பெண்களுக்கு ஒரு முக்கியமான செய்தியைப் பகிர்ந்திருக்கிறார் ஏஞ்சலினா ஜோலி. தனக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படக்கூடிய அபாயத்தைப் பரிசோதனைகளின் மூலம் அறிந்துகொண்ட அவர், புற்றுநோயைத் தவிர்க்க மாஸ்டெக்டோமி அறுவைச் சிகிச்சை முறை மூலம் தன் இரு மார்பகங்களையும் அகற்றிக்கொண்டிருக்கிறார். 'நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகையில் இது தொடர்பாக எழுதியுள்ள கட்டுரையில், "என்னுடைய தாயை அவருடைய 56 வயதில் புற்றுநோய்க்குப் பறிகொடுத்தேன். இப்போது எனக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கு 87 சதவீதமும் கருப்பைப் புற்றுநோய் ஏற்படுவதற்கு 50 சதவீதமும் வாய்ப்பு இருப்பதைப் மரபணுப் பரிசோதனைகள் மூலம் அறிந்துகொண்டேன். அந்த அபாயத்தை முடிந்தவரை குறைத்துக்கொள்ளும் நோக்கிலேயே இந்த முடிவை எடுத்தேன்" என்று எழுதியிருக்கும் ஏஞ்சலினா அடுத்து சொல்லியிருக்கும் செய்திகள் முக்கியமானவை. "என் மார்பகங்களை இழந்ததால் ஒரு பெண்ணாக எதையும் இழந்துவிட்டதாக நான் நினைக்கவில்லை. உலகெங்கும் ஆண்டுதோறும் 4.58 லட்சம் பெண்கள் மார்பகப் புற்றுநோயால் உயிரிழக்கின்றனர். குறிப்பாக பொருளாதாரரீதியாக பின் தங்கியிருக்கும் நாடுகளில். பலருக்கு நோயைத் தவிர்க்க இப்படியான முடிவுகளை எடுக்கும் வாய்ப்புகள் இருப்பது தெரியாது. என் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் அந்த வாய்ப்புகளைப் பேச விரும்புகிறேன்" என்று தெரிவித்திருக்கிறார். மேலும், இந்தச் சிகிச்சைக்குப் பின் புற்றுநோய் அபாயம் 87 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைந்துவி்ட்டதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
வருமுன் காப்பது சாலச்சிறந்தது. அதேசமயம், அந்தக் காப்புமுறை உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு, வாழ்க்கைச் சூழல் போன்ற வழிமுறைகளால் நடக்க வேண்டும் என்பது என் எண்ணம். இப்படியான முன்கூட்டித் திட்டமிடும் சிகிச்சைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. இந்தியா போன்ற - வந்த பின்னரான சிகிச்சைக்கே வழியில்லாத - நாட்டில் இதைப் பற்றிப் பேசுவதிலும் அர்த்தம் இல்லை (தவிர, இத்தகைய பரிசோதனைகள், செய்திகளின் பின்னணியில் மருந்து நிறுவனங்களின் ராட்சஷ லாபி உண்டு). ஆனால், இவற்றை எல்லாம் தாண்டி ஏஞ்சலினா ஜோலியின் அனுபவத்தில் மூன்று செய்திகள் ஒளிந்திருக்கின்றன.

