ஆரம்பமாகிவிட்டது அடுத்த சூதாட்டம். 'உலகைக் காக்கக் கடைசி வாய்ப்பு' என்ற கோஷத்துடன் டிசம்பரில் கோபன்ஹேகன் நகரில் கூடவுள்ள சர்வதேச பருவநிலை மாநாட்டுக்கான முஸ்தீபுகள் தலைநகர் தில்லியில் தொடங்கிவிட்டன. ஒருபுறம், "வளரும் நாடுகளின் வளர்ச்சியை பலி கொடுக்கமாட்டோம்'' என்று கூறிக்கொண்டே மறுபுறம், "வளர்ந்த நாடுகளுடன் நாம் சேர்ந்துகொள்ள வேண்டும்'' என்று பிரதமருக்குக் கடிதம் எழுதுகிறார் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ். பிரதமர் மன்மோகன் சிங்கோ, "இந்தியாவின் முந்தைய நிலைப்பாட்டில் மாற்றமில்லை'' என்று கூறிக்கொண்டே, "செம்மையான தொழில்நுட்பத்துக்கு மாறுவது காலத்தின் கட்டாயம்'' என்கிறார். பொருளாதார தாராளமயமாக்கம், அணுசக்தித் துறை ஒப்பந்தங்களைத் தொடர்ந்து காங்கிரஸ் அரசு தேசத்தின் இறையாண்மையை முன்வைத்து ஆடப்போகும் அடுத்தகட்ட ஆட்டம் ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.
கடந்த மாத இறுதியில் ஐ.நா.சபையில் பருவநிலை மாற்றம் குறித்த சர்வதேச கருத்தரங்கு நடைபெற்றது. இதையொட்டி, இந்தியாவில் பசுமை இல்ல வாயுக்கள் வெளியீட்டைக் கட்டுப்படுத்தும் சட்டத்தைக் கொண்டுவருவதற்கான அறிவிப்பை வெளியிட்டார் ஜெய்ராம் ரமேஷ். குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் இந்தியா கட்டுப்படுத்த வேண்டிய வாயுக்களின் அளவை இந்தச் சட்டம் நிர்ணயிக்கும். பசுமை இல்ல வாயுக்கள் வெளியீட்டைக் குறைக்கும் இலக்குகளுக்கான வரையறைகளையும் இந்தச் சட்டம் வகுக்கும்.
இந்த அறிவிப்புக்காக கருத்தரங்கில் ஜெய்ராம் ரமேஷை ஐ.நா.சபையின் பொதுச் செயலர் பான் கீ மூன் பாராட்டினார். ஆனால், இந்திய எதிர்க்கட்சிகளிடையே இந்த அறிவிப்பு கடுமையான எதிர்ப்புகளை உருவாக்கியது. காரணம், கட்டாய பசுமை இல்ல வாயுக்கள் வெளியீட்டுக் குறைப்பை எந்த வகையிலும் ஏற்கமாட்டோம் என்ற இந்திய அரசின் இதுவரையிலான நிலைப்பாட்டுக்கு நேர் எதிரான நடவடிக்கை இது. ஆனால், இந்த விஷயத்திலும் மேற்கத்திய நாடுகளின் நிர்ப்பந்தத்துக்கு இந்தியா இப்போது அடிபணிந்துவிட்டது.
நம் அரசியல்வாதிகளின் நோக்கத்தை நாம் முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால், முதலில் புவி வெப்பமாதல் பிரச்னையை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது, புவி வெப்பமாதல் என்பது வெறும் சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்னை மட்டுமல்ல; வளரும் நாடுகளின் எதிர்காலத்துடனும் பல லட்சம் கோடி ரூபாய்களுடனும் பின்னிப் பிணைந்திருக்கும் பிரச்னை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

