நமக்குள்ளிருக்கும் கோட்ஸேவுக்கு முகம் கொடுக்கலாமா?என்னை அதிகம் வசீகரித்த தொன்மக் கதைகளில் ஒன்று, வங்கத்தின் சுந்தர வனத்தைக் காக்கும் வன தேவதையான பொன்பீபியின் கதை. சதுப்புநிலக் காடான சுந்தர வனப் பிராந்தியத்தை ஆண்ட தக்ஷிண் ராய் ஒரு துஷ்ட சக்தி. புலி வடிவில் மக்களை வேட்டையாடும் துர்குணம் அவனுக்கு உண்டு. பிறந்த கையோடு வனத்தில் கைவிடப்பட்டு, ஒரு மானால் வளர்த்தெடுக்கப்படும் பொன்பீபி வனத்தின் மகளாகிறாள். தனக்கான ஆபத்தாக பொன்பீபி உருவெடுப்பாள் என்பதை உள்ளுணர்வால் உணரும் தக்ஷிண் ராய் அவளைக் கொல்லத் திட்டமிடுகிறான். பொன்பீபியுடன் போரிடச் செல்லும் தக்ஷிண் ராயுடன் அவனுடைய தாய் நாராயணியும் சேர்ந்துகொள்கிறாள். “ஒரு பெண்ணுடன் போரிட நான் போதுமானவள்” என்கிறாள் நாராயணி. பொன்பீபியுடனான போரில் நாராயணியும் தொடர்ந்து தக்ஷிண் ராயும் தோற்கின்றனர். தோற்று கீழே விழும்போது மனம் திருந்துகிறாள் நாராயணி. அவளைக் கருணையோடு மன்னிக்கும் பொன்பீபி நாராயணியை அணைத்துக்கொள்கிறாள். தன்னை வணங்குவோர் அவளையும் வணங்க வரம் கொடுக்கிறாள். தக்ஷிண் ராயும் மன்னிப்பு கோருகிறான்; பொன்பீபி அவனையும் மன்னிக்கிறாள்; ஆனால், அவன் திருந்தவில்லை. வனத்துக்குள் ஓடி மறைந்துகொள்ளும் தக்ஷிண் ராய் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் ஏதேனும் ஒரு புலிக்குள் புகுந்து அதன் வழியாக மனிதர்களை வேட்டையாடியபடி இருக்கிறான். மக்கள் பொன்பீபியை தக்ஷிண் ராயிடமிருந்து காக்கும் தெய்வமாகக் கருதுகின்றனர். ஆனால், பொன்பீபி மக்களுக்கு மட்டும் அல்ல; சுந்தர வனத்தில் வாழும் ஒவ்வொரு உயிரையும் காக்கும் தேவதையாக இருக்கிறாள். சுந்தர வனத்தின் பூர்வக் குடிகளான மக்களுக்கும் புலிகளுக்கும் சரி பாதியாக அந்த வனத்தை அவள் பிரித்துக்கொடுத்திருக்கிறாள். தன் எதிரிக்கான ஊடகமாகின்றன என்று புலிகளைக்கூட அவள் கைவிட்டுவிடவில்லை; எதிரி என்பதால், தக்ஷிண் ராயையும் அவள் கொன்றுவிடவில்லை; அவனும் திருந்தட்டும் என்று அவள் காத்திருக்கிறாள்; அவனிடமிருந்து மக்களைப் பாதுகாத்தவாறே அவனையும் அவள் பாதுகாக்கிறாள் என்பதே அந்தக் கதை.

காவி எப்படி அதிகாரத்தின் நிறமானது?


டெல்லி கரோல்பாக் ரயில் நிலையத்தைவிட்டு கொஞ்ச தூரம் வெளியே வந்தால், பாலிகா பஜாரை ஒட்டி ஒரு நல்ல பஞ்சாபி உணவகம் உண்டு. பெயர் மறந்துவிட்டதா அல்லது பெயர்ப் பலகை இல்லாத உணவகமா என்று இப்போது ஞாபகம் இல்லை. ஒரு சர்தார்ஜி தாத்தாவின் கடை. சாலையை ஒட்டினார்போல முகப்பிலேயே சமையல் கட்டு. பிரமாதமான பனீர் டிக்கா போட்டுக்கொடுத்தார். மேலே கொஞ்சம் தீய்ந்ததுபோல முறுகி, உள்ளே கொஞ்சம் வேகாமல் சதக் சதக் என்று, இடையிலேயே உடன் சேர்ந்துகொண்ட மிளகாய் துண்டின் மெல்லிய காரமும், புதினாவின் மெல்லிய வாசனை கலந்த கொஞ்சம் புளிப்பும் சேர்த்து, ஆகக் கூடிவந்த ஒரு பனீர் டிக்கா அது! அப்படி ஒரு அற்புதத்தை அனாயசமாக அவர் போட்டுத்தள்ளிக்கொண்டே இருந்தது பனீர் டிக்காவைக் காட்டிலும் பெரும் அற்புதமாகத் தெரிந்தது. “சாதா பனீர் டிக்கா இல்லை; பஞ்சாபி பனீர் டிக்கா” என்றார். அவருக்கு ஒரு கும்பிடு போட்டேன். பதிலுக்கு அவர் ஒரு சலாம் போட்டார். “இன்னொன்று இதேபோலக் கிடைக்குமா?” என்றேன். காதருகே குனிந்தவர், “இன்று வேண்டாம். இந்த நினைவு இப்படியே இருக்கட்டும்!” என்றார்.

ஆண்டுகள் ஓடுகின்றன; நினைவுகள் விடாமல் துரத்துகின்றன. ‘அமுல்’ விளம்பரத்தைகூட அந்த சர்தார்ஜி பெரியவர் நினைவு வராமல் தனித்துப் பார்க்க முடிந்ததில்லை. எவ்வளவு சூட்சமமான மனிதர் என்றுகூட சில சமயங்களில் தோன்றும். இன்னொரு பன்னீர் டிக்கா கொடுத்திருந்தால், மேலும் ஒரு நூறு ரூபாயை அவர் சம்பாதித்திருக்கக் கூடும்; மாறாக, அந்த மனிதர் நினைவைச் சம்பாதித்துவிட்டார். அவர் கையில் ஒரு முத்தமிட்டு இருக்கலாம் என்றுகூட இன்று தோன்றுகிறது. கரோல்பாக், பாலிகா பஜார், இடையில் குறுக்கிட்டுப்போன ஒரு சந்து, பெயரற்ற அல்லது பெயர் மறந்துவிட்ட அந்தக் கடை, சர்தார்ஜி பெரியவரின் முகம்... ஒரு பனீர் டிக்கா எவ்வளவு நினைவுகளை அள்ளி வருகிறது!

ஒரு அற்புதமான மனிதரை, ஆதாய அரசியல்வாதி களோடு ஒப்பிடுவதற்காக வாசகர்கள் என்னை மன்னிக்க வேண்டும். யோசித்துப்பார்த்தால், நம் நினைவுகள்தான் நாம்; நினைவுகள் போனால் எல்லாம் காலி என்று தோன்றுகிறது! அதனால்தான் அதிகாரத்தைக் கட்டியாள நினைப்பவர்கள் முதலில் சகஜீவிகளின் நினைவுகளைக் கையாளத் தொடங்குகிறார்கள் என்றும் தோன்றுகிறது. நினைவுகளைக் கட்டியாள வரலாற்றைக் கையில் எடுக்கிறார்கள். வரலாற்றைத் தமதாக்கிக்கொள்வதன் மூலம் மக்களின் கற்பனைகளையும் அவர்கள் அபகரித்துவிடுகிறார்கள்.

மோடியின் பொருளாதாரத் தோல்விகளை ஏன் எதிர்க்கட்சிகள், ஊடகங்கள் பேசுவதில்லை?


சத்தியமங்கலம் வனத்தில் பிரபுவைச் சந்தித்தேன். பள்ளி செல்லும் சிறுவன். ஒடிசலான உருவம். கருத்த தேகம். துடியாகப் பேசுபவன். பள்ளிக்கூடப் பாடங்களோ, வெளி விவகாரங்களோ அவனிடத்தில் பெரிய ஆர்வத்தை உண்டு பண்ணியிருக்கவில்லை. ஆனால், வனம் அவன் உடம்புக்குள் இறங்கியிருந்தது. புலிகளைப் பற்றி நிறைய சுவாரஸ்யமாகப் பேசினான். அவன் படிக்கும் அரசாங்கப் பள்ளிக்கூடம் அவனுடைய வீட்டிலிருந்து சுமார் பத்து கி.மீ. தொலைவில் இருக்கிறது. மலைப் பாதை. புலி நடமாட்டம் மிகுந்த பகுதி. புலி தண்ணீர் குடிக்க வந்து செல்லும் ஓடையைத் தாண்டிதான் அன்றாடம் அவன் பள்ளிக்கூடம் போக வேண்டும். “காட்டில் நடக்கும்போது புலி பயம் இருக்காதா?” என்று கேட்டேன். “காட்டில் எப்பவும் புலி உலாத்துதோ, உலாத்தலையோ; நெனப்பில் எப்பவும் புலி உலாத்தும்” என்றான். “பயந்து ஆவப்போவது என்ன? காட்டிலே புலி மட்டும் இல்ல. காட்டு நாய் இருக்கு. காட்டெருமை இருக்கு. கருநாகம் இருக்கு. புலி மட்டும் இல்ல; இதுகளும் மேல பாய்ஞ்சா ஆளைத் தூக்கிரும். புலி கண்ணுல நாம சிக்காம இருக்கணும்னா, புலியைத் தவிர காட்டுல தட்டுபடறதையெல்லாம் புலியாப் பார்த்துக் குழப்பிக்காம இருக்கணும்; புலியை மட்டும் நெனைச்சுக் கெடந்தா கண்ணு மறைச்சுடும். எதுவும் கண்ணில் படாது. மரம் செடி கொடியெல்லாம் புலியா தெரிஞ்சா பாம்பும் ஓநாயும் காட்டெருமையும் கண்ணுல படாது; கடைசில புலியே கண்ணு முன்ன வந்து நின்னாலும் அது புலியா தெரியாது!” என்றான். பிரமிக்க வைத்த விழிப்புநிலை அது. கண் மட்டும் கண் அல்ல என்பதை உணர்த்தியவன் அவன்!

சின்ன வெங்காயம் விலை கிலோ ரூ.120 விற்கிறது. அதன் வழக்கமான விலையைப் போல இது மூன்று மடங்கு. ஏன் இதுகுறித்து எந்த அரசியல் கட்சியும் பேசவில்லை; ஊடகங்கள் எழுதவில்லை? மன்மோகன் சிங் ஆட்சிக் காலம் நெடுகிலும் விலைவாசி உயர்வில் தொடங்கி, பொருளாதார நெருக்கடிகள் வரை இடைவிடாது பேசிக்கொண்டிருந்த ஊடகங்களும் எதிர்க்கட்சிகளும் இப்போது அதுபற்றியெல்லாம் ஏன் வலுக்கப் பேசுவதில்லை அல்லது அவர்கள் பேசுவது ஏன் நம் காதுகளுக்கு வந்து விழுவதில்லை? மோடி அரசையும் பாஜகவையும் யாரும் விமர்சிக்காமல் இல்லை; ஆனால், எது தொடர்பில் அவர்கள் பெருமளவில் விமர்சிக்கப்படுகிறார்கள் - மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தொடர்பிலா; அடையாள அரசியல் பிரச்சினைகள் தொடர்பிலா? இந்த நுட்பமான வேறுபாட்டை நாம் விவாதிக்க வேண்டும்!

ராமனும் பசுவும்!


இந்தியாவில் ஏனைய கட்சிகளுக்கும் பாஜகவுக்கும் உள்ள மிக முக்கியமான வேறுபாடு, ஏனைய கட்சிகள் அதிகாரத்தை நோக்கி நகர அணித்திரட்டலில் (mobilization) நம்பிக்கை வைத்திருக்கின்றன; பாஜகவோ எதிர்அணிதிரட்டலில் நம்பிக்கை வைத்திருக்கிறது (counter mobilization). பாஜக முன்வைக்கும் இந்துத்துவ அரசியலை எதிர்கொள்ள மிக மிக முக்கியமானது இந்தப் புள்ளி - இந்தப் புரிதல்.

ஏனைய கட்சிகளை எதிர்கொள்ளும், ஏனைய அரசியலை எதிர்கொள்ளும் அதே வழிமுறை பாஜகவின் இந்துத்துவ அரசியலை எதிர்கொள்ளப் பயன்படாது. ஏனென்றால், அது தன்னுடைய அணித்திரட்டலின் பிரதான இலக்காகக் கொண்டிருக்கும் இந்நாட்டின் பெரும்பான்மைச் சமூகமான இந்துச் சமூகம் ஏனைய சமூகங்களைப் போல ஒரு மதமாகச் சிந்திக்கவில்லை; மாறாக, சாதியச் சமூகமாக அவர்கள் சிந்தித்துப் பழகியிருக்கின்றனர்! இந்துக்கள் ஏனைய தளங்களில் முழுக்க சாதியமயப்பட்டிருந்தாலும், அரசியல் தளத்தில் சாதியிலிருந்தும் விடுபட்டு பொது அடையாளம் நோக்கிச் செல்லவே பெருமளவில் விரும்புகிறார்கள் சாதியைத் தாண்டிய பிரச்சினைகளுக்கே அவர்கள் பிரதான கவனம் அளிக்கவும் முற்படுகிறார்கள். மாறாக, பாஜக அவர்களை மதமயமாகச் சிந்திக்க வைப்பதைச் செயல்திட்டமாகக் கொண்டிருக்கிறது!

இந்துச் சமூகம் எப்போது மதமாகச் சிந்திக்கிறது? அதன் உணர்வுகள் தூண்டிவிடப்படும் போதும் சீண்டிவிடப்படும்போதும்! இதில் தூண்டி விடப்படுவதனால் ஏற்படும் விளைவைக் காட்டிலும் சீண்டிவிடப்படும்போது கிடைக்கும் அனுகூலம் பாஜகவுக்கு அதிகம். அணித்திரட்டலைக் காட்டிலும் எதிர் அணித்திரட்டல் விரைவான கூடுதல் பலன்களைத் தருவதாலேயே இந்துக்களைத் திரட்ட பெரும்பாலும் இரண்டாவது வழியையே அது தேர்ந்தெடுக்கிறது. இந்த இடத்திலேயே ராமரோ, பசுவோ அதற்குத் தோதான வாகனங்கள் ஆகிவிடுகின்றனர்; எதிர்க்கட்சிகள் வழுக்கி விழுகின்றனர்.

ஏன் மாட்டைக் கையில் எடுக்கிறார்கள்?


மாட்டைப் புரிந்துகொள்ள முற்படுவதன் மூலமாக ஒரு நாட்டின் அரசியலையோ, அந்நாட்டை ஆள்கின்ற அரசையோ புரிந்துகொள்ள முற்படுவது என்பது வேடிக்கையான ஒரு அரசியல் ஆய்வுதான். நாட்டின் 50% மக்கள் இன்னமும் விவசாயத்தைச் சார்ந்திருக்கும் ஒரு நாட்டில், அதுவும் 29.9 கோடி மாடுகள் வளர்க்கப்படும் ஒரு நாட்டில் மாடு வளர்ப்பைப் பாதிப்படையச் செய்யும் செயல்திட்டங்களை ஒரு அரசாங்கமோ, அரசியல் கட்சியோ பகிரங்கமாக முன்னெடுக்க முடியுமா?

முடியவே முடியாது என்றே நான் நினைக்கிறேன்!