இரு வழிகள்; நாம் எந்த வழி?



நகுலனின் அமரத்துவமான கவிதை வரிகளில் இது ஒன்று: “இருப்பதற்கென்றுதான் வருகிறோம்; இல்லாமல் போகிறோம்.” விக்கிரமாதித்யன் எழுதிய ஒரு கவிதையும் அடிக்கடி முன் நின்று கேள்வி கேட்கும்: “எட்டு மணி நேரம் வேலை செய்ய வேண்டும்; எட்டு மணி நேரம் தூங்க வேண்டும்; எத்தனை மணி நேரம் வாழ வேண்டும்?”
 

சென்னை வந்த கொஞ்ச நாளிலேயே ஒரு உண்மை அப்பட்டமாகத் தெரிய ஆரம்பித்துவிட்டது. இந்த நாடு வாழ்வதற்கானதாக அல்ல; பிழைப்பதற்கானதாக நம் வாழ்வை மாற்றிக்கொண்டிருக்கிறது.
“ஏன் மாப்ள, ஓடி ஓடிச் சம்பாதிக்குற காசையெல்லாம் சின்ன வயசுல பிள்ளைங்களுக்காகப் பள்ளிக்கூடங்கள்ல கொடுத்துடுறோம்; நடு வயசுல சம்பாதிக்கிறதைக் கல்லூரிகள்ல கொடுத்துடுறோம்; வயசான பின்னாடி மிஞ்சுற காசை ஆஸ்பத்திரிக்காரன் பறிச்சுக்குறான். உள்ளபடி நாம யாருக்குச் சம்பாதிச்சுக் கொடுக்க இந்த ஓட்டம் ஓடுறோம்? யாரு காலை ஆட்டிக்கிட்டு கடலை வேடிக்கை பார்க்க இந்த ஓட்டம் ஓடுறோம்?”
கேள்விக்கான பதிலை யோசிக்கும் முன்பே மீண்டும் ஓட்டத்தை நோக்கி விரட்டிவிடுகிறது சூழல்.


ஒருவேளை இந்தப் பள்ளிக்கூடம் தொடங்கி ஆஸ்பத்திரி வரையிலான எல்லாச் செலவுகளைத் தாண்டியும் நம்மால் கொஞ்சம் காசு சேர்த்து வைக்க முடியும் என்றால், நம் பேரப் பிள்ளைகளுக்கு அது உதவலாம். அவர்களுக்கும்கூட வைத்தியச் செலவுகளுக்கு அந்தக் காசு உதவுமே தவிர, காலை ஆட்டிக்கொண்டு கடலை வேடிக்கை பார்க்க உதவாது என்பதே உண்மை. உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து ஒரு விபரீதத்தைச் சுட்டிக்காட்டிவருகிறது. இப்போதெல்லாம் வாழ்முறை சார்ந்த நோய்களே இந்தியர்களை அதிகம் கொல்கின்றன. குறிப்பாக, இந்திய நகர்ப்புறங்களில் ஏற்படும் 80% மரணங்கள் இதயநோய், புற்றுநோய், சுவாச நோய், நீரிழிவு நோய் போன்றவற்றாலேயே ஏற்படுகின்றன. 60 வயதுக்குள் இந்நோய்களால் இறப்பவர்களின் எண்ணிக்கை வளர்ந்த நாடுகளில் 13%. இந்தியாவில் 30%. இதயம் சார்ந்த நோய்களால் பாதிக்கப்பட்ட இந்தியர்கள் எண்ணிக்கை 2005-ல் 3.8 கோடியாக இருந்தது. இப்போது 6 கோடி. நீரிழிவு நோயாளிகள் 5.1 கோடி. இது தவிர, 15 ஆண்டுகளுக்கு முன் இந்தியர்களைக் கொல்லும் நோய்களின் பட்டியலில் 7-வது இடத்தில் இருந்த புற்றுநோய் முதலிடத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் 11 லட்சம் பேரைப் புதிதாக அது பீடிக்கிறது; 7 லட்சம் பேரை அது கொல்கிறது.


நாம் வாழும் சூழல் எவ்வளவு மோசமாக மாறிக்கொண்டிருக்கின்றன என்பதை உணர்த்தும் குறியீடுகள்போல நிற்கின்றன சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் உயர உயர வளர்ந்துகொண்டிருக்கும் தனியார் புற்றுநோய் மருத்துவமனைகள். உரிய கவனம் கொடுக்காவிட்டால் இந்நோய்க் கூட்டம் இந்தியாவை மவுனமாக ஒரு கொள்ளைநோய்போல வாரிச் சுருட்டிவிடும் என்கிறது உலக சுகாதார அமைப்பு. ஆனால், நம்முடைய ஆட்சியாளர்களுக்கோ மக்கள் மீது துளியும் கருணை இல்லை. விலங்குகளைக் காட்டிலும் மோசமாக இந்தச் சந்தைப் பொருளாதாரத்தில் அடித்து வேலை வாங்கப்படுகிறார்கள் இந்நாட்டு மக்கள். அப்படி என்ன பெரிதாக இந்த அரசாங்கத்திடம் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்? அரசுப் பள்ளிக்கூடங்களில் தரமான கல்வி, அரசு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை, வீட்டைச் சுற்றி சுகாதாரமான சூழல், வெளியே சென்றுவர நெருக்கடியற்ற பொதுப் போக்குவரத்துக்கான கட்டமைப்பு. கேவலம், இவற்றைக்கூடத் தர முடியாவிட்டால் அது என்ன அரசாங்கம்?
 

நேற்று பேசிக்கொண்டிருந்தபோது நண்பர் செந்தமிழ் கேட்டார், “உள்ளூரில் சுற்ற சைக்கிள்போல ஒரு அருமையான வாகனம் கிடையாது. நம்ம ஆரோக்கியத்துக்கும் நல்லது; சுற்றுச்சூழலுக்கும் உகந்தது. ஆனா, சென்னை சாலைகள்ல சைக்கிள்ல போனா நான் அடிபட்டே சாவேன். சுற்றுச்சூழல் பாதுகாப்பைப் பத்தி வாய் கிழியப் பேசுறாய்ங்க. சைக்கிளோட்டுறவங்களுக்கு இந்த அரசாங்கம் தர்ற இடம் என்ன? தமிழ்நாட்டிலேயே முக்கியமான சாலை அண்ணா சாலை. ஆனா, அங்கேயே சைக்கிள்க போக ஒரு தனிப்பாதை இல்லையே!”
 

யோசித்தால் ரத்தக்கொதிப்புதான் வரும். ரூ.4,632 கோடிக்கு இந்த ஆண்டு பட்ஜெட் போட்டிருக்கிறது சென்னை மாநகராட்சி. இதில் சாலைப் பணிகளுக்கு மட்டுமான ஒதுக்கீடு ரூ.1,862 கோடி. பிரச்சினை பணம் இல்லை. இதைப் பற்றியெல்லாம் யோசிக்கக்கூட நேரம் இல்லாத அளவுக்குச் சூழ்ந்திருக்கும் அற்ப சுயநல அரசியல் பாஷாண வெள்ளமே காரணம்.
 

நமக்கு இரு வழிகள் உள்ளன. ஒன்று, எல்லா அநியாயங்களையும் பார்த்துப் புழுங்கிப் புழுங்கி, நம்மை மட்டும் விடுவித்துக்கொள்ளும் போராட்டத்தில் பிழைப்பது. மற்றொன்று, எதிர்க் கேள்வியோடு களத்தில் இறங்கி ஒட்டுமொத்த சமூக மாற்றதுக்கான போராட்டத்தில் வாழ்வது. இன்றைக்கு அரசுப் பள்ளிகளின் வீழ்ச்சிக்கு நாம் முதல் வழியைத் தேர்ந்தெடுத்ததே காரணம். இன்றைக்கு அரசு மருத்துவமனைகளின் வீழ்ச்சிக்கு நாம் முதல் வழியைத் தேர்ந்தெடுத்ததே காரணம். இன்றைக்குப் பொதுப்போக்குவரத்தின் வீழ்ச்சிக்கு நாம் முதல் வழியைத் தேர்ந்தெடுத்ததே காரணம். இன்றைக்குப் பிழைப்புக்காக உயிரைக் கொடுக்கும் நிலையில் நிற்க நாம் முதல் வழியைத் தேர்ந்தெடுத்ததே காரணம்.
 

ஓர் ஊர் மரங்களை இழக்கும்போது அதற்கு எதிராகப் போராடிச் சூழலை மாற்றலாம் அல்லது புழுக்கத்தை நாம் மட்டும் எதிர்கொள்ள மின்விசிறி போட்டுக்கொள்ளலாம். ஓர் ஊரின் நிலத்தடிநீர் நச்சுநீராகும்போது அதற்கு எதிராகப் போராடிச் சூழலை மாற்றலாம் அல்லது தாகம் தீர்த்துக்கொள்ள நாம் மட்டும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை வாங்கிக்கொள்ளலாம். ஒரு ஊரின் காற்றே நஞ்சாகும்போதுகூட நாம் நம் அறையில் மட்டும் காற்றுச் சுத்திகரிப்பான்களை வாங்கி வைத்துச் சமாளித்துவிடலாம் என்று நினைக்க முடியுமா?
 

உண்மையில் அணுஅணுவாகச் செத்துக்கொண்டிருக்கிறோம். எல்லோருமேதான், நாம், நம் பிள்ளைகள், எல்லோருமே. இப்போதும்கூட யோசிக்காவிட்டால் எப்போது யோசிக்கப்போகிறோம்?
 

டிசம்பர், 2015, ‘தி இந்து’

4 கருத்துகள்:


  1. "ஓர் ஊர் மரங்களை இழக்கும்போது அதற்கு எதிராகப் போராடிச் சூழலை மாற்றலாம் அல்லது புழுக்கத்தை நாம் மட்டும் எதிர்கொள்ள மின்விசிறி போட்டுக்கொள்ளலாம். ஓர் ஊரின் நிலத்தடிநீர் நச்சுநீராகும்போது அதற்கு எதிராகப் போராடிச் சூழலை மாற்றலாம் அல்லது தாகம் தீர்த்துக்கொள்ள நாம் மட்டும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை வாங்கிக்கொள்ளலாம். ஒரு ஊரின் காற்றே நஞ்சாகும்போதுகூட நாம் நம் அறையில் மட்டும் காற்றுச் சுத்திகரிப்பான்களை வாங்கி வைத்துச் சமாளித்துவிடலாம் என்று நினைக்க முடியுமா?"__
    அனைவரும் யோசிக்க வேண்டிய விஷயம்.

    பதிலளிநீக்கு
  2. முற்றிலும் உண்மையான கருத்து . நகரங்கள் நரகங்களாக மாறிவிட்டன. அரசியல்வாதிகள் வெற்றிகரமாக செய்து விட்டனர். சென்னை போன்ற பெருநகரங்கள் வாழ தகுதியற்றவையாகி பல வருடங்கள் ஆகி விட்டன.

    பதிலளிநீக்கு
  3. போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து... இந்த எண்ணம் இருந்தாலே பாதி பிரச்சினைகள் தீர்ந்துவிடும். வாழ்வது என்பது வெறும் சுவாசம் மற்றும் உண்பது அல்ல. இயற்கையுடன் இயைந்து வாழ்வது, நல்ல விசயங்களுக்காக போராடுவது அல்லது நல்லதை தொடர்ந்து கிடைக்க செய்வது எனும்போது மட்டுமே வாழ்க்கை முழுமை பெறும். வாழ்க்கையை பற்றிய நமது வரையறை என்ன என்பதை நாம்தான் தீர்மானிக்கவேண்டும்.

    பதிலளிநீக்கு