கடந்த ஆண்டு அயர்லாந்து இருந்த இடத்தில் இந்த ஆண்டு ஸ்பெயின். பெண்கள்
அமைப்புகள் கொடிகளை ஏந்தி நிற்கின்றன. அயர்லாந்து சட்டம் கருக்கலைப்பை அனுமதிக்காத
நிலையில், கடந்த ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த
சவிதா அங்கு கருக்கலைப்பு மறுக்கப்பட்டு உயிரிழந்தபோது அயர்லாந்து சர்ச்சையில்
சிக்கியது; ஏற்கெனவே உள்ள சட்டத்தை மேலும்
இறுக்கிக் கிட்டத்தட்ட கருக்கலைப்புத் தடைச் சட்டத்தைக் கொண்டுவந்து, சர்ச்சையில் சிக்கியிருக்கிறது ஸ்பெயின். பெண்களின்
கருப்பைக்கான உரிமையை மேலாதிக்கம் செய்வதில் வளர்ந்த நாடுகள், பின்தங்கிய நாடுகள் என்ற வேறுபாடு இல்லை; உயிர்களைவிடவும்
மதமும் நம்பிக்கைகளுமே அங்கு முக்கியம்.
அமுதா ஏன் இறந்தார்?
நம்மூர் கதைக்கு வருவோம். மதுரையைச் சேர்ந்த அமுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது)
கடந்த வாரம் உயிரிழந்தார். அவருடைய மூன்றாவது வீட்டுப் பெண்களுக்குக்கூட அமுதாவின்
மரணத்துக்கான உண்மையான காரணம் தெரியாது. காய்ச்சலில் கிடந்து அவர் இறந்துபோனதாக
அமுதாவின் உறவுக்காரர்கள் எல்லோரிடமும் சொன்னார்கள். உண்மையான காரணம் -
கருக்கலைப்பின் தொடர்ச்சியாக ஏற்பட்ட நோய்த்தொற்று.
ஆனால், அமுதாவின் மரணத்துக்கான காரணம் ஏன்
மறைக்கப்பட்டது? இத்தனைக்கும், அமுதாவுக்குக் கணவர் இருக்கிறார்; மேலும், இரு குழந்தை களுக்கு அவர் தாய்.
பதில்... குற்ற உணர்வும் அவமானமும்.