samas லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
samas லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

370: இந்தியா தவறவிடும் ஒரு மகத்தான வாய்ப்பு


நாகாலாந்து ஆளுநர் ஆர்.என்.ரவி, சில வாரங்களுக்கு முன்பு அந்த மாநிலத்தின் முதல்வர் நெஃப்யூ ரியோவுக்கு முன்னுதாரணமற்ற ஒரு கடிதத்தை எழுதினார். ‘நாகாலாந்தின் ஆயுதக் குழுக்கள் தேச ஒற்றுமையையும் இறையாண்மையையும் கேள்விக்குட்படுத்தும் வகையில், இந்திய அரசமைப்பு மூலம் நிறுவப்பட்ட மாநில அரசின் சட்டபூர்வமான இருப்புக்குத் தினமும் சவால் விடுகின்றன’ என்று அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டார். நாகாலாந்தில் ஒரு இணை அரசுபோல ஆயுதக் குழுக்கள் செயல்படுவதையே ஆளுநர் ரவி இப்படிக் குறிப்பிட்டார். அவரது குற்றச்சாட்டின் மைய அம்சம், அந்த ஆயுதக் குழுக்கள் மக்களிடத்தில் வசூலிக்கும் பணம்.

ஆயுதக் குழுக்களில் முக்கியமானதான நாகாலாந்து தேசிய சோசலிஸ கவுன்சில் (ஐமு) ஆளுநர் ரவிக்கு எதிர்வினை ஆற்றியது. ‘மக்களிடம் பணப்பறிப்பு எதிலும் நாங்கள் ஈடுபடவில்லை’ என்று குறிப்பிட்ட அந்த இயக்கம், ‘அதே நேரம், நியாயமான வரிகளை வசூலிக்கிறோம். மக்களிடமிருந்தும் வணிக நிறுவனங்களிடமிருந்தும் வரி வசூலிப்பது ஒரு தேசம் மற்றும் இறையாண்மை கொண்ட மக்களின் உள்ளார்ந்த உரிமை. நாகா அரசியல் இயக்கத்தை நடத்துவதற்கான அடிப்படை நிதியாதாரம் இந்த வரிகள். கடந்த காலத்தில் அமைதிப் பேச்சுகள் நடத்திய இடைத்தரகர்களும் இந்திய அரசுத் தரப்பும் இதை விதிகளுக்கு உட்பட்டதாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பதால், இது எப்போதும் ஒரு பிரச்சினையே இல்லை’ என்று கூறியது.

நாகாலாந்தையோ, இந்தியாவில் ஆயுதக் குழுக்கள் ஆதிக்கம் நிறைந்த பிராந்தியங்களையோ அறிந்தவர்களுக்கு இது எந்த ஆச்சரியத்தையும் தராது. நான் மணிப்பூர் சென்றிருந்தபோது அதன் தலைநகர் இம்பாலில் உள்ள புகழ்பெற்ற இமா சந்தையில் மணிப்பூரின் சுதந்திர நாளைக் கொண்டாடும் சுவரொட்டிகளைக் கண்டேன். பாதுகாப்புப் படையினர் அருகிலேயே நின்றுகொண்டிருந்தார்கள். அகண்ட நாகாலாந்தைக் கோரும் குழுக்களும் மணிப்பூர் ஆயுதக் குழுக்களைப் போலவே ஆகஸ்ட் 14 நாளை நாகாலாந்தின் சுதந்திர நாளாகக் கொண்டாடுகின்றன. இந்தியாவின் மைய நீரோட்டத்தை நோக்கி இத்தகு குழுக்களையும் மக்களையும் இணைக்கும் பேச்சுகள் நடந்துகொண்டே இருக்கின்றன.

காங்கிரஸ், பாஜகவினருக்கு காமராஜரிடமிருந்து ஒரு பாடம்




கொஞ்சம் அரதப்பழசான கதைதான் என்றாலும், இதிலுள்ள நுட்பமான பல இழைகள் வெவ்வேறு காலகட்டங்களில்  வெவ்வேறு விவாதங்களுக்கு நம்மைக் கொண்டுசேர்க்கின்றன. காங்கிரஸை வீழ்த்தி திமுகவை ஆட்சியில் அமர்த்துகிறார் அண்ணா. தேர்தல் முடிவுகள் வானொலி அறிவிப்புகளாக வந்துகொண்டிருக்கின்றன. சென்னையில் உள்ள அண்ணாவின் வீடு குதூகலத்தில் இருக்கிறது. விருதுநகரில் காமராஜர் திமுக வேட்பாளர் சீனிவாசனால் தோற்கடிக்கப்பட்ட செய்தி வெளியானதும் வேட்டுச் சத்தம் அதிர்கிறது. கட்சிக்காரர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள். கடும் கோபத்தோடு வீட்டிலிருந்து  வெளியே வரும் அண்ணா, கட்சிக்காரர்களைக் கடிந்துகொள்கிறார். “உங்கள் ஆர்ப்பாட்டத்தை நிறுத்துங்கள். தோற்கக்கூடாத நேரத்தில் தோற்றிருக்கிறார் காமராஜர். இன்னொரு தமிழன் காமராஜர் இடத்துக்கு வர இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆகும். காமராஜரின் தோல்வி கொண்டாட்டத்துக்கு உரியதல்ல. அது நம்முடைய தோல்வி!” தேர்தலில் வெற்றி பெற்று அண்ணாவிடம் வாழ்த்துப் பெற வரும் சீனிவாசனிடமும் இதையே சொல்கிறார் அண்ணா. “என்னை மன்னித்துவிடு சீனிவாசா... உன்னுடைய வெற்றி தர வேண்டிய மகிழ்ச்சியை காமராஜரின் தோல்வி தந்த வருத்தம் பறித்துவிட்டது!”

அரச வன்முறையின் ஊற்றுக்கண்



நாம் முதலில் இதை நம் வாயால் சொல்லிப் பார்ப்போம். ஒரு முதியவரும், அவரது மகனும் என்று இரு உயிர்கள் சிதைக்கப்பட்டுவிட்டன. என்ன காரணத்துக்காக என்று கேட்டால், ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு குறித்த நேரத்தில் அவர்களுடைய கடை மூடப்படாததுதான் காரணம் என்கிறார்கள். ஆக, நீங்களும் இப்படி ஒருநாள் ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு, குறித்த நேரத்துக்குள் வீட்டுக்குத் திரும்பாமல் காய்கறிக் கூடையோடு சாலையில் நிற்க நேர்ந்தால் அதற்காக உயிரைவிட நேரிடலாம்.

அடிபட்டே உயிரை விட வேண்டும். நியாயம் கேட்க வீட்டிலிருந்து உங்கள் பிள்ளை வந்தால், அவரும் மூங்கில் கழிகள் உரிய அடிபட்டுச் சாக வேண்டும். குதத்தில் காக்கிச்சட்டையர்களின் லத்திகள் திணிக்கப்பட்டு ரத்தம் சொட்டச் சொட்டக் குத்திக்குதறி அவர்கள் விளையாடும்போது, வாயை மூடியபடி கதற வேண்டும். கொடூர விளையாட்டு அவர்களுக்கு அலுத்துப்போகும்போதோ, தாங்கவே முடியாத எல்லையை உடல் அடையும்போதோ வெளியே இதை யாரிடமும் சொல்லக் கூடாது என்று அச்சுறுத்தப்பட்டு, காவல் நிலையத்திலிருந்து நீங்கள் இருவரும் வெளியே அழைத்துச் செல்லப்படுகிறீர்கள். உடலின் ரணமும், ரத்தம் கசிந்த உடைகளும் தெரியாத தொலைவில் நீதிபதி ஒருவரின் முன் கொண்டுசெல்லப்பட்டு நீங்கள் நிறுத்தப்படுகிறீர்கள். அந்த நீதிபதி உங்களைச் சிறையில் அடைக்க உத்தரவிடுகிறார். பின்னர் நீங்கள் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்படுகிறீர்கள். அங்கே உங்களுடைய மோசமான உடல்நிலையைப் பார்த்தும், காவல் அதிகாரிகளைச் சங்கடப்படுத்தாத வகையில் அவர்கள் விரும்பும் திருப்திகரமான ஒரு மருத்துவச் சான்றிதழை, அரசு மருத்துவர் வழங்குகிறார். பின்னர், சிறையில் நீங்களும் உங்கள் பிள்ளையும் உயிரை விடுகிறீர்கள்.

நாட்டு மக்கள் அதிர்கிறார்கள். எல்லோரும் பேசத் தொடங்கியதும், உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் முதல்வர் பேசுகிறார். இந்தக் கொடுங்கோன்மையை வன்முறை என்று சொல்லக்கூட தயங்கும் அவர், மகன் மூச்சுத்திணறலாலும், தந்தை உடல்நலக் குறைவாலும் இறந்ததாகச் சொல்கிறார். எதிர்ப்பு நாளுக்கு நாள் வலுக்கவும், குற்றஞ்சாட்டப்படும் காவல் துறையினரைப் பணியிடை நீக்கம் செய்யும் அவர், அதேசமயம் அவர்கள் மீது அதுவரை பதியப்படாத ஒரு வழக்கை, தன்னுடைய பொறுப்புக்குக் கீழேயுள்ள காவல் துறையிடமிருந்து தன்னுடைய பொறுப்புக்கு அப்பாற்பட்ட ஒன்றிய அரசின் மத்திய புலனாய்வு அமைப்பின் விசாரணைக்கு மாற்றவிருப்பதாக அறிவிக்கிறார். இதனிடையே சம்பவத்தை விசாரிக்க நீதிபதி ஒருவர் செல்கிறார். விசாரணையில் ‘உங்களால் ஒன்றும் புடுங்கக்கூட முடியாது’ என்று நீதிபதிக்கு சவால் விடுகிறார் ஒரு காவலர். விசாரணைக்குக் காவல் துறையினர் ஒத்துழைக்க மறுப்பதால் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தின் நிர்வாகத்தைக் காவல் துறையிடமிருந்து பறித்து, வருவாய்த் துறைக்கு மாற்றி மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க உத்தரவிடுகிறது நீதிமன்றம்.

அன்றாடம் காவல் கம்பிகளுக்குப் பின் ஐந்து பேர் உயிரை விடும் ஒரு நாட்டில் இந்த விவகாரம் எப்படி முடியும் என்ற கேள்விக்கு முன் சுற்றிலும் இங்கு நடக்கும் விவாதங்களிலிருந்து வேறு ஒரு அடிப்படையான கேள்விக்கு முகம் கொடுப்போம். இது வெறும் காவல் துறையின் சீர்கேடா அல்லது ஒட்டுமொத்த அமைப்பினுடைய சீர்கேட்டின் வெளிப்பாடா?

கண்ணியத்துக்கான மாற்றீடல்ல பிழைப்பு

அன்புக்குரிய சகோதரர்களே, வணக்கம்!

ஒரு ரயில் பாதை. அதன் நடுவே ரத்தம் தோய சிதறிக் கிடக்கும் சப்பாத்திகள். பக்கத்திலேயே சிதைந்த உடல்களின் பாகங்கள். இந்த ஒரு காட்சி கரோனா வரலாற்றிலிருந்து அகலப்போவதே இல்லை. எத்தனை நூற்றாண்டுகள் கழித்தாலும், எதிர்வரும் தலைமுறைகள் நினைவுகூர்கையில் கரோனாவை இந்தியா எதிர்கொண்ட ஒட்டுமொத்த சூழலையும் ஓர் உருவகமாக அந்தக் காட்சி சொல்லும். ஊரடங்கின் விளைவாகப் பிழைப்பை இழந்து, போக்குவரத்து முடக்கப்பட்ட நிலையில், சொந்த மாநிலத்துக்கு ரயில் பாதை வழியே கால்நடையாகச் செல்லத் துணிந்து, ஔரங்காபாத் அருகே சரக்கு ரயிலில் அடிபட்டு உயிரிழந்த புலம்பெயர் தொழிலாளர்கள் பதினாறு பேரும் அந்தக் கொடிய அதிகாலையில் எழுப்பிய மரண ஓலம் இந்த நாட்டின் மனசாட்சி நோக்கி விடுக்கப்பட்டிருக்கும் பெரும் அறைகூவல்.

இந்தியாவின் அமைப்பில் உள்ள சகல பலவீனங்களையும் கரோனா அம்பலமாக்குகிறது. வணிகத் தலைநகரம் - முன்னேற்றத்தின் முகம் என்று நாம் கொண்டாடிவந்த மும்பைதான் இன்று நாட்டிலேயே மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நகரம். நாட்டுக்கே பொருளாதார வளர்ச்சிக்கு முன்மாதிரி என்று தூக்கிப்பிடிக்கப்பட்ட குஜராத், கரோனா மரணங்களில் முன்வரிசையில் இருக்கிறது. ஆலைகளுக்கும் தொழில்களுக்கும் பேர்போன குஜராத்தி நகரங்களால் தம் தொழிலாளர்களை சில வாரங்களுக்குக்கூட நிம்மதியாகப் பார்த்துக்கொள்ள முடியவில்லை. குஜராத்தின் சண்டோலாவிலுள்ள ஆலை ஒன்றில் கூலியாக வேலை பார்த்துவந்த ஜாதவ் அசாமின் கதாரியா கிராமத்துக்குப் புறப்பட்டார்; 25 நாட்கள் நடந்தும், இடையிடையே தென்பட்ட வண்டிகளில் தொற்றியபடியும் 2,800 கி.மீ. பயணித்து, தன் சொந்த ஊரை அவர் அடைந்தபோது ஜாதவின் உடல் நைந்துபோயிருந்தது. ‘எங்களை விடுங்கள்; ஜாதவ் மாதிரியேனும் ஊர் போய் சேர்கிறோம்’ என்று சூரத்திலுள்ள பல ஆயிரம் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியபடியே இருக்கின்றனர்.

மோடி, சோனியா பொம்மைகளுக்கு டெல்லி தேர்தலில் என்ன வேலை?


மூன்று பொம்மைகள். இந்தப் பக்கம் மோடி பொம்மை. அந்தப் பக்கம் சோனியா பொம்மை. இரண்டும் உதட்டைப் பிதுக்கி, தலையை உதறுகின்றன. நடுவேயுள்ள அர்விந்த் கேஜ்ரிவால் பொம்மை வெற்றிக் களிப்புடன் ஆட்டம் போடுகிறது. தொலைக்காட்சிகளில் தேர்தல் முடிவு அறிவிப்புகளோடு இப்படியான குட்டி கேளிக்கைகளும் சேர்ந்துகொள்வது குதூகலமாகத்தான் இருக்கிறது. அதுசரி, நாடு தழுவிய மக்களவைத் தேர்தல் முடிவு வெளியாகும்போது, நாட்டின் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியைக் கையில் வைத்திருக்கும் தலைவர் பொம்மைகள் யுத்தத்தில் மோதினால் அதில் ஒரு நியாயம் உண்டு; டெல்லி போன்ற நாட்டின் ஒன்றரை சதவீத மக்களை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சின்ன மாநிலத்தின் தேர்தலுக்கும் ஏன் இந்தியாவின் தேசியக் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்த தேசியத் தலைவர்கள் தேவைப்படுகிறார்கள்?

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு ஈடான ஒரு முகம் இன்று பாஜக, காங்கிரஸ் இரு கட்சிகளிலுமே வற்றிப்போனது தற்செயல் அல்ல; பிராந்தியங்களில் சுயாதீனமான தலைவர்களை இன்று இரு தேசியக் கட்சிகளுமே விரும்பவில்லை. தேர்தல்களில் எதிர் வரிசையிலும் அப்படியான தலைவர்கள் இல்லாத நிலையில், தேசியக் கட்சிகளின் கணக்குகள் செல்லுபடியாகின்றன; எதிரே வலுவான பிராந்தியத் தலைவர்களின் கட்சிகள் நிற்கும்போது தேசியக் கட்சிகள் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன. எப்படியும் முழு அதிகாரமும் தம் கைகளிலேயே இருக்க வேண்டும் என்ற தேசியத் தலைவர்களின் அதிகார வேட்கையைப் பிராந்தியங்கள் தொடர்ந்து நிராகரிக்கின்றன.

தொடர்ந்து மூன்றாம் முறையாக டெல்லி மக்கள் அர்விந்த் கேஜ்ரிவாலுக்குப் பெரும் வெற்றியைப் பரிசளித்திருப்பதானது, ஒரு புதிய செய்தியை இந்திய அரசியல் பரப்பின் கவனத்துக்குக் கொண்டுவருகிறது:  தாம் எப்படி நிர்வகிக்கப்பட வேண்டும் என்பதை இந்திய நகரங்கள் இன்று இந்நாட்டின் தேசியக் கட்சிகளுக்குச் சொல்கின்றன; தம்மைத் தாமே ஆண்டுகொள்வதற்கு அவை தயாராகிவிட்டதைச் சுட்டுகின்றன; கூடவே, இதுநாள் வரை நம் அரசமைப்பானது மாநிலங்களுக்கும், உள்ளாட்சிகளுக்கும் கொடுத்திருக்கும் அதிகாரத்தின் போதாமையையும், கூடுதல் அதிகாரத்தின் மீதான தேட்டத்தையும் அவை பிரகடனப்படுத்துகின்றன.


சுஜித் மரணத்துக்கு யார் பொறுப்பாளி?


சமூகவியலாளர் சீனிவாச ராமாநுஜம் அமெரிக்கா போனார். அமெரிக்காவுக்கு அது அவரது முதல் பயணம். நியூயார்க் புறநகர் விடுதி ஒன்றில் தங்குவதற்கு அவருக்கு ஏற்பாடு ஆகியிருந்தது. அங்கே சில வாரங்கள் அவர் தங்கியிருக்க வேண்டும். கொட்டும் பனியும் வீட்டு நினைவும் ஓய்வு நாள் ஒன்றில் இந்தியவுணவு சாப்பிடும் ஆசையை அவருக்குள் கொண்டுவந்தன. அங்காடிக்குச் சென்று, ஆயத்த தோசை பொட்டலத்தை வாங்கிவந்தவர் ஓவன் அடுப்பில் அதைச் சூடாக்க வைத்தார். தொலைபேசி அழைப்பானது சில நிமிஷங்கள் அவர் கவனத்தைப் பறித்துவிட அறை முழுக்கப் புகை மண்டியது. அடுப்பு தீப்பிடிக்கும் முன்னர் அவர் அதை அணைத்தாலும் தீ அலாரம் ஒலிக்கத் தொடங்கலானது. ஜன்னல்களை அவசரமாகத் திறக்க முற்பட்டார் ராமாநுஜம். விடுதி வரவேற்பறையிலிருந்து தொலைபேசி அழைப்பு. முதல் கேள்வி: “நீங்கள் பத்திரமா?”

விடுதிப் பணியாட்கள் ஓடி வருகிறார்கள். முதல் கேள்வி: “உங்களுக்கு ஒன்றும் பிரச்சினை இல்லையே!” அடுப்பை மின் இணைப்பிலிருந்து அவர்கள் துண்டிக்கிறார்கள். எல்லா ஜன்னல்களும் திறக்கப்பட்டு, புகை வெளியேற்றப்படுகிறது. ஆனாலும், தீ அலாரம் சத்தம் போடுவதை நிறுத்தியபாடில்லை. “இதை நிறுத்தலாமா?” என்கிறார் ராமாநுஜம். “இதை நிறுத்த எங்களுக்கு அதிகாரமில்லை. தீயணைப்புத் துறையினர் வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் வந்துதான் நிறுத்த வேண்டும்.”

ஓரிரு நிமிஷங்களில் தீயணைப்பு வாகனம் வருகிறது. அறையைப் பார்வையிடுகிறார்கள். தீ அலாரத்தை நிறுத்துகிறார்கள். அடுப்பைப் பத்திரமாகத் தாங்கள் கொண்டுவந்த பெட்டிக்குள் எடுத்துக்கொண்டு புறப்படுகிறார்கள். விடுதிப் பணியாளர்கள் சொல்கிறார்கள்: “அது தடயவியல் துறை ஆய்வுக்குச் செல்லும். ஒருவேளை கூடுதல் நேரம் சூடாக்கப்பட்டு, தீப்பிடிக்கும் சூழல் உண்டானால் அடுப்பு தானாக மின்சாரத்தைத் துண்டித்துக்கொள்ள வேண்டும். தீப்பற்றும் சூழல் உண்டாகக் காரணம் என்ன - அந்தச் சாதனத்தின் தயாரிப்பில் உள்ள குளறுபடியா அல்லது பயன்படுத்தப்பட்ட விதத்தில் உள்ள குளறுபடியா என்று தடயவியல் துறையினர் கண்டறிவார்கள். தவறு நம் தரப்பிலானது என்றால், பிரச்சினை இல்லை; அடுப்புக்குக் காப்பீடு செய்திருக்கிறோம் வந்துவிடும்; ஒருவேளை அடுப்பு தயாரிப்பில் ஏதும் பிரச்சினை என்று கண்டறியப்பட்டால் அந்த நிறுவனம் தண்டனைக்குள்ளாகும்” என்கிறார்கள் விடுதிப் பணியாளர்கள்.

தன்னுடைய வேலைக்குப் புறப்படுகிறார் ராமாநுஜம். மாலையில் அவர் தனது அறைக்கு வந்தபோது புத்தம் புதிய ஓவன் அடுப்பு ஒன்று அங்கே இருக்கிறது. சில நாட்களில் ராமாநுஜம் விடுதியைக் காலிசெய்து ஊருக்குப் புறப்படுகிறார். எந்த சேதத்துக்கும் அவரிடம் விடுதி நிர்வாகம் ஒரு டாலர்கூட வாங்கவில்லை. அதைக் காட்டிலும் முக்கியம், அவரை யாருமே குற்றஞ்சாட்டவில்லை; அப்படி ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை.

இந்தியாவில் ஒவ்வொரு பேரிடருக்குப் பிறகும் நடக்கும் பழிபோடும் விளையாட்டின்போதும், இந்தக் கதையும் அது உள்ளடக்கியுள்ள ஒவ்வொரு இழையும் நினைவுக்கு வரும். ஒரு பேரிழப்புக்குப் பிறகும், பொறுப்பேற்பு தனி மனிதர்களுடையதா; அரசினுடையதா என்று விவாதிக்கும் ஒரு சமூகத்திடம் யாராலும் பொறுப்புணர்வை உட்புகுத்திவிட முடியாது. தனிமனிதர்கள் தவறிழைப்பது இயல்பு; அதை எதிர்கொள்ள ஒரு அமைப்பு ஒவ்வொரு நிலையிலும் எவ்வளவு பொறுப்புணர்வோடும் திட்டமிடலோடும் செயல்படுகிறது; ஒரு தனிநபரின் பிரச்சினையை எப்படி சமூகத்தினுடைய ஒரு உறுப்பின் பிரச்சினையாகக் கருதி அது அணுகுகிறது என்பதன் மூலமாகவே அமைப்புகள் சமூக மதிப்பீட்டைப் பெறுகின்றன.

நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில், வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்த இரண்டு வயது சிறுவன் சுஜித், கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து நான்கு நாட்கள் போராட்டத்துக்குப் பின்னும் சிதைந்த சடலமாக மீட்கப்பட்டது நம் ஒட்டுமொத்த சமூகமும் பொறுப்பேற்க வேண்டிய குற்றம் என்றே நான் நினைக்கிறேன். குழந்தையைப் பறிகொடுத்த பெற்றோரைக் காரணமாக்கிப் பேசுவது வக்கிரம்.

மாபெரும் தமிழ்க் கனவு



இன்றும் திராவிட நாகரிகத்தின் குறைந்தது ஆயிரமாண்டு எச்சங்களை நகரக் கட்டுமானத்தில் மிச்சம் வைத்திருக்கிற மன்னார்குடியின் ராஜகோபாலசுவாமி கோயில் தேரடித் திடலில் பிரம்மாண்டமான கூட்டம் கூடியிருக்கிறது. சுற்றுக் கிராமங்களிலிருந்து நகரை நோக்கி வரும் சாலைகள் அத்தனையும் மனிதத் தலைகளால் நிரம்பியிருக்கின்றன. கால்நடையாகத்தான் வருகிறார்கள் பெரும்பான்மையோர்; குழந்தைகளைத் தோளில் உட்காரவைத்தபடி நடந்து வருபவர்கள் அதிகம். மேடையில் உள்ளூர்ப் பேச்சாளரின் பேச்சின் இடையே குறுக்கிட்டு, மைக்கைப் பிடிக்கும் திமுக மாவட்டச் செயலாளர் மன்னை நாராயணசாமி சொல்கிறார், “நம் இதயங்களையெல்லாம் கொள்ளைகொண்ட பேரறிஞர் அண்ணா அவர்கள் தஞ்சாவூரிலிருந்து புறப்பட்டுவிட்டார். இன்னும் ஒரு மணி நேரத்தில் இங்கு வந்துவிடுவார்.” கூட்டம் பேரோசை எழுப்புகிறது.

அன்று பகல் ஒரு மணிக்கு அண்ணா பேசுவார் என்று முன்வரிசையில் இடம்பிடிக்க, காலை பத்து மணிக்கெல்லாம் வர ஆரம்பித்த கூட்டம் அது. மணி இப்போது மாலை ஐந்து. உள்ளூர்ப் பேச்சாளர்கள் தொடர்கிறார்கள். ஒரு மணி நேரம். மீண்டும் குறுக்கிடுகிறார் நாராயணசாமி, “வழியெல்லாம் மக்கள் அலை நடுவே நீந்தி வந்துகொண்டிருக்கிறார் நம் அண்ணன்.” இன்னும் அரை மணி நேரம். “தமிழினத்தின் விடுதலை விடிவெள்ளி அண்ணா வடுவூரைத் தாண்டிவிட்டார்.” மேலும் அரை மணி நேரம். “மன்னார்குடி எல்லையைத் தொட்டுவிட்டார் நம் தலைவர். இன்னும் ஐந்து நிமிடங்களில் நம் முன் உரையாற்றப்போகிறார், வரலாறு மாறப்போகிறது...” கூட்டம் ஆர்ப்பரிக்கிறது.

ஐந்தடி உயரம். கசங்கிய வேட்டி, சட்டை. மேல்துண்டில் புகையிலைப் பொடிக் கறை. கலைந்த தலைமுடி. ஒரு நாளைக்கு 20 கூட்டங்களுக்குத் திட்டமிட்டுக் கிளம்பினாலும், அதைத் தாண்டியும் வழியெங்கும் வண்டியை மறித்து ஒரு நிமிஷமேனும் தங்கள் ஊரில் பேசிவிட்டுச் செல்லப் பணிக்கும் மக்களின் அன்புக்காகப் பேசிப் பேசிக் களைத்தவரின் சோர்வு முகத்தில் தென்படுகிறது. ஆனால், கண் முன் தெரியும் மக்கள் வெள்ளத்தின் எழுச்சி தரும் புத்துணர்வு அவர் முகத்தை மலர்விக்கிறது. காரிலிருந்து இறங்குபவர் கூட்டத்தை உற்றுநோக்கியபடி சட்டையை லேசாகத் தூக்கிவிட்டு, வேட்டி மடியை இழுத்துக் கட்டுகிறார். அவர் ஒரு பேருரைக்கு உற்சாகமாக இருக்கிறார் என்பதற்கான அறிகுறி அது. எந்த வகையிலும் தன் உருவத் தோற்றத்தில் ஆளை வசீகரித்துவிடும் தன்மை அற்ற அந்த எளிய மனிதர் மேடை ஏறுகிறார். உன்மத்தம் பிடிக்கிறது கூட்டத்துக்கு. மைக்கைப் பிடிக்கிறார். பேரோசை; பேரோசை. அண்ணா பேச்சைத் தொடங்குகிறார். சன்னதம் ஆடிய கூட்டம் அப்படியே கட்டுண்டு சுருள்கிறது. அவர் உரையை முடிக்கிறார். ஒட்டுமொத்த கூட்டமும் விண்ணதிர அவர் பெயரைச் சொல்லி முழங்குகிறது, “அண்ணா... வாழ்க!”, “தமிழ்… வெல்க!” கூட்டத்தின் கண்களில் நீர் கசிகிறது.

பிரிட்டன் கிராமங்களினூடே ஒரு பயணம்


விடியலுக்கு இன்னும் வெகுநேரம் இருந்த இரவிலேயே அங்கு வந்தடைந்திருந்தோம். கடும்பனி கார் ஜன்னலின் கண்ணாடி மீது நுங்கு தசைபோல் படர்ந்திருந்தது. அதிகாலையில் புறப்பட்டு இரவில் திரும்பிவிடும் வகையில் பயணத்தைத் திட்டமிட்டிருந்தார் ஹெலன். நெடுஞ்சாலையை ஒட்டியும், பிரதான சாலையிலிருந்து பிரிந்தோடி, ஊருக்குள் சுற்றி இன்னொரு பிரதான சாலையில் போய்ச் சேரும் வகையிலும் அமைந்திருந்த கிராமங்களாகத் தேர்ந்தெடுத்து இந்தப் பயணத்தில் அவர் கோத்திருந்தார். வெளியே இருந்த பொழுதுக்கும், கடிகாரம் காட்டும் நேரத்துக்குமான தொடர்புகள் முற்றிலுமாக அறுபட்டிருப்பதாகத் தோன்றியது. கார் கண்ணாடிக்கு வெளியே சாலைக்கு மேலே கொட்டிக்கிடந்த நட்சத்திரங்கள் மத்தியில் வானம் தன்னை உள்ளடக்கிக்கொண்டிருந்தது. அந்த இருட்டிலும் கிராமங்களின் சாலையும் நெடுஞ்சாலையும் இணையும் இடங்களில் அங்காடிகள், மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள், வங்கிகள், பெட்ரோல் நிலையங்கள் என்று அனேகமாக எல்லா வசதிகளும் தென்பட்டன. ஊருக்குள் பிரிந்த சாலை நோக்கி காரை ஓட்டலானார் ஹெலன். ஜன்னல் கண்ணாடியைக் கொஞ்சம் கீழ் இறக்கினேன். அடர் கருநீலத்தில் இருபுறங்களிலும் விரவிக்கிடந்த வயல்களில், அணிவகுப்பில் நிற்கும் சிப்பாய்களைப் போல அலையலையாகக் குத்திட்டு நின்றிருந்தன தானியக் கதிர்கள். இடைவெளி விட்டுவிட்டு தூரத்தில் விளக்கெரியும் பண்ணை வீடுகள். புரண்டுகொண்டிருந்த கிராமத்தை விளக்கொளி வழியே பார்த்தபடியிருந்தேன்.

ஒரே நாடு, ஒரே மக்கள் என்றால், ஒரே சிகிச்சை கொடு அரசே!

பிரிட்டன் அரசு மருத்துவமனைகளைப் பார்வையிடச் சென்ற நாளில், ஹெலன் சேர்ந்துகொண்டார். “பிரிட்டனின் பெருமிதம் என்ஹெச்எஸ் (National Health Service – தேசிய சுகாதார சேவை). குடிமக்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான, கட்டணமற்ற, உயர்தரமான சிகிச்சை. லண்டனிலேயே ஏராளமான என்ஹெச்எஸ் மருத்துவமனைகள் இருக்கின்றன. நீங்கள் எங்கே விரும்புகிறீர்களோ அங்கே செல்லலாம்.”

நாங்கள் அப்போது ஃபிட்ஸ்ரோவியாவில் நின்றிருந்தோம். காந்தி  படித்த லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியைப் பார்த்துவிட்டு, நாடாளுமன்றச் சதுக்கத்தில் புதிதாக நிறுவப்பட்டிருந்த காந்தி சிலையைப் பார்ப்பதற்காக வெஸ்ட்மின்ஸ்டர் நோக்கித் திரும்பிக்கொண்டிருந்தோம். சன்னமாக வெயில் இறங்கிக்கொண்டிருந்தது. “நாம் கடக்கும் பாதையைச் சுற்றி எங்கெல்லாம் மருத்துவமனைகள் இருக்கின்றனவோ, அங்கெல்லாம் செல்வோம். அப்புறம், ராயல் லண்டன் மருத்துவமனையையும் நீங்கள் எனக்குக் காட்ட வேண்டும்.”

இந்த யோசனை ஹெலனுக்கும் பிடித்திருந்தது. சர்வதேச அளவில் பிரசித்திபெற்றது ராயல் லண்டன் மருத்துவமனை. அவசர சிகிச்சைக்கு ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தும் லண்டன் ஏர் ஆம்புலன்ஸ் சேவையின் தாயகமும் அது.

வட சென்னை: ஆளப்படுவோரின் அரசியல்



நகரத்தின் இரவு. ஒரு உணவு விடுதி. மங்கிய வெளிச்சம். ஒரு கொலையை விடுதிக்குள்ளேயே முடித்துவிட்டு, சிகெரெட் பிடித்தபடி உட்கார்ந்திருக்கும் கொலையாளிகள் பேசிக்கொள்கிறார்கள், “அடுத்து ஜெயலலிதா - அந்தம்மாதான் வரப்போறாங்க. இன்னும் இருவத்தியஞ்சு வருஷத்துக்கு நீ நிம்மதியா தொழில் செய்யலாம்…”

ராஜன், செந்தில், குணா, தம்பியண்ணன், முத்து, சந்திரா, அன்பு என்று ஏழு பாத்திரங்களைச் சுற்றி, விசுவாசத்துக்கும் துரோகத்துக்கும் இடையில் காவிய மரபில் கட்டப்பட்டிருக்கும் ‘வடசென்னை’ படத்தை, ‘மேலும் ஒரு கேங் வார் சினிமா’ என்று கடக்கவே முடியாது. விளிம்புநிலையினர் மையம் நோக்கி நகர முற்பட்டாலும், இங்கே காலம் முழுமைக்கும் அவர்கள் உதிரிகளாகவும், கும்பல்களாகவுமே நீடிக்கக் காரணம் யார், எது என்பதைத் தீவிரமான கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன்.

குறைந்தபட்ச வாழ்வூதியம் நமக்கு எப்போது சாத்தியமாகும்?




களங்கமற்ற மாலை. வைரத்தில் ஊடுருவி சிதறுண்டு வெளிவரும் கதிர்கள்போல, நகரத்தின் கட்டிடங்களில் மோதிச் சிதறி வீதிகளில் வந்து விழுந்திருந்தது சூரிய ஒளி. இன்னும் இரண்டு நாட்கள். மூன்றாவது நாளன்று இந்தியா புறப்பட வேண்டும். அதற்குள் இன்னும் மூன்று விஷயங்கள் தொடர்பில் தெரிந்துகொண்டுவிட விரும்பினேன்: பிரிட்டனில் தொழிலாளர் நிலை, பிரிட்டன் கிராமங்களின் இன்றைய சூழல், பிரிட்டனில் தமிழ் மக்கள் வாழ்க்கை.

இதற்கு லண்டனுக்கு வெளியே கொஞ்சம் பயணிக்க வேண்டும். விடுதி வாழ்க்கையைத் தாண்டி, வீட்டு வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும். யாரேனும் ஒரு தமிழ் நண்பர் உடனிருந்தால், நன்றாக இருக்கும் என்று தோன்றிற்று. நண்பர் ஷங்கரிடம் பேசினேன். அவருடைய நண்பர் ராஜை அறிமுகப்படுத்தினார். திருநெல்வேலியைச் சேர்ந்தவர் ராஜ். லண்டனில் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார். ஹால்போன் பகுதியில் அவர் அலுவலகம் இருந்தது. புறநகர்ப் பகுதியில், பிரஸ்டனில் வீடு எடுத்துத் தங்கியிருந்தார். விடுதிக்கு என்னை அழைக்க வந்திருந்தார்.

டாடா நிறுவனம் ஏன் பேசப்பட வேண்டியதாகிறது?

எந்த ஒரு கருவியும் யார் கைகளில் இருக்கிறதோ அதற்கேற்ப அதன் பண்பும் மாறும் என்பது என்னுடைய நம்பிக்கை. முதல் / மூலதனம் மட்டும் எப்படி இதற்கு விதிவிலக்காக இருக்க முடியும்? ஒரு பேட்டியில் ரத்தன் டாடாவிடம் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கும் டாடா நிறுவனத்துக்கும் இடையிலான வேறுபாடு சம்பந்தமாக கேள்வி எழுப்பப்பட்டபோது ரத்தன் டாடா சொன்னார், “அவர்கள் வியாபாரிகள், நாங்கள் தொழிலதிபர்கள்.”


சராசரி இந்தியக் குடும்பம் ஒன்றுக்கு அறிமுகமாவதுபோலவே பொருட்கள் வாயிலாக எனக்கு டாடா நிறுவனம் அறிமுகமானது. பலசரக்குக் கடையில், டாடா நிறுவனம் தயாரிக்கும் டீ தூளுக்குப் பதிலாக வேறு ஒரு நிறுவன டீ தூளை வாங்கி வந்த ஒரு நாளில், வீட்டில் டாடா நிறுவனத்தின் மகாத்மியங்கள் எனக்குச் சொல்லப்பட்டன. அந்தக் கதையை என்னுடைய தாத்தா இப்படி முடித்தார். “டாடா நுழையாத இடமே கிடையாது. ஆனா, எவ்வளவு வரும்படி வரும்னாலும் பீடி, சிகரெட்,சாராய விற்பனையில் நீ டாடாவைப் பார்க்க முடியாது. ஏன்னா, டாடாவுக்குன்னு அறம் சார்ந்த ஒரு கொள்கை இருக்கு!”


ரஃபேல்: ராகுல் கை வைத்திருக்கும் உயிர்நாடி… இந்தியா அதை விரிவாக்கிப் பேச வேண்டும்!



நாட்டுப்பற்று கொண்ட ஒரு இளைஞன் ராணுவம் சம்பந்தமான செய்திகளை எப்படி அணுகுவான்? அதுவும் ஒரு போர் வந்தால், பத்து நாட்களுக்கு சண்டையிடுவதற்கான போர்த் தளவாடங்கள்கூட நம்முடைய வீரர்களிடம் இன்று இல்லை என்ற செய்தி வந்தால், அவன் எப்படிக் கொந்தளிப்பான்?

கல்லூரி நாட்களில், ‘அமெரிக்க ராணுவம், சீன ராணுவத்தோடு ஒப்பிட இந்திய ராணுவத்திடம் ஆயுதங்கள், தளவாடங்கள் குறைவு’, ‘இந்திய ராணுவத்துக்கான நிதி ஒதுக்கீடு போதாது’ என்றெல்லாம் டெல்லியிலிருந்து ‘தேசிய ஊடகங்கள்’ செய்தி வெளியிடுகையில் கடுமையான கொந்தளிப்பு உருவாகும். மூளை உஷ்ணம் அடையும். உடல் தடதடக்கும். நரம்புகளுக்குள்ளான ரத்தக் கொப்பளிப்பைத் தோலுக்கு வெளியிலும் பார்க்க முடியும்.

ஊடகத் துறைக்கு இரண்டு பண்புகள் உண்டு. வெளியே இருப்பவர்களுக்கு அது கற்பனைகளை அள்ளிக்கொடுக்கும். உள்ளே வந்தடைபவர்களிடம் முதலில் அது அவர்களுடைய கற்பிதங்களை உடைக்கும்.

செய்தி ஆய்வுக் கட்டுரைகளை எழுதும் முன் செய்திகளை எப்படி அணுக வேண்டும் என்று ஊடக வகுப்பு எடுத்த ஒரு மூத்த சகாதான் என்னுடைய கற்பிதங்களை உடைத்தார். “ஒரு காவல் நிலையத்தின் உள்விவகாரங்களை நாம் வெளிக்கொண்டுவந்தாலே விஷயம் வெளியே போனதற்காக அங்குள்ள போலீஸ்காரர்களை மேலதிகாரிகள் கிழித்துவிடுவார்கள். அப்படி இருக்கும்போது, ஒரு போர் வந்தால் பத்து நாட்களுக்கான ஆயுதங்கள்கூட ராணுவத்திடம் இல்லை என்பது மாதிரியான தகவல்கள் எப்படி இவ்வளவு சாதாரணமாக தேசிய ஊடகங்களை வந்தடையும்? உண்மையில் நம்முடைய ராணுவத்திடம் எவ்வளவு ஆயுதங்கள் கையிருப்பில் இருக்கின்றன, என்ன நிலையில் இருக்கின்றன என்பது ராணுவ ரகசியம் இல்லையா? ராணுவத் தலைமை, அரசு இரண்டுக்கும் இது உள்ளபடியே சங்கடம் தரும் செய்தி என்றால், இத்தகைய செய்திகள் ஏன் ஊடகங்களுக்குக் கசியவிடப்படுகின்றன?”

அவர் மேலும் பேசலானார். “இங்கே எல்லாவற்றிலும் லாபக் கணக்குகள் உண்டு. லாபி உண்டு. ராணுவத்திடம் உள்ள வாகனங்கள் பழசாகிவிட்டன என்று டெல்லியிலிருந்து வரும் ஒரு செய்தியை நீ படிக்கிறாய் என்றால், அந்தச் செய்திக்குப் பின் ஏதோ ஒரு வாகன நிறுவனம் இருக்கலாம், யாரோ சில அதிகாரிகள், யாரோ சில இடைத்தரகர்கள், யாரோ சில அரசியல்வாதிகள் இருக்கலாம் என்று சந்தேகி. செய்திகளில் சமூக அக்கறை மட்டும் அல்ல; வர்த்தக அக்கறைகளும் செயல்படலாம். ஆளுங்கட்சியில் மட்டும் இல்லை; எதிர்க்கட்சியிலும் அவர்கள் இருக்கலாம். செய்திகளைச் சந்தேகப்படு. நான் சொல்லும் டெல்லி பத்திரிகையாளர்களின் சொத்து விவரங்களை விசாரி. பத்திரிகையாளர்களாக மட்டும் இருந்துகொண்டு அவர்களால் எப்படி இத்தனை கோடி சொத்துகளைக் குவித்திருக்க முடியும் என்ற கேள்விக்குப் பதில் தேடு. புரியும்!”

பிற்பாடு டெல்லியில் சுற்றிய நாட்களில் எல்லாம் புரிபட்டது. 2014 மக்களவைத் தேர்தல் தருணத்தில் இந்திய ஒன்றியம் முழுவதும் பயணித்து, பல்வேறு தரப்பினரும் இங்கு ஜனநாயகத்தை எப்படி அணுகுகிறார்கள் என்று ‘இந்தியாவின் வண்ணங்கள்’ கட்டுரைத் தொடர் எழுதினேன். அப்போது நாடறிந்த சில பத்திரிகையாளர்களின் பேட்டியையும் அதில் கொண்டுவர விரும்பினேன். டெல்லியில் நடக்கும் பேரங்கள், பேச்சுவார்த்தைகளில் பத்திரிகையாளர்களின் இடையீட்டை அதில் பதிவுசெய்யும் நோக்கம் எனக்கு இருந்தது. ஜனநாயகத்தில் இத்தகைய இடையீடுகள், லாபிகளுக்கான தேவையைப் புரிந்துகொள்ளும் ஒரு முயற்சியாகவே நான் அதைச் செய்ய முயன்றேன். ஏனென்றால், அமைச்சர்களாலேயே செய்து தர முடியாத காரியங்களைக்கூட அனாயாசமாகப் பிரதமர்களிடம் பேசி முடித்துத் தரும் பத்திரிகையாளர்களின் கதைகளை நான் கேள்விப்பட்டிருந்தேன். துரதிர்ஷ்டவசமாக அப்படி ஒரு பேட்டிக்கு யாரும் தயாராக இல்லை.

உலகெங்கும் இன்றுள்ள அரசதிகாரக் கோட்டைகளின் உள் சூட்சமப் பாதைகளை அறிந்தவர்கள் ஒரு விஷயத்தை ஒப்புக்கொள்வார்கள்: நவீன அரசில் ஊழல்களின் தாய் ராணுவப் பேரங்களிலேயே குடிகொண்டிருக்கிறாள். தேச நலன் என்ற இரு வார்த்தைகள் போதும், தேசியத்தின் பெயரால் ஒரு அரசு எதையும் செய்யலாம்; எவ்வளவு பேரையும் பலியிடலாம்.

லண்டன்: நடப்பதற்கு ஒரு நகரம்



ஒரு ஆரோக்கியமான மாற்றம் உருவாகியிருந்தது. லண்டன் வந்தது முதலாக அன்றாடம் சுமார் 20 கி.மீ. தூரம் வரை நடக்க ஆரம்பித்திருந்தேன். நடை, மிகுந்த விருப்பத்துக்குரியதாக ஆகியிருந்தது. மரங்களின் நிழல் தரித்த, மேடு பள்ளங்கள் - குறுக்கீடுகள் அற்ற, அகல விரிந்த நடைபாதைகள் மேலும் மேலும் நடக்கும் உத்வேகத்தை அளித்தன. உடலைத் துளைக்கும் குளிரானது நடையில் அபாரமான ஒரு வேகத்தைக் கூட்டியிருந்தது. கதகதப்பான கோட்டும், எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தக்கூடிய மழையை எதிர்கொள்ள கையில் ஒரு குடையும் இருந்தால் நாளெல்லாம் நடந்துகொண்டே இருக்கலாம்போல் இருந்தது.

நகரம் சில்லிட்டிருந்தது. நகரின் கடை வீதிகளைச் சுற்றிவர அன்றைய மதியப் பொழுதைத் தேர்ந்தெடுத்திருந்தேன். நண்பகலுக்குப் பிந்தைய, சாயங்காலத்துக்கு முந்தைய, இந்த இரண்டுக்கும் இந்த இடைப்பட்ட பொழுதானது கடைகளை வேடிக்கைபார்த்தபடி நடக்கவும், விருப்பமான கடைகளில் சடாரென்று உள்ளே நுழைந்து ஒரு பார்வையிட்டு திரும்பவும் வசதியானது. எந்த நகரின் கடைவீதியும் சோம்பல் முறிக்கும் நேரம் அது.

லண்டன்: மிட்டாய்க்குள் கிராமம்



குளிர் அப்பிக்கொண்டது. கைகளை இறுகக் கட்டிக்கொண்டேன். இந்தியாவில் எவ்வளவோ சுற்றியிருக்கிறேன் என்றாலும், இந்தக் குளிர் அந்நியமாக இருந்தது. விரல்கள் ஐஸ் வில்லைகள் மாதிரி இருந்தன. ஹெலன் கை குலுக்கினார். “ஒரு காபியோடு நாம் இங்கிருந்து புறப்படலாம். குளிருக்கு ஈடு கொடுக்கும்!” என்றார். பிரிட்டிஷ் அரசாங்கத்தால் பயண வழிகாட்டலுக்கு அனுப்பப்பட்டிருந்தவர் இவர். பார்க்க கல்லூரி மாணவிபோல இருந்தார். பிரிட்டன் வரலாறு, பிரிட்டிஷ் சமூகவியலைச் சொல்வதில் மிகுந்த தேர்ச்சியுடன் இருந்தவர் பகுதிநேரப் பணியாக பயண வழிகாட்டியாகப் பணியாற்றுவதாகச் சொன்னார். குறுகிய நாட்களில் பிரிட்டிஷ் வாழ்க்கையைக் கொஞ்சம் ஊடுருவிப் புரிந்துகொள்வதற்கு ஹெலனுடனான சம்பாஷனைகள் பெரிய அளவில் உதவின.

அனைத்துச் சமூகத்தினருக்குமான இயக்கமாக பாமக உருவெடுக்கும்: ராமதாஸ்



பிடிவாதமாக சென்னைக்கு வெளியே தன்னை இருத்திக்கொண்டிருக்கும் தலைவர் ராமதாஸ். திண்டிவனம் – புதுச்சேரி சாலையில் உள்ள தைலாபுரம் செல்லும் பயணம் தமிழ்நாட்டின் அரசியல் சூழலுக்கும் சமூக, பொருளாதாரச் சூழலுக்கும் உள்ள பிணைப்பைக் குறுக்குவெட்டாகப் பார்க்க உதவுகிறது. அகலமான சாலையின் இருபுறங்களி
லும் நீளும் வயற்காட்டின் பெரும் பகுதி தரிசாகக் கிடக்கிறது. பிரதான சாலையிலிருந்து பிரிபடும் கிராமத்துச் சாலைகளின் நுழைவாயிலை ஒட்டி ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் கொடி மரங்கள், பிராந்தியத்தின் அரசியலைத் தீர்மானிக்கும் சமூகச் சூழலைச் சொல்கின்றன. சிறுத்தைகள், சிங்கங்கள் படங்களும் பொம்மைகளும் மாறி மாறி கடக்கின்றன. சாதிக்கு அப்பாற்பட்டு பெரும்பான்மையான மக்கள் வறண்ட கண்களுடனேயே நிற்கிறார்கள். வழிநெடுகிலும் தென்படும் மாடுகள் விவசாயிகளை மேய்ச்சல் எப்படி காத்துக்கொண்டிருக்கிறது என்பதைச் சொல்கின்றன. ராமதாஸ் வீட்டு எல்லையின் தொடக்கத்தில் மார்க்ஸ், பெரியார், அம்பேத்கர் மூவரின் சிலைகளும் நிற்கின்றன. மதில்கள் உயர்ந்த, மரங்கள் அடர்ந்த வீட்டில் வரவேற்கிறார் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ்.

லண்டன்: பல முகங்களில் ஒரு வரவேற்பு


விமானப் பயணத்தின்போது இறக்கை பக்கவாட்டிலுள்ள ஜன்னலோர இருக்கைகளைத் தேர்ந்தெடுப்பது என் வழக்கம். இயற்கையில் தனக்கு மறுக்கப்பட்ட ஆற்றல்களைத் தன்னுடைய அசாத்தியமான முயற்சிகளால் எட்டிப்பிடிப்பதில் மனித குலம் காட்டிவரும் இடையறாத யத்தனத்துக்கான அபாரமான குறியீடாக விமானத்தின் இறக்கைகள் தோன்றுவது உண்டு. உச்சத்தில் நிற்கும் சூரியனை நோக்கி ‘உனக்குப் பக்கத்தில் வருவேன் நான்’ என்ற மானுடத்தின் குரலை அவை சொல்லிக்கொண்டே இருக்கின்றன.

நீண்ட பயணங்களில் விமானத்தின் ஜன்னலோடு ஒன்றிவிடுகையில் ஏதோ ஒரு கணத்தில் ஜன்னல் வழியே வெளியே நீட்டியிருக்கும் கைகளாக இறக்கைகள் மாறிவிடுவதை ஒவ்வொரு முறையும் உணர்கிறேன். மேகக் கூட்டங்களுக்குள் விமானம் நுழையும்போதெல்லாம், வான் வெளியில் அளையும் விரல் இடுக்குகளில் மேகம் சிக்கிச் செல்வதான உணர்வைத் தருகின்றன இறக்கைகள்.

என் பக்கத்து இருக்கையில் ஒரு இளம் சீக்கியர் அமர்ந்திருந்தார். நல்ல உயரம். வெளுப்பு. அவருடைய இரு கைகளையும் பச்சை டாட்டூக்கள் ஆக்கிரமித்திருந்தன. காதில் இயர்போன் மாட்டியபடி வந்தவர் இசையிலேயே வெகுநேரமாக மூழ்கியிருந்தார். விமானம் மேலெழும்பியபோது ஒரு ஹாய் சொன்னார். இருக்கையில் முதுகை வசதியாகச் சாய்த்துக்கொண்டவர் மீண்டும் கண்களை மூடிக்கொண்டார். நான் மேகக் கூட்டத்துடனான சுவாரஸ்யமான விளையாட்டில் மூழ்கினேன்.

லண்டன்


குதூகலம் தொற்றிக்கொண்டது. ஆசிரியர் அசோகன் அப்போதுதான் கூப்பிட்டு சொல்லியிருந்தார். “லண்டன் போகிறீர்கள். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் விருந்தினராக. ஒரு வாரம். கொண்டாடிவிட்டு வாருங்கள்.” லண்டன் காமன்வெல்த் மாநாட்டையொட்டி வந்திருந்த அழைப்பு அது.
எந்த ஊர்ப் பயணமுமே குதூகலத்தைக் கொண்டுவந்துவிடக் கூடியதுதான் என்றாலும், என்னளவில் இது கூடுதல் விசேஷத்துக்குரியது. சிறுவயது தொட்டு என்னை வசீகரித்துவந்திருக்கும் சொற்களில் ஒன்று லண்டன்.
வரலாற்றின் ஒரு மாணவனாக லண்டன் கதைகள் எனக்கு எப்போதுமே வியப்பூட்டிவந்திருக்கின்றன. அலெக்ஸாண்டிரியா, கான்ஸ்டான்டிநோபிள், பாக்தாத் இப்படி எத்தனையோ நகரங்கள் வரலாற்றில் ஓங்கி நின்றிருக்கின்றன - ஒரு காலகட்டத்தை வசப்படுத்த முடிந்த அவற்றால் இன்னொரு காலகட்டத்துக்கும் அதை நீட்டிக்க முடிந்ததில்லை. ரோம், டெல்லி போன்ற நகரங்கள் தன்னளவில் ஒரு எல்லைக்குட்பட்ட செல்வாக்கை வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வகைகளில் பராமரித்துவந்திருக்கின்றன. எனினும், இவை எவற்றோடும் லண்டனை ஒப்பிட முடியாது.

இந்தியாவின் மகத்தான இடதுசாரிகள் காந்தி, பெரியார், அம்பேத்கர்: கோவை ஞானி பேட்டி


இந்தியாவுக்கேற்ற பொதுவுடைமை இயக்கத்தை உருவாக்கும் சிந்தனைப் பயணத்தில் மிக முக்கியமான ஒரு புள்ளி கோவை ஞானி. இந்தியத் தளத்தில் மார்க்ஸையும் பெரியாரையும் இணைப்பது ஞானியினுடைய சிந்தனையின் மையம். 30 ஆண்டுகளுக்கு முன், அவருடைய 50-களில் நீரிழிவு நோய் முழுமையாக ஞானியின் பார்வையைப் பறித்தது. எனினும், தன்னுடைய வாசிப்பையோ, எழுத்தையோ, பேச்சையோ எது ஒன்றும் நிறுத்திவிட அவர் அனுமதிக்கவில்லை. காலை 11 மணி தொடங்கி மாலை 5 மணி வரை அவருடைய சிஷ்யையான மீனாட்சி வாசிக்கக் கேட்கிறார். நினைத்ததைச் சொல்லி எழுதுகிறார். முதுமை அவரைச் சங்கடத்துக்குள்ளாக்குவதையும் உணர முடிகிறது. உரையாடலில் உட்கார்ந்துவிட்டால் உற்சாகமாகிவிடுகிறார்.

கி.பழனிசாமி, எப்போது ஞானி ஆனீர்கள்?

என்னுடைய பால்ய கால சினேகிதர் துரைசாமி. ஒரே ஊருக்குள் இருந்தாலும் கருத்துகளைக் கடிதங்களாகப் பறிமாறிக்கொள்வதை விளையாட்டாகச் செய்துவந்தோம். அவர் ஞானி என்ற பெயரில் எழுதுவார். ஒருநாள் ‘இந்தப் பெயரை நான் விட்டுவிடுகிறேன். நீ எடுத்துக்கொள்’ என்றார். தத்துவங்கள் மீது எனக்கு ஈடுபாடு இருந்ததால், இளம் வயதிலேயே நான் ஞானி ஆகிவிட்டேன்.

மார்க்ஸும் ஆழ்வார்களும் வேறுவேறல்ல: எஸ்.என்.நாகராஜன்



இந்தியாவின் அசலான மார்க்ஸிய அறிஞர்களில் ஒருவர் எஸ்.என்.நாகராஜன். நவீன இந்தியாவின் பாரதூர வளர்ச்சிக்கான இன்னொரு சாட்சியம். விஞ்ஞானி. சமூகவியலாளர். எழுத்தாளர். மார்க்ஸின் இருநூற்றாண்டையொட்டி, நடத்தப்பட்ட உரையாடல் இது. நாகராஜன் காட்டாறு. ஒவ்வொரு கேள்வியும் அவருள்ளிருந்து வெளிக்கொணரும் எண்ணக் கூட்டத்திலிருந்து சில வரிகளில் பதிலைத் தொகுப்பது எளிதானதல்ல. பல நாட்கள், பல மணி நேர உரையாடல்களிலிருந்து தொகுக்கப்பட்ட சுருக்கம் இது.


இந்தப் பெயர் நீங்களாகச் சூட்டிக்கொண்டதா? பொதுவாக, ஐயங்கார் குடும்பங்களில் நாகராஜன் என்ற பெயர் அரிதானது என்பதால் கேட்கிறேன்...
சரியாகத்தான் பிடிக்கிறீர்கள். என் பெற்றோருக்கு நான் ஒன்பதாவது பிள்ளை. மூத்தவள் அக்கா. அதற்கு அப்புறம் ஏழு பிள்ளைகள். எல்லாம் செத்துவிட்டன. சீனிவாஸ சேஷன் என்றுதான் பெயர் சூட்ட யோசித்திருக்கிறார்கள். நானாவது நிலைக்க வேண்டும் என்ற யோசனைப்படி, தவிட்டுக்குத் தத்துக்கொடுத்து வாங்கி வைக்கப்பட்ட பெயர்தான் நாகராஜன்.

எப்போது கம்யூனிஸ்ட் ஆனீர்கள்?
கம்யூனிஸ்ட் ஆகவில்லை; எனக்குள்ளிருந்த கம்யூனிஸ்ட்டைக் கண்டுகொண்டேன். கல்லூரி நாட்களில் என்னுடைய பேராசிரியர் ஏ.கே.என்.ரெட்டி ஒரு புத்தகத்தைக் கொடுத்தார். கம்யூனிஸம் என்றால் என்னவென்று தெரிந்துகொண்ட மாத்திரத்தில், நான் ஒரு கம்யூனிஸ்ட் என்று உணர்ந்துகொண்டேன். நம் மரபிலேயே இது இருக்கிறது. வைணவத்தில் ‘முக்குறும்பைத் துறத்தல்’ என்று சொல்வார்கள். சாதிச் செருக்கு, செல்வச் செருக்கு, ஞானச் செருக்கு இது மூன்றையும் கைவிட்டால்தான் சக மனுஷனைச் சமமாக ஒருவன் பாவிக்க முடியும். சமத்துவம் பேச முடியும். மார்க்ஸியத்தை வைணவத்துடன் நான் பொருத்தும் புள்ளியும் இதுதான். வீட்டுச் சூழல், ஊர்ச் சூழல், காலச் சூழல் இவையெல்லாம் சேர்ந்துதான் என்னை உருவாக்கின.

உங்கள் வீட்டுச் சூழலைச் சொல்ல முடியுமா?
பிறந்து வளர்ந்தது சத்தியமங்கலம். பின்னாளில் பெங்களூர், கல்கத்தா, சென்னை என்று படிப்பு - உத்தியோகம் சார்ந்து பல ஊர் பார்த்தாயிற்று. பல சாதி பிள்ளைகளும் படிப்பதால், பள்ளிக்கூடத்துக்குப் போய்வந்தாலே, “உடுப்பை அவிழ்த்துப்போட்டுவிட்டு குளித்துவிட்டு வா” என்று சொல்லும் அளவுக்குப் பிராமண வீடுகளில் ஆச்சாரம் இருந்த காலகட்டம் அது. எங்கள் வீடு அப்படி இல்லை. கொஞ்சம் திறந்த சூழல் இருந்தது. என்னுடைய தகப்பனார் படித்தது கிறிஸ்தவக் கல்லூரி. பிற்பாடு அரசாங்க உத்தியோகத்தில் இருந்தார். அதனால் எல்லோருடனும் பழக்கம் இருந்தது. நேர்மையாளர். உத்தியோகத்தில் பாகுபாடு காட்ட மாட்டார். மகாவீரப்பா என்று அவருக்கு ஒரு சினேகிதர். லிங்காயத்து. கடுமையான பிராமண எதிர்ப்பு கொண்டவர். அடிக்கடி வீட்டுக்கு வருவார். அவர் வீட்டில் என்னுடைய தகப்பனார் கை நனைக்க மாட்டார். ஆனால், என் வீட்டுக்கு வந்தால் மகாவீரப்பா சாப்பிட்டுவிட்டுப் போவார். அம்மாவுக்கு வீட்டு வைத்தியம் பார்க்கும் பழக்கம் இருந்தது. பல வீட்டுப் பெண்களும் குழந்தைக்கு முடியவில்லை என்று தூக்கிக்கொண்டு வருவார்கள். எல்லாக் குழந்தைகளையும் தொட்டு வைத்தியம் பண்ணுவாள். ஆனால், பட்டுத்துணியை மேலே போட்டுக்கொள்வாள். இந்த அளவுக்குத்தான் அந்தத் திறப்பு. அப்பா நிறைய மதிப்பீடுகளைப் பேசுவார். அவராலேயே எல்லைகளை முழுமையாகக் கடக்க முடியவில்லை. ஏன் என்று ஒரு கேள்வி வரும் இல்லையா? நாளெல்லாம் கடவுளைப் பற்றி பேசுபவர்களாலேயே ஏன் முக்குறும்பை விட முடியவில்லை என்ற கேள்வி வந்தது. சமூகத்தில் எழுந்துவந்த பிராமண எதிர்ப்பானது ஒரு பிராமணனான எனக்குள்ளும் இந்த எதிர்ப்புக்கான காரணம் என்னவென்று யோசிக்க வைத்தது. இப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் உருவான கேள்விகள்தான் என்னை உருவாக்கின.

தமிழ்நாட்டில் பிராமணர் அல்லாதோர் இயக்கம் எழுச்சி பெற்ற ஒரு காலகட்டத்தில் பிறந்து வளர்ந்திருக்கிறீர்கள். பிராமணிய எதிர்ப்புக்கான காரணமாக எது இருந்தது?
பிராமணர்களோட அகங்காரம். அதிகாரம். பிராமணன் இங்கே பெரிய பணக்காரன் கிடையாது. நிலமெல்லாம் பெருவாரியாகப் பிராமணர் அல்லாத சமூகங்களிடம் இருந்தது. ஆனால், அரசாங்க அதிகாரத்தில் உட்கார்ந்துகொண்டு ஏனையோரைத் துச்சமாகப் பார்ப்பது என்பது பிராமணர்களிடம் இருந்தது. இங்கே உள்ள அமைப்பு என்ன மாற்றத்தைக் கண்டாலும் அதைத் தங்களுக்கானதாக மாற்றிக்கொள்ளும் தந்திரமும் இருந்தது. புதிதாகப் படிக்கப்போன சமூகங்களுக்கு இது புரிபட்டது. பிராமணியத்துக்கு எதிரான போராட்டம் எழுந்தது.

ஆனால், பிராமணியத்துக்கு எதிரான போராட்டம் சாதியத்துக்கு எதிரான போராட்டமாக மாறவில்லை. பிராமணர்கள் இடத்தில் தங்களை இருத்திக்கொள்வதுதான் ஒவ்வொரு சாதியின் வேட்கை என்றாகிவிட்டது. பாகுபாட்டைக் களைய முடியவில்லையே ஏன்?
இந்தியாவின் சாபக்கேடே அதுதான். பிராமணர்கள் உட்கார்ந்திருக்கிற இடம் பிரச்சினை இல்லை. அதில் யார் உட்காருவது என்பதில்தான் பிரச்சினை. ஆக, பிராமணியம் எல்லோருக்கும் தேவைப்படுகிறது. ஒரு உதாரணம். இன்று இந்தியாவின் பெரும்பான்மை கிராமங்களில் பிராமணன் இல்லை. அவன் நகரத்துக்கு வந்து ஏகாதிபத்தியத்துடன் கூட்டு சேர்ந்துவிட்டான். சரி. அப்படியென்றால், கிராமங்களில் சாதியத்தைக் காப்பவர்கள் யார்? பிராமணியத்தை எதிர்த்தவர்களால் ஏன் பிராமணியத்தின் ஆதிக்கத்தை இம்மியளவுகூடத் தகர்க்க முடியவில்லை?