போய் வாருங்கள் கங்குலி!

‘‘லட்சுமண ரேகை என்பது அப்படி ஒன்றும் புனிதமானது அல்ல. லட்சுமண ரேகையை சீதை கடந்திருக்காவிட்டால்,  ராவண வதம்  நடந்து இருக்காது!’’
- கடந்த ஆண்டு அடுத்தடுத்து உச்ச நீதிமன்றத்தில் விமர்சனங்களைச் சந்தித்த மன்மோகன் சிங் அரசு, ‘‘உச்ச நீதிமன்றம் லட்சுமண ரேகையைத் தாண்டக் கூடாது!’’ என்று சொன்னபோது, அதற்கு அசோக் குமார் கங்குலி கொடுத்த பதிலடி  இது!

இஸ்ரோ புஸ்...!

ந்திய விஞ்ஞானிகளின் ரகசிய உலகத்தை நாட்டுக்கு லேசாகத் திறந்துகாட்டி இருக்கிறார் மாதவன் நாயர்! 
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) தலைவராக 2003 முதல் 2009 வரை இருந்தவர் மாதவன் நாயர். ‘இஸ்ரோ’வின் 25 செயல்திட்டங்களை வெற்றிகரமாக முன்னின்று வழிநடத்தியவர். ‘பத்ம விபூஷண்’ விருது பெற்றவர்.
கடந்த 2005 -ல் ‘இஸ்ரோ’வின் வணிகப் பிரிவான ‘ஆன்ட்ரிக்ஸ்’, ஏலம் ஏதும் நடத்தாமல் ‘தேவாஸ் மல்ட்டிமீடியா’ என்ற தனியார் நிறுவனத்துக்கு ‘எஸ் பேண்ட்’ அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்தது. ‘இஸ்ரோ’வில் அறிவியல் பிரிவுச் செயலராகப் பணியாற்றிய டாக்டர் எம்.ஜி.சந்திரசேகரால் தொடங்கப்பட்ட நிறுவனம்தான் ‘தேவாஸ் மல்ட்டி -மீடியா’. இந்த ஒதுக்கீட்டுக்காக ‘ஜிசாட் 6’, ‘ஜிசாட் 6ஏ’ என்ற இரு செயற்கைக்கோள்களை ‘இஸ்ரோ’ விண்ணில் ஏவுவது என்றும் இவற்றின் மூலம் பெறப்படும் அலைவரிசையின் (70 மெகா ஹெர்ட்ஸ்) 90 சதவிகிதத்தை ‘தேவாஸ் மல்ட்டிமீடியா’ 12 ஆண்டுகளுக்குப் பயன்படுத்திக்கொண்டு, கட்டணமாக ரூ.  1,000 கோடி ‘இஸ்ரோ’வுக்குச் செலுத்துவது என்றும் இரு நிறுவனங்களும் ஒப்பந்தம்செய்துகொண்டன.

ஆமாம்... நான் தரகு வேலைதான் பார்க்கிறேன்: சோ


தமிழகத்தைத் தாண்டி பேசப்படும் மனிதராக மாறி இருக்கிறார் சோ.  'துக்ளக்' ஆண்டு விழாவில், அத்வானியையும் மோடியையும் ஒரே மேடையில் வைத்துக்கொண்டே, ''மோடி பிரதமராக அத்வானி உதவ வேண்டும்'' என்று சோ பேசியது, டெல்லி அரசியல் பார்வையாளர்களைத் திரும்பிப் பார்க்கவைத்திருக்கிறது. இந்தியாவின் அடுத்த பிரதமர் மோடி அல்லது ஜெயலலிதா என்ற செயல்திட்டத்தை சோ தொடக்கிவைத்து இருக்கும் நிலையில், வட இந்தியப் பத்திரிகைகள் அவரை 'முதல்வர்களின் ராஜ குரு’ என்று குறிப்பிட ஆரம்பித்திருக்கின்றன. என்ன நடக்கிறது இங்கே?

சோவுக்கு கிங் மேக்கர் ஆகும் ஆசை வந்துவிட்டதா?

நான் கிங் மேக்கர் என்றால், கிங் யார்? நீங்கள் மோடியையும் ஜெயலலிதாவையும் மனதில் வைத்துக்கொண்டு கேட்கிறீர்கள். அப்படிப் பார்த்தால், ஒருவர் கிங், இன்னொருவர் க்வீன் அல்லவா? (சிரிக்கிறார்). நான் ஒரு வாக்காளன். அந்த அடிப்படையில் ஒரு முன்மொழிவைக் கூறி இருக்கிறேன். இந்த நாட்டின் பிரதமராக மோடிக்கு எல்லாத் தகுதிகளும் இருக்கின்றன. ஒருவேளை பா.ஜ.க-வுக்கு மோடியைப் பிரதமர் ஆக்குவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டால், ஜெயலலிதா பிரதமராக அவர்கள் உதவ வேண்டும். அவ்வளவுதான்!

இந்தியா போன்ற பன்மைக் கலாசாரம் மிக்க ஒரு நாட்டின் பிரதமர் நாற்காலியில் அமர மோடி தகுதி ஆனவர் என நினைக்கிறீர்களா?

குஜராத்தும் பன்மைக் கலாசாரம் மிக்க ஒரு மாநிலம்தான். அங்கும் பல்வேறு மதத்தவர்கள், பல்வேறு சாதியினர் இருக்கத்தான் செய்கிறார்கள். இன்றைக்கு இந்தியாவுக்கே ஒரு முன்னோடி மாநிலமாக குஜராத்தை மோடி மாற்றி இருக்கிறார். மோடியின் சாதனைகள்தான் அவரை முன்னிறுத்துகின்றன.

குஜராத் முன்னாள் அமைச்சரும் பாஜக சட்டப்பேரவை உறுப்பினருமான மாயா கோட்னானி குற்றவாளி என்று கூறி 28 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து இருக்கிறது நீதிமன்றம். குஜராத் வெறியாட்டங்களில் பாஜகவின் கரங்கள் இருந்ததை இப்போதாவது ஒப்புக்கொள்கிறீர்களா?

மாயா கோட்னானி கலவரத்தில் சம்பந்தப்பட்டு இருக்கிறார் என்றுதானே தீர்ப்பு வந்திருக்கிறது? இதை எப்படி பாஜகவுடன் தொடர்புபடுத்துவீர்கள்? ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் இருக்கிறார். ஏதோ ஒரு கட்சியை அவர் சார்ந்து இருக்கிறார். அவர் ஏதோ ஒரு குற்றம் செய்கிறார். அது எப்படி அந்தக் கட்சியின் குற்றம் ஆகும்?

அப்படி என்றால், இப்போதும் பிரதமர் பதவிக்கு மோடியைத் தூக்கிப் பிடிப்பதில் இருந்து நீங்கள் மாறவில்லை? ஏன் மாற வேண்டும்? மாறுவதற்கு இடையில் எதுவும் நடந்துவிடவில்லையே?

மோடி பிரதமரானால், குஜராத்தில் நடந்த வெறியாட்டங்கள் இந்தியா முழுக்க நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது? மதக் கலவரங்கள் என்பது குஜராத்தில் மட்டும்தான் நடந்தது என்பதுபோல் பேசுவது போலித்தனம். இந்தியப் பிரிவினையில் தொடங்கி எடுத்துக் கொண்டால், எல்லா மாநிலங்களிலும், எல்லாக் கால கட்டங்களிலும் மதக் கலவரங்கள் அவ்வப்போது நடந்துகொண்டுதான் இருக்கின்றன. டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரங்களைக் காட்டிலும் மோசமான கலவரங்கள், அதற்கு முன்போ, பின்போ நடந்தது இல்லை. கோத்ரா ரயில் எரிப்பை மறந்துவிட்டு குஜராத் கலவரங்களைப் பற்றிப் பேசுவது அர்த்தம் அற்றது. அந்தக் கலவரங்கள் கண்டிக்கத் தக்கவை. ஆனால், அதற்குக் காரணம் மோடி அல்ல. கலவரங்களை அடக்கத் துளியும் தாமதிக்காமல் ராணுவத்தை அழைத்தவர் அவர் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது!

அத்வானியை வைத்துக்கொண்டே மோடியைப் பிரதமராக்க நீங்கள் விடுத்த அழைப்பு, உங்கள் மூலம் ஆர்எஸ்எஸ் விடுத்த மறைமுகச் செய்தியா?

ஆர்எஸ்எஸ் அத்வானியிடம் எதாவது சொல்ல வேண்டும் என்று நினைத்தால், அதைச் சொல்ல அவர்களிடமே எவ்வ ளவோ தலைவர்கள் இருக்கிறார்கள். போயும் போயும் என்னிடம் சொல்லி அனுப்ப வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை.

ஒருகாலத்தில் ஊழல் அற்ற நிர்வாகம் என்று சொல்லித்தான் பாஜகவை முன்னிறுத்தினீர்கள். ஆனால், இன்றைக்கு நாட்டிலேயே மோசமான முன்னுதாரணமாக கர்நாடகம் மாறியிருப்பதன் மூலம் பாஜகவின் முகம் முழுக்க அம்பலமாகிவிட்டது. இனியும்கூட பாஜகவைத் தாங்கிப்பிடிக்க முடியும் என்று நம்புகிறீர்களா?

பாஜகவில் நீங்கள் இப்படி ஓரிருவர் மீதுதான் குற்றம்சாட்ட முடியும். இந்த நாட்டிலேயே சிறந்த நிர்வாகத்தை வழங்கும் குஜராத்தை ஆள்வதும் பாஜகதானே? சட்டீஸ்கரில் அவர்கள் மீது புகார்கள் உண்டா? பாஜகவின் பெரும்பான்மைத் தலைவர்கள் எந்த ஊழல் புகார்களிலும் சிக்காதவர்கள். ஆனால், காங்கிரஸில் அப்படிச் சொல்ல முடியாது.

சரி, ஜெயலலிதாவை எந்த அடிப்படையில் பிரதமர் பதவிக்கு முன்னிறுத்துகிறீர்கள்?
இந்தியாவில் ஒருவர் பிரதமராக என்னென்ன தகுதிகள் வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ... எனக்குத் தெரியாது. ஆனால், ஜெயலலிதாவிடம் தேசியச் சிந்தனை இருக்கிறது. ஒருமைப்பாட்டின் மீது அவருக்கு நம்பிக்கை இருக்கிறது. பல மொழிகளை அறிந்தவர் அவர். அதிகாரிகளே மெச்சும் சிறந்த நிர்வாகி. உள்நாட்டுப் பாதுகாப்பிலும் வெளியுறவு விவகாரங்களிலும் அவருக்குத் தீர்க்கமான பார்வை இருக்கிறது. நினைத்ததைச்  சொல்லும், செய்யும் ஆற்றல் இருக்கிறது. மக்களை ஈர்க்கும் ஆளுமை அவரிடம் இருக்கிறது. இப்போது உள்ள பிரதமரிடம் இவற்றில் எத்தனை தகுதிகள் இருக்கின்றன என்பதை நீங்களே ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளுங்கள்.

ஜெயலலிதா ஆட்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்?

ஒரு மோட்டார் வண்டி இருக்கிறது. அதற்கு ஓர் ஓட்டுநரை அமர்த்துகிறீர்கள். அவர் அந்த வண்டியின் இன்ஜினைக் குட்டிச் சுவர் ஆக்குகிறார். போதாக்குறைக்கு அவருடைய குடும்பத்தினர் வண்டியின் மற்ற பாகங்கள் அனைத்தையும் பாழாக்குகிறார்கள். வண்டி நகரவே மறுக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் வண்டியை ஓட்ட இன்னொரு ஓட்டுநரை நியமிக்கிறீர்கள். அவர் எப்படி வண்டியை உடனே ஓட்டுவார் என்று எதிர்பார்க்க முடியும். அவர் முதலில் பழுதுபார்க்க வேண்டும் அல்லவா? அந்தப் பணிதான் இப்போது நடக்கிறது.

ஒரு வருடம் முடிந்துவிட்டதே...

அது ஒரு பெரிய காலகட்டம் இல்லை என்கிறேன்.

தலைமைச் செயலக மாற்றம், சமச்சீர்க் கல்வி, அண்ணா நூலக மாற்றம், விலைவாசி உயர்வு, அமைச்சர், அதிகாரிகள் மாற்றக் குளறுபடிகள்... எல்லாவற்றையும் இப்படித்தான் பார்க்கிறீர்களா?
ஆமாம். தலைமைச் செயலக மாற்றம் நிர்வாகரீதியில் எடுக்கப்பட்ட சரியான முடிவு. ஆனால், அண்ணா நூலக மாற்றம் தேவையற்றது. அதனால், பலர் பயன் அடைந்துவருகிறார்கள். சமச்சீர்க் கல்வியைப் பொறுத்த அளவில் அது சமச்சீர்க் கல்வி அல்ல; சமத்தாழ்வுக் கல்வி என்று ஏற்கெனவே நான் சொல்லி இருக்கிறேன். அது நிச்சயம் மாற்றப்பட வேண்டியதுதான். விலைவாசி உயர்வுக்காக இன்றல்ல; என்றைக்குமே மாநில அரசுகளை நான் விமர்சித்தது இல்லை. கலைஞர் ஆட்சி உட்பட. ஏனென்றால், விலைவாசியைத் தீர்மானிக் கும் முக்கியக் காரணிகள் மத்திய அரசிடம் இருக்கின்றனவே தவிர, மாநில அரசுகளிடம் அல்ல. அதிகாரிகள், அமைச்சர் கள் மாற்றம் என்பது ஒரு நிர்வாகத்தைச் செம்மையாக்குவதற்காக ஆட்சியாளர்கள் எடுக்கும் நடவடிக்கை. பரம்பரைக் குத்தகைதாரர்கள்போல, திமுக ஆட்சியில், ஜில்லாவுக்கு ஓர் அமைச்சர், தன் தலைவரைப் போலவே அந்தந்த ஜில்லாக்களில் அவர்கள் பதவிக்குக் கொண்டுவரும் தன்னுடைய வாரிசுகள், அவர்களுக்கு ஏற்ற அதிகாரிகள்... இப்படித்தான் ஆட்சியாளர் இருக்க வேண்டும் என்று நினைத்தால், அதற்குப் பொருத்தமானவர் ஜெயலலிதா அல்ல!

நிர்வாகம் முற்றிலும் சீர்குலைந்து இருக்கிறது; அமைச்சர்கள் செயல்படவே இல்லை...

காவல் துறை சீரமைக்கப்பட்டு இருக்கிறது. மின்வெட்டுப் பிரச்சினையைச் சமாளிக்கிறார்கள். ஒரு பெரிய ஊழல் - கிரானைட் ஊழல் வெளிக்கொண்டுவரப்பட்டு இருக்கிறது. பலரிடம் இருந்து பறிக்கப்பட்ட நிலங்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. கல்வித் துறைக்குப் பெரிய கவனம் கொடுக்கிறார்கள். அமைச்சர்கள் செயல்படாமல் இவை எல்லாம் எப்படி நடக்கும்? சரியான திசையில்தான் இந்த அரசு போய்க்கொண்டு இருக்கிறது!

ஊழல் மீதான அரசின் நடவடிக்கைபற்றிக் குறிப்பிட்டீர்கள். அரசு உறுதியாகச் செயல்படுகிறது என்றால், கிரானைட் ஊழல் சம்பந்தப்பட்ட அத்தனை துறை அலுவலர்களையும் கூண்டோடு தூக்கியிருக்க வேண்டும்... இல்லையா?

இப்போதுதானே நடவடிக்கைகள் ஆரம்பித்து இருக்கின்றன. பொறுத்திருந்து பாருங்கள்.

சரி, இவ்வளவு சிறப்பாகச் செயல்படுவதாக நீங்கள் சொல்லும் அரசில் உங்கள் பார்வையில் சிறப்பாகச் செயல்படும் மூன்று தமிழக அமைச்சர்களைக் கூறுங்களேன் பார்ப்போம்?

பொதுவாக எந்த அமைச்சரவையைப் பற்றியும் அந்த மாதிரி குறிப்பிட்டு நான் பேசுவது இல்லை!

ஜெ.- சசி பிரிவு உண்மைதானா?

அது உண்மை என்றே அவர்களுடைய கட்சிக்காரர்களும் அவர்களைச் சுற்றி இருப்பவர்களும் சொல்கிறார்கள். நம்புகிறார்கள்.

சசிகலா நீக்கத்துக்கு என்ன காரணம்?

எனக்குத் தெரியாது. நான் ஜெயலலிதாவையோ, அதிமுகவையோ தூரத்தில் இருந்துதான் பார்க்கிறேன். அந்தப் பார்வையில் எனக்குத் தெரிவது... கட்சியைச் சீராக்கவும் நிர்வாகத்தைச் செம்மையாக்கவும் அரசியல் சட்டத்துக்கு அப்பாற்பட்ட சக்திகள் ஆட்சியில் குறுக்கிடுவதைத் தடுக்கவும் மேற்கொள்ளப்பட்ட நடடிக்கையாக இது இருக்கலாம்.

ஜெயலலிதாவையும் ஆட்சியையும் கைப்பற்றத் துடிக்கும் உங்கள் தலைமையிலான பிராமண லாபியின் சதிதான் சசிகலா நீக்கம் என்றுசொல்லப்படுவதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?

நீங்கள் சொல்வதுபோல வைத்துக்கொண்டால், நான் அதிமுகவைக் கைப்பற்றிவிடுவேன். அவர்களுடைய தலைவனாகிவிடுவேன். அதிமுக எம்எல்ஏக்கள் எல்லாம் என்னைத் தங்கள் தலைவனாகத் தேர்ந்தெடுத்துவிடுவார்கள். அமைச்சர்கள், அதிகாரிகள் எல்லோரும் என் சொல்படிதான் நடப்பார்கள். இப்படி எல்லாம் நான் நம்ப வேண்டும். நீங்களே சொல்லுங்கள்... அவ்வளவு பெரிய மடையனா நான்? ஒரு லாபி என்றால், அதில் சில பேர் இருக்க வேண்டும். அப்படிச் சிலரால் பேசப்படும் பிராமண லாபியில் யார் எல்லாம் இருக்கிறார்கள்? நான் பிராமணன். அதுவும் இன்றைய பிராமணன்தான். அசல் பிராமணன் இல்லை. மொரார்ஜி தேசாய், காமராஜர், ஹெக்டே, என்டிஆர், எம்ஜிஆர், வாஜ்பாய்... இப்படி எத்தனையோ தலைவர்களோடு நெருக்கமாக இருந்தவன் நான். இவர்கள் எல்லோருமே பிராமணர்களா என்ன? அப்போது எல்லாம் இந்தப் பிராமண லாபி குற்றச்சாட்டு எங்கே போனது? இப்போது மட்டும் அது எங்கிருந்து முளைக்கிறது?

சோ ஓர் அரசியல் விமர்சகர் என்று இருந்த நிலை மாறி, அவர் ஓர் அரசியல் தரகர் என்று உங்களைப் பற்றிப் பேசப்படுவதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?

எதை வைத்து இப்படிப் பேசுகிறார்கள் என்று தெரியவில்லை. என்றாலும், சில சமயங்களில் அரசியல் கூட்டணிகள் அமைய நான் பணியாற்றி இருக்கிறேன் என்ற அடிப்படையில் பேசுகிறார்கள் என்று எடுத்துக்கொள்கிறேன். ஆனால், இந்த வேலை நான் இப்போது தொடங்கியது அல்ல. காமராஜர் காலத்திலேயே செய்தது.மத்தியில் ஜனதா, ஆந்திரத்தில் என்.டி.ஆர்., கர்நாடகத்தில் ஹெக்டே, தமிழகத்தில் எம்ஜிஆர், கருணாநிதி, மூப்பனார், ஜெயலலிதா என்று எத்தனையோ பேருக் காக கூட்டணியை உருவாக்க உழைத்திருக்கிறேன். இதற்கு என்ன அடிப்படை என்றால், ஒரு வாக்காளனாக நான் விரும்பும் ஆட்சி வர நான் மேற்கொள்ளும் நடவடிக்கை என்று சொல்லலாம். உங்கள் நண்பர் விரும்பும் ஓர் அரசியல் கட்சிக்கு ஆதரவாக அவர் உங்களிடம் வாக்கு கேட்டால், அவரைத் தரகர் என்று நீங்கள் கூறுவீர்களா... எனக்குத் தெரியாது. ஆனால், தரகில் நல்ல காரியம் நடந்தால், நான் செய்வது தரகு வேலையாகவே இருக்கட்டும். அதுபற்றி எனக்குக் கவலை இல்லை. ஆனால், துரோக வேலை செய்யாதவரை நீங்கள் என்னைக் குறைகூற முடியாது!

ஒரு பத்திரிகையாளராகச் சொல்லுங்கள்... முதல்வருக்கும் பத்திரிகையாளர்களுக்கும் இடையே பெரிய இடைவெளி இருக்கிறது. அரசின் மீது சிறு விமர்சனம் என்றால்கூட வழக்குகள் பாய்கின்றன. ஜனநாயக விரோத அணுகுமுறை இல்லையா இது?

முதல்வரின் வேலை என்ன... எப்போதும் பத்திரிகையாளர்களைச் சந்திப்பதா? முதல்வர் ஒன்றும் மக்கள் தொடர்பு அலுவலர் இல்லையே, பத்திரிகையாளர்களைத் தினமும் சந்திக்க. அப்புறம், நான் பத்திரிகையாளன் என்றால், நான் எழுதுவதற்கேற்ற பலன்களை நான் எதிர்கொள்ளத்தான் வேண்டும். நானே 'துக்ளக்’குக் காக எவ்வளவோ வழக்குகளைச் சந்தித்து இருக்கிறேன்.

எல்லாவற்றுக்கும் வக்காலத்து வாங்குகிறீர்கள், அதிமுகவின் கொள்கைப்பரப்புச் செயலாளர் அல்லது ஜெயலலிதாவின் மக்கள் தொடர்பு அலுவலர்போல...

அதிமுகவின் செல்வாக்கைக் குறைக்க வேண்டும் என்றோ, ஜெயலலிதாவின் புகழும் வெற்றிகளும் பாதிக்கப்பட வேண்டும் என்றோ நான் நினைக்கவில்லை. அப்படியிருக்க இந்த மாதிரி பதவிகளுக்கு நான் ஏன் ஆசைப்படப்போகிறேன்?

வழக்கறிஞர், கலைஞர், பத்திரிகையாளர்... சோ அவ்வளவுதானா, இல்லை வேறு ஏதேனும் ரகசியக் கணக்கு வைத்திருக்கிறீர்களா?

எதிர்காலம்பற்றி நான் என்றைக்குமே யோசித்தது இல்லை. வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அதன் ஓட்டம் முடிந்தால், ஆட்டம் காலி. அவ்வளவுதான்!

ஆனந்த விகடன் 2012
கேரளத்தில் உருவாகும் கும்பல் ஆவேசம்: பால் சக்கரியா

பால் சக்கரியா. மலையாளத்தின் முக்கியமான எழுத்தாளர். தன்னுடைய துணிச்சலான கருத்துகளுக்காகப் பெயர் பெற்றவர். எல்லாவற்றுக்கும் மேல் தமிழகம், தமிழர்கள்பால் மிகுந்த நேசம் கொண்டவர். முல்லைப் பெரியாறு அணை விவகாரம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தமிழர்கள் - மலையாளிகள் உறவில் பிளவை உருவாக்கி இருக்கும் நிலையில் சக்கரியாவிடம் பேசினேன்.