சீமான் பேட்டி சமஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சீமான் பேட்டி சமஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் இந்தியா: சீமான் பேட்டி


நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வீட்டின் மாடியில் உள்ள அவருடைய அலுவலகமானது நூலகத்தின் ஒரு பகுதியாக அமைக்கப்பட்டிருக்கிறது. பிரச்சாரத்துக்குச் சென்றிருந்த சீமான், வீடு திரும்புவதற்காகக் காத்திருந்த நேரத்தில் நூலகத்தைப் பார்வையிட முடிந்தது. சங்கத் தமிழ் இலக்கியங்கள், பண்டைத் தமிழர் வரலாற்று நூல்கள் தொடங்கி நவீன இலக்கியங்கள், சூழலியல் நூல்கள் வரை விரிவான தொகுப்புகள் அடுக்கப்பட்டிருக்கின்றன. அண்ணாவின் வரலாற்றைப் பேசும் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல் ஓரிடத்தில் தென்பட்டபோது, எடுத்துப் பிரித்துப் பார்த்தேன். குறிப்புகள் நிமித்தம் பக்கங்களின் ஓரங்கள் ஆங்காங்கே மடிக்கப்பட்டிருக்கின்றன. நம்மாழ்வார் நூல்களைப் பிரித்தபோது நிறைய அடிக்குறிப்புகளைக் காண முடிந்தது. ப.சிங்காரம் எழுதிய ‘புயலிலே ஒரு தோணி’ வாசிப்பில் இருக்கும் அறிகுறிகளுடன் வைக்கப்பட்டிருந்தது. மேஜையில் உள்ள ‘ஜென் கதைகள்’ நூலில் மடிக்கப்பட்டிருந்த பக்கத்திலுள்ள கதையை சீமானுடைய ஒரு பேச்சில் கேட்டது நினைவுக்கு வருகிறது. சீமான் வந்துவிட்டார்.

ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் வாசிப்பீர்கள்?

சாதாரண நாட்கள்ல காலையில் இரண்டு மணி நேரம் வாசிப்பேன். வாசிப்பைத் தவறவிடக் கூடாதுங்கிறதுக்காகவே மாலையில்தான் உடற்பயிற்சின்னு வெச்சுக்கிட்டேன். வருஷத்தில் சில நாட்கள் முழுக்க உட்கார்ந்துடுவேன். கணக்கு வழக்கில்லாமல் அப்போ வாசிப்பேன்.

இப்போது யாரை அதிகம் வாசிக்கிறீர்கள்?

அதிகம் எஸ்.ராமகிருஷ்ணன் புத்தகங்களை வாசிக்கிறேன். அவர் எங்க ஊர் பக்கம்கிறதாலோ என்னவோ ரொம்ப நெருக்கமா அவரோட எழுத்துகள் இருக்குது. அம்பேத்கர், நம்மாழ்வார் எழுத்துகளை அடிக்கடி எடுத்து வாசிப்பேன். என்னோட பழக்கம் என்னன்னா, இந்தப் புத்தகத்துல பத்துப் பக்கம், அந்தப் புத்தகத்துல பத்துப் பக்கம் அப்படின்னு வாசிப்பேன்; ஒரே புத்தகத்தோடு முழுசா உட்காருவது கிடையாது. நமக்கு ஒண்ணும் தெரியலைங்கிறதுதான் படிக்கப் படிக்கத் தோணுது. யாருக்கும் குறைவில்லாம நம்மாளுங்க சிந்திச்சுருக்காங்க, எழுதியிருக்காங்க. ஆனா, இந்த இனம் இப்படி அதிகாரம் அற்று இருக்குங்கிறதுதான் வரலாற்று முரணா இருக்கு.

ஒவ்வொரு இனமும் காலம் நெடுகிலும் மாறிவரும் அரசியல் சூழல்களுக்கு ஏற்ப தன்னுடைய சிந்தனைகளையும் போக்குகளையும் புதுப்பித்துக்கொண்டே வருகிறது. தமிழ்த் தேசிய அரசியலுக்கு இங்கே குறைந்தது நூறாண்டு அரசியல் வரலாறு இருக்கிறது. ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று பேசிய பெரியாரும், அண்ணாவும் பிற்பாடு ‘திராவிட நாடு’என்று பேசலானதும், பின்னர் இந்தியக் கூட்டாட்சியில் மாநில சுயாட்சியை முன்னிறுத்திப் பேசலானதும் சமரசங்கள் மட்டும் அல்ல; அடுத்தடுத்த கட்டப் பரிணாமங்கள். உங்களுடைய ‘நாம் தமிழர் கட்சி’யின் இலக்கு என்ன? கடைசியாக அண்ணா விட்டுச்சென்ற கூட்டாட்சி எனும் புள்ளியின் தொடர்ச்சியா அல்லது தமிழ்த் தேசிய அரசியலின் தொடக்கப் புள்ளியான தனிநாடு கனவா?

தனி நாடு அல்லது கூட்டாட்சி அதுஇதுன்லாம் நான் பேசப்போறதில்லை. என் இனத்துக்குத் தேவை அதிகாரம். பல்லாயிரம் ஆண்டுகளா இது தமிழ்த் தேசம்தான்; இந்தியாங்கிற நாடு எழுபது ஆண்டுகளுக்கு முன்பு எழுந்து உருவாவதற்கு முன்னாடியும் இது தமிழ்த் தேசம்தான்; இப்போதும் தமிழ்த் தேசம்தான். ஆட்சியாளர்கள் யாருங்கிறதை விடுங்க. இந்தியாங்கிறதே பல நாடுகளோடு ஒன்றியம்தானே! ‘யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா’ மாதிரி ‘யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் இந்தியா’. அப்படிச் செய்வோம்! ‘மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் தன்னாட்சி’ என்பது அண்ணா முன்வைத்த முழக்கம். எல்லா தேசிய இனங்களுக்கும் அதுதான் சரி. இப்போதுள்ள ஆட்சிமுறையில மாநில உரிமைகள் பறிபோய்க்கிட்டே இருக்கு. வட இந்தியர்கள்தான் நாட்டின் முதன்மை அமைச்சர்களாக ஆக முடியும்ங்கிற சூழல் போதாதா, இங்குள்ள அக்கிரமச் சூழலைச் சொல்ல? இந்த நிலை மாற்றப்படணும். என் மக்களுக்கும் அதிகாரம் வேணும். இதைத்தான் நான் பேசுறேன்.