சாப்பாட்டுப் புராணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சாப்பாட்டுப் புராணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அல்வா நகரம்!


 

  
                     ஆனிப் பெருந்திருவிழாத் தேரோட்ட நாளில் திருநெல்வேலி புறப்பட்டு வர நேர்ந்தது எதேச்சையாக அமைந்தது. நெல்லை வந்ததும்தான் பயணத்தின் விசேஷம் நமக்கே புரிந்தது. ஒட்டுமொத்த ஊரும் விழாக் கோலம் பூண்டிருந்தது. ஏழாம் நூற்றாண்டுக்கு முற்பட்டதாகக் கருதப்படும் நெல்லையப்பர் திருக்கோயிலின் முக்கியத் திருநாளே திருத்தேரோட்டம்தான். ஏறத்தாழ 500 ஆண்டுகள் பழமையான  இந்தத் தேர், திருவாரூர் தேருக்கு அடுத்து மாநிலத்திலேயே பெரியது என்று கூறுகிறார்கள் (தொன்னூறு அடி உயரமும் இருநூற்று இருபது டன் எடையும் கொண்டது திருவாரூர் ஆழித்தேர்).

                         நீண்ட வீதிகள் எங்கும் மக்கள் சூழ, நடுவே முதலில் சுவாமித் தேர், அதைத் தொடர்ந்து அம்பாள் தேர், அதையடுத்து விநாயகர் தேர், அதற்குப் பின்னர் சுப்பிரமணியர் தேர், அதற்கும் பின்னர் சண்டிகேஸ்வரர் தேர் என்று வரிசையாக அசைந்தாடி தேர்கள் வரும் காட்சி கண்கொள்ளாக் காட்சி என்றால், நெல்லையப்பர் திருக்கோயிலைக் காண்பது அற்புத தரிசனம். கோயில் அழகும் தேர் அழகும் ஒன்றுகூடிய திருநாள் அழகும் ஒரு முழு நாளை எடுத்துக்கொண்டன. நாம் வந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு இன்னொரு நாள் தேவைப்பட்டது.

                          ஏற்கெனவே, கிடைத்திருந்த தகவலின்படி மாலை சரியாக 5 மணி அளவில் நெல்லையப்பர் கோயிலின் பிரதான வாயிலின் இடது திருப்பத்தையொட்டிய அந்த இடத்துக்கு வந்து சேர்ந்திருந்தோம். மரக்கதவுகளால் அடைக்கப்பட்டிருந்த அந்தச் சின்னக் கடையைப் பார்த்தபோது ஆச்சர்யமாக இருந்தது. இந்தச் சின்ன இடமா ஒரு மாநகரின் அடையாள அடித்தளமாக இருக்கிறது? வியப்பு மேலிட்டது. பெயர்ப் பலகை இல்லாததால் அப்பகுதியைச் சேர்ந்தவர்களிடம் "இடம் இதுதானா?' என்று கேட்டு உறுதிசெய்துகொள்கிறோம். கடிகாரத்தைப் பார்க்கிறோம். மணி 5.30. சுற்றிக் கவனிக்கிறோம். இப்போது அந்த இடத்தில் நம்மையும் சேர்த்து ஒரு கூட்டம் நிற்கிறது. மணி 5.54. கூட்டம் அதிகரிக்கிறது. ஒருவரையொருவர் முந்திக்கொள்ளும் ஆர்வம் ஒவ்வொருவர் முகத்திலும் தெரிகிறது. சரியாக மணி 6. கடை திறக்கிறது. கடையில் எரியும் ஒரேயொரு ‘40 வாட்ஸ் பல்பு’ அந்தச் சூழலை எங்கோ கொண்டுசெல்கிறது. நாம் உறுதிப்படுத்திக்கொள்கிறோம். ஆம், நாம் இப்போது ‘இருட்டுக்கடை’யில் நின்றுகொண்டிருக்கிறோம்.

சிம்மக்கல் கறி தோசையும் கோலா உருண்டையும்

      
                    என்னதான் வாழ்க்கை வசதிக்காக நகரங்களை நோக்கி ஓடினாலும் ஒவ்வொருவருக்கும் கிராமத்தின் மீது ஒரு காதல் இருக்கத்தானே செய்கிறது. நகரத்தின் எல்லா வசதிகளோடும் ஒரு பெரிய கிராமம் கிடைத்தால் எப்படி இருக்கும்? மதுரைக்காரர்களுக்குக் கொஞ்சம் கொடுப்பினை இருக்கிறது!

                           மதுரையின் ஒவ்வோர் அம்சத்திலும் ஒட்டிக்கொண்டிருக்கும் அந்தக் கிராமத்து வாசனைதான் சிம்மக்கல் கறி தோசை, கோலா உருண்டையின் விசேஷம். ஊர் உலகம் எல்லாம் ரவா தோசை, வெங்காய தோசை, மசாலா தோசை என்று நூறு ரகமாய்ப் போட்டும் மாறாத தோசையின் சைவ முகத்தை ஆராவாரம் இல்லாமல் அசைவமாக மாற்றியிருக்கிறார்கள் மதுரைக்காரர்கள். மதுரை சிம்மக்கல்லில் இரவில் மட்டும் திறந்திருக்கிறது ‘கோனார் மெஸ்’. பெயர்ப் பலகையெல்லாம் கிடையாது; கேட்டால் "இது மக்கள் வைத்த பெயர்'' என்கிறார்கள். வழக்கமாக அசைவச் சாப்பாட்டுக் கடைகளில் கிடைக்கும் புரோட்டா, சால்னா, பிரியாணி கதையெல்லாம் இங்கு கிடையாது. சகலமும் கறி தோசைதான். வெள்ளாட்டுக் கறி தோசை, மூளை தோசை, ஈரல் தோசை, நாட்டுக்கோழிக் கறி தோசை என்று கறிப் பித்துதான் பிடிக்கவைக்கிறார்கள். தொட்டுக்கொள்ளவும் இதே வகைகளில் தினுசு தினுசாய்க் குழம்பு; எதைக் கேட்கிறீர்களோ அதைத் தருகிறார்கள்.

இடியாப்பம் - ஆட்டுக்கால் பாயா


                           தஞ்சாவூர் பக்கத்திலுள்ள சின்ன கிராமம் நடுக்கடை. இந்த ஊரைச் சேர்ந்த பக்ரூதீன் பாவாவுக்குக் குடும்பத் தொழில் சமையல். தாய், தந்தை ஆரம்பித்த உணவகத்தில் வியாபாரம் சரியில்லாததால், தன் தாய்மாமன் பாண்டிச்சேரியில் வைத்திருந்த உணவகத்துக்கு வேலைக்குப் போனார் பாவா. மாமா இடியாப்பம், ஆட்டுக்கால் பாயா செய்வதில் கெட்டிக்காரர். மாமாவிடம் தொழிலைக் கற்றுக்கொண்ட பாவா பின்னாளில், தஞ்சாவூர், கீழவாசலில் தன் பெயரையும் ஊர்ப் பெயரையும் இணைத்து ‘நடுக்கடை பாவா ஹலால் உணவக’த்தைத் தொடங்கினார்.

மைசூர் பாகு மற்றும் சுத்தியல்!


                         மைசூர் பாகு என்ற பெயரை உச்சரிக்கும்போதே கத்தி, சுத்தியல், கடப்பாறை இன்ன பிற கடின ரக வஸ்துகள் ஞாபகமும் கூடவே வருவது பழக்கமாகிவிட்டது. இதற்கான காரணம் நாமல்ல, பொறுப்பை இல்லத்தரசிகளும் பத்திரிகை தமாசு எழுத்தாளர்களுமே ஏற்க வேண்டும். விசேஷ நாட்களில் முறுக்கு, அதிரசம், பஜ்ஜி, சொஜ்ஜி, சுழியன் போன்ற பாரம்பரிய பலகாரங்களிலிருந்து விலகி, புதிதாக ஏதேனும் செய்துபார்க்க முனையும் பெரும்பாலான இல்லத்தரசிகளின் எளிய இலக்கு மைசூர் பாகு. இந்தப் பரிசோதனை முயற்சியில் களபலியாகும் எளிய இலக்கு கணவன்மார்கள். தமாசு எழுத்தாளர்களும் இதற்கு விதிவிலக்கு அல்லவே. ஆகையால், இல்லாளிடம் பட்டதை எங்கு கொண்டுபோய்க் கொட்டுவது என்று தேடி அலையும் அவர்களுக்கும் மைசூர் பாகு தமாசுகள் எளிய இலக்காகிவிடுகின்றன. 'மைசூர் பாகில் மைசூர் எங்கே?' என்பதில் தொடங்கி, 'வீட்டு விசேஷத்துக்கு வந்து ஒரேடியாகத் தங்கிவிட்ட மாப்பிளையைத் துரத்துவதற்கான அஸ்திரமாக மைசூர் பாகைப் பயன்படுத்துவது' வரை ஆயிரக் கணக்கான கடிகள், தமாசுகள் வந்துவிட்டன என்றாலும், விசேஷம் என்று வந்துவிட்டால், மைசூர்பாகும் வந்துவிடுகிறது; தமாசுகளும் வந்துவிடுகின்றன.

                         மைசூர் பாகின் பிறப்பிடம் கர்நாடகம். மைசூர் அரண்மனை சமையல்காரர் காகசுரா மாடப்பாவால் முதன்முதலில் தயாரிக்கப்பட்டதாகவும் அதனாலேயே மைசூர் பாகு என்ற பெயர் வந்ததாகவும் ஒரு கதை உண்டு. மைசூர் அரண்மனைக்கு வரும் ராஜ விருந்தாளிகள் அரண்மனையைக் கண்டு எத்தனை வியக்கிறார்களோ அதே அளவுக்கு அங்கு பரிமாறப்படும் மைசூர் பாகின் சுவையை ருசித்தும் வியப்பார்களாம். அத்தனை ருசியாக இருக்குமாம். மைசூர் பாகு செய்ய கடலை மாவு, ஜீனி, நெய் போதுமானவை என்பதால், சமையல்காரர்களிடம் பக்கு வம் கேட்டுக்கொண்டு செல்லும் விருந்தினர்கள் ஊருக்குப் போனவுடன் முதல் வேலையாக மைசூர் பாகு செய்வதில் இறங்கிடுவார்களாம். ஊருக்கு ஊர் மைசூர் பாகு இப்படிதான் பரவியது என்று அந்தக் கதை சொல்கிறது. தமிழகத்தில் அனேகமாக இனிப்பகங்கள் உள்ள எல்லா ஊர்களிலுமே மைசூர் பாகு கிடைக்கிறது. லேசுபாசான ஒரு மஞ்சள் நிறத்தில், சற்று நீள வாக்கில், சற்றேழத்தாழ செவ்வக வடிவில், சில இடங்களில் கல்லைப் போல, சில இடங்களில் கொஞ்சம் கொதகொதவென இப்படியான ஒரு வடிவில் அது கிடைக்கிறது. அதாவது, மைசூர் பாகு. மன்னிக்க வேண்டும். உண்மையை விளக்குவது என்றால், வேறு வழியில்லை; சில இனிப்பகக்காரர்கள் இல்லத்தரசிகளையே மிஞ்சிவிடுகிறார்கள் (தமாசு ஏழுத்தாளர்கள் கவனிக்க).

வழிப்போக்கர்களின் கட்டுச்சோறு!


                      

                      கோயில்களில் சுவாமி தரிசனம் எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம் பிரசாதம். பிரசாதம் என்றால் விபூதி அல்லவே; கட்டுச்சோறாக்கும்!
புளி, எலுமிச்சை, தயிர்... இன்னும் என்னவெல்லாம்  கூடுமோ எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு பின்னால் சாதத்தையும் சேர்த்துக்கொள்ளும். கட்டுச்சோறாகிவிடும். மூட்டையைக் கட்டிக்கொண்டு கிளம்புமுன் ஒரு கதை உண்டு. கட்டுச்சோறு கதை. கேட்கலாமா?

சிதம்பரம் கொத்சு!

               எல்லா ஊர்களிலும் கோயில்கள் இருக்கின்றன. ஆனால், சில ஊர்கள் மட்டுமே கோயிலோடு பிணைந்துவிடுகின்றன. அந்த ஊர்களின் பெயரை உச்சரித்தால் மனம் முதலில் கோயிலையே அவதானிக்கிறது - வாடிகன்போல, கேன்டர்பெரிபோல, சிதம்பரம்போல!

               சிதம்பரத்தையும் நடராஜர் கோயிலையும் பிரித்துப் பார்க்க முடிவதில்லை. மேலோட்டமாய் யோசித்தால் ஒரு நாட்டியக்காரனின் சாஸ்வதம் தோன்றி மறையும் இந்த இடத்தில், சற்று தீவிரமாய்ப் போனால் ஓர் அமானுஷ்ய உலகம் உங்களை இழுத்துக்கொள்ளும். பஞ்சபூத ஸ்தலங்களில் சிதம்பரம் ஆகாய ஸ்தலம். மூன்று நிலைகளில் இறைவன் இங்கு உறைந்திருக்கும் நிலை அருவ நிலை. இறைவனை எப்படி வழிபடுகிறார்கள் தெரியுமா? மந்திர வடிவில். மந்திரத்தில் இறைவன் இருக்கும் இடத்தைத் திருவம்பலச்சக்கரம் என்பார்கள். தன்னையே தேடுவோருக்குத் தன்னையே தரும் இறைவன், லோகாயுதவாதிகளுக்குத் தன்னிடத்தில் ஒன்றை மட்டும் விட்டுவைத்திருக்கிறான்; அது... அவனே சொக்கிக் கிடக்கும் கத்திரிக்காய்க் கொத்சு. சிதம்பரத்தில் சாயங்காலம் இரண்டாம் கால பூஜையின்போது இறைவனுக்குச் சம்பா சாதத்துடன் கொத்சு நைவேத்தியம் செய்கிறார்கள். வேகவைத்த கத்திரிக்காயை இடித்து, உப்பு, புளி சேர்த்து, சுண்டக் கொதிக்கவிட்டு, பசைப் பக்குவத்தில், காரமல்லிப் பொடி சேர்த்து, நல்லெண்ணையில் கொதிக்கவிட்டு, தாளித்த சூட்டோடு இறக்கப்படும் கொத்சை ஒரு துளி சுவைத்துப் பார்த்தால் இறைவனின் மீது பொறாமையே வரும். கடவுளர்களுக்குத்தான் சாப்பாடு எப்படியெல்லாம் வாய்க்கிறது?! இருந்த இடத்திலேயே வேளாவேளைக்கு நோகாமல் கடவுளர்களுக்கு மட்டும் இப்படி விதவிதமான சாப்பாடு கிடைப்பது பொறுக்காமல்தான் கடவுளர்களை மனிதன் சாப்பிடவிடாமல் செய்துவிட்டான்போலும்! அது போகட்டும், சிதம்பரத்தில் கொத்சு நிலைத்து நின்றதே ஒரு பெருமைதான் தெரியுமா?

புத்தூர் அசைவச் சாப்பாடும் கெட்டித் தயிரும்


                 காத்திருத்தல் ரொம்பவும் கொடுமை. ஆனால், வாழ்வில் சுவையான அனுபவங்களைப் பெரும்பாலும் காத்திருந்தே பெற வேண்டி இருக்கிறது. இதுவரை என்னென்ன காரணங்களுக்காகவோ காத்திருக்க நேர்ந்திருக்கிறது. என்றாலும், புத்தூர் அனுபவம் உள்ளபடியே வித்தியாசமானது-ரசமானது!

திருவானைக்கா ஒரு ஜோடி நெய் தோசை!


            திருவானைக்கா.
ஆயிரக் கணக்கான ஆண்டுகள் வரலாற்றையும் அற்புதமான கோயிலையும் தன்னகத்தே அடக்கி நிற்கும் ஊர். சிற்றூர்களின் அடையாளங்களை விழுங்கிவிடும் மாநகரங்களுக்கே உரிய துர்குணத்தால் இன்று திருவானைக்காவும் திருச்சி மாநகரின் ஒரு பகுதியாகிவிட்டது. ஒருபுறம் காவிரியாலும் மறுபுறம் கொள்ளிடத்தாலும் சூழப்பட்டிருக்கும் திருவானைக்காவில் இரண்டு விஷயங்கள் பிரசித்தம். ஒன்று... கருவறையில் சிவலிங்கத்தைச் சுற்றி எப்போதும் நீர் ஊற்றெடுத்துக்கொண்டிருக்கும் ஜம்புகேஸ்வரர் கோயில். மற்றொன்று... திரும்பத்திரும்பச் சாப்பிட அழைக்கும் 'பார்த்தசாரதி விலாஸ்' ஒரு ஜோடி நெய் தோசை.


                            தமிழர்கள் வாழ்வில் அலுக்காத விஷயங்களில் ஒன்று தோசை. தோசையை விரும்பாதவர்கள் யார் இருக்கிறார்கள்? பக்கத்து வீட்டில் முறுகும் வாசம் பிடித்து எனக்கும் தோசை வேண்டும் என அடம்பிடிக்காத குழந்தைப் பருவம் யார் வாழ்வில் இல்லாமல் இருந்திருக்கிறது? ''என் பிள்ளைக்கு மூன்று வேளையும் தோசை கொடுத்தாலும் சாப்பிடும்'' என்ற வசனத்தை நாம் எல்லோருமே ஏதோ ஒரு காலகட்டத்தில் கடந்து வந்திருக்கிறோம். வீட்டில் ஒரு பள்ளிக்கூடமே நடத்தும் அளவுக்குக் கூட்டத்துடன் இருந்த நம் மூத்த தலைமுறையைக் கேட்டுப்பாருங்கள். யாருக்கும் தெரியாமல் அம்மாவிடம் கேட்டு, தான் மட்டும் திருட்டுத்தனமாய் தோசை தின்ற கதையைச் சொல்வார்கள். ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு நாள் வந்திருக்கும். வீட்டில் நெய்யும் தோசை சுடுபவருக்குப் பிரியமும் ஒன்று கூடி வந்த ஒரு நாள். அந்நாளில் அருமையான நெய் முறுகல் தோசைகளை நாம் சாப்பிட்டிருப்போம். ஒரு தோசை சட்னி தொட்டு, ஒரு தோசை ஜீனி தொட்டு, ஒரு தோசை வெறும் தோசையாய் என்று அந்நாளில் பிரமாதப்படுத்தி இருப்போம். பின்னர், அத்தகைய தோசை நமக்கு கிடைப்பதேயில்லை. காலமெல்லாம் சுற்றித்திரியும்போது எங்காவது ஒரு நாள் மீண்டும் கிடைக்கும் அப்படியொரு தோசை 'பார்த்தசாரதி விலாஸ்' நெய் தோசையைப் போல. சாப்பிட்டுவிட்டு பின்னர் அதைப் பற்றியே பேசிக்கொண்டிருப்போம். ஆனால், திருவானைக்காகாரர்களுக்குக் கொடுத்துவைத்திருக்கிறது. நினைத்தபோதெல்லாம் சாப்பிடுகிறார்கள்.

கும்பகோணம் பூரி-பாஸந்தி!


      கும்பகோணம்.
 வேறு வர்ணனை எதுவும் தேவை இல்லை. சில பெயர்கள் இப்படிதான். தாமாகவே ஓர் உலகத்தை சிருஷ்டித்துக் கொண்டுவிடும்! திக்கெட்டும் தெரியும் கோபுரங்களிடையே அருள்மிகு ராமசாமி கோயில் கோபுரத்துக்கு ஏதிரே, அதாவது, ராமசாமி கோயில் சன்னதி வீதியில் நீங்கள் இறங்குகிறீர்கள். கொழுந்து வெற்றிலை, பன்னீர்ப் புகையிலை, வாசனைச் சுண்ணாம்பு, ஊதுபத்திகள், சாம்பிராணி, சந்தனம், பூக்கள், நாட்டு மருந்துகள் என எல்லாமும் கலந்த ரம்மியான மணம் உங்கள் நாசியைத் துளைக்கிறது. மெல்ல நடக்கிறீர்கள். எதிரே பெரிய கடைவீதியின் முதல் கடை. 'முராரி ஸ்வீட்ஸ்'. நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பூரி, பாஸந்தி இரண்டும் ஒருசேரக் கிடைக்குமிடம். இன்னும் 7 ஆண்டுகளில் நூற்றாண்டைக் கொண்டாடப்போகும் 'முராரி ஸ்வீட்'ஸின் பூரி, பாஸந்தியைச் சுவைக்கும்
முன் கும்பகோணத்தின் அன்றைய நாட்களில் கொஞ்சம் உலாவி வருவோமா?


                         கும்பகோணத்துக்கென்றே தனியாக ஒரு சாப்பாட்டுப் புராணம் எழுதும் அளவுக்கு ஒவ்வோர் உணவு வகைக்கும் பெயர்போன உணவகங்களும் அந்த உணவுக்காகக் காத்திருந்து சாப்பிட்டுச் சென்ற கலாரசிகர்களும் வாழ்ந்த காலகட்டம் அது. தவில் சக்கரவர்த்தி தங்கவேல் பிள்ளையின் தேர்வு 'வெங்கடா லாட்ஜ்' அல்வா என்றால், பிடில் சக்கரவர்த்தி ராஜமாணிக்கம், நாகசுரச் சக்கரவர்த்தி திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை இருவரின் தேர்வும் 'பசும்பால் பஞ்சாமி அய்யர் கடை' காபி. எழுத்தாளர்கள் தி. ஜானகிராமன், எம்.வி. வெங்கட்ராம், கரிச்சான்குஞ்சு மூவரும் காந்தி பூங்காவில் சந்தித்துக்கொள்வார்கள். பேச்சு முடிந்ததும் மூவருக்கும் இட்லி வேண்டும். 'மங்களாம்பிகா' இட்லி... அவர்களுக்குப் பிடித்த மிளகாய்ப் பொடியோடு!

ரயில் பயணமும் ஸ்ரீரங்கம் இட்லி பொட்டலமும்!

     
              
                     ஆகப் பிரமாதம் எல்லாம் இல்லை. விசேஷ நாட்களில் நம் வீட்டுப் பெண்கள் இட்லியோடு செய்வார்களே... அப்படியொரு வெங்காய சாம்பாரும் அதோடு, கூட தொட்டுக்கொள்ள சட்னியும்தான். ஆனால், சாப்பிடும் சூழல் அதை அத்தனை பிரமாதமானதாக ஆக்கிவிடுகிறது!


                   ரயிலைப் பார்த்துவிட்டால் எந்த வயதில் இருப்பவர்களும் பிள்ளைகள்தான். அதிலும், ரயில் பயணம் என்றால் கேட்கவா வேண்டும்? தமிழகத்தின் தென் மாவட்டங்களிலிருந்து வட மாவட்டங்களுக்கும் பிற மாநிலங்களுக்கும் திருச்சி வழியே ரயிலில் செல்வது ஒரு வித்தியாசமான அனுபவம். கூட்ட நெரிசல் கொஞ்சம் நசநசப்புதான். ஆனால், சற்றேறக்குறைய தமிழ்நாட்டிலுள்ள அத்தனை மண் வகையறாவும் பார்வைக்குப் படும். பல ஊர் பாசக்காரர்களையும் பார்க்க, பேச முடியும்.இப்படியாகப் பேசிக்கொண்டே பயணம்செய்தால் ஏதேனும் ஒரு பசி வேளையில் திருச்சி வந்துவிடும். அல்லது திருச்சி வந்தால் பசிக்க ஆரம்பிக்கும். மண்வாகு அப்படி! வறண்டதும் அழகுதான்; கருத்ததும் அழகுதான். ஆனால், நிலத்தில் மண் நிறத்தைவிடவும் பயிர் நிறம் பார்க்கக் கிடைப்பது பேரழகு! காவிரி தொட்ட இடமெல்லாம் பச்சைதான். உங்களுக்குத் தெரியுமா? திருச்சியும் ஒரு காலத்தில் தஞ்சை மாவட்டம்தான். அது ஒரு காலம்! திருச்சியைத் தாண்டுகிற வரைக்கும் மலைக்கோட்டையும் பார்வைக்குத் துணை வரும். மலைக்கோட்டை மறைந்தால் காவிரி. அகண்ட காவிரி. கண்ணுக்கெட்டும் வரை இரு பக்கமும் தண்ணீர். வாய்விட்டு 'அம்மா' என்று கூப்பிடச் சொல்லும். அதற்கு மேல்தான் ரயில் போகும். காவிரியைத் தாண்டினால் தென்னந்தோப்புகள், வயல்கள், பாலங்கள், சாக்கடைகள், கட்டடங்கள், இத்தியாதி இத்தியாதி... ரயில் முக்கி மூச்சுவிடும்போது ரயில் பயணமும் ஸ்ரீரங்கம் இட்லிப் பொட்டலமும் பசி வயிற்றைக் கிள்ளினால் அது ஸ்ரீரங்கம்!

மன்னார்குடி அல்வா!




           
              அ
ல்வா
!

            இந்தப் பெயரைக் கேட்டாலே, திருநெல்வேலி நினைவு வருவது தவிர்க்க முடியாதது. ஆனால், உலகம் முழுக்க திருநெல்வேலி அல்வா கொடி பறந்தாலும் யாருக்கும் தெரியாமல் அல்வாவோடு வாழ்க்கை நடத்தும் இன்னோர் ஊரும் தமிழகத்தில் இருக்கிறது அது – மன்னார்குடி!


            நாள்தோறும் வீதியோரம் அல்வாக் கடை வாசல்களில் நின்று, ஒரு கடமையைச் செய்வதுபோல துண்டு இலைகளில் அல்வாவை வைத்து ருசித்துச் சாப்பிடும் கூட்டத்தை எந்த ஊரிலேனும் காண முடியுமா?! போகட்டும். பால் சாதத்துக்கு அல்வா தொட்டுத் தின்னும் ஆட்களைப் பற்றி எங்கேனும் கேள்விப்பட்டதுண்டா?! மன்னார்குடியில்தான் இதெல்லாம் சாத்தியம்!

கூத்தாநல்லூர் தம்ரூட்





      தனக்கென தனிப் பாரம்பரியம் கொண்ட ஊர் கூத்தாநல்லூர்.  நகரம் என்று அழைக்கப்பட்டாலும் சற்றே பெரிய கிராமமாகக் காட்சியளிக்கும் கூத்தாநல்லூர்  ஒரு வித்தியாசமான ஊரும்கூட. சுற்றுவட்டாரக்காரர்களால் ‘குட்டி வளைகுடா’ என்று ஆழைக்கப்படும் கூத்தாநல்லூரின் பெரும்பாலான ஆண்கள் வளைகுடா  நாடுகளில் இருக்கிறார்கள். தம்முடைய வாழ்நாளின் பெரும்பாலான நாட்களை வளைகுடா  நாடுகளிலேயே கழித்துவிடுவதாலோ  என்னவோ அந்நாடுகளின் கலாச்சாரம் கூத்தாநல்லூர்க்காரர்களின் ஒவ்வொரு  விஷயத்திலும் ஏதேனும் ஒரு வகையில் பிரதிபலிக்கிறது. கூத்தாநல்லூருக்குச் செல்பவர்களுக்கு மூன்று அனுபவங்கள் முக்கியமானவை. நீண்ட வீதிகளின் இருமருங்கிலும் மாளிகைகளாய்க் காட்சியளிக்கும் வீடுகள்; மையத்தில் பிரியாணியைக் குவித்து சுற்றிலும் நால்வர் அமர்ந்து சாப்பிடும் நல்விருந்து, ஒருபோதும் திகட்டாத வீட்டுப் பணியாரம் - தம்ரூட்.

நீடாமங்கலம் பால்திரட்டு

                      
                    திருவாரூர் மாவட்டம், மூணாறுதலைப்பில் வெண்ணாறு மூன்றாகப் பிரிகிறது: கோரையாறு, வெண்ணாறு, பாமணியாறு. காவிரியின் கிளைநதிகளான இந்த மூன்று நதிகளுக்கும் இடையே ஓர் ஊர்...  சிலுசிலுவெனத் தண்ணீரும் பச்சைப்பசேல் என வயல்களும் சூழ. ஊருக்கு நடுவே அருள்மிகு சீதா பிராட்டியார் உடன் சந்தான ராமசாமி திருக்கோயில். எதிரே அழகான குளம். கூப்பிடு தூரத்தில் ரயில் நிலையம். அதையொட்டி ஒரு பூங்கா... ரம்மியமாக இருக்கிறது நீடாமங்கலம்!

காற்றில் கரையும் திருவையாறு அசோகா!


            
            திருவையாறு.  
          காவிரிக் கரையோரம் அமைந்திருக்கும் இந்த அழகான ஊரின் பெயரை வாசிப்பதே இசை ரேகைகளை மனமெல்லாம் பரவச் செய்யும். நீண்ட இசை மரபைக் கொண்ட இந்த ஊரின் பெருமையை உலகம் அரை நூற்றாண்டுக்கு முன்னர் வரை இசையால் மட்டுமே அறிந்திருந்தது. ஆனால், நிகழ்காலத் திருவையாற்றின் கதையை அசோகாவை விட்டுவிட்டு எவரேனும் எழுத முற்பட்டால் அது ஒருபோதும் நிறைவடையாது. வெற்றுப் புகழ்ச்சியல்ல; அத்தனையும் உண்மை!

ஒரு கோப்பை டீ


          
                "எ
ன்னய்யா உங்க ஊர்? ஒரு இது இல்ல; ஒரு அது இல்ல. இதெல்லாம் ஒரு ஊரா'' என்று எதற்கெடுத்தாலும் வாயால் அவல் அரைக்கும் ஆட்களைப் பார்த்திருப்பீர்கள். நம் நாட்டில் ஊர் என்று ஓர் இடத்தை அழைக்கலாம் எனில், அதற்கு என்னென்ன தகுதிகளை வரையறுக்கலாம் என்று ஒரு முறை உண்மையாகவே விவாதம் வந்ததாம். பலரும் பல மாதிரி தீவிரமாய்ப் பேசிக்கொண்டிருக்க, திடீரென எழுந்த ஒருவர், "ஒரு டீக்கடை இருந்தால் அதை ஊர் ஏன்று ஒத்துக்கொள்ளலாம்'' என்றாராம். கூடியிருந்த அத்தனை பேரும் சிரித்துக்கொண்டே, "இதையும் ஒரு தகுதியாக வைத்துக்கொள்ளலாம்'' என்றார்களாம்.

தஞ்சாவூர் காபி


                 
                 "விருந்தின் பயனெல்லாம் வீணாகும் காபி;
                 அருந்தத் தராமல்விட் டால்'' 
- இப்படி ஒரு பகடிப் பாடல் உண்டு, தாத்தா காலத்தில். எல்லாம் காபி படுத்திய பாடுதான். தமிழர்களாகிய நம் வாழ்வில் பாழாய்ப்போன இந்த காபி ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் லேசுபாசுபட்டதில்லை. காபி நல்லதா, கெட்டதா என்று ஒரு பக்கம் காலங்காலமாக விவாதம் நடந்துகொண்டிருக்க, "குடிக்கிறதைக் குடிக்காமல் வேறென்ன செய்வதாம்'' என்று கேட்டபடி டம்ளர்-டபரா சகிதம் பீப்பாய்பீப்பாயாக காபியை உள்ளே தள்ளிக்கொண்டிருக்கிறது தமிழ்ச் சமூகம்.