சமகால வரலாற்றுக் களஞ்சியம் - எஸ். வி. ராஜதுரை

சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்பது ஒரு கலை. எல்லோருக்கும் கை கூடாதது. சமூகத்துக்குத் தேவையான செய்திகளை, ஆழமான பார்வையுடன், இதழியல் உலகம் விதித்திருக்கும் வரம்புகளைக் கருத்தில் கொண்டும், சாதாரண வாசகர்களுக்கும்கூட புரியும் வகையிலும் எழுதுவது அவ்வளவு எளிதானது அல்ல. சமஸ் இந்தக் கலையில் தேர்ச்சி பெற்றவர்.
தமிழக அரசியல், ஈழப் பிரச்சினை, சாதியம், ஜனநாயகம், சுதந்திரம், வேளாண்மை, பொருளாதாரம், சுற்றுச்சூழல், ஊடக நெறிகள், மருத்துவம், பாலினம், பாலியல் என வீச்சும் விரிவுமிக்க களங்களில் இறங்கி அவர் எழுதியுள்ள கட்டுரைகளைப் படிக்கையில், ஒரு சமகால வரலாற்றுக் களஞ்சியத்தைப் படிக்கும் உணர்வு உருவாகிறது. இன்னும் ஐம்பது, நூறாண்டுகளுக்குப் பிறகு தமிழக, இந்திய அரசியல், பொருளாதார, பண்பாட்டு வரலாற்றை எழுதப் போகிறவர்களுக்கு முக்கியத் தரவுகளைக் கொண்டிருக்கின்றன இந்தக் கட்டுரைகள்.



இந்தத் தொகுப்பில், மிக முக்கியமானவை என்று எனக்குப் படுகின்றவை சமஸுடைய சூழலியல் கட்டுரைகள். மானுட குலத்தின் ஆதாரமாக உள்ள இயற்கையைப் பயன்படுத்திக்கொள்ளும் அதேவேளை, ஒவ்வொரு தலைமுறையும் அதை மேலும் வளமாக்கி அடுத்த தலைமுறைக்குக் கையளிக்க வேண்டும் என்று ‘மூலதனம்’ மூன்றாம் பாகத்தில் கூறுகிறார் மார்க்ஸ். ஆனால், இயற்கையைச் சூறையாடுவதில், அதை ‘பலாத்காரம்’ செய்வதில் நம் நாட்டிலுள்ள அனைத்து நாடாளுமன்ற அரசியல் கட்சிகளுமே பங்கேற்றுள்ளன. இதை நான் ‘சூழலியல் பாஸிஸம்’ ஆகப் பார்க்கிறேன்.

சூழலியல் தொடர்பான சமஸின் கட்டுரைகளில் மிகச் சிறப்பானவை ‘மன்னார்குடி ஏன் இப்படி ஆனது?’, ‘சேது: அபாயத்தின் மறுபக்கம்’ கட்டுரைகள். தமிழக நகரங்கள், கிராமங்கள், பொது வெளிகள் ஆகியன குப்பைத் தொட்டிகளாக மாற்றப்பட்டுள்ளன என்பதற்கு மன்னார்குடி ஓர் உருவகமாக விளங்குகிறது. சேதுத் திட்டம் சூழலியலுக்கு, கடல் சார் உயிரினங்களுக்கு, மீனவர்களின் வாழ்வாதரத்துக்குப் பெருங்கேடு விளைவிக்கும் என்று கருதுபவர்களில் நானும் ஒருவன். நாடாளுமன்ற இடதுசாரிகள்கூட இந்தத் திட்டத்தை இன்னும் வரவேற்றுக்கொண்டிருப்பதும், மதவாதக் காரணங்களின் அடிப்படையில் மட்டுமே அதை சங்கப் பரிவாரமும் ஜெயலலிதாவும் எதிர்த்துவந்ததும் வரலாற்று முரண்.
எனினும், ‘ராமர் பாலத்’துக்கு ஊறு விளைவிக்கக் கூடாது என்று அந்தத் திட்டத்தை எதிர்த்த பாஜக, தற்போது அந்தத் திட்டத்தை நிறைவேற்ற முனைப்பு காட்டுவது ஏன்? இந்திய அரசின் நீண்ட கால புவிசார் அரசியல், ராணுவ நோக்கங்களுக்காகத்தான். சேதுத் திட்டத்தைப் பரிந்துரைத்த அறிஞர்களின் பட்டியல் சமஸின் கட்டுரையில் தரப்பட்டுள்ளது. நான் மேலும் இருவர் பெயர்களைச் சேர்க்க விரும்புகிறேன். இந்தியாவின் புவிசார் அரசியல், ராணுவ நலன்களின் பொருட்டு கடல் பகுதிகளில் இந்தியா கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்திவந்தவர் கே.எம்.பணிக்கர் ('The Strategic Problems of the Indian Ocean' and 'India and Indian Ocean'- published in 1944-1945). அதன் பிறகு, இந்த விஷயத்துக்கு அழுத்தம் கொடுத்துவந்தவர் கே.பி. வைத்யா ('The Naval Defence of India').

இதுவரை சமஸும் நானும் நேரில் சந்தித்தது இல்லை. தொலைபேசித் தொடர்பு மட்டுமே உண்டு. கடந்த 3 ஆண்டுகளில் அவரது வற்புறுத்தலுக்கு இணங்கி 3 முறை எனது கருத்துகளை அவர் பணிபுரிந்த/ புரிகின்ற வெகுஜன அச்சு ஊடகங்களில் பதிவுசெய்திருக்கிறேன். தன் மனசாட்சியைத் தவிர வேறு எதையும், எவரையும் திருப்திப்படுத்த எழுதக் கூடியவர் அல்ல என்னும் எண்ணமே அவருடன் உரையாடிய சந்தர்ப்பங்களில் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. அவருக்கு அரசியல், கருத்துநிலைப் பின்னணிகள் ஏதேனும் உண்டா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், சமஸின் கட்டுரைகளும் அக்கறைகளும் - அவற்றில் ஆங்காங்கே மார்க்ஸியச் சாயல் இருந்தாலும் - அமர்த்யா சென்னைப் படிப்பதைப் போன்ற உணர்வைத் தருகின்றன. காந்தியும் நேருவும் அவர் மீது பெரும் தாக்கத்தை உருவாக்கியுள்ளது தெரிகிறது. அச்சம் தரக் கூடிய அதிதீவிர வலதுசாரி திசையில் இந்திய அரசியல், பொருளாதாரம், பண்பாடு ஆகியன இழுத்துச் செல்லப்படும் இந்தக் காலத்தில், இந்தக் கண்ணோட்டத்திற்கும் ஓர் ஆக்கப்பூர்வான பாத்திரம் இருக்கிறது.

இந்தக் கட்டுரைத் தொகுப்பு வெளிவந்ததும் பல்வேறு நோக்குநிலைகளிலிருந்து அதற்கு எதிர்வினைகள் வரக்கூடும். எனினும், இந்தக் கட்டுரைகளில் உள்ளடங்கியுள்ள தரவுகளின் நம்பகத்தன்மையை யாரும் கேள்விக்குட்படுத்த முடியாது!

புத்தகத்தை வாங்க, தொடர்புக்கு:
thuliveliyeedu@gmail.com
samasbooks@gmail.com
9444204501

1 கருத்து:

  1. அன்புடையீர், வணக்கம்.

    தங்களின் வலைத்தளம் இன்று வலைச்சரத்தில் என்னால் அடையாளம் காட்டி சிறப்பிக்கப்பட்டுள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது வருகை தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


    இணைப்பு:- http://blogintamil.blogspot.in/2015/01/blog-post_29.html

    பதிலளிநீக்கு