![]() |
| ‘ஸ்ருதி டிவி’ கபிலன், பிரபு காளிதாஸ் |
புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு. மார்கழி பனி சன்னமாக நகரத்தை நிறைத்துக்கொண்டிருக்கிறது. சென்னையின் புதிய கலாச்சாரத் திருவிழாக்களில் ஒன்றாகிவரும் புத்தாண்டு புத்தக இரவுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி.
சாலை என்றோ தெரு என்றோ முழுமையாகச் சொல்லிவிட முடியாத குறுகலான அந்த வீதியில் அந்த இரவிலும் சரசரவென்று போகின்றன வாகனங்கள். வீதியின் இடது ஓரத்தில் எதற்காகவோ நீளமான பள்ளம் தோண்டப்பட்டு கிடக்க வலது ஓரத்தில் விழா மேடையை அமைத்திருந்தார்கள். திறந்தவெளி மேடை. மேடைக்கு முன் மூன்று வரிசையாகப் போடப்பட்ட நாற்காலிகளில் ஐம்பது அறுபது பேர். எல்லோருக்கும் பின்னால் ஒரு மூலையில் நின்றபடி, கசியும் பனியிலிருந்து தன்னுடைய வீடியோ கேமராவைப் பாதுகாக்க தான் கட்டியிருந்த மஃப்ளரை அவிழ்த்து கேமராவுக்குச் சுற்றிக்கொண்டிருந்தபோதுதான் கபிலனை முதன்முதலாக நான் பார்த்தேன். பிரபு காளிதாஸைப் பார்த்ததும் அதே இரவில்தான். இன்னொரு பதிப்பகம் ஏற்பாடு செய்திருந்த ‘புத்தக இரவுக் கொண்டாட்டம்’ அது. விடிவதற்குக் கொஞ்ச நேரம் முன்பு வரை அவர் அங்கு வந்திருந்த எழுத்தாளர்களையும் தருணங்களையும் படம் எடுத்துக்கொண்டிருந்தார் அவர்.
சென்னையின் இந்த நாட்களில் இலக்கிய நிகழ்ச்சிகள் பெரும்பாலானவற்றில் தவறாமல் பார்க்கக் கூடிய முகங்கள் இவர்கள் இருவரும். பிரபுவின் ஸ்டில் கேமரா சமகால தமிழ் இலக்கிய ஆளுமைகளைத் துரத்துவது; கபிலன் இலக்கிய நிகழ்ச்சிகளையும் உரைகளையும் சமூக ஊடகங்கள் வழி நேரடியாக ஒளிபரப்புவதோடு, காணொலி ஆவணங்களாகவும் அவற்றை மாற்றிவிடுகிறார். சமகாலத்தில் சென்னைப் புத்தகக்காட்சியோடு பிரித்துப் பார்க்கவே முடியாத இந்த இரு ஒளிக்கலைஞர்களின் பின்னணியிலும் சுவாரசியமான கதைகள் உண்டு.

