நமக்குள் ஒரு தலைவன்!


தேசிய ஊடகங்கள் பெரும்பாலனவை சென்னை வெள்ளத்தை ஒரு பொருட்டாகக் கருதவில்லை. மும்பையில் ஒரு பெண் தொழிலதிபர், தன் மகளை எப்படிக் கொன்றார் எனும் கதையைக் கிளுகிளுப்பான பின்னணியில் ஒரு மாதத்துக்கும் மேல் பக்கம் பக்கமாக எழுதியவர்கள். இன்றைக்கு வரை 400-க்கும் மேற்பட்டோர் உயிரை வாங்கியிருக்கும் தமிழக வெள்ளச் செய்தியை உள்பக்கங்களில் ஒரு மூலையில் அடக்கியிருக்கிறார்கள். ஆனால், ஆச்சரியம் அடைய ஏதுமில்லை. காலங்காலமாக நம்முடைய ‘தேசிய ஊடகங்கள்’ காலனியாதிக்க, நிலப்பிரபுத்துவ, சாதி-மத-மொழி-இன துவேஷ மனோநிலையில்தான் செயல்பட்டுவருகின்றன.

பாரிஸ் பயங்கரவாதத் தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டபோது, ஒரு வாரம் முழுக்க அதைப் பக்கங்களில் நிரப்பியவர்கள், அதற்கு ஏழு மாதங்கள் முன் கென்யாவின் காரிஸா பல்கலைக்கழகத்தில் 148 பேர் பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டபோது என்ன செய்தார்கள்? ஒரு இந்திய மாணவனுக்கு 12,000 கி.மீ. தொலைவில் இருக்கும் அமெரிக்க அதிபரின் மனைவி பெயர் தெரியும். ஆனால், நம் முடைய எல்லையைத் தொட்டுக்கொண்டிருக்கும் சீன/வங்கதேசப் பிரதமரின் பெயர் தெரியாது. காரணம் என்ன?

உலகின் பெருந்தொகை மக்களைக் கொண்ட ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளில் நடக்கும் எந்த ஒரு பெருஞ்செய்தியும் ஐரோப்பாவின் குட்டி நாடுகளில் ஒன்றான பிரிட்டனின் குட்டிச் செய்திகளின் முன் தோற்றுப்போகும். ஏன்? பாலஸ் தீனம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடந்த காலகட்டத்தில் தானே இலங்கையில் இறுதிப் போர் அவலங்கள் உச்சம் நோக்கி நகர்ந்தன. ஏன் இலங்கை உள்நாட்டுப் போர் கொடூரங்கள் பெரும் செய்திகள் ஆகவில்லை?

நினைவில் கொள்ளுங்கள், காலங்காலமாக நம்முடைய ‘தேசிய ஊடகங்கள்’ இந்தி பேசா மாநிலங்கள் மீது திணிக்கும் வஞ்சனையை நம்மைவிட மோசமாக காஷ்மீரும் வடகிழக்கு மாநிலங்களும் எதிர்கொள்கின்றன. டெல்லியில் ஒரு வாரம் உண்ணாவிரதம் இருந்த அண்ணா ஹசாரேவுக்குக் கிடைத்த ஊடக கவனம் எங்கே? இம்பாலில் 15 ஆண்டுகளைக் கடந்து இன்னமும் ஒரு சொட்டுத் தண்ணீரை வாய் வழியே அனுமதிக்காமல் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடரும் இரோம் ஷர்மிளாவுக்குக் கிடைக்கும் ஊடக கவனம் எங்கே?

கொட்டாவியுடன் எழுந்திருக்கும் தேசிய ஊடகங்கள் என்ன எழுதுகின்றன என்பது இருக்கட்டும். சென்னை வெள்ளத்தின் தொடர்ச்சியாக மக்களிடம் ஏற்பட்டிருக்கும் ஒருங்கிணைப்பு தொடர்பாக ‘சவூதி கெஸட்’ பத்திரிகையில் காலீது அல்மீனா எழுதிய கட்டுரை இணையத்தில் காணக் கிடைத்தது. ஒரு முக்கியமான விஷயத்தைத் தொட்டிருக்கிறார். வெள்ளத்தின் தொடர்ச்சியாக சென்னை மக்களிடமிருந்து வெளிப்படும் இந்த ஒருங்கிணைந்த நிவாரணப் பணிகளை வெறும் மனிதாபிமானத்தின் வெளிப்பாடாக மட்டும் அல்ல; இந்தியாவின் உயிர்த் துடிப்பான பன்மைத்துவத்தின் வெளிப்பாடாகவும் குறிப்பிடுகிறார் காலீது அல்மீனா. இன வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு இங்கு கரங்கள் இணைவதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

சென்னை மக்களின் எழுச்சியில் எனக்கு இன்னொரு வெளிப்பாடும்கூடத் தெரிகிறது. அரசியல் வெற்றிடம்! முதல் முறையாக இப்போதுதான் சமூக வலைதளங்கள் தமிழகத்தில் சமூக நோக்கோடு உச்ச வீச்சை அடைந்திருக்கின்றன. மக்கள் ஒன்றுசேர, தங்களை ஒன்றுசேர்க்க ஆட்களை வெளியே தேடவில்லை. அவரவர் செல்பேசியையே ஆயுதம் ஆக்கிவிட்டனர். ஃபேஸ்புக்கிலும் வாட்ஸ் அப்பிலும் ஒரு வாரமாகக் கொட்டும் பதிவுகளை இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். 1.உதவிகள், 2.அரசியல்வாதிகள் மீதான கடுமையான விமர்சனங்கள். ஊடகங்களை அவதூறு வழக்குகள் மூலம் ஒடுக்க முற்படும் அரசியல்வாதிகள் கொஞ்சம் சமூக வலைதளங்கள் பக்கம் போய் தங்கள் முகங்கள் எப்படியெல்லாம் அடிவாங்குகின்றன என்று பார்க்க வேண்டும். “யாரையாவது இனி கெட்ட வார்த்தைகள் சொல்லித் திட்ட வேண்டும் என்றால், இந்தச் சொற்களைப் பயன்படுத்துங்கள்” என்று வரிசையாக நம்முடைய அரசியல்வாதிகளின் பெயர்களைப் பட்டியலிடுகிறது வாட்ஸ்அப் பதிவு ஒன்று. ஒவ்வொரு இடத்திலும் மக்கள் கோக்கும் கைகள் அரசியல்வாதிகளுக்குத் தெளிவாக ஒரு செய்தியைச் சொல்கின்றன, உங்கள் மீது, உங்களுடைய இன்றைய அரசியல் மீது நம்பிக்கை இழந்துவிட்டோம் என்பதே அது.

அரை மணி நேரத்துக்கு ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படும் இந்தியாவில், ஒரு பெண் பாலியல் கொலையுண்ட சம்பவம் ஒரு அரசாங்கத்தையே வீட்டுக்கு அனுப்பும் என்று யாராவது எதிர்பார்த்திருப்பார்களா? எது டெல்லி மக்களை ஒன்றுதிரட்டி வீதியில் நிறுத்தியது? எது ஆம்ஆத்மி கட்சி எனும் ஒரு புதிய அரசியல் கட்சிக்கு வழிவகுத்தது? எது அர்விந்த் கெஜ்ரிவால் எனும் ஒரு முன்னாள் அரசு அதிகாரியை முதல்வர் ஆக்கியது? நிர்பயா கொலை மட்டுமா? அது ஒரு திறப்பு. அவ்வளவே. உண்மையில் வீதியில் மக்களை நிறுத்தியிருந்தது ஆட்சியாளர்களின் அகந்தை, தொடர் நிர்வாகச் சீர்கேடுகள், ஊழல்கள், அலட்சியம், அடக்குமுறை. எல்லாவற்றுக்கும் மேல் அரசியல்வாதிகள் மீதான, ஓட்டுக் கணக்கு அரசியல் மீதான வெறுப்பு. புதிய அரசியலுக்கான வேட்கை.

தமிழகம் எதிர்கொண்டிருக்கும் இந்தப் பேரிடரில் பெரும் பணியாற்றிக்கொண்டிருக்கும் சில நிஜ நாயகர்களை அறிமுகப்படுத்தும் விவேக் ஆனந்தின் கட்டுரையை இணையத்தில் வாசித்தேன். பிரதீப் ஜான், உமா மகேஸ்வரன், பாலாஜி, ஷாஜஹான், ராஜா, ரஞ்சித், புதியவன், நியாஸ் அஹம்மது என்று அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிக்கொண்டிருக்கும் பலரை அறிமுகப்படுத்துகிறது கட்டுரை. ஒவ்வொருவரும் கையில் ஒரு செல்பேசியுடன் பல லட்சம் பேரை ஒருங்கிணைத்திருக்கிறார்கள். நியாஸ் அஹம்மது மட்டும் குறைந்தது 10,000 பேர் வழங்கிய நிவாரண உதவிகள் ஐந்து லட்சம் பேரைச் சென்றடைய வாட்ஸ்அப் மூலம் ஒருங்கிணைத்திருக்கிறார்.

சென்னையில் வெள்ளத்தால் சீர்குலைந்திருக்கும் மக்களை மீட்டெடுக்க இப்படி இணைந்திருக்கும் புதிய கைகள் தமிழகத்தின் கேவலமான ஊழல் அரசியல் கலாச்சாரத்தை மாற்றி எழுதும் மக்கள் சக்தியாக மாற முடியுமா? அரசியல் வெற்றிடத்தை நிரப்ப முடியுமா?

ஒரு சின்ன புரிதல் அதற்கான முதல் அடியை எடுத்துவைக்க உதவும் என்று தோன்றுகிறது. அரசியல் பங்கேற்பு இல்லாமல் நாம் என்ன உழைத்தும் பயன் இல்லை; இன்றைக்கு வெள்ளம் எப்படிப் பல்லாண்டு கால உழைப்புகளை எல்லாம் நிர்மூலமாக்கியிருக்கிறதோ, அப்படியே நம் எதிர் காலத்தை நிர்மூலமாக்கிக்கொண்டிருக்கிறார்கள் ஊழல் அரசியல்வாதிகள். ஒரே வித்தியாசம், வெள்ளம் ஒரே நாளில் அடித்துச் சென்றது; இவர்களோ சிறுகச் சிறுகச் செல்லரிக்கிறார்கள் ஒவ்வொரு நாளும். ஆற்றின் கரைகளைவிட மோசமாக ஆக்கிரமிப்புக்கும் சூறையாடலுக்கும் உள்ளாகியிருக்கிறது நம் தேசம். சென்னைக்கு மட்டும் அல்ல; ஒட்டுமொத்தத் தமிழகத்துக்கும் தன்னலம் பார்க்காமல் இன்றைக்கு ஓடிக்கொண்டிருக்கும் ‘உதவும் கைகள்’ தேவைப்படுகின்றன. முக்கியமாக அரசியலுக்குத் தேவைப்படுகிறது. தலைவன் வெளியே எங்கிருந்தோ வர மாட்டான்; அவன் உள்ளுக்குள் உருவாகிக்கொண்டிருக்கிறான்!


டிசம்பர், 2015, ‘தி இந்து’

9 கருத்துகள்:

 1. நமக்குள் ஒரு தலைவன்! - தமிழகம் எதிர்கொண்டிருக்கும் இந்தப் பேரிடரில் பெரும் பணியாற்றிக்கொண்டிருக்கும் சில நிஜ நாயகர்களை அறிமுகப்படுத்தும் விவேக் ஆனந்தின் கட்டுரையை இணையத்தில் வாசித்தேன். பிரதீப் ஜான், உமா மகேஸ்வரன், பாலாஜி, ஷாஜஹான், ராஜா, ரஞ்சித், புதியவன், நியாஸ் அஹம்மது என்று அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிக்கொண்டிருக்கும் பலரை அறிமுகப்படுத்துகிறது கட்டுரை. ஒவ்வொருவரும் கையில் ஒரு செல்பேசியுடன் பல லட்சம் பேரை ஒருங்கிணைத்திருக்கிறார்கள். நியாஸ் அஹம்மது மட்டும் குறைந்தது 10,000 பேர் வழங்கிய நிவாரண உதவிகள் ஐந்து லட்சம் பேரைச் சென்றடைய வாட்ஸ்அப் மூலம் ஒருங்கிணைத்திருக்கிறார். = எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு சமஸ்

  பதிலளிநீக்கு
 2. வழக்கம் போலவே மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள். ஆனால், தேசிய ஊடகங்களின் இந்தப் பாராமுகத்தை, தென்னிந்தியா, வடகிழக்குப் பகுதிகள் என எல்லாவற்றையும் புறக்கணித்து விட்டு வட இந்தியா மட்டும்தான் ஒட்டுமொத்த இந்தியா என்பதாகக் காலங்காலமாக ஊறிவிட்ட வட இந்தியர்களின் ஈவிரக்கமற்ற மனப்போக்கைப் பார்த்த பின்னும் இந்திய தேசியவாதத்தை உங்களைப் போன்ற தேசியவாதிகள் எப்படி நியாயப்படுத்துவீர்கள் என்பதற்கு நீங்கள் நேரடியாகப் பதிலளிக்க வேண்டும் என விரும்புகிறேன்!

  பதிலளிநீக்கு
 3. மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள்!

  பதிலளிநீக்கு
 4. தாங்கள் கூறியதுபோல் இக்காலகட்டத்தில் பலர் ஒருங்கிணைந்து பணியாற்றியவிதம் பாராட்டத்தக்கது. நிறைவில் இன்றைய தேவையை அருமையாக உணர்த்தியுள்ளீர்கள். நல்லன எதிர்பார்ப்போம்.

  பதிலளிநீக்கு
 5. அய்யா சாமிக்கண்ணு அவர்களுக்கு தங்கள் பதில் என்ன என்பதை அறிய ஆவல் சமஸ் அண்ணா.. இதே கேள்விகள் எனக்கும் உண்டு.

  பதிலளிநீக்கு
 6. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 7. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு