குப்பை அரசியல்!
அடையாற்றிலிருந்து அதிகபட்சம் 250 மீட்டர் தூரத்துக்குள் இருக்கிறது என் வீடு. வெள்ளம் வீட்டுக்குள் என்ன வேகத்தில் வந்திருக்கும் என்பதை விவரிக்க வேண்டியது இல்லை. 10 நாட்களுக்குப் பின்னரே வீட்டுக்குள் நுழைய முடிந்தது. நிறைய நண்பர்கள் விசாரித்தார்கள். பொருளாதாரரீதியாகப் பெரும் இழப்புகள் நேர்ந்திருக்குமோ என்கிற கவலையில், உதவவும் பலர் முன்வந்தார்கள். அப்படியான பொருள் இழப்புகள் எதுவும் நேரவில்லை. உண்மை இதுதான். எங்கள் வீட்டில் கார், ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் எதுவும் வெள்ளத்தால் பாதிக்கப்படவில்லை. ஏனென்றால், அப்படியான பொருட்கள் எதுவுமே வீட்டில் இல்லை. மிச்சமிருந்த சாமான்களும் புத்தகங்களும் அரை மணி நேரத்துக்குள் சில மூட்டைகளில் கட்டி பரண்களில் வைக்கக் கூடிய அளவிலானவை. ஆகையால், யாவும் தப்பித்தன. இதற்காக பொருட்களே இல்லை என்றால், எந்தப் பாதிப்புமே இருக்காது என்று சொல்ல வரவில்லை; என்னளவில் நான் புரிந்துகொண்டிருக்கும் ஒரு உண்மை, பொருட்களை எவ்வளவுக்கு எவ்வளவு குறைத்துக்கொள்கிறோமோ, அவ்வளவுக்குச் சுமைகளும் சிரமங்களும் குறைவு என்பது.“அப்படியென்றால் இவையெல்லாம் வேண்டாத பொருட்களா?”

அப்படிச் சொல்ல வரவில்லை. இதே ஒரு மலைப்பாங்கான கிராமத்தில், எதற்கெடுத்தாலும் மலையைவிட்டு கீழே இறங்கக் கூடிய ஒரு சூழலில் இருக்க நேர்ந்தால் எங்கள் வீட்டுக்கும் ஃப்ரிட்ஜ் தேவைப்பட்டிருக்கலாம். பக்கத்துத் தெருவிலேயே அன்றாடம் எல்லாச் சாமான்களையும் வாங்கி வைத்துக் காத்திருக்கும் அண்ணாச்சிக் கடைகள் இருக்கும்போது ஃப்ரிட்ஜுக்கு என்ன தேவை என்பது என் எண்ணம்.


“பெட்டிக் கடைகளில் வாங்குவதைக் காட்டிலும் சந்தையிலோ பெருஅங்காடிகளிலோ மொத்தமாக எல்லாப் பொருட்களையும் வாங்கி ஃபிரிட்ஜில் வைத்துக்கொண்டால், காசு மிச்சம் இல்லையா?”

நம் தெருவில் ஒருவர் கடை திறக்கிறார் என்றால், அவர் நம்மை நம்பியே கடை திறக்கிறார். அப்படியெல்லாம் தாண்டிக்கொண்டு போய் காய்கறி வாங்கி மிச்சப்படுத்தி எவ்வளவு சேர்க்கப்போகிறோம்? தவிர, ஃப்ரிட்ஜ் வாங்கி காய்கறி வாங்குவதில் மிச்சப்படுத்தும் கொஞ்சம் ரூபாயையும் வேறு வகையில் கொடுக்கத்தானே செய்கிறோம்? ஃப்ரிட்ஜுக்கான விலையில், அதை வைப்பதற்காகப் பெரிதாகத் திட்டமிடும் வீட்டு வாடகையில்/விலையில், மின்சாரக் கட்டணத்தில், பராமரிப்புச் செலவுகளில்…


ஒருவருக்கு ஃப்ரிட்ஜ் அத்தியாவசயமாகத் தேவைப்படலாம்; இன்னொரு குடும்பத்துக்கு வாஷிங் மிஷின் மிக மிக முக்கியம் என்று வாதிடலாம்; எது நமக்கு மிக மிக அத்தியாவசயம் என்பதை அவரவர்தான் முடிவெடுக்க வேண்டும். ஆனால், பொதுவில் இன்றைக்கு நம் வீடுகளில் பெருமளவில் குவிந்திருக்கும் எல்லாமும் எல்லோருக்கும் தேவைதானா என்பது நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி.

ரொம்ப நாளைக்கு முன் என்னுடைய குருநாதர்களில் ஒருவர் தனிப்பட்ட வாழ்வில் நான் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு மந்திரத்தை எனக்குச் சொல்லிக்கொடுத்தார். “எப்போது எதைச் செய்தாலும் சரி; இப்போது இதற்கு என்ன தேவை என்று கேட்டுக்கொள்!” நாம் செய்யக் கூடிய எந்தவொரு காரியத்துக்கு மட்டும் அல்ல; வாங்கக் கூடிய ஒவ்வொரு பொருளுக்கும்கூட இது பொருந்தும் என்று தோன்றுகிறது.

நமக்கு அன்றாடம் பயன்படாத / என்றைக்கோ பயன்படும் என்று சேர்த்துவைக்கும் எல்லாப் பொருட்களுமே குப்பைகள்தான் என்பதையே நவீன வாழ்க்கை நமக்குச் சொல்கிறது. உண்மையில் பலரும் நம்மைவிடவும் நாம் சேர்த்து வைத்திருக்கும் குப்பைகளுக்காகவே பெரிய வீடுகளைத் தேட நேர்கிறது. நம்முடைய வீடுகளில் மனிதர்களுக்காக நாம் செலுத்துவதைவிட இந்தக் குப்பைகளுக்காகவே அதிகம் வீட்டு வாடகை அல்லது வீட்டுக் கடன்களைச் செலுத்துகிறோம். நண்பரும் பத்திரிகையாளருமான கதிரேசன் அடிக்கடி சொல்வார், “நம்ம வாழ்க்கையில பெத்த ஆயி-அப்பனுக்கு நாம சம்பாதிச்சுக் கொடுத்த காசைவிட, தேவைக்கு அதிகமா வீட்டு வாடகையாவும் வீட்டுக் கடனாவும் கொடுத்து அழுவுற காசுதான் ஜாஸ்தி. சந்தையும் சாமான்களும்தான் நண்பா, நம்ம வாழ்க்கையையே சுரண்டிச் சாப்பிடுது!”


அநேகமாக, நம்முடைய ஒவ்வொரு வீட்டின் சமையலறைப் பரணிலும் பெரிய பெரிய சாமான்கள் அடுக்கப்பட்டிருப்பதைப் பார்க்க முடியும். எப்போதாவது வீட்டில் விசேஷம் நடக்கும்போது பயன்படுத்த என்று சொல்லிப் பாதுகாப்பாக வைத்திருப்போம். இந்த நவீன வாழ்க்கையில் எந்த விசேஷத்துக்கு வீட்டில் சமைக்கிறோம்? ஒருவேளை அப்படியே சமைக்க நேர்ந்தால், அன்றைக்கு அப்போதைக்கு வாடகைக்கு எடுத்துக்கொண்டால் என்ன? வீட்டுக்கு வரும் விருந்தாளிகள் சில நிமிடங்கள் வந்து உட்கார்ந்து செல்லும் இருக்கைகள் சிம்மாசனங்களைப் போல இருக்க வேண்டியதன் தேவை என்ன? ஆளுக்கொரு மோட்டார் வாகனத்துக்கான அத்தியாவசியத் தேவை என்ன? ஐந்து செட் ஆடைகளுக்க வைத்திருக்க வேண்டிய தேவை என்ன? என்றைக்கோ, எப்போதோ வரும் விருந்தாளிகளின் பெயரைச் சொல்லி நிரந்தரமாகப் பெரிய வீடாகப் பார்க்க வேண்டிய தேவை என்ன?

குழந்தைகளுக்கு வாங்கிக்கொடுக்கும் விளையாட்டுச் சாமான்களின் எண்ணிக்கைப் பெருக்கத்திலேயே தொடங்கிவிடுகிறது ஒரு குடும்பத்தின் சீரழிவு. பாத்திரங்களை வாங்கிக் குவிப்பது, மின்னணுச் சாதனங்களை வாங்கிக் குவிப்பது, வாகனங்களை வாங்கிக் குவிப்பது எல்லாமே போதைதான். சந்தை உருவாக்கும் போதை.


வாங்குவது, மேலும் மேலும் வாங்குவது, அப்டேட்டுக்காக வாங்குவது, அந்தஸ்தைக் காட்ட வாங்குவது, வாங்கும் பொருட்களை வைப்பதற்கு ஏற்ற இடத்தை வாங்குவது, வாங்கும் திறனுக்கு வருவாய் போதாதபோது கடன் வாங்குவது, கடனுக்காக வட்டி கட்டுவது, கடனை அடைக்கக் கூடுதல் வேலை பார்ப்பது, கடன் கிடைக்காத சூழலில் ஊழலில் ஈடுபடுவது, உடலும் மனமும் நெருக்கடிக்குள்ளாகும்போது மனித உறவுகள் சிதைவது இவையெல்லாம் தனிமனித வீழ்ச்சிக்கு மட்டும் வழிவகுப்பவை இல்லை. ஒட்டுமொத்த சமூகத்தையும் சேர்த்தே சீரழிக்கின்றன.


வெள்ளத்தின் தொடர்ச்சியாக ஓரிரு நாட்களில் மட்டும் சென்னையில் ஒரு லட்சம் டன் குப்பைகள் குவிந்தன. தம் வீட்டைவிட்டுக் குப்பைகள் வெளியேறியதும் மாநகர மக்களுக்கு முதல் மூச்சு வந்தது. சாலைகளை விட்டும் அவை அகன்றபோது முழு நிம்மதியும் திரும்பிவிட்டது.
ஆனால், இந்தக் குப்பைகள் யாவும் எங்கே சென்றன? நம் நகரத்திலேயேதான் இன்னொரு மூலையில் அவை குவிக்கப்படுகின்றன. நம் கண் பார்வைக்கு அப்பாற்பட்ட இடத்தில் அவை குவிக்கப்படுவதாலேயே நம்மால் நிம்மதியாக இருந்துவிட முடியாது. காற்றின் வழியாகவும் நிலத்தடி நீரின் வழியாகவும் அவை நம் வீட்டை வந்தடைந்தே தீரும். அவை நம்மைத் துரத்தும்; நம்மைக் கொல்லும்.

இந்திய அளவில் குப்பை உற்பத்தியில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது தமிழகம். இதில் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக்கொண்டே செல்லும் மின் குப்பைகள் உருவாக்கமும் பிளாஸ்டிக் குப்பைகள் உருவாக்கமும். ஈயம், கேட்மியம், பாதரசம் போன்ற கொடிய நச்சுப் பொருட்களைச் சுமந்திருக்கும் மின் குப்பைகள் உருவாக்கத்தில் நாட்டிலேயே மகாராஷ்டிரத்துக்கு அடுத்த இடத்தில் தமிழகம் இருக்கிறது. பிளாஸ்டிக் குப்பைகள் உருவாக்கத்தில் நாட்டிலேயே புதுடெல்லிக்கு அடுத்த இடத்தில் சென்னை இருக்கிறது.


அரசியல் மாற்றத்துக்கான அடிப்படை மாற்றம் ஆரம்பமாக வேண்டிய இடம் குப்பைப் பிரச்சினை. ஏனென்றால், ஒரு குப்பை என்பது வெறும் குப்பை அல்ல; அதன் பின்னே ஒரு குடிமைச்சமூகத்தின் கலாச்சாரம் இருக்கிறது; அந்தச் சமூகத்தை வழிநடத்தும் அரசாங்கம் இருக்கிறது; அந்த அரசைப் பின்னின்று இயக்கும் சந்தை இருக்கிறது. இந்தியாவில் சாலையில் கிடக்கும் குப்பையில் ஒரு அரசியல்வாதி கை வைக்கும்போது, அடிப்படையில் அவர் குப்பை மீது மட்டும் கை வைப்பதில்லை; அரசியல் அலட்சியங்கள் மீது கை வைக்க வேண்டியிருக்கிறது, சாதி மீது கை வைக்க வேண்டியிருக்கிறது, சர்வ வல்லமை படைத்த சந்தை மீது கை வைக்க வேண்டியிருக்கிறது. ஆகையால்தான் இந்த விவகாரத்தை எல்லோரும் பாவனையோடு கடக்கிறார்கள்.


இந்தியாவில் குப்பைக்கு எதிராக ஆத்மார்த்தமாகப் போராடிய முதல் அரசியல்வாதி காந்தி. இன்று வரை கடைசி அரசியல்வாதியாகவும் பட்டியலில் அவரே நீடிக்கிறார். மாற்றத்தைத் தேடுபவர்கள் முதலில் குப்பைகளையே அடையாளம் காண்பார்கள்!

டிசம்பர் 2015, ‘தி இந்து’

8 கருத்துகள்:

 1. அருமையான கட்டுரை,வெள்ளத்தினால் விளைந்த நன்மைகளுள் ஒன்று, இன்றைய சூழலையும் வாழ்வியலையும் சார்ந்த தங்களின் தொடர் கட்டுரைகள்; கழிவறை அரசியலைத் தொடர்ந்து குப்பை அரசியலும் அருமை,செயல்படுத்த துணிந்துவிட்டேன்! சமஸ்'க்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்!!

  பதிலளிநீக்கு
 2. அறிவுக் கண் திறக்கும் கட்டுரைக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 3. அறிவுக் கண் திறக்கும் கட்டுரைக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 4. உங்களது இப்பதிவு பலருக்குப் பாடமாக அமையும். குறைந்த அளவிலான ஆசைகளும் பொருள்களும் நிறைவான வாழ்க்கைக்கு உதவும். நன்றி.

  பதிலளிநீக்கு
 5. உங்கள் வார்த்தைகளிலேயே சொல்வதானால் குடிமை சமூகத்தில் வாழும் மனிதர் ஒவ்வொருவரும் கட்டாயம் படிக்க வேண்டிய கட்டுரை... இல்லையில்லை பாடம் இது! நன்றி!

  பதிலளிநீக்கு
 6. எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான்.ஆனால் உங்களால் மட்டுமே நெத்தியடியாக அடிக்க முடிகிறது.நன்றி.

  பதிலளிநீக்கு
 7. திருமணமாகாத மூன்று நண்பர்கள் கோவையில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருக்கிறோம். சும்மா கூட பயன்படுத்தாத fridge, தேவையேயில்லாம கூடுதலா இரண்டு கட்டில், மாதத்திற்க்கு ஓரிரு முறை மட்டுமே சமைத்து சாப்பிடுவோம். அதற்கொரு மிக்ஸி. இன்னொரு தெண்டமா சாப்பாட்டு மேசை. காலையில அலுவலகம் போய் வந்தபின் இரவு தூங்குவதற்கு மட்டும் வாடகை தருகிறோம். 6000 வாடகை உள்ள வீட்டை 8000 ரூபாய்க்கு பொருட்களுடன் எடுத்து தங்கியிருக்கும் மாடர்ன் அறிவிலிகள் என்பதை தலைகுனிந்து ஒப்புக்கொள்றேன்.

  பதிலளிநீக்கு
 8. குப்பை அரசியலை பற்றி விரிவாக படிக்க எதாவது புத்தகம் தமிழில் உள்ளதா? இன்னும் விரிவாக தெரிந்து கொள்ள

  பதிலளிநீக்கு