சற்று ஆறுதலாக இருக்கிறது. மறைமலையடிகள் பாலத்தைக் கடக்கும்போதெல்லாம் மக்கள் ஆர்வமாகப் பார்த்துச் சொல்கிறார்கள்: “அடையாத்துல எவ்ளோ தண்ணீ!”
சென்னையில் மூன்று ஆறுகள் ஓடுகின்றன. அடையாறு, கூவமாறு, கொசஸ்தலையாறு. ஏராளமான கால்வாய்கள் குறுக்கிலும் நெடுக்கிலும் வெட்டுகின்றன. ஆனால், சென்னைவாசிகளுக்கு சாலையில் எந்த நீர்நிலை குறுக் கிட்டாலும் அதற்கு ஒரே பெயர்தான். கூவம். அதுவும் ஆற்றின் பெயராக விளிக்கப்படுவது இல்லை. சாக்கடைக்கான மறுபெயர்.
ஆறு அமைதியாக ஓடும்போது ஆறாக அதை நாம் பார்ப்பதில்லை. அது தன் இயல்பைக் கொஞ்சம் ஆவே சமாக வெளிப்படுத்தும்போது அதன் பெயரைச் சரியாக உச்சரிக்கிறோம்: ஆறு.
பத்து நாட்கள் கழித்தும் சென்னை வெள்ளத்துக்கான அடிப்படைக் காரணம் தொடர்பான விவாதங்கள் முடிந்த பாடில்லை. செம்பரம்பாக்கம் ஏரியில் நொடிக்கு 30,000 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டதைப் பற்றியும் ஆற்றங்கரையோரத்தில் உள்ள குடியிருப்புகளைச் சுட்டியுமே பெரும்பாலான விவாதங்கள் போகின்றன. மனித நாகரிகத்தின் வளர்ச்சியே நதிக்கரையை ஒட்டி அமைந்ததுதான். ஆற்றங்கரையோரத்தில் வீடுகள் இருப் பதைப் பிரச்சினை என்று கூறுவது, கடற்கரையோரத்தில் கடலோடிகளுக்குப் பாதுகாப்பு இல்லை என்று பேசுவதற்குச் சமமானது. நீர் எங்கேயோ பிழைப்பு அங்கே, வாழ்வும் அங்கே.
அகண்ட காவிரி முக்கொம்புக்கு வரும்போது கடல்போலக் காட்சி தரும். சர்வ சாதாரணமாக ஆற்றில் நொடிக்கு 4 லட்சம் கன அடிகள் போகும். இருபுறங்களிலும் குடியிருப்புகள் உண்டு. மன்னார்குடியில் காவிரியின் கிளைநதியான பாமணியாற்றங்கரையில் வரிசையாக வீடுகள் அமைந்த தெரு சஞ்சீவிராயன்கோயில் தெரு. வீடுகளின் கொல்லைப்புற வாசலைக் கடந்து பத்தடி எடுத்துவைத்தால், ஆறு. எவ்வளவு வெள்ளம் போனாலும் கொல்லை வாசலை நீர் தொட்டதில்லை. பிரச்சினை ஆற்றை ஒட்டி வாழ்தலில் அல்ல. ஆற்றில் ஓடும் தண்ணீரின் அளவிலும் அல்ல. ஆறு ஆறாக இருக்கிறதா என்பதில் இருக்கிறது; நீளம், அகலம், ஆழம் எல்லாவற்றிலும். குறிப்பாக, கரைகள் எப்படி இருக்கின்றன என்பதில் இருக்கிறது.
மழை நாட்களில் காவிரிக் கரையோரக் கிராமங்களைக் கதிகலங்க வைக்கும் சொல் கரையுடைப்பு. ஆறு தூர்வாரப்பட்டு, இரு மருங்கிலும் குவிக்கப்படும் மண்தான் கரை. இது பிற்காலத்தில் உருவான முறை என்று சொல்வார் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார். “அந்தக் காலத்துல ஆறு-குளங்களைத் தோண்டினா மண்ணை எடுத்து ஊருக்குள்ள போடுவாங்க. ஊருங்கிறதே அப்படிதான் உருவானுச்சு. ஒருகட்டத்துக்கு மேல ஊருக்குள்ள மண்ணு போடுற பழக்கம் போயி கரையை ஒட்டியே குவிக்குற பழக்கமாயிடுச்சு” என்பார். இப்படி உருவான மேடு-பள்ளம்தான் புதிய வார்த்தைகளை உருவாக்கின என்பார் பேராசிரியர் தங்க.ஜெயராமன். “ஊரில் மேடாகப்பட்ட பகுதியில் மேட்டுக்குடிகள் வசிக்கும் இடம் நத்தம். மேடாக்கப்படாத இடம், இன்னும் சொல்லப்போனால், ஒருபுறம் மேடாக்கப்பட்டதால், மறுபுறம் பள்ளமாகும் பகுதி பள்ளக்கால்; ஊரில் இடம் கிடைக்காத, சாதி/பொருளாதாரரீதியாக ஒடுக்கப்பட்டவர்களுக்கான வசிப்பிடமாக அது மாறிவிட்டது” என்பார் ஜெயராமன்.
வெள்ளம் பொங்கும்போது இயல்பாகவே பள்ளத்தை யொட்டிய கரையில் அழுத்தம் அதிகம் இருக்கும். போதாக் குறைக்கு, இந்தப் பக்கமுள்ளவர்கள் எங்கே தம் பக்கக் கரை உடைத்துவிடுமோ என்ற அச்சத்தில், அந்தப் பக்கக் கரையைத் தட்டிவிடும்போது அங்கே கரையுடைப்பு நடக்கும். இயற்கையாகவோ, செயற்கையாகவோ இப்படிக் கரை உடைத்துக்கொள்ளாமல் இருக்க, ராக்கண் விழித்து கண் காணிப்பதும் ஆயிரக் கணக்கில் மண் மூட்டைகள் தயாரித்து கரையைப் பலப்படுத்துவதும் கிராமங்களில் இன்றைக்கும் நடைமுறையில் உள்ள வழக்கங்களில் ஒன்று. ஆக, ஆதிக் கரைகளும் இன்றைய கரைகளும் ஒன்றல்ல. கிராமத்துக் கரைகளும், நகரத்துக் கரைகளும் ஒன்றல்ல. பொதுவாக, இன்றைய காலகட்டத்துக்கு, விவசாயம் இல்லாத பகுதிகளில் ஆற்றின் இருமருங்கிலும் வலுவான கான்கிரீட் சுவர்களை அமைத்து, வருஷா வருஷம் தூர்வாரி, அகழும் மண்ணை கான்கிரீட் கரைகளுக்கு அப்பால் போடுவதே உத்தமமான வழி.
சென்னை வெள்ளம் தொடர்பான விவாதங்களில் ஒரு முக்கியமான விஷயம் விடுபடுவதாகத் தோன்றுகிறது. சென்னையில் ஆறுகளுக்குக் கரைகளே கிடையாது பல இடங்களில். அடையாற்றங்கரையோரத்தில் பல இடங்களில் கரையும் தரையும் ஒன்று. காவிரியில் வெள்ள நாட்களில் பொதுப்பணித் துறை லஸ்கர்கள் லட்சக் கணக்கில் மண் மூட்டைகளைத் தயாரித்து கரைகளை வலுப்படுத்துவது இன்றைக்கும் வழக்கத்தில் இருக்கிறது. அடையாற்றில் வெள்ளத்தின்போது அப்படியான செயல்பாடுகளையெல்லாம் ஒரு இடத்தில்கூடக் காணோமே ஏன்? அடிப்படை ஒன்றுதான். அரசே சென்னையின் ஆறுகளை ஆறுகளாக மதிப்பதில்லை.
சுமார் 70 லட்சம் மக்கள்தொகையைக் கொண்ட சென்னையில் இதுவரை 5.87 லட்சம் குடியிருப்புகளுக்கே கழிவுநீர் வெளியேற்ற வசதி செய்து தரப்பட்டிருக்கிறது. இன்னும் 15% குடியிருப்புகளுக்கு, கிட்டத்தட்ட ஒரு லட்சம் குடியிருப்புகளுக்குக் கழிவுநீர் வெளியேற்றக் கட்டமைப்பு உருவாக்கப்படவில்லை என்பதை அரசே ஒப்புக்கொண்டிருக்கிறது. அப்படியென்றால், ஒவ்வொரு நாளும் இந்த ஒரு லட்சம் குடியிருப்புகளின் கழிவுநீரும் எங்கே போகிறது? சென்னை ஆறுகளில்!
சென்னையின் நீர்வழித்தடங்களில் 250-க்கும் மேற்பட்ட இடங்களில் கழிவுநீர், ஆறுகளில் திறந்துவிடப்படுவதை அரசே அனுமதிக்கிறது. சென்னையின் நீர்வழித்தடங்களில் கூவமாற்றில் 105 இடங்களிலும் பக்கிங்ஹாம் கால்வாயில் 183 இடங்களிலும் அடையாற்றில் 49 இடங்களிலும் கழிவுநீர் கலப்பதை அரசே ஒப்புக்கொண்டிருக்கிறது. இதை அயோக்கியத்தனம் என்று எழுதினால் அந்த வார்த்தை வெட்கப்படும். ஆனால், இது குறித்த குற்றவுணர்வு ஏதும் இல்லாத அதிகார வர்க்கம்தான் மழையின் மீதும், வெள்ளம் மீதும், ஆற்றின் மீதும் பழியைப்போட்டு விவாதம் செய்கிறது. எந்தத் துணிச்சலில் அவர்கள் பேசுகிறார்கள்? மக்களுக்கு எதுவும் தெரியாது; கேள்வி கேட்க ஆள் கிடையாது என்பதே அந்தத் துணிச்சல். ஒரு பொறுப்புணர்வுள்ள குடிமகராகக் கேள்வி கேட்கும் முன், நம் பக்கம் உள்ள ஒரு பெருந்தவறை நாம் திருத்திக்கொள்ள வேண்டும் என்பேன்.
சென்னையில், ஒரு நாளைக்கு 65 கோடி லிட்டர் கழிவுநீர் உற்பத்தி ஆகிறது. தண்ணீர்ப் பஞ்சம் நிலவும் ஊரில் இவ்வளவு நீர் பயன்படுத்தப்படுவதும் வெளியேற்றப்படுவதும் அநியாயம்.கழிவுநீர்க் குழாயில் கழிவுநீரோடு திடப்பொருட்களையும் சேர்த்து வெளியேற்றுவது அதைவிடவும் அக்கிரமம். சுமார் 3,650 கிமீ நீளத்துக்குச் சென்னையில் கழிவுநீர்க் குழாய்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், ஒவ்வொரு நாளும் அவை அடைப்பைச் சந்திக்கின்றன. மல-ஜலம் நீங்கலாகக் கழிவுநீரில் ஒரு சோற்றுப் பருக்கைகூடச் செல்லக் கூடாது. ஏனென்றால், ஒரு வீட்டிலிருந்து ஒரு பருக்கை எனக் கொண்டாலும் 7 லட்சம் குடியிருப்புகளிலிருந்து 7 லட்சம் பருக்கைகள் இந்தக் கழிவுநீர் குழாய்களில் வந்து சேரும். அனுதினமும் நாம் எவற்றை யெல்லாம் கொட்டிக்கொண்டிருக்கிறோம் என்பது நமக்குத் தெரியும். எல்லாம் ஆறுகளை நோக்கியே செல்கின்றன.
சென்னையில் வெள்ளத்தின் வேகம் கொஞ்சம் மட்டுப்பட்ட மறுநாள் அடையாற்றில் ஒரு பிடி நீரை அள்ளிப்பார்த்தேன். காவிரிக்கும் அடையாற்றுக்கும் பெரிய வித்தியாசங்கள் தெரியவில்லை. ஒருவாரம் கழித்து இப்போது பார்க்கும்போது தண்ணீர் மீண்டும் கருப்பாக ஆரம்பித்திருக்கிறது. வாழவைக்கும் ஊர் இதற்கு மேலும் நாசமாக விடக்கூடாது. மாற்றத்தை நம்முடைய சமையலறைக்கும் கொண்டுவர வேண்டும். முதலில் நம் வீட்டுக் குழாய்களைக் கட்டுப்பாட்டில் கொண்டுவருவோம். அடுத்து, ரிப்பன் மாளிகையை நோக்கிப் புறப்படுவோம்!
டிச.2015, ‘தி இந்து’
மாற்றம் என்பது தனிமனிதனிடமே இருந்தே தொடங்க வேண்டும்............
பதிலளிநீக்குஅருமையான பதிவு.......
தோழர்.சமஸ் உங்களது இந்தக் கட்டுரையில் நீங்கள் முன்வைக்கும் கருத்துகளில் நான் பெரிதளவில் முரண்படவில்லை ஆனால் மாற்றங்கள் கீழிருந்து மேலாக சாத்தியமில்லை! அதிகார மையங்கள் தங்களது தவறுகளையும், அலட்சியபோக்கையும் திருத்திக் கொள்ளும் போதே தனிமனித பொறுப்புணர்வு சாத்தியப்படும். இங்கு முதல் அடியை ஆட்சி அதிகாரங்களில் இருப்பவரே முன்னெடுக்க வேண்டும்!!! உங்களைப் போன்றவர்களின் கருத்தாக்கங்களும் அதையே மையப்படுத்தி இருந்தால் நன்றாக இருக்கும்.
பதிலளிநீக்குதோழர்.சமஸ் உங்களது இந்தக் கட்டுரையில் நீங்கள் முன்வைக்கும் கருத்துகளில் நான் பெரிதளவில் முரண்படவில்லை ஆனால் மாற்றங்கள் கீழிருந்து மேலாக சாத்தியமில்லை! அதிகார மையங்கள் தங்களது தவறுகளையும், அலட்சியபோக்கையும் திருத்திக் கொள்ளும் போதே தனிமனித பொறுப்புணர்வு சாத்தியப்படும். இங்கு முதல் அடியை ஆட்சி அதிகாரங்களில் இருப்பவரே முன்னெடுக்க வேண்டும்!!! உங்களைப் போன்றவர்களின் கருத்தாக்கங்களும் அதையே மையப்படுத்தி இருந்தால் நன்றாக இருக்கும்.
பதிலளிநீக்குசிறப்பான கட்டுரை. ஆனால் எங்கிருந்து தொடங்குவது என்பதில் தான் நான் மாறுபடுகிறேன். "மேலிருந்து தொடங்குவது" என்ற லெனினின் கூற்றே சரியாக இருக்கும்.
பதிலளிநீக்குஇன்றைய சூழலில் மிக முக்கியமான கட்டுரை.
பதிலளிநீக்குமாற்றம் இரு புறங்களில் இருந்தும் ஒரே சமயம் நடக்க வேண்டும், அப்போது தான் பலன் கிடைக்கும்.
பொறுப்புள்ள கடமையுடன் கேள்வி கேட்கும் உங்கள் எழுத்து வசீகரிக்கிறது.
பதிலளிநீக்குதொடர்ந்து எழுதுங்கள், ஊமைகளுக்கு உரைக்கட்டும், கடமையில் தவறும் அரசு இயந்திரம் முடங்காது மீண்டு எழட்டும், கடமையினை உணர்ந்து பணியாற்றட்டும்.