கக்கா போவதும் அரசியல்தான்!


சிகாகோவிலிருந்து ஒரு மின்னஞ்சல். அனுப்பியிருப்பவர் சதீஷ்குமார். இளைஞர். வேலையை ராஜினாமா செய்துவிட்டு சொந்த ஊரான வேலூர் வந்துவிடலாமா என்று நினைக்கிறேன். நம்மூரில் சமூகத்துக்காக எதாவது செய்ய வேண்டும். இன்றைய அரசியல் சூழலை எப்படி மாற்றுவது என்று கேட்டிருக்கிறார். கோவையிலிருந்து ஒரு மின்னஞ்சல். அனுப்பியிருப்பவர் மைதிலி. இரு குழந்தைகளுக்குத் தாய். இந்தச் சமூகத்துக்காக ஏதாவது செய்ய வேண்டும். ஆனால், எங்கிருந்து தொடங்குவது என்று கேட்டிருக்கிறார். மதுரையிலிருந்து ஒரு மின்னஞ்சல். தன் பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை அவர். நாட்டின் அரசியல் சூழல் மாற்றத்துக்குப் பங்களிக்க விரும்புகிறேன். ஆனால், என்னுடைய குடும்பச் சூழலில் வீட்டைவிட்டு வெளியே வர முடியாது. எங்களைப் போன்றவர்களுக்கு என்ன வழி இங்கே இருக்கிறது என்று கேட்டிருக்கிறார். நூற்றுக்கணக்கான மின்னஞ்சல்கள். நிறையப் பேர் மாணவர்கள். என்ன செய்வது; எங்கிருந்து தொடங்குவது என்பதே அவை சுமந்திருக்கும் அடிப்படைக் கேள்விகள்.

உண்மையில், செய்வதற்குக் கண் முன் ஏராளமான பணிகள் கொட்டிக் கிடக்கின்றன. தேவை என்னவென்றால், ஒரே ஒரு தெளிவு: எல்லாமே அரசியல்தான். அரசியல் மாற்றத்தை எங்கிருந்து தொடங்கலாம் என்றால், முதலில் வீட்டிலிருந்து, கழிப்பறையிலிருந்தேகூடத் தொடங்கலாம்.

கொஞ்சம் விளக்கமாகவே எழுதுகிறேன்.

என் தாத்தாவுக்கு முதுகுத்தண்டில் பிரச்சினை இருந்தது. கூடவே மூல உபத்திரவமும் இருந்தது. கழிப்பறைக்குச் செல்வது என்பது ஒவ்வொரு நாளும் அவரளவில் நரகத்துக்குச் சென்று திரும்பும் அனுபவம். இந்திய பாணிக் கழிப்பறையில் உட்காருவதும் எழுவதும் அவருக்கு மரண அவஸ்தை. பக்கவாட்டில் பிடித்துக்கொண்டு எழவும் உட்காரவும் சுவரில் ஒரு இரும்புக் குழாய் பதிக்கப்பட்ட இந்திய பாணிக் கழிப்பறையையே கடைசிவரை பயன்படுத்தினார். அதற்கு மூன்று காரணங்களை அவர் சொல்வார், 1. சுற்றுச்சூழலுக்கு ஓரளவேனும் இதுவே உகந்தது - தண்ணீர் சிக்கனம். 2. சுகாதாரத்துக்கு உகந்தது - நம்முடைய உடல் கழிப்பறையில் ஒட்டுவதில்லை. 3. உடலியக்கத்துக்கு நல்லது - நம்முடைய மலக்குடல் அமைப்புக்கு இப்படி உட்கார்ந்து கழிப்பதே சரியானது. தவிர, இது ஒரு வகையான ஆசனம். மூன்றுமே அறிவியல்பூர்மானவை.

முன்பெல்லாம் நம் வீடுகளில் பார்த்திருக்கலாம், ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் ஒரு பித்தளைச் சொம்பு இருக்கும். சுமார் ஒரு லிட்டர் கொள்ளளவு கொண்டது. காலையில் அதிலுள்ள தண்ணீரில் பல் துலக்கி, முகம் கழுவுவார்கள். வீட்டுக்குள் நுழையும்போது அதிலுள்ள தண்ணீரில் கால்களையும், கைகளையும் கழுவிவிட்டு உள்ளே நுழைவார்கள். வீட்டில் சாப்பிடும் நேரம் வந்தால், அதிலுள்ள தண்ணீரில்தான் கை கழுவுவார்கள். கழிப்பறைக்கு எடுத்துச் செல்ல அதேபோலப் பெரிதாக இன்னொரு சொம்பு இருக்கும். அது சின்ன சொம்பைக் காட்டிலும் இரு மடங்கு கொள்ளும். அதில் தண்ணீர் எடுத்துச்செல்வார்கள். சிறுநீர் போய் வந்தால், ஒரு சொம்புத் தண்ணீர். மலம் கழிக்கப் போனால், இரண்டு அல்லது மூன்று சொம்புத் தண்ணீர் என்பது கணக்கு. நம்மைக் காட்டிலும் அவர்கள் சுத்தமாக இருந்தார்கள். எனினும், கணக்குப் போட்டுப்பார்த்தால் ஒரு நாள் முழுக்க - ஆறு முறை சிறுநீர், மூன்று முறை மலம் கழிக்கச் சென்றாலும் - ஒரு நாளைக்குச் சராசரியாக 25 லிட்டர் தண்ணீருக்குள் எல்லா ஜோலியும் முடிந்தது (கிராமப்புறங்களில் இந்தக் கணக்கு இன்னும் குறையும்).

இன்றைக்கு நம்முடைய பயன்பாடு எப்படி? வீட்டு வாசலிலும் கொல்லையிலும் இரு தொட்டி களில் தண்ணீர் வைத்துச் செலவிட்ட காலம் போய், மாடியில் பெரிய அளவுத் தொட்டிகளில் தண்ணீரைத் தேக்கிவைத்துக்கொள்கிறோம். வீட்டுக் குள்ளேயே வந்துவிட்ட கழிப்பறையை மேலும் சுத்தமாக வைத்துக்கொள்ள மேலும் கொஞ்சம் தண்ணீர் கூடுதலாகத் தேவைதான். ஆனால் எவ்வளவு?

இன்றைக்குப் பல வீடுகளிலும் ஒரு நாகரிகமாகவே ஆகிவிட்ட மேற்கத்திய பாணிக் கழிப்பறைகளில் சிறுநீர் கழித்துவிட்டு ஒரு முறை அழுத்தினால் வெளியாகும் தண்ணீரின் அளவு கிட்டத்தட்ட 10 லிட்டர். ஒரு நாளைக்குக் கழிப்பறைக்கு மட்டும் ஒரு தனிநபர் 100 லிட்டர் தண்ணீர் செலவிடுவது இன்றைக்கெல்லாம் சர்வ சாதாரணம். ஒரு குடம் தண்ணீருக்காக மைல் கணக்கில் நடக்கும் நூற்றுக்கணக்கான கிராமங்களைக் கொண்ட இந்தியச் சூழலில், இது பொறுப்பற்றத்தனம் மட்டும் அல்ல; சமூகக் குற்றமும்கூட. குடிக்கவே காசு கொடுத்து கேன் தண்ணீர் வாங்கும் நிலையிலிருக்கும் சென்னையில் ஒவ்வொரு நாளும் 65 கோடி லிட்டர் கழிவுநீர் உற்பத்தியாகிறது. எங்கிருந்து உற்பத்தியாகிறது? நம் வீடுகளிலிருந்து, கடைகளிலிருந்து, அலுவலகங்களிலிருந்து, நிறுவனங்களிலிருந்து! இப்படிப்பட்ட கழிப்பறைக் கலாச்சாரத்தை யார் நம் மீது திணித்தது? சந்தை!

ஆக, எந்தக் கழிப்பறையில் கக்கா போவது, எப்படிப் போவது என்பதிலேயே சமூக அக்கறையும் அரசியலும் தொடங்கிவிடுகிறது. அடுத்து, பல் துலக்கு கிறோம். பல்பொடியா; பற்பசையா? அரசியல் இருக்கிறது. குளிக்கிறோம். வாளியா, ஷவரா? அரசியல் இருக்கிறது. பால் பாக்கெட்டை எடுப்பது நீங்களா; உங்கள் துணையா? அரசியல் இருக்கிறது. காலைச் சமையல் ஒருவர் பொறுப்பா; கூட்டுப் பொறுப்பா? அரசியல் இருக்கிறது. குழந்தையைப் பள்ளிக்குக் கொண்டுவிடப்போகிறோம். அரசுப் பள்ளியா, தனியார் பள்ளியா? அரசியல் இருக்கிறது. அலுவலகம் புறப்படுகிறோம். தனி வண்டியிலா, பொதுப் போக்குவரத்தா? அரசியல் இருக்கிறது. போகிற வழியில் ஏடிஎம்மில் பணம் எடுக்க வேண்டியிருக்கிறது... வங்கிக் கணக்கு எங்கிருக்கிறது, பொதுத் துறை வங்கியிலா, தனியார் வங்கியிலா? அரசியல் இருக்கிறது. அலுவலகத்தில் இரண்டாவது மாடியில் அறை. மாடியில் ஏறிச் செல்கிறோமா, லிஃப்ட்டில் செல்கிறோமா? அரசியல் இருக்கிறது. அலுவலை வேலையாகப் பார்க்கிறோமா, சமூகத்துக்குப் பணியாற்ற உங்களுக்குக் கிடைத்த வாய்ப்பாகப் பார்க்கிறோமா? அரசியல் இருக்கிறது. வீட்டுக்குப் பேச வேண்டியிருக்கிறது. செல்பேசி இணைப்பு பிஎஸ்என்எல் இணைப்பா, தனியார் நிறுவன இணைப்பா? அரசியல் இருக்கிறது. வீடு திரும்பும்போது காய்கறி வாங்கச் செல்கிறோம்; பெருநிறுவன அங்காடியா; சாலையோர வண்டிகளா? அரசியல் இருக்கிறது. எல்லா வேலைகளையும் முடித்து உடல் முழுக்க அலுப்போடு படுக்கச் செல்கிறோம். அன்றைய செய்தித்தாளில் அப்புறம் படிக்கலாம் என்று காலையில் எடுத்துவைத்த கட்டுரை ஞாபகத்துக்கு வருகிறது. வாசித்துவிட்டுப் படுக்கிறோமா, தள்ளிப்போடுகிறோமா? அரசியல் இருக்கிறது.

கோட்டைக் கொத்தளங்களில் சென்று கொடி நாட்டுவதில் மட்டும் அல்ல; சகஜீவிகள் தொடர்புடைய நம்முடைய ஒவ்வொரு செயலிலும் அரசியல் இருக்கிறது. உண்மையான மாற்றத்தை விரும்புபவர்கள் முதலில் கவனம் செலுத்த வேண்டிய விஷயம் குப்பை. வீட்டுக் குப்பைகளை அகற்றாமல் எப்படி நாட்டுக் குப்பைகளை அகற்ற முடியும்!

டிசம்பர், ‘தி இந்து’

13 கருத்துகள்:

 1. சந்தைக் கலாச்சாரத்தை எதிர்த்து கேள்விகள் கேட்கத் தூண்டும் பதிவிற்கு வாழ்த்துகள் சமஸ்

  பதிலளிநீக்கு
 2. மலம் என்ற மாபெரும் உரம் மண்ணுக்கு போகாதது ஏன் - அடிக்கடி எனக்குள் எழும் கேள்வி, பாதி விடை சமஸ் கொடுத்துவிட்டார்

  பதிலளிநீக்கு
 3. முன்னெடுக்க வேண்டிய பல்வேறு மாற்றங்களின் தொகுப்பு.

  இதில் குறிப்பிடும் சில விஷயங்களை சமீப காலமாக ஆங்காங்கே சிலர் செயல்படுத்தி வருகின்றனர்.

  பாராட்டுக்கள்! நன்றி.

  பதிலளிநீக்கு
 4. அருமையான பதிவு , என்னுடைய நீண்ட நாள் கேள்விகள் சிலவற்றிருக்கு பதில் இங்க. நன்றி. முயற்சிக்குறேன் நானும் இதில் சொல்லப்பட்ட எல்லாவற்றையும் முடிந்த வரை.

  பதிலளிநீக்கு
 5. அருமையான பதிவு , என்னுடைய நீண்ட நாள் கேள்விகள் சிலவற்றிருக்கு பதில் இங்க. நன்றி. முயற்சிக்குறேன் நானும் இதில் சொல்லப்பட்ட எல்லாவற்றையும் முடிந்த வரை.

  பதிலளிநீக்கு
 6. வெளிநாடுகளில் கழிவுநீரில் வளரும் மரங்களை நட்டு தூய்மையைக்காக்கிறார்கள்..

  கல்வாழைச்செடிகள் சாக்கடை நீரைத்தூய்மை செய்யும் குணம் கொண்டவை..

  ஆற்றில் அசுத்த நீரைக்கலக்காமல் சாக்கடைநீரில் வளரும் தன்மை கொண்ட மரம் , செடிகளை வளர்த்து பசுமையைப்பேணலாம்.

  பதிலளிநீக்கு
 7. எங்கயா இருந்திங்க இவ்வளுவு நாளு .. அருமை..யோசிப்போம்..செயல்படுவோம்..மாற்றம் விரைவில்.

  பதிலளிநீக்கு
 8. அட்டகாசம்! நம் வாழ்வில், நாம் செய்கிற - செய்யாத ஒவ்வொரு செயலிலும் அரசியல் இருக்கிறது என்பதை உணர்ந்திருக்கிறேன். ஆனால், அதை மற்றவர்களுக்கு இவ்வளவு தெளிவாக எடுத்துரைக்க எனக்குத் தெரியாது. அசத்தல்!

  ஆனால், அரசுக் கைப்பேசி நிறுவனச் சேவையை விட்டுவிட்டுத் தனியார் நிறுவனச் சேவையைப் பயன்படுத்துவதில் என்ன அரசியல்? புரியவில்லையே?

  பதிலளிநீக்கு
 9. அரசியல் ஒரு சாக்கடை. இதுவரை எங்களுக்கு கற்பிக்கப்பட்ட மலிவான விளக்கம். நம் வீட்டு சாக்கடையிலிருந்தே அரசியல் தொடங்குகிறது என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொண்டால் வீடும் நாடும் நலம் பெறும். களங்கமில்லாத குழந்தைகளையும் சுயநலத்தோடு வளர்ப்பதைவிட வேறென்ன கேடு இருக்கிறது?

  பதிலளிநீக்கு
 10. NAANUM ROMBA NAALAVE ITHAI YOSICHEN...I GOT THE ANSWER FROM YOUR WONDERFUL BLOG SIR...

  பதிலளிநீக்கு
 11. உண்மை சமஸ்...அரசியல் வீடுகளிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.. ஏன் இன்னும் பிறந்த குழந்தைகளுக்கு உடை,பவுடர் டின்,படுக்கை,பால்பாட்டில் பயன்பாட்டிலிருந்தே ஆரம்பித்துவிடுகிறது. ஜாதிக்கா,மாச்சக்கா தாய்ப்பாலில் அரைத்து இரண்டு மூன்று சொட்டுக்கள் விட்டால் குழந்தை ஆரோக்கியமாகத்தூங்கும்..வயிற்றில் பொறுமல் மற்ற உபாதைகள் இருந்தால் காணாமல் போகும்..ஆனால் நமக்கு இன்று சொல்லித்தருபவை பழக்கத்தை மாற்றி ஏதோ கிரேப் வாட்டர்ஸ் மற்ற மருந்து பொருட்களைப் பயன்படுத்த....ஆகவே வீடுகளிலிருந்து ....மாற்றம் தேவை..

  பதிலளிநீக்கு
 12. உண்மை சமஸ்...அரசியல் வீடுகளிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.. ஏன் இன்னும் பிறந்த குழந்தைகளுக்கு உடை,பவுடர் டின்,படுக்கை,பால்பாட்டில் பயன்பாட்டிலிருந்தே ஆரம்பித்துவிடுகிறது. ஜாதிக்கா,மாச்சக்கா தாய்ப்பாலில் அரைத்து இரண்டு மூன்று சொட்டுக்கள் விட்டால் குழந்தை ஆரோக்கியமாகத்தூங்கும்..வயிற்றில் பொறுமல் மற்ற உபாதைகள் இருந்தால் காணாமல் போகும்..ஆனால் நமக்கு இன்று சொல்லித்தருபவை பழக்கத்தை மாற்றி ஏதோ கிரேப் வாட்டர்ஸ் மற்ற மருந்து பொருட்களைப் பயன்படுத்த....ஆகவே வீடுகளிலிருந்து ....மாற்றம் தேவை..

  பதிலளிநீக்கு