திருச்சியின் பழைமையான நத்ஹர்சா பள்ளிவாசலின் ஒரு மூலையில் முடங்கிக் கிடக்கிறார் குல்சும் பீபி. வயது 116. நாட்டிலேயே அதிக வயதுடைய பெண்ணாகக் கருதப்படும் இவர், சுதந்திரப் போராட்டக் களத்தின் எந்தப் போராட்டத்திலும் பங்கேற்றவர் அல்லர். காந்தி, நேரு, சுபாஷ் என தேசத்தின் எந்த முன்னோடிகளையும் பார்த்தவரும் அல்லர். ஆனால், இந்திய வரலாற்றின் முக்கியமான ஒரு நூற்றாண்டின் அத்தனை மாற்றங்களிலும் மௌன சாட்சியாக - சக பயணியாக பங்கேற்ற அனுபவம் அவருக்குள் உறைந்துக் கிடக்கிறது. விளிம்பு நிலை மக்களின் வாழ்வில் சுதந்திரம் என்ற சொல் ஏற்படுத்திய கனவுகள், தலைவர்கள் உருவாக்கிய பிரமாண்ட உருவகங்கள், பின்னர் நிகழ்ந்த தடுமாற்றங்கள் மற்றும் ஏமாற்றங்களை அப்படியே பிரதிபலிப்பதால் குல்சும் பீபியுடனான இந்த நேர்காணல் முக்கியமானதாகிறது.
கூன் விழுந்த சரீரம், பார்வையிலும் தடுமாற்றம், மிகவும் சிரமப்பட்டே
பேசுகிறார்; வார்த்தைகளால் தன் கடந்த காலத்துக்குள் நுழையும் அவர், பல
தருணங்களில் தாங்க முடியாதத் துயரத்தில் அழுதுவிடுகிறார். அவருடனான
உரையாடலிலிருந்து...