மனிதப் பேரவலம்!

நன்றி: படம்: தோழர் ஆர்.ஆர்.சீனிவாசன்
திர்பாராதது அல்ல. அப்படிச் சொன்னால், அது பெரும் பாவம்! சென்னை இந்தப் பருவத்தில் எதிர்கொள்ளும் கடும் மழையை அக்.16-ம் தேதி அன்று நண்பர் கணேஷ் சொன்னார். அவர் கையிலிருந்த வானிலை அறிக்கை சொன்னது. சரியாக ஒரு மாதம் கழித்து, நவம்பர் 14-ல் சென்னை கடும் மழையை எதிர்கொண்டது. நகரம் ஸ்தம்பித்தது. அடுத்த கடும் மழை நவம்பர் 22-ம் தேதி என்றது முன்னெச்சரிக்கை. நவம்பர் 30-ல் எதிர்கொள்ளவிருக்கும் மழை இவற்றின் உச்சமாக இருக்கும் என்பதையும் அப்போதே கணேஷ் சொன்னார்.

கணேஷ் வானிலை ஆய்வாளர் அல்ல. வானிலை ஆய்வு மையம் தரும் அறிக்கைகளைச் செய்திகளாகத் தரும் செய்தியாளர். வானிலை ஆய்வு மையங்கள் இப்படி முன்கூட்டி அறிக்கை தருவதன் முதன்மை நோக்கம், மக்களை எச்சரிப்பது மட்டும் அல்ல; அரசாங்கங்களை எச்சரிப்பதும் ஆகும்; ஆட்சியாளர்கள் முன்கூட்டித் திட்டமிடவும் மக்களைக் காக்கவுமான நடவடிக்கைகளை எடுக்கப் போதிய அவகாசத்தை உருவாக்கிக் கொடுப்பதும் ஆகும். கணேஷ் என்னிடம் பகிர்ந்துகொண்ட அறிக்கைகள் முதல்வர் அலுவலகத்துக்கும் தலைமைச் செயலாளர் அலுவலகத்துக்கும் உடனுக்குடன் செல்லக்கூடியவை என்பதைக் குறிப்பிட வேண்டியதில்லை.

சென்னை இப்போது எதிர்கொண்டிருக்கும் மழை 100 வருஷங்களில் காணாதது என்று பேசுகிறார்கள்; எழுதுகிறார்கள். 100 வருஷங்கள் முன் இருந்த சூழல் எங்கே; இன்றைக்கு இருக்கும் நவீன வசதிகள் எங்கே? 1000 வருஷங்கள் காணாத மழைகூடப் பெய்யலாம். மழையைத் தடுக்க முடியாது. ஆனால், மழையால், வெள்ளத்தால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க முடியும். உயிரிழப்புகளைக் குறைக்க முடியும். வெள்ளத்தின் தொடர்ச்சியாக வீடிழந்து, உடைமைகளை இழந்து, வீதிகளில் மக்கள் பராரியாகத் திரிவதைத் தடுக்க முடியும். அண்டக் கிடைக்கும் கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள், மண்டபங்கள், ரயில்கள், லாரிகளில் ஒருவேளைச் சோற்றுக்கும் ஒரு மடக்குத் தண்ணீருக்கும் அலைபாய்வதைத் தடுக்க முடியும். தண்ணீர் இல்லாமல், இயற்கை உபாதைகளை அடக்கிக்கொண்டு வயிற்றைப் பிடித்துக்கொண்டு பெண்கள் உட்கார்ந்திருக்கும் வலியைத் தடுக்க முடியும். முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், சிசுக்கள் என்று வகைதொகை இல்லாமல் நூற்றுக்கணக்கில் அடைபட்டிருக்கும் ‘முகாம்’களில் ஒரு மெழுகுவத்தி வெளிச்சம்கூட இல்லாமல் இரவுகளைக் கழிக்கும் அவலத்தைத் தடுக்க முடியும்.

சென்னையில், தமிழகத்தின் தலைநகரில், அதன் மையப் பகுதியான சைதாப்பேட்டையில் மக்கள் அனுபவித்துவரும் சித்ரவதைகளையும் அவர்கள் வடிக்கும் ரத்தக் கண்ணீரையும் கண்ணெதிரே பார்த்து எழுதுகிறேன், முகம் தெரியாத அரசு ஊழியர்கள் உயிரைக் கொடுத்து உழைக்கிறார்கள்; ஆனால், அரசியல்வாதிகளை முகமாகக் கொண்ட அரசாங்கம் என்று ஒன்று இங்கே இல்லவே இல்லை!

நள்ளிரவில் அவர்கள் வீட்டின் கதவு தட்டப்பட்டபோதே, அவர்களுடைய வீதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து வந்திருக்கிறது. போலீஸ்காரர்கள் ஓடி வந்திருக்கிறார்கள். “செம்பரம்பாக்கம் ஏரியில தண்ணி நெறையத் தொறந்துவிட்டிருக்காங்களாம்மா. கரை உடைச்சிக்கிட்டு ஊருக்குள்ள தண்ணி வந்துரும்னு சொல்றாங்க. சீக்கிரம் கெளம்புங்க.” தண்ணீர் வருவதற்கு முன்னரே மின்சாரம் போய்விட்டது. அந்த இருட்டில் வீடு வீடாக போலீஸ்காரர்கள் ஏறி இறங்கும் முன் பல வீடுகளில் தண்ணீர் புகுந்துவிட்டது.

மக்கள் மழையில், இருட்டில் இடம் தேடி அலைந்தார்கள். எங்கே செல்வது? பள்ளிக்கூடத்துக்குப் போய்ப் பாருங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். ஓடுகிறார்கள். மாநகராட்சிப் பள்ளிக்கூடம் சென்றால், அங்கும் தண்ணீர். அடுத்து எங்கே செல்வது? அந்த நள்ளிரவில் யாரை அழைப்பது? அழைத்தும் பிரயோஜனம் இல்லை. செல்பேசி சேவைகள் பல அப்போதே செயலிழக்க ஆரம்பித்துவிட்டன. ஆளுக்கொரு பக்கமாய் ஓடுகிறார்கள். விடிந்தபோது வழிபாட்டுத்தலங்கள், மண்டபங்களின் நிர்வாகிகள் தாமாக ஓடிவந்து கட்டிடங்களில் மக்கள் தங்க திறந்துவிட்டார்கள். ஆனால், எவ்வளவு பேரை அவை கொள்ளும்? ஓடுகிறார்கள். பஸ் நிலையத்தில், ரயில் நிலையத்தில், போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த ரயில்களில். அப்படியும் போதவில்லை. பாதிப் பேர் உள்ளே; மீதிப் பேர் வெளியே கொட்டும் மழையில்.

திடீரென சாலை ஆறாக மாறுகிறது. அடித்துக்கொண்டு பாய்கிறது தண்ணீர். வெள்ளம் ஒரு ஆறாகப் பாய்கிறது. ஆம். ஆறாகவே பாய்கிறது. வீடுகள், வீட்டுச் சாமான்கள், வாகனங்களினூடே அடித்துச் செல்லப்படுகின்றன உடல்கள். கால்நடைகள், மனிதர்கள் என்று இனம் பிரிக்க முடியாத வேகத்தில் செல்கின்றன. முழு நாளும் ஒரு பருக்கை அரசுத் தரப்பிலிருந்து வந்து சேரவில்லை. முன்னதாகவே இருட்டிவிட்டது. கும்மிருட்டு. சாலைகளில் பாயும் வெள்ளம். இடையிடையே அழுகுரல்கள், பெரு ஓலங்கள்.

மறுநாள் விடிகிறது. கொஞ்சம் மழை நின்றிருந்தது. மக்கள் கூட்டம் பாய்கிறது, கடைகளைத் தேடி. அரை லிட்டர் பால் விலை ரூ. 100. ஒரு கேன் தண்ணீர் விலை ரூ. 250. வசதியுள்ளவர்கள் கடைகளில் இருந்ததை வாங்கிக்கொண்டு திரும்ப, வசதியற்றவர்கள் வீதிவீதியாக அலைந்தார்கள். பழங்கள், ரொட்டி பாக்கெட்டுகள் என்று வாங்க முடிந்ததை வாங்கிக்கொண்டு முகாம்களுக்கு ஓடி வந்தார்கள். மீண்டும் மழை. இதற்கிடையே வெள்ளம் கொஞ்சம் வடிந்த பகுதிகளில் வசிப்பவர்கள் சிலர் ஆங்காங்கே அவரவர் வீட்டில் கஞ்சி/சாதம் பொங்கிக் கொண்டுவந்து கொடுத்துப்போனார்கள். மூன்று வேளைக்கும் சேர்த்து ஒரு சாப்பாடு. மீண்டும் மழை. இருட்டு.

அடுத்த நாள் விடிகிறது. குடிக்கத் தண்ணீர் இல்லை. புழங்கத் தண்ணீர் இல்லை. வீட்டு வீதிகளில், கீழ்ப்பாலங்களில் வீட்டுக்கழிவுகள், சாக்கடையோடு கலந்து அடித்து வந்து தேங்கிக் கிடக்கும் தண்ணீரை வாளியில் மொந்துகொண்டு போகிறது கூட்டம். இதனிடையே படகுகளோடு வந்த கடலோடி இளைஞர்கள் கொஞ்சம் பேரை மீட்டார்கள். மீட்கும்போது மிதந்து வந்த சடலங்களை பலகைகளில் போட்டுக்கொண்டு போனார்கள். இடையிடையே ஹெலிகாப்டர்கள் மேலே பறக்கின்றன. உணவுப் பொட்டலங்களை வீசும் ஹெலிகாப்டர்கள் என்று நினைத்த மக்கள் கூட்டம் வீதிக்கு வந்து வானைப் பார்த்து, ஆலாய்ப் பறக்கிறது. ஒன்றும் கிடைக்கவில்லை. பிரதமரும், முதல்வரும் வானிலிருந்து பார்வையிட்டார்களாம். எம்எல்ஏக்கள், எம்பிகள் எல்லாம்கூட விசேஷ ஜெட்டுகள் மூலம் இந்தத் துயரங்களை எல்லாம் பார்த்திருப்பார்களோ, என்னவோ; ஒரு நாதியைக் காணவில்லை.

இன்னொரு மழை தொடங்கிவிட்டது. கும்மிருட்டு. இங்கே மெழுகுவத்திகளும் இல்லை. சற்று முன் பாலாஜி என்று ஒரு பையன் ஓடிவந்தான். பக்கத்து வீட்டில் நிறைமாதக் கர்ப்பிணி. எங்கே போவது, எப்படிப் போவது என்று உதவி கேட்டு அனுப்பியிருக்கிறார்கள். இங்கிருந்து வெளி உலகை இணைக்கும் எல்லாப் பாலங்களையும் நீர் சூழ்ந்திருக்கிறது. எப்படிச் செல்லச் சொல்வது? தெரியவில்லை.

பக்கத்து வீட்டில் கேட்கும் பெண்ணின் அழுகுரல் இதயத்தை நொறுக்குகிறது!

டிச. 2015, ‘தி இந்து’

6 கருத்துகள்:

  1. மனது கலங்குகிறது. செயல்படாத அரசு, சிரத்தையில்லாத அரசியல்வாதிகள்.

    பதிலளிநீக்கு
  2. Maanbumigu nirandara mudalamaichar puratchi thalaivi Ammavin aanakku inanga malai paithu thamilagam olirgirathu.

    பதிலளிநீக்கு
  3. களத்த்தில் இருந்து எழுதிய நெஞ்சை உருக்கும் பதிவு.

    பதிலளிநீக்கு
  4. களத்த்தில் இருந்து எழுதிய நெஞ்சை உருக்கும் பதிவு.

    பதிலளிநீக்கு
  5. களத்திலிருந்து நெஞ்சை உலுக்கும் பதிவு.

    பதிலளிநீக்கு
  6. கொடுமை! கொடுமை!! இது படிக்க முடியாத பெருங்கொடுமை!

    பதிலளிநீக்கு