370: இந்தியா தவறவிடும் ஒரு மகத்தான வாய்ப்பு


நாகாலாந்து ஆளுநர் ஆர்.என்.ரவி, சில வாரங்களுக்கு முன்பு அந்த மாநிலத்தின் முதல்வர் நெஃப்யூ ரியோவுக்கு முன்னுதாரணமற்ற ஒரு கடிதத்தை எழுதினார். ‘நாகாலாந்தின் ஆயுதக் குழுக்கள் தேச ஒற்றுமையையும் இறையாண்மையையும் கேள்விக்குட்படுத்தும் வகையில், இந்திய அரசமைப்பு மூலம் நிறுவப்பட்ட மாநில அரசின் சட்டபூர்வமான இருப்புக்குத் தினமும் சவால் விடுகின்றன’ என்று அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டார். நாகாலாந்தில் ஒரு இணை அரசுபோல ஆயுதக் குழுக்கள் செயல்படுவதையே ஆளுநர் ரவி இப்படிக் குறிப்பிட்டார். அவரது குற்றச்சாட்டின் மைய அம்சம், அந்த ஆயுதக் குழுக்கள் மக்களிடத்தில் வசூலிக்கும் பணம்.

ஆயுதக் குழுக்களில் முக்கியமானதான நாகாலாந்து தேசிய சோசலிஸ கவுன்சில் (ஐமு) ஆளுநர் ரவிக்கு எதிர்வினை ஆற்றியது. ‘மக்களிடம் பணப்பறிப்பு எதிலும் நாங்கள் ஈடுபடவில்லை’ என்று குறிப்பிட்ட அந்த இயக்கம், ‘அதே நேரம், நியாயமான வரிகளை வசூலிக்கிறோம். மக்களிடமிருந்தும் வணிக நிறுவனங்களிடமிருந்தும் வரி வசூலிப்பது ஒரு தேசம் மற்றும் இறையாண்மை கொண்ட மக்களின் உள்ளார்ந்த உரிமை. நாகா அரசியல் இயக்கத்தை நடத்துவதற்கான அடிப்படை நிதியாதாரம் இந்த வரிகள். கடந்த காலத்தில் அமைதிப் பேச்சுகள் நடத்திய இடைத்தரகர்களும் இந்திய அரசுத் தரப்பும் இதை விதிகளுக்கு உட்பட்டதாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பதால், இது எப்போதும் ஒரு பிரச்சினையே இல்லை’ என்று கூறியது.

நாகாலாந்தையோ, இந்தியாவில் ஆயுதக் குழுக்கள் ஆதிக்கம் நிறைந்த பிராந்தியங்களையோ அறிந்தவர்களுக்கு இது எந்த ஆச்சரியத்தையும் தராது. நான் மணிப்பூர் சென்றிருந்தபோது அதன் தலைநகர் இம்பாலில் உள்ள புகழ்பெற்ற இமா சந்தையில் மணிப்பூரின் சுதந்திர நாளைக் கொண்டாடும் சுவரொட்டிகளைக் கண்டேன். பாதுகாப்புப் படையினர் அருகிலேயே நின்றுகொண்டிருந்தார்கள். அகண்ட நாகாலாந்தைக் கோரும் குழுக்களும் மணிப்பூர் ஆயுதக் குழுக்களைப் போலவே ஆகஸ்ட் 14 நாளை நாகாலாந்தின் சுதந்திர நாளாகக் கொண்டாடுகின்றன. இந்தியாவின் மைய நீரோட்டத்தை நோக்கி இத்தகு குழுக்களையும் மக்களையும் இணைக்கும் பேச்சுகள் நடந்துகொண்டே இருக்கின்றன.