அமைப்புகளை நோக்கி அதிகம் பேசும் குரல்: அ.ராமசாமி

காலைத் தினசரிகளில் நான் காலையில்முதலில் வாசிப்பன செய்திகள். அடுத்து நீண்ட செய்திகள். நேரமிருந்தால் செய்திக் கட்டுரைகள். பலரும் பங்கேற்ற நிகழ்வுகள் பற்றிய செய்திகள் இருந்தால்அன்றைய காலை வாசிப்பில் செய்திக் கட்டுரைகள் ஒதுக்கி வைக்கப்பட்டு மாலைக்குரியதாக மாறிவிடும். பல்கலைக்கழகம் போய்விட்டு வந்து மாலையில் படிப்பேன்.
மாலையில் படிக்கலாம் என வைத்துவிட்டுப்போன பல செய்திக் கட்டுரைகள் படிக்கப்படாமலே நின்றுபோய்விடுவதுமுண்டு. படிக்கப்படாமல் போய்விடுவதற்கு எனது நேரமின்மை மட்டுமே காரணமாகிவிடாது. செய்திக் கட்டுரையை எழுதியவரின் ஈர்ப்பும் ஒரு காரணம். சமஸின் ‘யாருடைய எலிகள் நாம்?’ தொகுப்பில் இருக்கும் பல கட்டுரைகள் எனது மாலை நேர வாசிப்பில் வாசித்தவை என்பது திரும்பவும் படிக்கும்போது தோன்றுகின்றது.

ஒரு செய்திக்கட்டுரையாளனும் பத்தி எழுத்தாளனும் நிகழ்வுகளுக்காகக் காத்துக் கொண்டிருப்பவர்கள். நிகழ்ச்சி முடிந்ததைத் தகவலாகக் கருதி எழுதிக்காட்டும் வேலையைச் செய்தால் செய்தியாளனாக இருக்கிறான். நிகழ்ந்து முடிந்துவிட்டபின் காரணகாரியங்களைத் தேடிச் சொல்வதை வேலையாக்கிக்கொள்ளும்போது அவன் செய்திக் கட்டுரையாளனாக ஆகி விடுகிறான். இதழியல் துறையில் இருப்பவர்களுக்குச் செய்தியாளனாக இருப்பதிலிருந்து செய்திக் கட்டுரையாளனாக ஆவது என்பது ஒரு பணி மேம்பாடு. பணி மேம்பாடு என்றவுடன் கூடுதல் சம்பளம் என்பதாகக்கொள்ள வேண்டியதில்லை. அவன் தனது துறையில் தனது அடையாளத்தை வெளிக்காட்டவும், நிலை நிறுத்தவுமான வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டவன் என்ற தகுதியை அடைகிறான். தங்களைத் தகுதிக்குரியவர்களாக்கிக்கொள்ளும் வாய்ப்பை நோக்கி நிற்கும் இதழாளர்களால் நிரம்பி வழியவில்லை நமது பத்திரிகை உலகம். பெரும்பாலான பத்திரிகைகள் - தினசரி, வார இதழ்களின் தேவை செய்தியாளர்கள் மட்டுமே; செய்திக் கட்டுரையாளர்கள் அல்ல.

சமஸ் - இந்தப் புத்தகத்தின் வாயிலாக அறிமுகமான பெயரல்ல. நான் வாசித்த தினசரிகளின் வாயிலாக அறிமுகமான பெயர். அவர் எழுதிய கட்டுரைகளை அவை அச்சில் வந்த காலங்களிலேயே வாசித்திருக்கிறேன். அப்படி வாசித்தபோதெல்லாம் ஒரு செய்திக் கட்டுரையாளர் என்ற அடையாளத்தோடு நின்று போயிருந்தார். இப்போது அவற்றை ஒரே புத்தகமாக வாசிக்கும்போது அந்த அடையாளத்திலிருந்து இன்னும் மேலேயொரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் என்பதை உணர்கிறேன். அதற்கான காரணங்கள் அவர் பின்பற்ற நினைக்கும் இதழியல் நெறிகள் சார்ந்தவைகளாக இருக்கின்றன என்பது அவர் மீது கூடுதலான ஈர்ப்பை உண்டாக்குகின்றன. ஏனென்றால் நிகழ்கால ஊடக உலகம் அவற்றிற்கான நெறிகளைத் தொலைத்த உலகமாக இருக்கிறது. அப்படிச் சொல்வதுகூடச் சரியில்லை; நெறிகளை உருவாக்கிக்கொள்ளாத உலகமாக இருக்கிறது என்று சொல்வதே சரியானது.


இதழியல் நெறிகளோடு சமஸிடம் நிகழ்கால அரசியல் பார்வை ஒன்று இருக்கிறது. வாக்களிக்கும் கட்சிக்கும் வணங்கும் தலைமைக்கும் அதன் கொள்கைக்கும் வக்காலத்து வாங்கும் அரசியல் பார்வை அல்ல அது. இந்தத் தேசத்து மக்களுக்கு எத்தகைய அரசும், நிர்வாகமும் அதனால் வழிநடத்தப்படும் நிறுவனங்களும் தேவை எனப் பேசும்அரசியல். அந்தப் பார்வையிலிருந்தே சமஸ் தனது கட்டுரைகளுக்கான பெருநிகழ்வுகளையும் நுண்நிகழ்வுகளையும் தேர்வு செய்து செய்திக் கட்டுரையாக்கித் தருகிறார். அதனைத் தொகுப்பாக வாசிக்கும்போது சரியாகவே உணர முடிகிறது.

தமிழ் இதழியலாளர்கள் பலரும் கவனிக்காமல் விடும் அல்லது கவனித்தாலும் எழுதிக்காட்டாமல் தவிர்த்துவிடும் முக்கியமான ஒன்றைச் சமஸ் துணிச்சலோடு எழுதிக்காட்டுகிறார். வெளியே தெரியும் அரசியல் நிகழ்வுகளின் பின்னால் நிகழும் ஆலோசனைகளின் கீற்றுகளையும், அதனைத் தீர்மானிக்கும் இடத்தில் இந்திய சாதியமைப்பின் குரூர நோக்கங்களும் தொடர்ந்து பிடிமானம் கொண்டுள்ளன என்ற புரிதலோடு - தன்னுணர்வோடு எழுதிக் காட்டுகிறார். அப்படி எழுதும்போது அமைப்புகளை நோக்கியே அதிகம் பேசுகிறார். இந்த ஆலோசனைகளும் (சதி ஆலோசனைகள் என்று கூடச்சொல்லலாம்) அவற்றில் ஈடுபடும் அறிவுசார்ந்த உயர்சாதிக் குழுமங்களுமே இந்த அமைப்புகளைச் சீரழிக்கின்றன என்ற குற்றச்சாட்டைத் தைரியமாக வைத்துள்ளார். சுதந்திரம், ஜனநாயகம்,பொருளாதாரம், சர்வதேசம் என்ற தலைப்புகளில் பிரிக்கப்பட்டுத் தொகுக்கப்பட்டுள்ள கட்டுரைகளில் இந்தப் பார்வை துலக்கமாகத் தெரிகின்றது.

பேரரசியல் சார்ந்து அமைப்புகளை நோக்கிப்பேசும் இந்தப் பார்வை எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் சிறு நிகழ்வுகள் சார்ந்து பொதுப்புத்தியின் மனச் சாட்சியோடு பேசுதல் என்ற தன்னுணர்வும் சமஸிடம் வெளிப்படுகிறது.கல்வி, கலை, சூழலியல், வாழ்க்கை என்ற தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ள கட்டுரைகளில் தொடர்ந்து பொதுப்புத்தியின் மந்தைத் தனத்தைக் கீறிப்பார்த்து ரத்தம் வர வைக்கிறார்.

பேரரசியலை இயக்கும் ஆலோசனைகளுக்குள் இருக்கும் பொதுப்புத்தியையும் பொதுப் புத்தியால் தீர்மானிக்கப்படும் திட்டமிடலையும் பேசக்கூடிய விரிவான கட்டுரைகளை எழுதும் தளத்திற்குள் எங்காவது நுழைகின்றாரா எனத் தேடிப் பார்த்தேன். அந்த வாய்ப்பு அவர் இயங்கிய பத்திரிகைகளில் இல்லை என்று சமாதானம் சொல்லிக்கொள்ளலாம் என்றாலும், அதை நோக்கி நகர்வதில் தான் அவரது அடுத்த மேம்பாடு இருக்கிறது. நம்முடைய மேம்பாடுகள் தான் நாம் சமூகத்தின் மேம்பாட்டிற்கான பங்களிப்பை உருவாக்கும். அதை நோக்கிய எழுத்துகளை சமஸ் எழுதிவிடுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

யாருடைய எலிகள் நாம்?,  துளிவெளியீடு, விலை ரூ. 300.
தொடர்புக்கு: 94442 04501

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக