அப்துல் கலாமின் ‘எண்:10, ராஜாஜி மார்க் வீடு’ காலிசெய்யப்பட்டு, ராமேசுவரத்துக்கு அவருடைய மூட்டை முடிச்சுகள் கட்டப்பட்டுக்கொண்டிருந்த நாட்களில் புதுடெல்லியில் இருந்தேன். முன்னாள் குடியரசுத் தலைவர் என்கிற வகையில் கலாமுக்கு இந்திய அரசு ஒதுக்கிய அந்த வீட்டுக்கெனச் சில முக்கியத்துவங்கள் உண்டு. நூறு ஆண்டுகளுக்கு முன் புது டெல்லி நகரத்தையும் இன்றைய குடியரசுத் தலைவர் மாளிகை, நாடாளுமன்றம் முதல் நம்முடைய ஆட்சியாளர்கள் பிடித்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு மாளிகையையும் நிர்மாணித்த பிரிட்டீஷ் பொறியாளர் எட்வின் லூட்டியன்ஸ், தான் வசிப்பதற்கு என்று திட்டமிட்டு கட்டிய வீடு அது. கிட்டத்தட்ட 79,297 சதுர அடி நிலத்தில் இரு தளங்களாக 11,775 சதுர அடியில் கட்டப்பட்ட பிரம்மாண்டமான வீடு. கலாமின் மறைவுக்குப் பின் அந்த வீட்டை, அவருடைய நினைவகமாக மாற்றக் கோரி மக்கள் மத்தியில் கையெழுத்து இயக்கங்கள் தீவிரமான சமயத்தில்தான் கலாமின் உடைமைகளை ஏறக்கட்டிவிட்டு, தன்னுடைய உலகப் புகழ்பெற்ற கலாச்சாரத் துறை இணையமைச்சர் மகேஷ் சர்மாவுக்கு அதை ஒதுக்கியிருக்கிறது நரேந்திர மோடி அரசு.
முதல் முறை நாடாளுமன்ற உறுப்பினரான மகேஷ் சர்மா கடந்த ஒன்றரை ஆண்டுகளில் வாயைத் திறந்தால் கழிவுகளாகக் கொட்டும் வார்த்தைகளுக்காகவே கவனம் பெற்றவர். இந்தியக் கலாச்சாரத்தைத் தூய்மைப்படுத்துவது தமது அரசின் தலையாயப் பணி என நம்புபவர். “மேற்கத்தியமயமாக்கப்பட்ட எல்லா விஷயங்களையும் நாங்கள் தூய்மைப்படுத்துவோம்; அது வரலாறானாலும் சரி, நிறுவனங்களானாலும் சரி” என்று வெளிப்படையாக அறிவித்தவர். “ராமாயணம், கீதையைப் போல பைபிளோ, குர் ஆனோ இந்தியாவின் ஆன்மாவின் மையத்தில் இருப்பவை அல்ல” என்பதைத் தன்னுடைய மறுவாசிப்பின் மூலமாக வெளிக்கொணர்ந்த மாமேதை. “பெண்கள் இரவில் வெளியில் செல்வது என்பது இந்தியக் கலாச்சாரம் அல்ல” என்று பெண்களுக்குப் புதிய கலாச்சார வழி காட்டிய கண்ணியவான். கேவலம் மாட்டிறைச்சி வைத்திருந்தார் எனும் வதந்தியின் பெயரால் தாத்ரியில் முதியவர் இக்லாக் அடித்துக் கொல்லப்பட்டபோது, “அது ஒரு “விபத்து” என்றும் “சம்பவம் நடந்த வீட்டில் 17 வயது இளம்பெண் ஒருவரும் இருந்தார்; அவரை யாரும் தொடவில்லை என்பதை நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றும் கூசாமல் கூறிய பெருந்தகை. அப்துல் கலாமைப் பற்றியும் அன்னார் கருத்து தெரிவித்திருக்கிறார். “முஸ்லிமாக இருந்தாலும்கூட ஒரு தேசபக்தராக இருந்தவர் கலாம்” என்ற ஒரே வரிச் சான்றிதழ் மூலம் அப்துல் கலாம் வரலாற்றையும் இந்திய முஸ்லிம்களின் வரலாற்றையும் ஒருசேரக் குப்பைத் தொட்டிக்கு அனுப்பியவர். மகேஷ் சர்மா இப்படி எத்தனையோ பெருமைகளுக்கு உரியவர் என்றாலும், கலாம் இருந்த வீடு அவருக்கு ஒதுக்கப்பட்டது டெல்லியில் பாஜகவினரின் புருவங்களையும்கூட உயர்த்தியிருக்கிறது. பொதுவாக, அரசு அதிகாரத்தில் உச்ச நிலையில் இருப்பவர்களுக்கே இப்படியான இரு தள வீடு ஒதுக்கப்படுவது மரபு. அரசில் பிரதமர் மோடிக்கு அடுத்த நிலையில் இருக்கும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் அருண் ஜேட்லி போன்ற மூத்த அமைச்சர்களின் வீடுகளே இதைவிடவும் சிறியவை (சிங்கின் வீடு 4,144 சதுர அடி; ஜேட்லியின் வீடு 7,825 சதுர அடி). எல்லாமே ஒரே தள வீடுகள். எல்லாவற்றுக்கும் மேலாக, வழிகாட்டு விதிகளின்படி, அந்த வீடு மகேஷ் சர்மாவின் பதவிக்கு உரியது அல்ல.
இத்தனையையும் தாண்டிதான் ஒரு இளைய அமைச்சருக்கு, அதுவும் ஒரு இணையமைச்சருக்கு கலாம் வீடு ஒதுக்கப்பட்டிருக்கிறது. மிகக் குறுகிய காலத்தில் தேசத்துக்கு மகேஷ் சர்மா ஆற்றிய அளப்பரிய சேவைக்கு பிரதமர் மோடி அளித்திருக்கும் அங்கீகாரமாகவும் பரிசாகவும் இதை நாம் கருதலாம். தன்னுடைய ஒவ்வொரு அசைவின் மூலமாகவும் ஒவ்வொரு செய்தியை அனுப்புபவர் அல்லவா மோடி!