முடக்கப்பட்ட எழுத்தாளரின் மனக்குமுறல்களை ஏன் பெரிதாக எடுத்துச் செல்லவில்லை? அவ்வாறு எடுத்துச் சென்றால் பததிரிக்கைத் தொழில் பாதிக்கும் என்பதாலா?

  எழுத்தாளர்களுக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் செலெக்டிவ் அம்னீசியாவா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. above statements are not related with the subject. It is deviated from that content as per my knowledge.

   நீக்கு
  2. முதலில் எங்கள் மனப்பாங்குகளில் தான் மாற்றம் வேண்டும் என்பதை மேலுள்ள கருத்து சொல்கிறது! உலகில் பால் போலவே நஞ்சும் தான் கிடக்கிறது. இயற்கை இரண்டையும் தான் கொண்டிருக்கிறது. நாம் உண்ணக்கூடியவற்றை தானே உண்கிறோம்! ஏனய்யா மனிதர்களை மட்டும் உங்களை போலவெ இருக்கவேண்டும் சிந்திக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்! எதை கண்டாலும் தங்களோடு இணைத்துப்பார்த்து தாங்களே மனம் நொந்து கொதிக்கும் முட்டாள் தனம் மாறவேண்டும்! பிறர் உங்களை பற்றி சொல்வதெல்லாம் உணமையாகி விடுமா? எம் சிந்தனைகள் மாற வேண்டும்!
   ஆம் நம் நாடு யாரையும் புண்படுத்தவில்லை. காரணம் எல்லா புண்படுத்தல்களையும் தனக்குள்ளேயே செய்து கொண்டிருக்கிறது. நமக்குள்ளே குத்து வெட்டுக்கே நமக்கு நேரம் போதவில்லை. இதற்குள்.... சிரிப்பு மூட்டாதீர்கள் சார்! ஒரு சாதிக்காரனோ இன்னொரு மதத்தவன் பேசினாலோ எம்மால் பொறுத்துக்கொள்ள முடியாதப்போ இதை தான் எதிர்பார்க்க முடியும்.
   இப்படிப்பட்ட மனப்பாங்குகளை வைத்துக்கொண்டிருந்தால் அரசியல் வாதியை தலைமேல் கொண்டாடுவதற்கும் நடிகன் கட் அவுட்டுக்கு பால் ஊற்றவும் தீக்குளிக்கவும் தான் முடியும்! சினிமா ஒரு ஊடகம், மாயை அதுவே நம்மக்களுக்கு இன்னும் புரியவில்லை!
   உலகில் இவ்வளவு பிரச்சனை இருக்கிறது, ரஜனியாம் ரஜனி!!
   இனவாதம் பேசுகிறார்கள் என்று கூப்பாடு போடாதீர்கள்! அவர்களது நகர்வுகளை அவதானித்து உங்களை காத்துக்கொள்ள முயலுங்கள்! அது எந்த மக்களாக இருந்தாலும்!

   நீக்கு
  3. What is the different between jews and christen, muslim, and also dravidanisam. All are like pusari. Like moses so and so

   நீக்கு
 2. good to know about France's respect on writings and writers. But above statements are not related with the subject. It is deviated from that content as per my knowledge.

  பதிலளிநீக்கு
 3. ஒரு மார்க்கத்தின் துாதரை இழிவு படுத்தி கார்ட்டூன் வரைவதுதான் கருத்து சுதந்திரமா சமஸ்??? எங்கே சொல்கிறது உங்களின் ஊடக தர்மம்? அது இருக்கட்டும். கடைசியாக காஸா மீது மேற்கொள்ளப்பட்ட இஸ்ரேலிய பயங்கரவாதிகள் சுமார் 17 இற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களை கொலைசெய்தார்கள். அதற்கு உறுதுணையாக இருந்த கொலைகார அரசின் பிரதமர் நெதன்யாகுவும் பயங்கரவாதத்திற்கு எதிரான பேரணியில் கலந்துகொண்டாராம். இது பற்றியெல்லாம் மக்கள் உணர்ச்சிகளை துாண்டமாட்டீர்களா சமஸ் ஐயா?

  பதிலளிநீக்கு