கொல்வது பயம்


இந்தியப் பின்னணியில் எடுக்கப்பட்ட ஹாலிவுட் படம் ‘லைஃப் ஆஃப் பை’. எழுத்தாளர் யான் மார்ட்டலின் நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. ஒரு சின்ன குடும்பம் கதாநாயகன் பையினுடையது. அம்மா, அப்பா, அண்ணன், பை. வாழ்க்கைச் சூழல்களால் பாண்டிச்சேரியைக் காலிசெய்துவிட்டு புறப்படுகிறது பையின் குடும்பம். கப்பலில் பயணம். கடலில் கடும் புயலில் கப்பல் சிக்குகிறது. அம்மா, அப்பா, அண்ணன் எல்லாரையும் பையின் கண் முன் கடல் காவு கொள்கிறது. பை மட்டும் உயிர் தப்புகிறான் ஒரு படகில். கூடவே ஒரு வரிக்குதிரை, ஒரு ஓநாய், ஒரு குரங்கு, ஒரு புலி. யாவும் கப்பலிலிருந்து தப்பியவை. ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டவர்கள். எல்லோருக்கும் பசி. முதலில் வரிக்குதிரையை ஓநாய் கொல்லும். அடுத்து குரங்கைக் கொல்லும். அப்புறம் அந்த ஓநாயைப் புலி கொல்லும். இப்போது மிச்சம் இருப்பது புலியும் பையும். கடும் பசி. இருப்பது நடுக்கடலில். அடிக்கடி அவரவர் இருப்புக்கான சண்டை. இதனிடையே மீண்டும் ஒரு புயல். அந்தப் பயணம் எப்படி முடிகிறது?

ஆன்ம விசாரணை நடத்தும் ஒரு ஆத்மார்த்த அனுபவம் ‘லைஃப் ஆஃப் பை’. நிறைய விஷயங்களைப் படம் பேசும். எது கடவுள்? எது எதிரி? முக்கியமாக, ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டவர்கள் முற்றிலும் எதிரானவர்களும்கூட எப்படி ஒரு பயணத்தை எதிர்கொள்ள முடியும்? படத்தில் ரொம்பவும் பிடித்த வசனம் இது. தண்ணீரைப் பார்த்து மிரளும் சிறுவன் பையிடம் அவனுடைய மாமா சொல்வார், “ஒரு வாய் தண்ணி உன்னை மூழ்கடிச்சுடாது; ஆனா, பயம் மூழ்கடிச்சுடும்.”

இயக்குநர் ஆங் லீ இந்தப் படத்துக்காக ஆஸ்கர் விருது பெற்றார். சென்னை வந்திருந்தபோது அவரைச் சந்தித்தேன். வாழ்க்கைக்கும் பயத்துக்கும் உள்ள தொடர்பைப் பற்றிப் பேச்சு போனது. எழுத்தாளர் யான் மார்டல் நாவலில் குறிப்பிடுவதை ஆங் லீ நினைவுகூர்ந்தார். “பயம்தான் வாழ்க்கையின் உண்மையான எதிரி. பயம் மட்டுமே நம் வாழ்க்கையைத் தோற்கடிக்க முடியும். அது ஒரு புத்திசாலித்தனமான, நயவஞ்சகமான எதிரி... ஈவிரக்கமற்றது அது. உங்கள் மனதின் மிகவும் பலவீனமான இடத்தை இலக்கு வைத்து அது தாக்கும்; அந்த இடத்தைக் கண்டுபிடிப்பதில் அதற்குச் சிரமமேதும் இருப்பதில்லை. அது, எப்போதுமே உங்கள் மனதிலிருந்துதான் தொடங்கும்… பயம் என்பது ஒரு பிரமைதான். ஆனால், அது உங்களைத் தோற்கடித்துவிடுகிறது!”

இன்றைய இந்தியா உண்மையில் உயிரோடிருப்பது இயக்கங்களால் அல்ல; நேர்மையான நோக்கமும், அர்ப்பணிப்புணர்வும் கொண்ட தனிநபர்களே அதன் உயிர்த் துடிப்பாக இருக்கிறார்கள். அவர்களே நாம் சார்ந்திருக்கும் உளுத்துப்போன அமைப்பை இன்னும் நியாயப்படுத்தக் காரணமாகவும் இருக்கிறார்கள். இந்திய அரசியலும் இதற்கு விதிவிலக்கு அல்ல. ஏன் இந்தியாவில் அரசியல் இத்தனை அசிங்கமாக இருக்கிறது? ஏன் பொதுநல நோக்கோடு அசாத்தியமான காரியங்களை நிகழ்த்துபவர்கள் இந்தியாவில் அரசியலுக்கு வெளியே இருக்கிறார்கள்? காரணங்களை அடுக்கலாம். முக்கியமானது பயம். ஆதிக்கத்துக்கும் அநீதிக்கும் எதிராக இந்நாட்டு மக்களை ஒருங்கிணைப்பதில் உள்ள சிக்கல் என்ன? மக்களுக்கு ஆதிக்கத்தின் மீதும் அதிகாரத்தின் மீதும் இருக்கும் பயம். பல நூறு ஆண்டுகள் நிலப்பிரபுத்துவ ஒடுக்குமுறை ஆட்சி நிலவிய இந்நாட்டில், நம்முடைய மரபணுக்களிலேயே அடிமைத்தனமும் கோழைத்தனமும் அதீதமாய்ப் படிந்திருக்கின்றன. அதிகார சக்திகள் ஒரு மாய ஆயுதமாகவே பயத்தை இங்கு வளர்த்தெடுத்திருக்கின்றன.

துல்லியமாக இதைக் கவனித்தவர் காந்தி. இந்திய அரசியலுக்கு காந்தி அளித்தவற்றிலேயே ஆகச் சிறந்த பங்களிப்பு இந்தக் கோழைத்தனத்திலிருந்து மக்களை மீட்டெடுத்தது. “பயம்தான் உண்மையான எதிரி” என்றார் காந்தி. “ஒருவன் அச்சத்துக்கு ஆட்பட்டுக் கிடக்கும்வரை அவனால் சத்தியத்தைப் பின்பற்றி அன்பு வழியில் போக முடியாது. கோழைகள் ஒருபோதும் அறநெறியினர் ஆக முடியாது” என்றார். முக்கியமாக, படித்தவர்கள் பயத்துக்கு ஆட்பட்டுக் கிடப்பதைப் பெரும் சாபமாகப் பார்த்தார். 1915-ல் இந்தியாவைப் புரிந்துகொள்ள நாடு தழுவிய சுற்றுப்பயணம் மேற்கொண்டார் காந்தி. பின் சொன்னார்: “இந்தியாவில் நான் அலைந்து திரிந்தபோது ஒன்றைக் கண்டுகொண்டேன். அதாவது, படித்த மக்கள் அச்சத்தில் உறைந்து கிடக்கிறார்கள். பொது இடங்களில் நாம் வாயை மூடிக்கொண்டிருக்கிறோம்… பொதுவெளியில் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுகிறோம்… கடவுள் மட்டுமே நாம் பயப்பட வேண்டியவர்… வேறெந்த மனிதரிடமும் அவர் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் பயப்பட வேண்டியதே இல்லை.”

காந்தி அஹிம்சையைப் போதித்தவர். உயிர் துறக்கும் கடைசி நொடி வரை வன்முறையை எதிர்த்தவர். ஆனால், அதே காந்திதான் சொன்னார், “வன்முறை வெறுக்கத் தக்கது. ஆனால், கோழைத்தனம் வன்முறையைவிடவும் வெறுக்கத் தக்கது!”

ஒரு ரூபாயை நம்மிடமிருந்து ஒருவர் பிடுங்கிச் செல்வதை நம் மனம் ஏற்பதில்லை. நம் உயிரை, உற்ற உறவுகளை, உடைமைகளை, தேசத்தை, நம் எதிர்காலத்தை என்று சகலத்தையும் சூறையாடப் பின்னின்று அனுமதிக்கிறார்கள் ஊழல் அரசியல் வாதிகள். எது போராடவிடாமல் நம்மை அடங்கிப்போக வைக்கிறது? சுயமரியாதையையும் கண்ணியத்தையும் காப்பாற்றிக்கொள்ளும் தைரியம்கூட இல்லையென்றால், நாம் பெற்ற கல்வியால் என்ன பயன்?

வெள்ளம், வெள்ளம், வெள்ளம் என்று எங்கு பார்த்தாலும் அலறல்கள். மனித உயிர் பிறப்பதற்கு முன்பே நீரோடு உறவாடத் தொடங்கிவிடுகிறது. மனித இனம் பெருங்கடலையும் பேராறுகளையும் கையாளக் கற்று குறைந்தது சில ஆயிரம் ஆண்டுகள் ஆகின்றன. ஒரு வாய் தண்ணீர் நம்மைக் கொல்லக் கூடியது அல்ல; கொல்வது ஊழல் அரசியல்; கொல்வது அரசியலுக்கும் நமக்கும் இடையேயான தூரம்; கொல்வது அரசியல் உணர்வற்ற நம்முடைய அறியாமை; கொல்வது கோழைத்தனம்; கொல்வது பயம்!


டிசம்பர் 2015, ‘தி இந்து’

4 கருத்துகள்:

  1. "கொல்வது அரசியல்" என்று தலைப்பு இன்றைய மக்கள் நிலைமைக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. என்னை சுற்றி நடக்கும் அரசியல் செயல்பாடுகளை உங்களின் கட்டுரைகள் மற்றும் தமிழ் ஹிந்து வின் அரசியல் தொடர்பான கட்டுரைகள் மூலம் தான் இப்பொது சிறுது அறிகிறேன் , உங்கள் ஊடகத்தின் வழியாக தொடர்ந்து இது போன்ற அவசியமான பதிவுகள் இடம்பெற வேண்டுகிறேன் , ஒரு நிகழ்வின் காரணிகளை தொடர்ந்து பதிவிடுமாறு வேண்டுகிறேன் , மற்ற ஊடகங்கள் மலிவான செயல்பாடுகளை தொடர்ந்து முன்னிலை படுத்துகின்றன , மதுவிலக்கு தொடர்பான போரட்டங்கள் நடைபெற்றது ஆனால் அதன் அவசியம் குறித்து நீண்ட நாட்களுக்கு விவாதம் இன்றி அடுத்த செய்தியை பிடித்துகொண்டன, நான் வேண்டுவது உங்களிடம் அரசியல் தொடர்பான விவாதங்களை தொடர்ந்து நடத்த வேண்டும் என்பதே .

    பதிலளிநீக்கு
  3. எங்கோ தொடங்கி... எங்கெங்கோ பயணித்து... எதையெதையோ தொட்டுச் சென்று இற்றை நாளின் மையப் புள்ளியில் நிறைவு செய்து அசத்தி விட்டீர்கள்! உங்களுடைய ஒரு பதிவைக் கூட விரும்பினாலும் தவிர்க்க முடிவதில்லை!

    பதிலளிநீக்கு
  4. "இன்றைய இந்தியா உண்மையில் உயிரோடிருப்பது இயக்கங்களால் அல்ல; நேர்மையான நோக்கமும், அர்ப்பணிப்புணர்வும் கொண்ட தனிநபர்களே அதன் உயிர்த் துடிப்பாக இருக்கிறார்கள். அவர்களே நாம் சார்ந்திருக்கும் உளுத்துப்போன அமைப்பை இன்னும் நியாயப்படுத்தக் காரணமாகவும் இருக்கிறார்கள். இந்திய அரசியலும் இதற்கு விதிவிலக்கு அல்ல. ஏன் இந்தியாவில் அரசியல் இத்தனை அசிங்கமாக இருக்கிறது? ஏன் பொதுநல நோக்கோடு அசாத்தியமான காரியங்களை நிகழ்த்துபவர்கள் இந்தியாவில் அரசியலுக்கு வெளியே இருக்கிறார்கள்? காரணங்களை அடுக்கலாம்..." மிக அருமையான உங்களின் கட்டுரையில் எனக்குச் சற்று நெருடலாக இருக்கும் பகுதி இதுதான்.விடுதலைப் போராட்ட காலந்தொட்டு இன்று வரையிலும் இந்திய மக்களின் உண்மையான மீட்சிக்காகத் தங்களின் இன்னுயிரை ஈந்தும்,சொத்து சுகங்களை இழந்தும் சாதி,மத,வர்க்கச் சுரண்டலுக்கு எதிராகக் களத்தில் நிற்கும் எண்ணற்ற மனிதர்கள்--அன்று,அன்று மாமனிதர்கள்--ஊடக வெளிச்சம் படாத உத்தமர்கள்--எத்தனையோ பேர் பொதுவுடைமை இயக்கங்களில் இருந்தார்கள்; இன்றும் இருக்கிறார்கள்--தனியர்களாக அன்று; 'அரசியல்வாதி'களாக! 'அரசியல்வாதி'எனும் சொல்லுக்கு முழுப் பொருளைத் தரும் அற்புத மனிதர்களாக! நீங்கள் வழிபடும் காந்தியத்தின் சிறப்பான தனி மனித ஒழுக்கங்களுடன் அவர்கள் ஆர்ப்பாட்டமின்றித் தம் கடமையை ஆற்றி வருகிறார்கள்.அவர்களைப் பற்றிப் பாராட்டு ஏதும் இல்லையெனினும் போகிற போக்கில் ஒரு சிறு குறிப்பேனும் இடம் பெற்றிருக்க வேண்டும். அது இல்லாததற்குக் காரணம் அப்படி வெளிப்படையாகச் சொன்னால் எங்கே நமக்கோர் அரசியல் சாயம் பூசப்பட்டு விடுமோ என்கிற அச்சம் உங்கள் மனதிலும் உள்ளதாலா? அல்லது அப் பொதுவுடைமைக் கட்சிகளிலும் உள்ள சில 'கருப்பாடு'களைக் கண்டு ஒட்டுமொத்த அமைப்புமே பத்தோடு பதினொன்றுதான் எனும் தங்களின் கணிப்பா? அதே சமயம், முதலில் மாற்றப்பட வேண்டியது எது? போகாத ஊருக்கு வழிகாட்டுகிற 'தனியரின் மனமாற்றமா' அல்லது அத் தனியர் விரும்பினாலும் அவரைத் தன்னலச் சிமிழுக்குள் சிறைப்படுத்தும் அவரையும் உள்ளடக்கிய சமூக வாழ்க்கைச் சூழலா? வண்டிக்கு முன் குதிரையா அல்லது குதிரைக்கு முன் வண்டியா? இது ஏதோ முதலில் வந்தது கோழியா, முட்டையா என்பது போன்ற முடிவற்ற கேள்வியன்று; ஏற்கெனவே 1917 தொடங்கி இன்று வரை தொடர்ந்து இவ்வுலகில் ஆங்காங்கே நடைபெற்று வரும் கள ஆய்வுகளில் மெல்ல மெல்ல அவிழ்க்கப்பட்டு வரும் புதிர்! ஆம்! இச் சமூக வாழ்க்கையில் காணப்படும் அத்தனை அநியாயங்களையும் வெறுக்கிற என்னைப் போன்ற தனியர்களை ஓரணியில் திரட்ட உதவுகிற ஓர் அரசியல் அமைப்பில் கூட்டாக இயங்கினால் மட்டுமே அவற்றுக்கு முடிவு கட்டுவதற்கான அடித்தளத்தைப் போட முடியும். இவ்வுலகில் இதுவரை நடந்திருக்கிற எந்தவொரு சமூக மாற்றமும் எந்தவொரு தனி மனிதனாலும் சாதிக்கப்பட்டதன்று! அவ்வக் காலகட்டத்துக்கேற்ற இலக்கைச் சரியாகப் புரிந்துகொண்டதொரு தனியரால் அல்லது அவரைப் போன்ற சிலர் சேர்ந்த குழுக்களால் வழிநடத்தப்பட்ட இயக்கங்களால்தான். இதைச் சொல்ல நீங்களும் அஞ்சுகிறீர்களா அல்லது உங்களின் பணியிடம் அதை அவ்வளவு அப்பட்டமாகச் சொல்ல அனுமதிக்காதா?

    பதிலளிநீக்கு