ஜாட் உள்ளிட்ட ஐந்து சமூகங்களுக்குக் கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை 10 நிமிடங்களுக்குள் ஒருமனதாக நிறைவேற்றி யிருக்கிறது ஹரியாணா அரசு. ஏப்ரல் 3-ம் தேதிக்குள் தங்கள் இடஒதுக்கீடு கோரிக்கை ஏற்கப்பட வேண்டும். இல்லையெனில், கிளர்ச்சி தீவிரம் அடையும் என்று கெடு விதித்திருந்தனர் ஜாட் தலைவர்கள். முதல்வர் மனோகர் லால் கட்டர் தலைமையிலான அரசு கெடுவுக்குள் இடஒதுக்கீட்டை அறிவித்துவிட்டாலும், பிரச்சினை தீர்ந்துவிட்டதாகத் தோன்றவில்லை. ஏனென்றால், பிரச்சினைக்கான தீர்வு அது இல்லை.
ஹரியாணாவில் ஜாட்டுகள் நடத்திய போராட்டங்களில் ரூ.20,000 கோடி பொருளாதார இழப்பு ஏற்பட்டதாகச் சொன்னது அசோசேம். கலவரங்களின் தொடர்ச்சியாக முதலீட்டாளர்கள் மாநாடும் ரத்தானது. மீண்டும் மாநாடு நடத்தப்படலாம். ஏற்கெனவே எதிர்பார்த்திருந்த முதலீடுகள் வருமா என்பது கேள்விக்குறி. இந்தப் போராட்டங்களின்போது 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்; 300-க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். இந்தியாவில் சாமானிய உயிர்களுக்கு என்றைக்கு மதிப்பு இருந்தது? அதேசமயம், அசோசேம் குறிப்பிடும் இழப்பும் முதலீட்டாளர்கள் மாநாடு ரத்தானதால் ஏற்படும் இழப்பும் ஆட்சியாளர்களை யோசிக்கவைக்கக் கூடியவை. யோசிக்கட்டும்!

