நிதானம் அல்ல; நிதானமின்மையே மனிதர்களுக்குள் இருக்கும் மனிதர்களை வெளிக்காட்டுகிறது. நம்மூரில் “இந்த வேலையைச் செய்ததற்கு நீ வேறு வேலை செய்து பிழைக்கலாம்” என்று கூறினாலே அது எந்த வேலையைக் குறிக்கும் என்பது எல்லோருக்கும் புரியும். முதுபெரும் தலைவர் கருணாநிதியை விமர்சிக்கையில் நீட்டி முழங்கி, வலிய கருணாநிதியின் சாதியை இந்த வசவின் பின்னணியில் கொண்டுவந்து இணைத்தார் மதிமுக பொதுச்செயலர் வைகோ. “நான் ஒன்றும் தவறாகச் சொல்லவில்லை. அவருக்கு நாகஸ்வரம் வாசிக்கக் கூடியத் தொழில் தெரியும். அதனால் சொன்னேன்” என்றபோது வைகோவிடமிருந்து வெளிப்பட்ட உடல்மொழி, அவரது வார்த்தைகளைக் காட்டிலும் ஆபாசமானது.
வைகோ பிறகு மன்னிப்புக் கேட்டார். வைகோவிடமிருந்து இந்த வார்த்தைகள் வெளிப்பட்டது பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது என்றாலும், மனிதர்களை மதிப்பிடும்போது அவரவர் சாதியின் பின்னணியைக் கொண்டுவந்து பொருத்திப் பேசும் அசிங்கம் இங்கு பொதுவானதாகவே இருக்கிறது. பொதுமேடைகளில் இதை அரசியல் கலாச்சாரமாக வார்த்தெடுத்ததில் திராவிட இயக்கத்துக்கும் முக்கியமான பங்கு உண்டு. சாதியத்தையும் சாதியையும் சாடுவது வேறு; எல்லா மனிதர்களையும் அவர் பிறப்பின் அடிப்படையில் சாதியோடு சேர்த்துப் பொதுமைப்படுத்தி வசைபாடுவது வேறு. சாதி ஒழிப்புக்காக இறுதி வரை போராடிய பெரியாரும் இதற்கு விதிவிலக்கல்ல. “பார்ப்பானில் இருந்துதானே பார்ப்பனியம் வந்தது. எனவேதான், பார்ப்பான் ஒழிய வேண்டும் என்கிறேன்” என்று சொன்னவர் பெரியார். எனினும், வேறுபாடு இருக்கிறது. ஆதிக்கச் சாதியை நோக்கிய வசை என்பது வலியில் உருவாகும் கோபத்தின் வெளிப்பாடு. ஒடுக்கப்பட்ட சாதிகளை நோக்கிய வசை என்பது இழிவான எண்ணத்தின் வெளிப்பாடு.
தமிழக அரசியல் தலைவர்கள் பலரிடம் கருணாநிதி மீதான விமர்சனங்களில் சாதி கூர்மையாகத் தனித்து இயங்கு வதை ஒரு ஊடகனாகப் பல்வேறு தருணங்களில் கவனித்திருக்கிறேன். கருணாநிதி சாதிரீதியிலான இழிவை எதிர்கொள்ளும்போதெல்லாம் என் ஞாபகங்கள், மறைந்த கலை விமர்சகர் தேனுகாவை நோக்கி இயல்பாகச் செல்லும்.











































