ஏன் உங்கள் கண்களுக்கு நல்லகண்ணு தெரியவில்லை?


எப்போதெல்லாம் நேர்மைக்கும் எளிமைக்கும் உதாரணமாக காமராஜரைக் குறிப்பிட்டு எழுதுகிறேனோ அப்போதெல்லாம் இடதுசாரி வாசகர்களிடமிருந்து காட்டமாக அழைப்புகள் வரும்: “நேர்மையான, எளிய அரசியலுக்கான உதாரணங்களைக் குறிப்பிடும்போதெல்லாம் எழுத்தாளர்கள் ஏன் கடந்த காலத்துக்குள் போய்ப் புகுந்துகொள்கிறீர்கள்? இன்றைக்கும் அப்படி வாழ்ந்துகொண்டிருக்கும் இடதுசாரித் தலைவர்கள் ஏன் உங்கள் கண்களுக்குத் தெரிவதில்லை?”


நேற்றும் அழைப்புகளுக்குக் குறைவில்லை. “தமிழகத்தில் அரசியல் மாற்றம் வேண்டும்; நேர்மையான, எளிமையான, தன்னலமற்ற, தொலைநோக்குள்ள அரசியல் தலைமை வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அதற்கு ஏன் சகாயம் என்ற ஒரு அரசு அதிகாரியை அரசியலுக்குக் கூப்பிட வேண்டும்? முக்கால் நூற்றாண்டாக அரசியலில் போராடிக்கொண்டிருக்கும் நல்லகண்ணுவின் நேர்மையும் எளிமையும் உங்களுக்குத் தெரியவில்லையா?”
 

தோழர்கள் எழுத்தாளர்களையோ, ஊடகவியலாளர்களையோ நோக்கி இக்கேள்வியைக் கேட்பதில் நியாயம் இல்லை. கோபாலபுரத்தையும் தோட்டத்தையும் மாறி மாறி தூக்கிச் சுமந்துவிட்டு, அடுத்து கோயம்பேட்டைத் தூக்கிச் சுமக்கத் தயாராகிக்கொண்டிருக்கும் தங்கள் தலைவர்களிடம் இக்கேள்வியைக் கேட்பதே நியாயமாக இருக்கும்.

அப்பட்டமாகத் தெரிகிறது தமிழகத்தில் உருவாகியிருக்கும் அரசியல் வெற்றிடம். இது அரை நூற்றாண்டில் உருவாகியிராத சூழல். அது இல்லாவிட்டால் இது என்று மாற்றி மாற்றி இதுவரை ஆட்சியில் அமர்த்திவந்த திமுக, அதிமுக இரு கட்சிகளையும் தூக்கி வீசும் மனநிலையில் இருக்கிறார்கள் பெரும்பான்மை மக்கள். அவர்களுக்குத் தேவை இப்போது நேர்மையான ஒரு தலைவர். மாற்றம் தரும் ஒரு இயக்கம். தமிழகத்தை இந்த ஊழல் அரசியல் கலாச்சாரத்திலிருந்து மீட்டெடுக்க ஒருவர் கிடைக்க மாட்டாரா எனும் ஏக்கத்தையும் பரிதவிப்பையும் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் பார்க்க முடிகிறது. இப்படிப்பட்ட சூழலில்கூடத் தன் முழு வாழ்வையும் போராட்டங்களுக்கு அர்ப்பணித்த நல்லகண்ணு போன்ற ஒரு தலைவர் மக்கள் கண்களுக்கு ஏன் தெரியவில்லை? இதற்கான அடிப்படைக் காரணம் என்ன? இடதுசாரிகளுக்கே அவர்களுடைய மகத்துவம் தெரியவில்லை; இடதுசாரிகள் கண்களுக்கே நல்லகண்ணு முதல்வர் வேட்பாளராகத் தெரியவில்லை.


இந்த வெள்ளத்தில் நல்லகண்ணுவின் வீடும் மூழ்கியது. வெள்ளத்தில் சிக்கியவரை மீட்பதற்குச் சென்றபோது, “இப்பகுதியில் உள்ள ஜனங்கள் முழுமையும் மீட்கப்படும் வரை நான் படகில் ஏற மாட்டேன்” என்று சொல்லியிருக்கிறார். நல்லகண்ணு வீட்டில் மட்டும் அல்ல; சங்கரய்யா வீட்டிலும் இதே கதி. அவரும் மக்களோடு நின்றிருக்கிறார். இருவருமே 90 வயதைக் கடந்தவர்கள். கட்சியில் மாநிலப் பொறுப்புகளை வகித்தவர்கள். இருவரும் தமக்கென ஒரு வீட்டைக்கூடக் கட்டிக்கொண்டவர்கள் அல்ல; இன்னும் ஆட்டோக்களில் செல்பவர்கள்.


நினைத்துப்பார்க்கிறேன், நல்லகண்ணுவோ சங்கரய்யாவோ முதல்வரானால் எப்படி இருக்கும் என்று! நாட்டு நிலைமை அப்படியே தலைகீழாக மாறிவிடும் என்று சொல்வதற்கில்லை. எனினும், இவ்வளவு மோசமான சூழல் இருக்காது. முக்கியமாக, மக்களால் அவர்களை அணுக முடியும். இன்றைக்கு திரிபுராவில் எப்படி மாணிக் சர்க்காரை ஒரு ஆட்டோக்காரராலும் எளிதாக வீட்டுக்குச் சென்று பார்க்க முடிகிறதோ அப்படிப் பார்க்க முடியும். தங்கள் பிரச்சினைகளைச் சொல்ல முடியும். கேள்வி கேட்க முடியும்.


நல்லகண்ணு, சங்கரய்யா மட்டும்தான் என்றில்லை. இடதுசாரித் தலைவர்கள் பலரைக் களத்தில் நேரில் பார்க்கும்போது வியந்திருக்கிறேன்.


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இன்றைய தமிழ் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். கட்சி அலுவலகத்தில் டீ, காபி பரிமாறும் சேவகராகக் கட்சிப் பணியைத் தொடங்கியவர். கடந்த கால் நூற்றாண்டில் தமிழக விவசாயிகள் எதிர்கொண்ட பெரும்பான்மைப் போராட்டங்களில் முன்வரிசையில் ஒலித்த குரல் அவருடையது. சி.மகேந்திரனும் அப்படித்தான். கூப்பிட்டால் ஓடிவருபவர்.
 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் கடலூரில் வேகமாக வளர்ந்துகொண்டிருந்த வழக்கறிஞர். வழக்காடும் தொழிலை விட்டுவிட்டுத்தான் கட்சி வேலைக்கு வந்தார். தோழி ஒருவரின் திருமணம் சமீபத்தில் நடந்தது. இடதுசாரி அரசியலைப் பின்னணியாகக் கொண்டது அவர்கள் குடும்பம். கல்யாண மண்டபத்தில் பந்தி பரிமாறும் இடத்தில் பரபரவென நின்றுகொண்டிருந்தார் ராமகிருஷ்ணன், வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு ஒரு தாய்மாமனைப் போல. இதுவரை தனக்கு மேல் உள்ள அரசியல் தலைவர்களைப் பற்றியும் வழிகாட்டிகளைப் பற்றியும் அரசியல்வாதிகள் எழுதிய புத்தகங்களைப் பார்த்திருக்கிறேன். ராமகிருஷ்ணன் எழுதிய ‘களப்பணியில் கம்யூனிஸ்ட்டுகள்’ புத்தகம் அரிதான உதாரணம். கட்சியில் தனக்குக் கீழே, அதுவும் அடிமட்டத்தில் உள்ள வயதான தொண்டர்கள் 54 பேருடைய வரலாற்றை இந்தப் புத்தகத்தில் எழுதியிருந்தார் ராமகிருஷ்ணன்.
 

கடலூர் வெள்ளத்தின்போது பாலகிருஷ்ணனின் பணியை அறிந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர். இந்த வெள்ளக் காலத்தில் கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கும் மேல் ராத்தூக்கம் இல்லாமல் மக்கள் மத்தியில் வேலை செய்துகொண்டிருந்தார் பாலகிருஷ்ணன். பழங்குடி மக்கள் வசிக்கும் உள்ளடர்ந்த கிராமங்களுக்கு அரசின் உதவி வாகனங்கள் செல்லாதபோது, கத்திக் கத்திப் பார்த்து, கடைசியில் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு உள்ளே போய், “இங்கிருந்து கிராமங்களுக்கு உதவி போய்ச் சேரும் வரை வெளியேற மாட்டேன்” என்று உள்ளிருப்புப் போராட்டத்தில் உட்கார்ந்துகொண்டவர். வெள்ள மரணங்களைக் குறைத்துக் காட்ட இருட்டடிப்பு வேலை நடந்தபோது, செத்தவர்களின் குடும்ப அட்டை முதல் இறப்புச் சான்றிதழ் வரை எல்லா ஆதாரங்களையும் கையில் வைத்துக்கொண்டு, கடலூர் ஆட்சியருடன் மல்லுக்கு நின்றவர். திண்டுக்கல் சட்டப்பேரவை உறுப்பினர் பாலபாரதி தனக்கென்று தனிப்பட்ட வாழ்க்கை ஒன்றே கூடாது என்று பொதுவாழ்க்கைக்காகத் திருமணத்தையும் மறுத்தவர். அரூர் சட்டப்பேரவை உறுப்பினர் டில்லிபாபுவைத் தங்களுடைய போராட்டக் கருவியாகவே வாச்சாத்தி மக்கள் பேசுவதை நேரடியாகக் கேட்டிருக்கிறேன். சுவரொட்டி ஒட்டும் இடத்திலும் உடன் நிற்கும் நன்மாறன், ஆசிரியர் பணியை உதறிவிட்டு பொது வாழ்க்கையை முழுநேரப் பணியாக வரித்துக்கொண்ட சுகந்தி, வியாசர்பாடி சேரிகளில் தம் பிள்ளைகளுக்கு வீரபாண்டியன் என்று பெற்றோர் பெயர் சூட்டும் அளவுக்கு அபிமானம் பெற்ற வீரபாண்டியன் எல்லோருமே ஆச்சரியங்கள்தான். ஒரு சாதாரண தொண்டரும்கூட தேசிய அளவிலான பல பிரச்சினைகளில் அரசியல் கூர்மையுடன் விவாதிக்கும் திறனையும் விழிப்புணர்வையும் பெற்றிருப்பதை இடதுசாரிகளிடம் சகஜமாகப் பார்க்க முடியும். ஆயிரம் இருந்தென்ன பிரயோஜனம்! இன்னும் மக்கள் விரும்பும் மாற்றத்துக்குத் தயாராகவில்லையே?

இனி கருணாநிதியும் வேண்டாம்; ஜெயலலிதாவும் வேண்டாம் என்று இடதுசாரிகள் முடிவெடுத்தது நல்ல முடிவு. ஆனால், யார் அந்த இடத்தில் உட்கார முடியும்; விஜயகாந்தும் வைகோவுமா? திமுக, அதிமுகவைவிட எந்த வகையில் மேம்பட்டவை தேமுதிகவும் மதிமுகவும்? தமிழக மக்கள் அந்தளவுக்கு ஏமாளிகள் இல்லை என்றாலும் - கடைசியில் தமிழக அரசியலை இவர்களிடம் கையளிப்பதற்காகவா இடதுசாரிகள் இத்தனை மெனக்கெட வேண்டும்?


தமிழகத்தில் ஏன் அரை நூற்றாண்டாக இரண்டு கட்சிகளைத் தவிர, வேறு ஒரு கட்சி ஆட்சிக்கு வர முடியவில்லை? வரலாற்றில் பதில் இருக்கிறது. அந்த இரு கட்சிகளைத் தவிர களத்தில் இருந்த எந்தக் கட்சிக்கும் தாம் ஜெயிப்போம் என்ற நம்பிக்கை அவர்களுக்கே இருந்ததில்லை. மக்கள் விரும்பும் முழு மாற்றங்களோடு அந்தக் கட்சிகள் திடமாகத் தம்மை முன்னிறுத்தியதில்லை.


தேர்தல் அரசியலின் அரிச்சுவடியையே அறியாதவர்களைக் கொண்டு ஒரு கட்சியைக்  கட்டியெழுப்பி, டெல்லியில் ஒரு வருஷத்துக்குள் ஆட்சியையும் பிடிப்பது ஒரு அர்விந்த் கெஜ்ரிவாலால் முடியும் என்றால், 90 வருஷ அரசியல் பாரம்பரியம் கொண்ட இடதுசாரிகளால் முடியாதா? முடியும். தன்னம்பிக்கை வந்தால் முடியும். மக்கள் விரும்பும் முழு மாற்றத்தோடு வந்தால் முடியும். மக்களிடம் பணியாற்றும் கடைமட்டத் தொண்டனின் உணர்வுகளைத் தலைமையின் முடிவுகள் அப்படியே பிரதிபலித்தால் முடியும்!


முன்பு ஒருநாள் நல்லகண்ணுவிடம் பேசிக் கொண்டிருந்தபோது சொன்னார், “இந்தியாவுல பொதுவுடைமை இயக்கத்தோட எழுச்சி இடதுசாரி இயக்கங்கள் ஒண்ணு சேர்றதுல ஆரம்பிக்கணும். இந்த மாற்றம் இயக்கத்தோட தேவை மட்டும் இல்ல; இந்தியாவோட தேவை!”


எந்த மாற்றத்திலும் தாம் தொடக்கப்புள்ளியாக இருப்பதில் பெருமிதம் கொள்பவர்கள் தமிழர்கள்!


டிசம்பர்,  2015 ‘தி இந்து’

24 கருத்துகள்:

 1. Because these communists forgot EMS and started leading a different path in late 70s it self . Have you forgotten KR Gowri of CPM- who was denied CM's post by the very same party?

  பதிலளிநீக்கு
 2. மனதார நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் ;நேர்மையளர்களை வெளிச்சமிட்டு காட்டியதற்காக...!

  பதிலளிநீக்கு
 3. Good study. I remember, CPM contested separately in some bye elections. Chennai Saidapet is one. How much vote they got? People talk good about left political parties and their policies, but when coming to vote, it is something else. What is in the mind of the people, what makes them to vote to these existing ruling parties only whom they blame before election? This is what Mr. Samas have to study and write.
  P.Viswanathan

  பதிலளிநீக்கு
 4. ‘களப்பணியில் கம்யூனிஸ்ட்டுகள்’ புத்தகத்தை படிக்காமலேயே படித்தது போல் உணர்கிறேன்...

  பதிலளிநீக்கு
 5. சபாஷ்... சமஸ்..!
  🙆🙆🙏🙏
  "உங்கள் கண்களுக்கு நல்லகண்ணு தெரியவில்லையா?" சரியான சாட்டையடி..! செவ்வணக்கம்... சமஸ் அவர்களே..!

  அதுவும் வீர வெணிமணி தினத்தில் தங்களின் கட்டுரை சாலப்பொருத்தம்..! முதல்வர் சகாயம் கட்டுரையைப் பார்த்து விமர்சித்து ஒரு பதிவு போட்டிருந்தேன்.

  அப்பொழுதுகூட முகநூல் தோழர் சந்திரமோகன், கோபமும் எரிச்சலும் வேண்டாம் என்று கூட, எனக்கு பதிவு போட்டிருந்தார்! அதில்கூட மீண்டும் நான் எரிச்சல் துளியுமில்லை; ஒருவேளை கோபம்கூட இருக்கலாம்; ஆனால் சமஸின் எழுத்தை ரசித்து ருசிப்பவர்களில் நானும் ஒருவன் என பதிவிட்டிருந்தேன்!

  சபாஷ்... சமஸ்..!

  பதிலளிநீக்கு
 6. at least now people are now talking about leaders like nallakannu after the youth's upsurge to bring in sagayam to politics.Think it in a positive way, its not about sagayam sir a single man but a symbol he has been made youth interested in corruption free politics.

  பதிலளிநீக்கு
 7. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 8. சமஸ் நிச்சயமாக உங்களின் இந்த கட்டுரை கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு மக்களின் மத்தியில் குறிப்பிடத்தகுந்த செல்வாக்கை உயர்த்தியிருக்கும் .தோழர் சங்கரய்யா ,தோழர் நல்லகண்ணு அவர்களை பற்றி எழுதும் முதலாளித்துவ பத்திரிகைகள் அவர்கள் உடையை அவர்களே துவைத்து கொள்வார்கள் என்று மட்டுமே எச்சரிக்கையாக எழுதுவார்கள்.அதற்கு மேல் எழுதுவதற்கு மை இருக்காது .தங்களின் கட்டுரையில் அதை விட கூடுதலான விபரம் இருக்கிறது .சகாயத்தை போலே கம்யூனிஸ்ட்களின் மீது ஊடக வெளிச்சம் படுவதில்லை. மக்கள் நல கோரிக்கைகளை முன்னிறுத்தி மாநில அளவிலான இயக்கங்களை நடத்தினாலும் அது பற்றிய பெட்டி செய்தி போட்டு மூடி மறைத்து விடுவார்கள்.சகாயத்தின் மீது விழும் ஊடக வெளிச்சமும் செய்தியை விற்பதற்கு தானே தவிர சமூக மாற்றத்திற்கு ஆனது அல்ல. நடந்த ஊழலை சகாயத்தால் கண்டு பிடிக்க முடியுமே தவிர ஊழல் நடை பெறுவதை ஒருபோதும் தடுக்க முடியாது .ஏனெனில் இங்கு ஆட்சி செய்வோரின் தத்துவம் முதலாளித்துவம் .ஊழல் முதலாளித்துவத்தின் ஒரு சக்கரம் அது இல்லையானால் வண்டி நின்று விடும் .உழைக்கும் மக்களின் மீதான சுரண்டலை மறைப்பதற்கு சுரண்டலால் உருவாக்கப்படும் ஊழல் பெரிதாக காட்டப்பட்டு வருகிறது . தங்களை போன்ற பத்திரிக்கை கட்டுரையாளர்களும் சுரண்டலிலிருந்து தான் ஊழல் உருவாகிறது என்பதை உணரமறுக்கின்றீர்கள் அல்லது மறைக்கின்றீர்கள் .ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுக்கு உண்மையில் வாய்த்த இரண்டு கைகளை தவிர சர்வவல்லமை பெற்ற பலநூறு கைகள் வாய்த்தவன் போலே அவனை பிம்பபடுத்தி எழுதி அசத்துவதற்கு உங்களை போன்றவர்கள் முதலாளித்துவ ஊடகத்திற்கு வாய்க்கும் போது கேட்கவா வேண்டும்.தற்போது கம்யூனிஸ்ட் கட்சிகள் எடுத்துள்ள நிலை மேல் உள்ள வரிகளோடு பொருத்தி புரிந்து கொள்வீர்களேயானால் சரியானதாகும் .திமுக வையும் அதிமுக வையும் இன்று உதறியது போலே நாளை மக்கள் நலகூட்டணி கட்சிகளிலிருந்தும் தன்னை விடுவித்து கொள்ள வேண்டியதிருக்கும்.கம்யூனிஸ்ட் கட்சி முன்னேறுவதற்கு முதலாளித்துவ கட்சிகள் ஒரு ஏணியாக இருக்க வேண்டியது சமூகம் மாற்றம் பெறுவதற்கான விதிகளுள் ஒன்றாகும் . அதற்கு இன்னும் அறுபது ஆண்டுகள் ஆனாலும் தவறில்லை .அர்விந்த் கெஜ்ரிவால் மாற்றம் எத்தகைய முன்னேற்றத்தை கொண்டுவருகிறது என்பது போகபோக தான் தெரியும் .அவருடைய ஆட்சி தத்துவம் என்ன? கம்யூனிஸ்ட் கட்சி இந்த தேசத்தை ஆட்சி செய்வதை விட கம்யூனிஸ சித்தாந்தம் ஆட்சி புரிய வேண்டும்.புலி என்ற திரைபடத்தில் அத்தனை சினிமா ஜிகினாதனங்களுக்கும் ஊடே அரசே தேவை இருக்காது என்ற வசனம் உச்சரிக்கப்படும் அது கம்யூனிஸ சமுதாயத்தில் தானே நிகழமுடியும்!!!! .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அருமை... அருமை...! சமஸ் கட்டுரையின் தொடர்ச்சியாக இருந்தது! பெருமை.. பெருமை..!

   நீக்கு
 9. ஒரு சிறந்த மனிதர் ...இளைய சமுதாயத்துக்கு வழிகாட்ட தகுதியானவர் ...நேர்மைக்கு உதாரணமாக வாழ்ந்து கொண்டிருப்பவர் ...

  பதிலளிநீக்கு
 10. ஆச்சரியப்பட வைக்கிற இடது சாரி தலைவர்களில் ஒருவராய்,,/வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 11. //ஆயிரம் இருந்தென்ன பிரயோஜனம்! இன்னும் மக்கள் விரும்பும் மாற்றத்துக்குத் தயாராகவில்லையே?//
  ஆழ்ந்து யோசிக்க வேண்டிய வரிகள். ...

  பதிலளிநீக்கு
 12. சமஸ் கம்யூனிசத்தை நேசிக்கின்றவர்கள் அனைவரும் உங்கள் கட்டுரையை விரும்பி வரவேற்பார்கள் என்பதில் ஐயமில்லை. ஆனாலும் தமிழக அரசியலில் ஒரு மாற்றத்தை உருவாக்க மக்கள் நலக்கூட்டணி முயலுகின்ற சூழலில் அவர்களின் ஒற்றுமையை சீர்குழைக்க முயலுகின்ற மாதிரி தங்கள் கட்டுரை இருக்கிறது. மக்களின் ஏகோபித்த ஆதரவு கம்யூனிஸ்ட் களுக்கு திரளுகின்ற போது உங்களின் அவா நிச்சயம் நிறைவேறும். தற்போது தங்களுக்கும், தி இந்து நாளிதழுக்கும் உள்ள உண்மையான நோக்கம் புரியவில்லை.

  பதிலளிநீக்கு
 13. You very rightly pointed the reasons. It's just lack of self confidence of the party to project nallakannu thozhar as CM CANDIDATE. What's wrong. Just see what Kerala is doing

  பதிலளிநீக்கு
 14. My question is simple, why media didn't project Communist parties when they decide to contest alone in the election .
  When youth of india decide to bring Sagayam, media asks why not Nallakannu and other communist candidates.

  As you said, no third leader or party didn't have confidence of TN leadership.
  So this new generation trying to bring Sagayam who s known for them.

  பதிலளிநீக்கு
 15. 3 weeks before I registered my views projecting Sri. Nallakkannu asCM of TN with Rangarajan,GR, Mhendran & Thiruma as cabinet ministes. A Muslim as minister for HR & C minister & a devout Christian as minister for minorities.

  பதிலளிநீக்கு
 16. 3 weeks before I registered my views projecting Sri. Nallakkannu asCM of TN with Rangarajan,GR, Mhendran & Thiruma as cabinet ministes. A Muslim as minister for HR & C minister & a devout Christian as minister for minorities.

  பதிலளிநீக்கு
 17. நல்ல கட்டுரை! எனக்கும் இடதுசாரியினரைப் பிடிக்கும். ஆனால், அவர்களின் கொள்கைகள் தமிழ்ச் சூழலுக்கும் தமிழ் மக்களுக்கும் எந்த அளவுக்கு உவப்பானவையாக இருக்கின்றன எனப் பார்க்கும்பொழுது நமக்கு ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது.

  இடதுசாரிகள் மீண்டும் மீண்டும் தி.மு.க, அ.தி.மு.க ஆகியவற்றின் பின்னால் போவதை நானும் கண்டிக்கிறேன். ஆனால், அவர்கள் ஆட்சிக்கு வராமல் போக அது மட்டுமே காரணம் என்பது போலவும், தனித்து நின்றால் பொதுவுடைமைக் கட்சிகள் தமிழ்நாட்டுச் சட்டப்பேரவையையே கைப்பற்றி விட முடியும் என்பது மாதிரியும் நீங்கள் எழுதியிருப்பது எப்பேர்ப்பட்ட சிந்தனையாளனும் தனக்குப் பிடித்தவர்களைப் பற்றிச் சிந்திக்கும்பொழுது கொஞ்சம் சறுக்கித்தான் விடுகிறான் என்பதையே காட்டுகிறது.

  தமிழ்நாட்டைப் பொறுத்த வரை இங்கு எந்த தேசியக் கட்சிக்கும் மக்கள் மனதில் இடமில்லை. காரணம், விடுதலையடைந்த நாள் தொட்டு இன்று வரை இந்திய தேசியம் தமிழ் மக்களை ஒருபொழுதும் இந்தியர்களாக மதித்ததில்லை. இந்திய தேசியத்தைப் பற்றிய கருத்தில் வடகிழக்கு மாநிலங்களுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் உள்ள வேறுபாடுகள் மிகச் சிலவே.

  பொதுவுடைமை என்பது ஒரு கோட்பாடு. அதை எந்த நாட்டிலும் நாம் கடைப்பிடிக்கலாம். ஆனால், அஃது அந்தந்த நாட்டு மக்களின் பார்வையிலிருந்து, அந்த மண்ணின் தேவைக்கேற்ப அமைவதாக இருக்க வேண்டும். மாறாக, தமிழ்நாட்டுப் பிரச்சினை ஒன்றில் என்ன நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்பதை உலகின் இன்னொரு கோடியில் இருக்கும் இரசிய - சீனப் பொதுவுடைமைக் கட்சிகளின் நிலைப்பாட்டோடு ஒத்துக் கடைப்பிடிப்பது உலக மகா பித்துக்குளித்தனம் மட்டுமல்ல, கடைந்தெடுத்த அரசியல் அயோக்கியத்தனமும் கூட. இப்படியொரு நிலைப்பாட்டிலிருந்து மாறாத வரை இன்றோ நாளையோ இல்லை, இன்னும் ஓராயிரம் ஆண்டுகளானாலும் தமிழ்நாட்டில் பொதுவுடைமைக் கட்சிகள் ஆட்சியைப் பற்றிக் கனவு காண முடியாது. நல்லகண்ணு ஐயா மட்டுமில்லை, அவரைப் போல் இன்னும் எத்தனை இலட்சம் நல்லவர்கள் வந்தாலும் அது நடக்காது. அது நல்லகண்ணு ஐயா போன்ற நல்லவர்களின் தோல்வி மட்டுமில்லை, இங்குள்ள பொதுவுடைமைக் கட்சிகளின் தோல்வி மட்டுமில்லை, அஃது உண்மையில் பொதுவுடைமைக் கோட்பாட்டின் தோல்வி! அதே நேரம், தமிழ் மக்களுக்கான பேரிழப்பும் கூட!

  பதிலளிநீக்கு
 18. சரியான தடத்தில் கட்டுரை எழுதப்பட்டுள்ளது என எண்ணி முடிப்பதற்குள் உங்கள் போன்ற சிந்தனயாளர்களும் சறுக்கிவிட்டீர்களோ என தோன்றுகிறது. ரசிய-சீன கம்யூனிஸ்ட் கட்சிகளின் வழிகாட்டுதலில் நடப்பதாக சொல்லுவதை வைத்து.

  பதிலளிநீக்கு