எல்லாப் பார்ப்பனர்களையும் ஒழித்துவிடுவோம், சாதி அழிந்துவிடுமா?


நான் பிறந்த ஊரான மன்னார்குடியிலிருந்து அதிகபட்சம் இரண்டு மணி நேரப் பயணத் தூரத்துக்குள் இருக்கிறது கீழவெண்மணி. கூலி உயர்வாக ஒரு படி நெல்லை இரு படி நெல்லாக உயர்த்திக் கேட்டுப் போராடினார்கள் என்பதற்காக 20 பெண்கள், 19 குழந்தைகள் உட்பட 44 பேர் உயிரோடு கொளுத்தப்பட்ட ஊர் அது (1968, டிசம்பர் 25). அவமானகரமான விஷயம் என்னவென்றால்,கல்லூரிப் படிப்பை முடிக்கும்வரை கீழவெண்மணியைப் பற்றியோ, அங்கு நடந்த படுகொலையைப் பற்றியோ பெரிதாக அறியாதவன் நான். இத்தனைக்கும் திராவிட இயக்கப் பின்னணியைக் கொண்டது என்னுடைய குடும்பம். சாதி, மத, இனப் பாகுபாடுகளுக்கு எதிரான உணர்வுகளுடனேயே நான் வளர்ந்தேன். ஆனால், பலரையும்போல ‘சாதி இல்லை’ என்று சொல்வதாலும் எல்லோருடனும் பரஸ்பரம் சகஜமாகப் பழகுவதாலும் மட்டுமே சாதி ஒழிந்துவிடும் என்றும் நம்பிக்கொண்டிருந்தேன். ஒருமுறை கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனைச் சந்திக்கச் சென்றேன். சாதியின் முழுக் கொடூர முகத்தையும் எனக்கு அறிமுகப்படுத்தியது அவருடனான உரையாடல்தான்.


ஒருவேளை கஞ்சிக்காகத் தன் தாயுடன் பண்ணையாரம்மாவின் முன் அவர் கூனிக்குறுகி நின்ற தருணங்கள், ஆரம்பக் கல்வி ஆசைக்காக அவர் வாங்கிய அடி, உதைகளிலிருந்து தன்னுடைய கதையைத் தொடங்கினார் கிருஷ்ணம்மாள். அவர் வாழ்க்கையையே புரட்டிப்போட்ட, அவருக்குள் இருந்த சத்தியாகிரகப் போராளியை வெளிக்கொணர்ந்த கீழவெண்மணி படுகொலைச் சம்பவத்தை அவர் விவரிக்கத் தொடங்கியபோது, அவருடைய வார்த்தைகள் என்னைச் சுக்குநூறாக உடைக்கத் தொடங்கின. அன்றைக்கு வரை எனக்கு அது ஒரு சம்பவம்; இறந்த உயிர்களெல்லாம் வெறும் எண்ணிக்கை.

அப்படித்தான் இருந்தது. ஆனால், ரத்தமும் சதையுமாக அவர் அந்தச் சம்பவத்துக்குள் நுழைந்தபோது என்னுடைய மனசாட்சி என்னைத் தீயிலிட்டு வாட்டத் தொடங்கியது. இந்த நாட்டின் ஒவ்வொரு நரம்பும் எப்படிச் சாதியோடு இணைக்கப்பட்டிருகிறது; காணி நிலம் எவ்வளவு அதிகாரம் மிக்கது, அந்த அதிகாரம் சாதியக் கட்டமைப்பின் பின்னணியில்க், பல நூறு ஆண்டுகளாக எப்படிக் கோடிக் கணக்கான மக்களை நசுக்கிப் புதைத்து அதன் மீது நிற்கிறது, பூதான இயக்கத்தை ஒரு பெரும் புரட்சித் திட்டமாகத் தான் ஏன் பார்த்தார் என்றெல்லாம் தொடர்ந்த கிருஷ்ணம்மாள் அப்போது ஒரு தகவலைச் சொன்னார்.

“தமிழ்நாட்டோட விவசாயத் தொழிலாளர்கள்ல அஞ்சுல மூணு பேர் தலித்துகள். நிலம் வெச்சிருக்குற தலித்துகளை எடுத்துக்கிட்டா, தொண்ணூறு சதவிகிதம் பேர் ஒரு ஹெக்டேருக்கும் கீழ நெலம் வைச்சிருக்குறவங்க; இவ்வளவு ஏன், தலித்துகள்ல நால்ல ஒருத்தருக்குக் கையெழுத்துப் போடத் தெரிஞ்சா அதிகம். ஆனா, இன்னமும் ஒரு நாளைக்கு சராசரியா மூணு தலித் பெண்கள் பலாத்காரத்தை எதிர்கொள்றாங்க, ரெண்டு பேர் தாக்கப்படுறாங்க; எங்க? சமூகநீதியில நாட்டுலேயே முன்னேறுன மாநிலமான தமிழ்நாட்டுல. அப்படின்னா, நம்ம நாடு முழுக்க உள்ள நிலை எப்படி இருக்கும்? சுதந்திரம் அடைஞ்சு 50 வருஷங்களுக்கு அப்புறமும் இதுதான் நிலைமைன்னா, முன்னாடி எப்படி இருந்திருக்கும்? சாதி ஒழிப்பைப் பத்திப் பேசுறவங்க எல்லாரும் இதெல்லாம் எங்கேயோ யாராலேயோ நடத்தப்படுறதாவும், தங்களுக்கு இதுல எந்தச் சம்பந்தமும் இல்லைன்னும் நெனைக்கிறாங்க. ஆனா, ஒவ்வொருத்தருக்கும் இதுல ஏதோ ஒரு வகையில தொடர்பு இருக்குங்கிறதுதான் உண்மை.”

காந்தியவாதியான கிருஷ்ணம்மாள் என்னுடைய சாதியைக் கேட்கவில்லை; அதன் ஆதிக்கத்தைப் பற்றிப் பேசவில்லை . ஆனால், எதை உணர்த்த வேண்டுமோ, அதை உணர்த்திவிட்டார். “பார்ப்பனியம் ஒழியும் வரை இந்தியாவில் சமூக விடுதலை சாத்தியம் இல்லை” என்று பெரியார் சொல்லியிருந்ததை அதுவரை நான் ஒரு சின்ன எல்லைக்கு உட்பட்டே புரிந்துவைத்திருந்தேன். எனக்கு மேல் ஒரு கூட்டம் இருப்பதையும், அது உருவாக்கிய பார்ப்பனியம்தான் இந்திய சாதியத்தின் மையப் புள்ளி என்பதையும் உணர்ந்திருந்த நான், ‘பார்ப்பனியம் என்பது பார்ப்பனர்களை மட்டுமே உள்ளடக்கியது அல்ல; அது என்னையும் உள்ளடக்கியிருக்கிறது; நானும் எனக்குக் கீழ் ஒரு பெருங்கூட்டத்தை மிதித்து நசுக்கிக்கொண்டிருக்கிறேன்’ என்பதை உணர்ந்த நாள் அது.

என்னை உருக்குலைத்த அடுத்த சம்பவம் 29.9.2006-ல் நடந்த கயர்லாஞ்சி படுகொலை. மஹாராஷ்டிர மாநிலம், பண்டாரா மாவட்டத்தில் உள்ள சின்ன கிராமம் கயர்லாஞ்சி. இந்த ஊரைச் சேர்ந்த பையாலால் போட்மாங்கே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். தனக்குச் சொந்தமான நிலத்தில், வீடு கட்டிக்கொள்ள விரும்பினார் பையாலால். இதைப் பொறுக்காத ஆதிக்கச் சாதியினர் கிராமத்தின் பொதுப் பாதைக்கு வேண்டும் என்று சொல்லி, பையாலாலின் நிலத்தின் ஒரு பகுதியைப் பறித்துக்கொண்டனர். இந்த நிலப்பறிப்பை எதிர்த்ததன் தொடர்ச்சியாக, ஒன்றுதிரண்ட  ஆதிக்கச் சாதியினர் பையாலாலின் மனைவி சுரேகா, பிள்ளைகளை அடித்து நிர்வாணமாக்கி, தெருக்களில் இழுத்துவந்தார்கள். ஊரின் பொதுப் பகுதிக்குக் கூட்டிவந்து, கொடூரமாகத் தாக்கி, பையாலாலின் மனைவியையும், மகள் பிரியங்காவையும் பலரும் சேர்ந்து பாலியல் வன்முறைக்குள்ளாக்கினர் . கொடுமையின் உச்சகட்டமாக , தாயுடனும் தங்கையுடனும் பாலுறவு கொள்ளுமாறு பையாலாலின் மகன்கள் ரோஷன், சுதிர் இருவரையும் மிரட்டியவர்கள், இதை ஏற்க அவர்கள் மறுக்கவும் இருவரின் ஆண் உறுப்புகளையும் வெட்டித் தூக்கி வீசினார்கள். பின்னர், அந்த இரு பெண்களின்
பெண்ணுறுப்புகளுக்குள்ளும் மாட்டு வண்டியின் நுகத்தடிக் கம்புகளைச் செருகிக் குத்திக் கொன்றார்கள்.

நான் செய்தி அறிந்த இரவு என்னைக் கொன்றுபோட்டது. சுற்றிலும்  காட்டுமிராண்டிகள் சூழ்ந்து, சம்மட்டியைக் கொண்டு சராமாரியாகத் தாக்குவதுபோல இருந்தது. கொடூரங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். மீண்டும் மீண்டும் அந்த உண்மை உணர்த்தப்படுகிறது: ‘பார்ப்பனியம் என்பது பார்ப்பனர்களை மட்டுமே உள்ளடக்கியது அல்ல; நானும் அதில் உள்ளடங்கியிருக்கிறேன்; எனக்குக் கீழ் ஒரு பெருங்கூட்டத்தை மிதித்து நசுக்கிக்கொண்டிருக்கிறேன்.’

என்னுடைய சகாக்களில் பலர் சாதி எதிர்ப்பு நிலைப்பாட்டில் உறுதியாகப் பேசக் கூடியவர்கள். பெரும்பாலும், சாதியம் தொடர்பான விவாதங்கள் எழும்போதெல்லாம், எங்கள் பேச்சு இறுதியாகச் சென்றடையும் இடம் பார்ப்பனியமும் பார்ப்பனர்களுமாகவே இருக்கும் . முதல்முறையாக அன்றைக்கு ஒரு கோரிக்கையை முன்வைத்தேன்: “இன்றைக்கு நாம் ஒவ்வொருவரும் அவரவர் சாதிகளின் அயோக்கியத்தனங்களை மனம் திறந்து பேச முயன்றால் என்ன?”


யாரும் ஆட்சேபிக்கவில்லை. தொடங்கினார்கள். ஆனால், தொடர முடியவில்லை. பார்ப்பனர் அல்லாதவர் என்கிற கூரையின் கீழ் வசதியாக அதுவரை ஒன்றுபட்டிருந்த எல்லோரும் மிக விரைவில், அவரவர் சாதியின் கீழ் பதுங்க இடம் தேடினார்கள். விவாதம் சண்டை ஆனது. சங்கடமான மனநிலையில் எல்லோரும் அங்கிருந்து விடுபட்டோம். அதன் பின், வெவ்வேறு சந்தர்ப்பங்களில், பல்வேறு மனிதர்களிடமும் நான் அந்த அனுபவத்தைப் பெற்றிருக்கிறேன்: அவர்களைப் பொறுத்தவரை பார்ப்பன எதிர்ப்பு மட்டுமே சாதி எதிர்ப்பு.

ஒருபோதும் ஊர் போய்ச்சேர முடியாத பயணம் இது.

சாதியக் கட்டமைப்பின் வரலாற்றில் பார்ப்பனியத்துக்கு எவ்வளவு நெருக்கமான தொடர்பு இருக்கிறதோ, அதற்கு இணையான பிணைப்பு பார்ப்பனியத்துக்கும் பார்ப்பனர்களுக்கும் இடையே இருக்கிறது. அவர்களுடைய குற்றங்களைக் குறைப்பது என்னுடைய நோக்கம் அல்ல. எவராலும் அப்படிக் குறைத்துவிடவும் முடியாது. ஆனால், இந்து மதத்தின் 10-ல் ஒரு பங்கு மக்கள்தொகையைக்கூடத் தொட முடியாத ஒரு சாதியின் குற்றங்களை மட்டுமே பேசிக்கொண்டு, ஏனைய 9 பங்கு சாதிக்காரர்கள் வசதியாக, நம்முடைய சுயசாதி விமர்சனங்களிலிருந்து தப்பித்துக்கொள்வதும், நம்முடைய சாதிகளை அவற்றின் அநீதிகளிலிருந்தும் கொடுஞ்செயல்களிலிரு ந்தும் மறைத்துவிடுவதும் ஒருபோதும் சாதி ஒழிப்புக்கு உதவாது என்று நினைக்கிறேன். மேலும், இது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் என்றும் நினைக்கிறேன்.

இந்தியாவில் சாதியின் தோற்றுவாய், அதன் வரலாறு, போக்கு ஆகியவற்றை ஓரளவுக்கு நாம் அனைவருமே உணர்ந்திருக்கிறோம். ஆதியில், பழங்குடிக் குழுக்களாக அலைந்தவர்கள் தத்தமது குழுக்களை ஓர் இனமாக அடையாளம் கண்டதே சாதியின் தொடக்கம் என்பதை நாம் அறிவோம். போட்டிக் குழுக்களிடமிருந்து தம்மைக் காத்துக்கொள்ள ஒரு குழுவிலுள்ள ஆட்களின் எண்ணிக்கை முக்கியம் என்பதால், அந்த எண்ணிக்கையைத் தக்கவைத்துக்கொள்ள இனத்துக்குள் அகமணமுறை உருவானது என்பதையும் பின்னர், அதுவே சாதியின் அடிப்படைக் கட்டுமானமாக மாறியது என்பதையும் நாம் அறிவோம். பின்னாளில், நிலவுடைமைச் சமுதாயக் கட்டமைப்பில், இந்தியாவில் சாதிகளே வர்க்கங்களாக உருமாறியதையும் நாம் அறிவோம். இந்தச் சாதி அமைப்பைத் தத்துவமயமாக்கி, அதன் உச்சபீடத்தில் அமர்ந்து இன்றளவும் ஆதிக்கம் செலுத்தும் பார்ப்பன சாதி - மனிதர்களையல்ல, சாதியைக் குறிப்பிடுகிறேன் - அழிக்கப்பட வேண்டியது என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அதே பீடத்தில், அதற்குக் கீழ் உள்ள அத்தனை அடுக்குகளிலும் நிரம்பி ஆதிக்கம் செய்யும் ஏனைய சாதிகளை, நம்முடைய சாதிகளை - மனிதர்களையல்ல, சாதியைக் குறிப்பிடுகிறேன் - அழிக்கும் போர்களை எப்போது தொடங்கப்போகிறோம்?

இன்றைக்கும் சாதி ஒழிப்பைப் பற்றிப் பேசும்போது, மனுதர்மத்தை உருவாக்கிய மனுவிடம் தொடங்கி மனுவிடமே முடித்துவிடுபவர்கள் உண்டு. ஆனால், வரலாற்றில் மனுவை எங்கே நிறுத்த வேண்டும் என்பதையும் சாதி ஒழிப்பின் உண்மையான மையம் எது என்பதையும் அம்பேத்கர் 1916-ல் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ஆற்றிய ‘இந்தியாவில் சாதிகள், அதன் அமைப்பியக்கம், தோற்றுவாய் மற்றும் வளர்ச்சி’ உரை சுட்டிக்காட்டுவதாக எனக்குப் படுகிறது. அந்த உரையில் அம்பேத்கர் குறிப்பிடுகிறார்:
“சுருக்கமாகச் சொல்வதானால், சாதியின் சாராம்சமான ஒரே இயல்பு அகமணம். வேறு விதமாகச் சொல்லப்போனால், மாற்று சாதித்  திருமணங்களின் இன்மையே சாதியின் சாரம்சமாக இருக்கிறது... சாதியப் பிரச்சினை என்பது இறுதியாகப் பார்த்தால், தன் குழுவுக்குள் இருக்கும் திருமண வயதைக் கொண்ட இருபாலருக்கு இடையிலான சமமின்மையை ஒழுங்குபடுத்துவதைச் சுற்றியே இருக்கிறது.”

“நான் உங்களிடத்திலே வலியுறுத்திச் சொல்ல ஒரு உண்மை உண்டு: சாதிச் சட்டத்தை மனு வழங்கவில்லை. அவனால், அதை இயற்றவும் முடியாது என்பதே அந்த உண்மை. மனுவுக்கு நெடுங்காலத்துக்கு முன்பே சாதி நின்று நிலவியது. அவன் சாதியை உயர்த்திப் பிடிப்பவனாக இருந்தான். எனவே, அவன் சாதியைத் தத்துவத்தன்மை கொண்டதாக ஆக்கினான். ஆனால், மிக நிச்சயமாக அவன் இந்து சமூகத்தின் இன்றைய நிலையை ஏற்படுத்தவில்லை; அவனால், அப்படி ஏற்படுத்தியிருக்கவும் முடியாது. சாதி தர்மத்தைப் போற்றிப் புகழ் பாடுவதோடும், இன்றளவும் நிலைத்து நிற்கும் சாதி விதிகளைத்  தொகுத்து அமைத்ததோடும் அவனுடைய பணி நிறைவடைந்தது.

சாதி அமைப்பின் வளர்ச்சியும் பரவுதலும் மிகப் பிரம்மாண்டமானது. எந்தத் தனிமனிதனின் இயந்திரத்தாலோ சக்தியாலோ அல்லது எந்த ஒரு வர்க்கத்தின் சக்தியாலோ சாதிக்கப்பட முடியாதது அது. பார்ப்பனர்கள்தான் சாதியை உருவாக்கினார்கள் என்ற பேச்சுக்கும் இந்தப் பதில் பொருத்தமானது. பார்ப்பனர்கள் சாதியை உண்டாக்கினார்கள் எனும் கோட்பாடு எண்ணத்தில் தவறானது; நோக்கத்தில் வன்மம் கொண்டது என்பதைத் தவிர வேறில்லை. பார்ப்பனர்கள் எவ்வளவோ கொடுமைகளை இழைத்திருக்கிறார்கள் என்று துணிந்து நான் கூறுவேன் . ஆனால் , பார்ப்பனர்கள் அல்லாதவர்கள் மீது சாதி அமைப்பைத் திணித்தல் என்பது அவர்களுடைய துணிச்சலுக்கு அப்பாற்பட்டது. சாதி முறைகளைத் திணிக்க அவர்கள் தங்கள் சொல் வளம் கொண்ட தத்துவங்களின் மூலம் துணைபோயிருக்கலாம். ஆனால்,  அவர்களால் நிச்சயமாக தங்களுடைய திட்டத்தைத் தங்கள் எல்லையைத் தாண்டி உந்தித் தள்ளியிருக்க முடியாது.”

இதே உரையில், மனு உருவாக்கிய மிகப் பெரிய ஆபத்தையும் அவர் குறிப்பிடுகிறார்:

“மனு நீதி இறந்தாலும் , மனு மறக்க முடியாத வண்ணம் எல்லோருடைய நெஞ்சிலும் நீக்கமற நிறைந்திருப்பான் என்பது எவ்வகையிலும் உயர்வு நவிற்சி அல்ல. ஏனெனில், ஒரு மனிதனின் எழுத்தாணியினாலேயே ஒரு வர்க்கத்தை எழுநிலை மாடத்தின் மேல் ஏற்றிவிடும் பொருட்டு, மற்றொரு வர்க்கத்தை மிருகங்களின் நிலைக்குத் தள்ளி, அதை ஏங்கச் செய்த வர்க்கம் எத்தகையதாக இருக்கக் கூடும்? அவன் எல்லா மக்களையும் அடக்கி ஆளும் கொடுங்கோலனாய் இருந்தாலொழிய தன் பரிபாலனத்தை இந்த அளவு அநியாயமான முறையில் நடைமுறைப்படுத்த அவன் அனுமதித்திருக்க மாட்டான். அவனுடைய நிறுவனங்களை மேலோட்டமாகப் பார்த்தால்கூட இதை எளிதில் உணரலாம். நான் மனுவை மிகக் கடுமையாகச் சாடுகிறேன் என்று தோன்றலாம். ஆனால், அவனுடைய ஆவியைக் கொல்லக்கூட எனக்குப் போதுமான சக்தி இல்லை என்றே நான் உறுதியாகக் கூறுவேன். உடலற்ற சூட்சம வடிவிலான ஆவியாக அவன் வாழ்கிறான். இன்னும் நெடுங்காலத்துக்கு வாழ்ந்திருக்குமாறும் வேண்டப்படுகிறான்; அப்படி வாழ்வான் என்றே நான் அஞ்சுகிறேன்.”

பார்ப்பனர்களிடமே அகமணமுறை பிறந்ததாகச் சொல்லும் அம்பேத்கர், அவர்களிடமிருந்தே ஏனையோருக்கும் அகமணமுறை பரவியதாகவும் அதுவே சாதியப் பரவலாக்கலுக்கு வழிவகுத்ததாகவும் குறிப்பிடுகிறார். சாதியின் மையமாக அம்பேத்கர் சுட்டிக்காட்டுவது அகமணமுறையை. பெரியாரும் அதையே குறிவைத்தார். சாதியின் உயிர்நாடி உறைந்திருக்கும் இடம் அகமணமுறை என்பதாலேயே, சாதியை மறுக்கும் புறமணமுறையைச் சாதி ஒழிப்புக்கு எதிரான ஒரு முக்கியமான ஆயுதமாக அவர் கையில் எடுத்தார். காந்தியும் பின்னாளில் இதை உணர்ந்தார். அதனால்தான், தலித் அல்லாதவர்கள் - தலித்துகளிடையே நடக்கும் திருமணங்களுக்கு மட்டுமே தன்னுடைய ஆசி உண்டு என்று அறிவித்தார்.

அப்படியென்றால் , காலமெல்லாம் காந்தி , அம்பேத்கர், பெரியார் பெயர்களை உச்சரிப்பதையும் சாதி ஒழிப்புக்கு எதிராகப் பேசுவதையும்விட முக்கியமான காரியம் அல்லவா, அகமணமுறையை  அழித்தொழிப்பது? நமக்குள் இருக்கும் மனுவை, நம்முடைய சுயசாதியை அழித்தொழிக்க வாழ்க்கையில் நம் ஒவ்வொருவருக்கும் காலம் அதற்கான வாய்ப்பை அளிக்கும்போது, நாம் என்ன செய்கிறோம்? அம்பேத்கர் அஞ்சிய வகையிலேயே, இன்றைக்கும் மனுவின் வாழ்க்கை தொடர்கிறது, நம்முடைய உடல்களின் வழியாக. நாம் அன்றைய மனுவைப் பற்றி மட்டும் பேசிக்கொண்டு, நமக்குள் வாழும் மனுவைத் தப்பவைக்க முடியாது.

சாதியை ஒழிக்க முடியுமா? பெரிய சவால்தான். ஏனெனில்,   உளவியல்ரீதியாக , வலியவர்களைவிடவும் பலவீனர்களுக்கே சார்ந்து நிற்கப் பின்னணி தேவைப்படுகிறது. அவரவர் சுய அடையாளங்களில் தொடங்கி பண்பாட்டு அடையாளங்கள் வரை சாதிகளில் நிலைகொண்டிருப்பதாக ஆழமாக நம்பப்படும் இந்த நாட்டில், சாதியை அழிக்க முடியுமா? கொடூரமான இந்தச் சாதியக் கட்டுமானத்துக்கு எதிராகத் திரள்வதும், அதிகாரத்தை நோக்கி நகர்வதும்கூடச் சாதி அடிப்படையிலான ஒன்றுபடல் மூலமாகவே நடக்கும் இந்த நாட்டில், சாதியை அழிக்க முடியுமா?

நம் தலைமுறையில் அல்ல; இன்னும் பல தலைமுறைகளுக்கு அது சாத்தியம் இல்லை என்றே நான் நினைக்கிறேன். ஆனால், சாதி அழிப்பை நோக்கிய பயணம் முக்கியம். சுயசாதி விமர்சனமும் சுயசாதி  அழித்தொழிப்பும் அதன் அடிப்படைக் காரியங்கள். ஆனால், மனசாட்சியைத் திறந்து நாம் பேச முயலுவோம் என்றால், இன்றைக்கு மிக அரிதாக, விரல் விட்டு எண்ணிவிடத் தக்க அளவில் பொதுத் தளத்தில் வலுவாக ஒலிக்கும் சுயசாதி விமர்சனக் குரல்கள் பார்ப்பனர்களுடையவை என்பதை  ஒப்புக்கொள்வதில் நமக்குத் தயக்கம் இருக்க முடியாது. சமகாலத் தமிழகத்தில் பார்ப்பனியத்துக்கும் பார்ப்பனர்களுக்கும் எதிரான, வலுவான அரசியல் குரலாக ஒலிக்கும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் மருதையன், வீராச்சாமி இருவரும் பிறப்பால் பார்ப்பனர்கள். ஊடகங்களில் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், பார்ப்பனியத்துக்கு எதிராகப் பேசிவரும் ஊடகவியலாளர்கள் சின்ன குத்தூசி, ஞாநி இருவருமே பிறப்பால் பார்ப்பனர்கள். மருதையனைப் போல, சின்ன குத்தூசியைப் போல நான் பார்ப்பன சாதியைத் தாண்டி, என்னுடைய சாதியையோ, பார்ப்பனர் அல்லாத ஏனைய சாதிகளையோ எதிர்த்துப் பொதுத் தளத்தில் இன்றைக்குப் பேசவோ, எழுதவோ முடியுமா? எங்கேனும் அதற்கான இடம் இருக்கிறதா? அப்படிப் பேசினாலோ, எழுதினாலோ குறைந்தபட்சம் அது சகித்துக்கொள்ளவாவதுபடுமா?  மூன்று தலைமுறைகளுக்கு முன்பே இன்ன ஊர், இன்ன வீதி, இன்ன சாதிக்காரர்கள் பெரும்பான்மையாக வாழும் இடம்
என்றெல்லாம் பாராமல், எல்லா சாதிகளுக்கும் எல்லா இடங்களிலும் செருப்படி கொடுத்த பெரியார் வாழ்ந்த தமிழகம்தானே இது? ஏன் இந்தப் பின்னடைவு? நாம் சாதி ஒழிப்பையும் பார்ப்பனிய ஒழிப்பையும் பார்ப்பனர்கள் எதிர்ப்பு எனும் எல்லையைத் தாண்டி எடுத்துப்போகவில்லை. ஏன், பெரியார் காலத்திலேயே 1962 தேர்தலில், அண்ணா ஓட்டுக் கணக்குகளுக்காக ‘அண்ணாதுரை முதலியார்’ ஆனதும், “சிலருக்குத் திடீரென முதலியார் என்று வால் முளைத்திருக்கிறது” என்று பெரியார் விமர்சித்ததும் ‘வால்’ மறைந்ததும் எதன் எச்சங்கள்?

நான் சாதி இல்லை என்று சொல்லி என் குழந்தைகளை வளர்க்கப்போவது இல்லை. அப்படிச் சொல்வது பெரிய ஏமாற்று வேலை. நான் அவர்களிடம், இந்த நாட்டின் சகல கட்டுமானங்களும் சாதியை உள்ளுக்குள் ஒளித்துவைத்திருப்பதைச் சொல்வேன். காந்தியையும் அம்பேத்கரையும் பெரியாரையும் படிக்கச் சொல்வேன். என்னுடைய சாதியின் சகல அரக்கத்தனங்களையும் இழிசெயல்களையும் சொல்வேன். அவர்களுடைய முன்னோர்களால் பல நூற்றாண்டு பாவம் அவர்களுடைய தலை மேல் ஏற்றப்பட்டிருப்பதைச் சொல்வேன். சாதியற்ற சமூகத்தை நோக்கி அவர்களுடைய தந்தையும் தாயும் ஒரு  அங்குலமேனும் அடி எடுத்துவைத்ததைச் சொல்வேன். அவர்கள் தங்கள் வாழ்வில், மேலும் சில அடிகளேனும் எடுத்துவைத்து, அந்தப் பயணத்தைத் தொடர வேண்டும் என்று கோருவேன்!

- 2007

32 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. இதைவிட அழகாக புரிய வைக்க முடியாது சாதிய கொடுமைகளை,தொடரட்டும் உங்கள் பனி தொடராக

   நீக்கு
 2. உண்மை நமக்குள்ளும் உறைந்திருக்கின்றது பார்ப்பனீயம்...நல்ல கருத்துகள்...சிந்தனையை உரசிச்செல்கின்றது...தீ பற்றட்டும்.

  பதிலளிநீக்கு
 3. சமஸ், பல கேள்விகளையும் இந்த கட்டுரை எழுப்பினாலும் சில இஙகே ...
  இந்த குரல் ஒலிக்கும் இடங்கள் நகரங்களிலும் மாநகரங்களிலும் மட்டுமா?
  இந்தக் குரலின் பின்புலத்தில் இருப்பது
  கல்வியா, சமூகத்தில் அது அடைந்து இருக்கும் பாதுகாப்பான சூழலலில் இது தேவைப்படாததாலா?
  சமூகத்தின்பாற்பட்ட உண்மையான அக்கறையாலா?
  இவற்றின் பிரித்து எடுக்கமுடியா கலவையினாலா? ...
  இந்தக் கேள்வியின் விடைகள் "மற்றவர்களுக்கும்" ஏதேனும் ஒரு வகையில் உதவக்கூடும் ... ( நானும் அந்த மற்றவர்களில் ஒருவன் !)

  பதிலளிநீக்கு
 4. கீழ் வெண்மணி கொடூர சம்பவத்தில் இருந்து தொடங்கி, அதை கண்டுகொள்ளாமல் இருந்த ஈ .வே .ரா.(பெரியார்?) வையும் ,அம்பேத்கார் அவர்களோடு சேர்த்து பார்ர்ப்பது ,மிகவும் மனத்தை நெருடுகிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. hello tholar periyar kela venmani patri kooriyathu...ithu pounra sambavangal nadakumayeen india vai british karan aal vathe meel...meelum naidu vai konrathu dravida kazhaga tholaragal taan

   நீக்கு
  2. பெரியார் பேசுகிறார்
   கீழ் வெண்மணிக் கொடுமைகளைத் தடுக்கும் வழிமுறைகள் என்ன? - 1

   ஜனநாயக ஆட்சி உள்ளவரை யோக்கியர் மறைந்து போக வேண்டியதுதான்; அயோக்கியர்கள் ஆட்டம் போட வேண்டியதுதான். இந்திய மக்கள் காட்டுமிராண்டிகள்; இந்திய தர்மம் குற்றப் பரம்பரையர்கள் தர்மமேயாகும். மநுதர்மவாதிகள் உள்ளவரை நாடு ஒழுக்கம், நேர்மை, நாணயம், நீதி பெற முடியாது. வெள்ளையன் வெளியேறியவுடன் நாடு அயோக்கியர்கள் வசமாகிவிட்டது. காந்தியார் பார்ப்பனர்களுக்கு நல்ல பிள்ளையாகி(த்தான்) ஒரு மகானாக ஆவதற்கு எண்ணி என்றைய தினம் மக்களை சட்டம் மீறும்படித் (அயோக்கியர்களாகும்படி) தூண்டி விட்டாரோ, அன்று முதல் மனித சமுதாயம் ஒழுக்கத்தில் கீழ் நிலைக்குப் போய் விட்டது! சட்டம் மீறுதல் மூலம் சத்தியாகிரகம் என்னும் சண்டித்தனம் செய்தல் மூலம் காயத்தை சாதித்துக் கொள்ள, மக்களுக்கு காந்தி என்று வழி காட்டினாரோ அன்று முதலே மக்கள் அயோக்கியர்களாகவும், காலிகளாகவும் ந்திவிட்டார்கள்.‘புழுத்துப்போன பண்டத்தின் மீது நாய் வெளிக்குப்போன' மாதிரி மக்களை அயோக்கியர்களாக ஆக்கிவிட்டு, ஜெயிலையும் உடம்பைத் தேற்றிக்கொள்ளும் ஓய்விடமாகப் பார்ப்பனர்கள் என்று ஆக்கினார்களோ, அன்று முதலே யோக்கியர்கள் எல்லாம் அயோக்கியர்களாக ஆகவேண்டியவர்களாகி விட்டார்கள். யோக்கியர்கள் மானத்தோடு வாழ இடமில்லாமல் போய்விட்டது.எந்த மனிதனும் ‘அயோக்கியனாக ஆனாலொழிய வாழ முடியாத' நிலை ஏற்பட்டு விட்டது. ‘சட்ட விரோதமான குற்றங்களைச் செய்தவன்தான் ராஷ்டிரபதியாகவும், பிரதமராகவும், முதல் மந்தியாகவும் மற்றும் மந்திகளாகவும், பெரும் பதவியாளர்களாகவும் ஆக முடியும்' என்ற நிலைமை ஏற்பட்டவுடன் அரசியலில் யோக்கியர்களுக்கு இடம் இல்லாமலே போய்விட்டது. அயோக்கியர்களுக்கே ஆட்சி உரிமையாகிவிட்டது.இந்த நிலையிலும் இந்தத் தன்மையிலும் நாட்டுக்கு ‘சுதந்திரம்' கிடைத்து இருபது ஆண்டுகளில் நாட்டில் செல்வாக்குப் பெறாத அயோக்கியத்தனம், அக்கிரமம், கொள்ளை கொலைகாரத்தனம், நாச வேலைகள் என்பவைகளில் ஒன்றுகூட பாக்கியில்லாமல் செல்வாக்குப் பெற்று, தினசரியில் நடைபெற்று வருகின்றன. அவை எந்த அளவுக்கு வளர்ந்தன என்றால் : 1. காந்தியார் கொல்லப்பட்டார் 2. தலைவர் காமராஜரைக் கொல்ல முயற்சிகள் செய்யப்பட்டன 3. போலிஸ் அதிகாரிகள் கட்டிப் போட்டு நெருப்பு வைத்துக் கொளுத்தப்பட்டனர் 4. நீதி ஸ்தலங்கள், ரயில் நிலையங்கள் கொளுத்தப்பட்டன. ஜெயில் கதவு உடைக்கப்பட்டது. பல வாகனங்கள் (பஸ்கள்) கொளுத்தப்பட்டன. வழிப்பறிகள் நடந்தன. மற்றும் நிலங்களில் துர் ஆக்கிரகமாகப் பயிர்கள் அறுவடை செய்து கொண்டு போகப்பட்டன. விவசாயிகளின் வீடுகள் கொளுத்தப்பட்டன 5. கடைசி நடவடிக்கையாக நேற்று முன்தினம், தற்காப்புக்கு ஆக ஓடி ஒரு வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட ஆண், பெண், குழந்தைகள் உட்பட 42 பேர்கள் பதுங்கிக் கொண்ட வீட்டைப் பூட்டிவிட்டுக் கொளுத்தி, 42 பேரும் கருகி சாம்பலாக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வளவும் அரசியல் கட்சிக்காரர்களால் பட்டப் பகலில் வெட்ட வெளிச்சத்தில் வெளிப்படையாகவே செய்யப்பட்ட காயங்களாகும்.சட்ட விரோதமான, பலாத்காரமான, நாசவேலைகளான காயங்களைச் செய்து, அதன் மூலம் பலன் பெறுவதற்கென்றே ஏற்படுத்திக் கொண்ட ஸ்தாபனங்களாலேயே, அவற்றின் பலனாகவே செய்யப்பட்ட, நடைபெற்ற காயங்களாகும். இவைகளை அடக்கப் பயன்படும்படியான போதிய சட்டமில்லை; சட்டம் செய்வது மூலாதாரக் கொள்கைக்கு விரோதமாக இருந்து வருகிறது.சட்டத்திற்கும், நீதிக்கும் சம்பந்தமில்லாத நீதிஸ்தலங்கள்தான் நிறைந்திருக்கின்றன. சட்டங்களின் யோக்கியதை இப்படி இருக்க பழிவாங்கும், ஜாதி உணர்ச்சி கொண்ட, சுயநலத்தையே முக்கியமாய்க் கருதுகிற நீதிபதிகளே 100க்கு 90 பேர்களாக இருக்கிறார்கள்.அமைச்சர்களும், ஆட்சியாளர்களும் இந்த நிலையை மாற்ற, அடக்க ஆரம்பித்தால் நமது பதவிக்கு ஆபத்து வந்து விடுமே என்று பயந்தவர்களாகவே இருந்து வருகிறார்கள் என்பது மாத்திரமல்லாமல் அமைச்சர்கள் ‘நாங்கள் செய்வதையெல்லாம் மாற்றி தங்களுக்கு அவமானம் உண்டாக்கும்படியான நீதிஸ்தலங்களும், நீதிபதிகளும் ‘எங்களுக்கு மேலாக' இருப்பதால் எங்களால் மக்கள் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் ஒன்றும் செய்ய முடியவில்லை' என்கிறார்கள். மற்றும் லஞ்சம், ஒழுக்கக்கேடு, நேர்மை அற்றத்தன்மை இல்லாத அதிகாரிகள் மிக மிக அரிதாகவே இருக்கிறார்கள்.அவற்றைக் கண்டுபிடித்தால் சிபார்சு வருகிறது. அதை அலட்சியம் செய்து நடவடிக்கை நடத்தினால், நீதிஸ்தலங்கள் பெரிதும் அவர்களை குற்றமற்றவர்களாக ஆக்கிவிடுகின்றன. ஜாதி காரணமாக, சிபாரிசு காரணமாக அரசாங்கத்தைப் பழிவாங்கும் காரணமாக எப்படிப்பட்ட ஒழுக்கக்கேடான அதிகாரியும் நீதிஸ்தலங்களில் தப்பித்துக் கொள்கிறார்கள்.-

   (கீழ்வெண்மணியில் 42 தலித் மக்கள் கொல்லப்பட்டதையொட்டி, பெரியார் விடுத்த அறிக்கை ‘விடுதலை' 28.12.1968)

   நீக்கு
  3. Pl also share what he spoke in sembanar Koil public meeting after the massacre."communist kku vere velaye illa, mudalali koduppathai vangikkittu ,communist karan solrtha kekkama iruntha, ippadi nadakkuma? "

   நீக்கு
  4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
  5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
  6. Pl also share what he spoke in sembanar Koil public meeting after the incident.

   நீக்கு
 5. I GOT MANY INFORMATION FROM THIS ARTICLE
  I TRY TO PRACTICE IT IN MY LIFE
  EVERYONE SHOULD TRY TO MAKE CASTE LESS NATION
  WE HOPE FOR THAT

  பதிலளிநீக்கு
 6. சிந்தனைத் தெளிவு, நேர்மை, யதார்த்தம் என்று அத்தனையும் தங்கள் கட்டுரையில் உள்ளது. அருமையான சிந்திக்க வைக்கும் கருத்துக்கள்..இதை ஒரு பார்ப்பனர் எழுதி இருந்தால் நோக்கம் கற்பிக்கப்பட்டிருக்கும்.
  அன்புடன்
  பாலா

  பதிலளிநீக்கு
 7. "திறமையோடு இருக்கிறீர்கள் ,பயமாய் இருக்கிறது - சமஸ் "
  ----------------------------------------------------------------------------------------------------------
  சமஸ் என்ற பெயரை நான் ஆர்வமாக கவனிக்கத் தொடங்கியது சமீப காலமாகத்தான்.அவர் எழுதிய " யாருடைய எலிகள் நாம் " என்ற நூலின் பெயரே வித்தியாசமாக இருந்தது. புத்தக வெளியீட்டு விழாவையே முகநூலில்தான் ஞாநி,தினமணி வைத்தியநாதன்,இந்து ராம் போன்றோரை வைத்து வெளியிட்டு இருந்தார்.இப்போதுதான் படித்து முடித்தேன் .உயிர்மை பதிப்பகம் அவருக்கு கடந்த வாரம் இந்த நூலுக்காக சுஜாதா விருது கொடுத்து இருக்கிறது.


  பத்திரிக்கைகளில் எழுதிய கட்டுரைகள் என்பதால் எளிய வார்த்தை களில்,பொருத்தமான தரவுகளில் உள்ளது.ஆனால் இந்த நூல் ஏறக்குறைய வரலாற்று ஆவணம் என்றே சொல்ல வேண்டும். 350 பக்கங்கள் ( ரூ.300) .பண்பாடு,கல்வி,அரசியல்,சர்வதேசம், ஊடகம்,சுற்றுச்சூழல் என பல அத்தியாயங்களில் சிறு,சிறு கட்டுரைகளாக உள்ளன.ஞாநி,முத்துலிங்கம், எஸ். வி்.ராஜதுரை,ஜெயமோகன் அணிந்துரை எழுதியுள்ளனர்.

  ஊடகத்துறை மேல் எனக்கு அவ்வளவாக நம்பிக்கை இல்லை ஆனால் இவருடைய பார்வை என்னை புளங்காகிதம் அடையச் செய்கிறது. இந்த வயதில் இப்படி ஒரு விசாலமான, ஆழமான, பார்வையா ? கூடவே பயத்தையும் ஏற்படுத்துகிறது. இந்த அமைப்பு இவரை இப்படியே விட்டு வைத்திருக்குமா ?கரைந்து விடப் போகிறார்.

  இந்த நூலில் தமிழ்நாட்டு மக்கள் மாணவர்கள், அரசியல் வாதிகள், பொதுநிலையினர் மாற்றம் வேண்டுவோர் என எல்லா தரப்பினருக்கும் ஏதோ இருக்கிறது. வாழ்த்துக்கள் சமஸ்.

  புது தில்லியிலிருந்து திரும்பிய அன்று - 11.5.2015

  பதிலளிநீக்கு
 8. Even you have no guts to write the name of the caste involved in brutal rapes and murders. You have instead chosen to hide under the word "Aathikka Saathi". Many will interpret that as Brahmins and the hatred will spread further. Had it been Brahmins, everyone would have been, without hesitation, mentioned the caste name. This is the reality. Having said that, felt very good reading the article since it doesnt make Brahmins "entirely responsible" for all social ills, like the dravidian parties want us to believe.

  பதிலளிநீக்கு
 9. அருமையான பதிவு... சார்

  பதிலளிநீக்கு
 10. இந்து மதத்தின் 10-ல் ஒரு பங்கு மக்கள்தொகையைக்கூடத் தொட முடியாத ஒரு சாதியின் குற்றங்களை மட்டுமே பேசிக்கொண்டு, ஏனைய 9 பங்கு சாதிக்காரர்கள் வசதியாக, நம்முடைய சுயசாதி விமர்சனங்களிலிருந்து தப்பித்துக்கொள்வதும், நம்முடைய சாதிகளை அவற்றின் அநீதிகளிலிருந்தும் கொடுஞ்செயல்களிலிரு ந்தும் மறைத்துவிடுவதும் ஒருபோதும் சாதி ஒழிப்புக்கு உதவாது என்று நினைக்கிறேன். மேலும், இது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் என்றும் நினைக்கிறேன். Well said.

  பதிலளிநீக்கு
 11. பிராமணர்கள் நிலை பற்றிய பத்ரி சேஷாத்ரி அவர்களின் நாளிதழ் கட்டுரைக்கு திரு.ஜெயமோகன் அவர்களின் எதிர்வினை கட்டுரையை இன்று படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படியே இந்த உங்களின் கட்டுரையையும் (சு)வாசித்தேன். இரண்டும் ஒரே நேர்கோட்டில் செல்கிறது. தங்களின் தெளிந்த நீரோட்டமான நடை மிக அருமை. இந்து தமிழில் நாளும் தங்களின் எழுத்துக்களை வாசிப்பதில் உவகை கொள்கிறேன். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாங்கள் குறிப்பிடும் சேசாத்ரி கட்டுரை, அதற்கான எதிர் வினை ஆகியனவற்றின் இணைப்புகளைத் தெரிவிப்பீர்களா?

   நீக்கு
 12. 29/11/2015 அன்று விஜய் டி வி நீயா நானா நிகழ்ச்சியில்தான் முதல் முதலாக உங்களை காண நேர்ந்தது...அந்த நிகழ்ச்சியில் அத்தனைபேரும் அந்த மழையை ஒரு விதமாகவும் நீங்கள் பெரியகாட்டுப்பளையம் சம்பவத்தோடு ஒப்பிட்டு இயற்கையும் சில பேரைத்தான் குறிவைக்கிறது என்று மீடியாவில் உரைத்த தைரியம் அளப்பரியது....இன்றைய இளைஞர்கள் சிலர் தவறான வழிகாட்டுதல் அல்லது வழிகாட்டுதல் இல்லாமை என்ற காரணத்தால் இன்றைய சூழ்நிலைகளுக்கு சற்றும் பொருந்தாத சில எழுத்தாளர்களை திராவிட விளக்குகள் என்று கொண்டாடுகிறார்கள்...அவர்களுக்கு உங்கள் அறிமுகம் உடனடித் தேவை...இல்லையென்றால் இந்த சமூகம் மறுபடியம் திரிந்து போவதை யாராலும் தடுக்க முடியாது...இந்த கட்டுரை ஒரு புதிய பரிமாணம்...புரிய வேண்டிய உண்மை...பல பேருடைய முகமூடிகள் அடையாளம் கண்டுகொள்ளப்படவேண்டியதன் அவசியம்....

  பதிலளிநீக்கு
 13. Brahmins never ruled India. Kings were from other majority castes. For survival brahmins must have done mistakes. One thing is sure Brahmins never killed people and harassed. Brahmins were not mighty. In tamilnadu
  politics is anti brahmin not pro Dalit.

  பதிலளிநீக்கு
 14. பெரும்பாலனவர்களுக்கு இந்த உண்மையை உணர்ந்திருந்தும், அதை சொல்ல தயங்கிய நிலையில், ஊருக்கு நல்லது சொல்வேன்... எனக்குண்மை தெரிந்தது சொல்வேன் என உரக்க குரல் கொடுத்த உங்கள் நேர்மையும், தைரியமும் அசாத்தியமானவை சார்...

  பதிலளிநீக்கு
 15. பெரிய அளவில் வரலாறு, தத்துவம் எல்லாம் எனக்குத் தெரியாது... ஜாதி சான்றிதழ்களில் இருக்கும் ஜாதிகளுடன் இப்போது வக்கீல் ஜாதி, டாக்டர் ஜாதி, தொழிலதிபர் ஜாதி, அதிகாரிகள் ஜாதி என்று பல ஜாதிகள் உள்ளன. இவற்றை யாரும் எப்போதும் அழிக்க முடியாது. வேண்டுமானால் வெவ்வேறு பெயர்களில் இவை உலா வரக்கூடும். இவை எந்த பெயரில் வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும்... ஆனால் ஒன்றை நிச்சயம் ஒழிக்க வேண்டும். அது நம் அனைவராலும் முடியும்... தீண்டாமை... ஆம் தீண்டாமை என்ற பாவச்செயலை ஒழித்தால் போதும்.... கவுரவக்கொலை, ஆணவக்கொலை, அகங்காரக் கொலை, பார்ப்பனீய எதிர்ப்பு கொலை என்று எதுவும் நடக்காது.

  பதிலளிநீக்கு
 16. இக் கட்டுரையின் தலைப்பு சரியானது!ஆனால் தீர்வு? சாதியத்தின் ஆணிவேராக --அனைத்து சாதியாரும் அதைக் கெட்டியாகப் பற்றிப் பிடித்துக் கொள்ள வாய்ப்பளிக்கிற-அதாவது ஏற்றத் தாழ்வான சமூக உறவுகளுக்கு அடிப்படையாய் உள்ள--நிலக் குவியல் அமைப்பைக் குலைக்காமல் சாதி ஒழிப்பு சாத்தியமில்லை எனும் (கேரளா, மேற்கு வங்கப் படிப்பினைகள் மூலம் தெளிவான) மார்க்சியர்களின் பட்டறிவின்பாற்பட்ட அணுகுமுறையைப் பற்றி ஒரு வார்த்தை இக் கட்டுரையில் இல்லை. அத்துடன், கீழ வெண்மணிப் படுகொலை வெறும் அரைப்படி நெல் கூலி உயர்வு கோரிக்கை காரணாமாக மட்டும் நிகழவில்லை; அந்த சேரிவாழ் மக்கள் தங்கள் ஊர்களில் ஏற்றியிருந்த செங்கொடிகளை இறக்கிப் பண்ணயார்களின் பச்சைக் கொடியை ஏற்ற மறுத்ததுதான் முதன்மையான காரணம். இந்த இரண்டும் இக் கட்டுரையாளருக்கு ஏன் பிடிபடவில்லை எனத் தெரியவில்லை. இன்னொன்று: இவர் முன்வைக்கிற சுயவிமர்சனம் இடைச் சாதியாரிடம் எடுபடவே எடுபடாது; ஏனெனில் அன்று தஞ்சையில் மட்டும் கிளர்ந்தெழுந்த ஒடுக்கப்பட்டவன் இன்று நாடெங்கும் தலை நிமிர்ந்து நடக்க முயல்கிறான்! இட ஒதுக்கீட்டின் வழி கிடைத்த கல்வி, வேலை வாய்ப்புகளை ஓரளவு பயன்படுத்திக் கொண்டு! கிராமப் பொருளாதாரம் தாராளமயத்தின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் தகர்ந்து வருகிற சூழலில் தங்களின் ஆதிக்கத்தைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள இயலாது எனும் அச்சம் கொண்ட ஆதிக்க இடைச் சாதியர் அத்தகைய நியாயமான செயலைச் செய்யமாட்டார்கள்.மேலும்,அவர்களின் சாதி வெறிக்குத் தூபம் போடும் 'அரும்பணி'யை ஒசையின்றிச் செய்து கொண்டு வருகிறது இங்கே காலூன்றத் துடிக்கும் இந்துத்துவ அரசியல். இதையெல்லாம் எதிர்கொள்ளும் ஆற்றல் உண்டோ இல்லையோ ஆனால் ஆர்வம் இடதுசாரிகளிடம் மட்டுமே இருக்கிறது. தமிழகத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியைக் கட்டி காந்திய வழியில் அவர்கள் செய்து வரும் சீரிய பணி இதற்குச் சான்று. அதை வலுப்படுத்த இவர் உள்ளிட்ட அறிவாளிகள் முன்வரவேண்டும்! சாதி ஒழிப்பெனும் பெரும் சவாலைப் பின்னர் சந்திப்போம்! இதற்கு காந்தியர்கள் கைகொடுக்கட்டும்!

  பதிலளிநீக்கு
 17. இன்று சாதி ஒழிப்பு பற்றி பேசுவதுதான் ஒரே முற்போக்கு என்ற பிற்போக்கு தனம் வேகமாக பரவி வருகிறது . சாதி ஒழிப்பு பற்றி பேசுபவர்கள் யாரும் சாதி மறுப்பு திருமணம் செய்வதில்லை .தீவிரமாக சாதி ஒழிப்பு பேசும் இடதுசாரிகள் யாராவது சாதி மறுப்பு திருமணம் செய்கிறார்களா எல்லோரும் அவரவர் சாதியில் தன திருமணம் செய்துகொள்கிறார்கள் இவர்கள் சொல்லுவத்ல்லாம் மற்றவர்களுக்தான்
  சாமானிய மக்களுக்கு எடுத்துக்காட்டாக முதலில் இவர்கள் சாதிமறுப்பு திருமணம் செய்யட்டும் .

  பதிலளிநீக்கு
 18. Very ordinary article, with twisted facts and no concrete information. You are trying to project yourself as a neutral person, but your deep rooted anti-brahmin ideology (wrong and baseless) reflects despite your efforts to hide it. Remember, anti-brahmin stance is a political move in Tamilnadu and it is still working for dravidian parties. You are also presenting the same old fabricated impression about Manu Dharma. You are using the same misinterpreted version for the sake of argument. Further, history makes it clear that Periyar not even raised his voice against Keel Venmani massacre. It is very sad that good writers like you are out to confuse people with ill-facts and half-baked ideas and divide people. Instead, you can focus on developmental issues, global politics, how corrupt people have become and how the government is bending for multinationals etc...

  பதிலளிநீக்கு
 19. சாதிய கொடுமைகளை நினைத்து வருத்தப்படுவதற்கு முன்பு தங்கள் நெற்றியில் உள்ள சாதிய அடக்குமுறை அடையாள சாம்பல்பட்டையை அழித்தொழியுங்கள்.

  பதிலளிநீக்கு
 20. //நான் சாதி இல்லை என்று சொல்லி என் குழந்தைகளை வளர்க்கப்போவது இல்லை. அப்படிச் சொல்வது பெரிய ஏமாற்று வேலை. நான் அவர்களிடம், இந்த நாட்டின் சகல கட்டுமானங்களும் சாதியை உள்ளுக்குள் ஒளித்துவைத்திருப்பதைச் சொல்வேன். காந்தியையும் அம்பேத்கரையும் பெரியாரையும் படிக்கச் சொல்வேன். என்னுடைய சாதியின் சகல அரக்கத்தனங்களையும் இழிசெயல்களையும் சொல்வேன். அவர்களுடைய முன்னோர்களால் பல நூற்றாண்டு பாவம் அவர்களுடைய தலை மேல் ஏற்றப்பட்டிருப்பதைச் சொல்வேன். சாதியற்ற சமூகத்தை நோக்கி அவர்களுடைய தந்தையும் தாயும் ஒரு அங்குலமேனும் அடி எடுத்துவைத்ததைச் சொல்வேன். அவர்கள் தங்கள் வாழ்வில், மேலும் சில அடிகளேனும் எடுத்துவைத்து, அந்தப் பயணத்தைத் தொடர வேண்டும் என்று கோருவேன்!//

  பயணம் முடிய ஆயிரமாண்டுகளாகும்.

  பதிலளிநீக்கு