விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

51=100, 49=0: இது சரியா?


இந்தக் கணக்கைப் பாருங்கள்: அகில இந்திய அளவில் இந்தத் தேர்தலில் பா.ஜ.க. வாங்கியிருக்கும் ஓட்டு விகிதம் 31%; அது பெற்றிருக்கும் இடங்கள் 282. காங்கிரஸ் வாங்கியிருக்கும் ஓட்டு விகிதம் 19.3%; ஆனால், அது பெற்றிருக்கும் இடங்கள் 44. தேசிய அளவில் அ.தி.மு.க. வாங்கியிருக்கும் அதே 3.3% ஓட்டு விகிதத்தைத்தான் மார்க்ஸிஸ்ட் கட்சியும் வாங்கியிருக்கிறது; ஆனால், அ.தி.மு.க. பெற்றிருக்கும் இடங்கள் 37; மார்க்ஸிஸ்ட்டுகள் பெற்றிருக்கும் இடங்கள் 9. இதைவிடவும் விசித்திரம் பகுஜன் சமாஜ் கட்சி வாங்கியிருக்கும் ஓட்டு விகிதம் 4.1%. ஆனால், ஒரு இடத்தைக்கூட அந்தக் கட்சி பெறவில்லை.
தமிழக அளவில் இந்தக் கணக்கை இப்படிப் போடலாம்: அ.தி.மு.க. வாங்கியிருக்கும் ஓட்டுகள் 43.3%; பெற்றிருக்கும் இடங்கள் 37; தி.மு.க. வாங்கியிருக்கும் ஓட்டு விகிதம் 23.6%; ஒரு இடத்தைக்கூடப் பெறவில்லை.
ஏன்?
ஏனென்றால், இப்போதுள்ள நம்முடைய தேர்தல் அமைப் பின்படி, 100 பேர் உள்ள ஓர் ஊரில், 51 ஓட்டுகளை வாங்குபவர் முழு வெற்றி பெற்றவர்; 49 ஓட்டுகளை வாங்குபவர் முழு தோல்வி அடைந்தவர். அதாவது, 51=100. 49=0.
இது வெறுமனே கட்சிகளுக்கான இழப்பு மட்டும் அல்ல; இந்தக் கட்சிகளுக்காக வாக்களித்த கோடிக்கணக்கான வாக்காளர்களுக்கான இழப்பு. வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், வீணான ஓட்டுகள்.