உண்மையைப் பேசுவோம்!


         போர் வெற்றியின் உற்சாகத்தில் இருந்த ராஜபக்ஷ இந்தியப் பத்திரிகையாளர் ஒருவருக்குப் பேட்டி அளித்தபோது சொன்னார்: ‘‘நாங்கள் இந்தியாவுக்காகவும் போரிட்டிருக்கிறோம்!’’
        
         ஆமாம். ராஜபக்ஷ  பொய் சொல்லவில்லை. இந்தப் போரில்  இந்தியா  பின்னின்று பங்கேற்றது. போருக்கு முன் ‘எம்.ஐ. 17’ ரக ஹெலிகாப்டர்களில் தொடங்கி போருக்குப் பின் ‘விக்ரஹா’ ரோந்துக் கப்பல் வரை சகல படைக்கலன்களையும் இலங்கைக்கு வழங்கியது; ஆட்களை அனுப்பியது; சிங்களப் படைக்கு இங்கு பயிற்சி அளித்தது. கோடியக்கரையில் இருந்தும் உச்சிபுளியில் இருந்தும் கடல் பகுதியைக் கண்காணித்து உளவு சொன்னது; ராஜ தந்திர ரீதியாக போருக்கு எந்தத் தடையும் வராமல் பார்த்துக்கொண்டது. யோசித்துப் பாருங்கள்... இலங்கையின் போர்க் குற்றங்களுக்கு எதிராக இந்தியா குரல் கொடுக்க வேண்டும் என்று கோருவது எவ்வளவு அபத்தம்?
உங்களுக்கு நினைவிருக்கிறதா?

            2009-ம் ஆண்டு மே 15-ம் தேதி அமெரிக்க பசிபிக் பிராந்திய கட்டளைத் தளபதி திமேத்தி ஜே கீட்டிங் அன்றைய இந்திய தேசியப் பாதுகாப்புச் செயலர் எம்.கே.நாராயணனையும் வெளியுறவுத் துறைச் செயலர் சிவசங்கர் மேனனையும் சந்தித்தார். பின்னர், ‘‘இலங்கையில் போர்ப் பகுதியில் ‘பாதிக்கப்பட்ட மக்களுக்கு’ உதவ அமெரிக்கக் கப்பல் படைக் கப்பல்கள் தயார் நிலையில் இருக்கின்றன’’ என்று அறிவித்தார். விடுதலைப் புலிகள் தலைமை அமெரிக்காவிடமிருந்தும் இங்கிலாந்திடமிருந்தும் பொது மன்னிப்பு உறுதிமொழியை எதிர்பார்த்து சரணடைய காத்திருந்த நாள் அது. ‘ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரண் அடைந்தால் பொது மன்னிப்பு’ என்ற பொய்யான வாக்குறுதி சர்வதேசத்தால் வழங்கப்பட்டதற்கான மறைமுக சாட்சி அது. ஆமாம். அமெரிக்காவுக்கும் இதில் பங்கு உண்டு. கொத்துகொத்தாக குண்டுகள் விழுந்தபோதும்  தமிழ் உயிர்கள் வீழ்ந்தபோதும் எல்லோரும்தானே வேடிக்கை பார்த்தார்கள்? எல்லாருடைய விருப்பத்தின்பேரில்தான் அது நடந்தது!

தமிழ்நாட்டின் தாலிபன்களா நாங்கள்?: அன்புமணி ராமதாஸ்


                    பா.ம.க இப்போது  வேறு அரசியலுக்குள் நுழைகிறது. ‘புதிய அரசியல்... புதிய நம்பிக்கை’ என்னும் முழக்கத்துடன் கட்சியை முன்னெடுக்கும்  அன்புமணி  ராமதாஸின் சமீபத்திய பேச்சுகள் அவர்கள் செல்லவிருக்கும் திசையைத் தெளிவாக்குகிறது.  எடுத்த எடுப்பிலேயே, ‘‘திராவிட இயக்கங்களால் தமிழ்நாட்டுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை. கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜானகி, ஜெயலலிதா, வைகோ... இவர்கள் எவரும் தமிழரே இல்லை. தமிழர்த் தலைவர் ராமதாஸ் மட்டும்தான்’’ என்று ஆரம்பித்த அன்புமணியை சென்னையிலுள்ள அவருடைய ஆடம்பரமான இல்லத்தில் சந்தித்தேன். கார்பரேட் கலாசார  உபசரிப்போடு தொடங்கியது உரையாடல்.

                             ‘‘தமிழர் என்ற சொல்லுக்குப் பா.ம.க. புதிய வரையறை வகுக்கிறதா?’’
‘‘ஆமாம். தமிழ்ப் பேசுவதாலேயே வந்தேறிகளை எப்படித் தமிழர்கள் என்று ஏற்றுக்கொள்ள முடியும்? திராவிடர்கள் என்றால் யார்? திராவிடக் கட்சிகள் மலையாளிகள், கன்னடர்கள், தெலுங்கள், தமிழர்கள் எல்லோரும் திராவிடர்கள் என்று சொல்கின்றன. அப்படி என்றால், ஆந்திரத்திலோ, கர்நாடகத்திலோ, கேரளத்திலோ திராவிட என்ற பெயரில் ஒரு கட்சியாவது இருக்க வேண்டுமே... இருக்கிறதா? ஆந்திரத்தில் ரெட்டி, நாயுடு தவிர வேறு இனத்தவர்கள் முதல்வர் நாற்காலியில் அமர முடியவில்லை. கேரளத்தில் நாயர், ... தவிர  வேறு இனத்தவர்கள் முதல்வர் நாற்காலியில் அமர முடியவில்லை. கர்நாடகத்தில் லிங்காயத்துகள், ஒகேலிக்கர்கள் தவிர வேறு இனத்தவர்கள் முதல்வர் நாற்காலியில் அமர முடியவில்லை. தமிழகத்தில் மட்டும்தான் இந்த அக்கிரமம். காரணம்... இங்கு திராவிடர்கள் என்ற பெயரில் ஆட்சியில் ஒட்டிக்கொள்பவர்கள் எவரும் தமிழர்கள் இல்லை என்பதுதான்.’’

என்கவுன்டர் தொழில் அல்ல - திரிபாதி ஐ.பி.எஸ்.

  
திரிபாதி ஐ.பி.எஸ்.


                                இந்தியாவிலேயே முதன்முதலில் சர்வதேச காவல் சமூக விருதும் சிறந்த காவல் நிர்வாகத்துக்கான தங்கப் பதக்கமும் பெற்ற அதிகாரி என்ற பெருமை சென்னை மாநகரக் காவல் ஆணையர் ஜே.கே.திரிபாதிக்கு உண்டு. இளம் வயதிலேயே குடியரசுத் தலைவர் விருது பெற்றவர்,  நேர்மையானவர், கண்டிப்பானவர் என்றெல்லாம் கூறப்பட்டாலும் மனித உரிமைகளுக்குத் துளியும் மதிப்பு அளிக்காதவர் என்ற குற்றச்சாட்டும் உண்டு. தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் நடந்த என்கவுன்டர்களில் இவருடைய பங்கு கணிசமானது. சென்னையில் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட வட மாநிலத்தவர்கள் ஐந்து பேர் என்கவுன்டரில் கொல்லப்பட்ட விவகாரம் தேசிய அளவில் விவாதங்களைக் கிளப்பியிருக்கும் நிலையில், திரிபாதி அளித்த பிரத்யேக பேட்டியில் இருந்து... 

இந்த என்கவுன்டர் எதற்காக?

காவல் துறையினரால் ‘என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்’ என்று     கொண்டாடப்பட்ட அதிகாரி அவர். ஒருநாள் அவரிடம் பேசிக்கொண்டு இருந்தபோது கேட்டேன்... ‘‘என்கவுன்டர்களை முடித்துவிட்டு வரும்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?’’
கண்களில் குதூகலம் பொங்க அந்த அதிகாரி சொன்னார்... ‘‘ரொம்ப சந்தோஷமாக  இருக்கும். ஒரு பெரிய காரியத்தை முடிச்சுட்ட திருப்தி இருக்கும். அப்படியே ஒரு நல்ல குளியல்  போட்டுட்டு வண்டியில் ஜாலியாகச் சுத்தலாம்போல் இருக்கும்!’’

இருண்ட காலம் - 2

‘‘இந்தியாவின் மின் தேவை 2017-ல் மேலும் பல மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். நிலக்கரியைப் பயன்படுத்தி, மேற்கொள்ளப்படும் அனல் மின் திட்டங்களே இந்தத் தேவையில் 60 சதவிகிதத்தைப் பூர்த்திசெய்யும். அந்த முக்கியமான தருணத்துக்கேற்ப நாங்கள் இப்போதே திட்டமிடுகிறோம்!’’
- இந்தியப் பிரதமரோ, மாநில முதல்வர்களோ, அமைச்சர்களோ பேசியது அல்ல இது. சென்னை அருகே உள்ள மணலியில் அண்மையில் தொடங்கப்பட்ட ‘தோஷிபா ஜே.எஸ்.டபிள்யூ.’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் இட்டாரு இஷிபாஷி பேசியது.  ஜப்பானிய நிறுவனமான இது, அனல் மின் நிலையங்களுக்குத் தேவையான மின் சாதனங்களைத் தயாரிக்கும் நிறுவனம். இந்தியாவின் மின் தேவைக்கான திட்டங்களை நம்முடைய அரசியல்வாதிகள் திட்டமிடாமல் இருக்கலாம். ஆனால், பன்னாட்டு நிறுவனங்கள் தெளிவாகத் திட்டமிடுகின்றன!

கைவிடப்பட்டவர்கள்!

‘‘எனக்கு இந்தி என்றாலே பிடிக்காது. எவ்வளவோ படித்தும் மண்டையில்  ஏறவில்லை. அதனால், உமா மகேஸ்வரி டீச்சர் என்னைக் கண்டிப்பார். அவர் திட்டுவார் என்பதற்காகவே நிறைய தடவை பள்ளிக்கூடம் போகாமல் இருந்திருக்கிறேன். ஆத்திரத்தில், கோபத்தில் தப்பு செய்துவிட்டேன். ஆனால், இப்போது தவிக்கிறேன். நான் யாரையும் பார்க்க விரும்பவில்லை. உமா மகேஸ்வரி டீச்சர் கதறியது என் கண்ணிலேயே நிற்கிறது. நான் தப்பு செய்துவிட்டேன். எனக்குத் தண்டனை கொடுங்கள். எனக்கு மன்னிப்பே கிடையாது!’’
- உமா மகேஸ்வரி கொலையாளி, ஒன்பதாம் வகுப்பு மாணவன்.