தலித் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தலித் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

எப்போது கொடூரங்களை நிறுத்தப்போகிறோம்?


அடித்து நொறுக்கப்பட்ட வீடு. நூறை நெருங்கும் ஒரு மூதாட்டி. கூரை ஓடுகள் சிதறிக்கிடக்கும் வீட்டின் வாசலில் சிதைவுகளின் நடுவே கால்கள் ஒடுங்கி  உட்கார்ந்திருக்கிறாள். அவளுடைய வெடவெடுத்த இரு கைகளும் கூப்பியிருக்கின்றன. இடுங்கிய கண்களிலிருந்து கண்ணீர் வழிகிறது. அவள் இறைஞ்சுகிறாள். நடந்ததை ஒரு கிராமத்தின் இரு சமூகங்களுக்கு இடையிலான மோதலாகச் சுருக்கிவிடுவது விஷயத்தை ஏறக்கட்டிவிட்டுக் கடக்க வசதியானது.

விவசாயிகளுக்கான போராட்டங்கள் ஏன் எரிச்சலூட்டுகின்றன?


சென்னை ஸ்ரீனிவாசா திரையரங்கம் செல்லும் வழியிலுள்ள மது விடுதியில் கோபாலசாமி அறிமுகமானார். எழுபது வயதிருக்கும். தலை முழுவதும் நரை. நல்ல தாட்டியமான உடலமைப்பு. குடியர்களுக்குப் பரிமாறிக்கொண்டிருந்தார். வெள்ளைச் சட்டை, மடித்துக் கட்டிய வேட்டி, கண்ணாடி அணிந்திருந்தவர் தன் தோளில் தேங்காய்ப்பூ துண்டைப் போட்டிருந்த விதம் அவரைத் தொடர்ந்து கவனிக்கத் தூண்டியது. சென்னைக்காரர்களின் தோற்றம் அல்ல அது. மெல்ல அவரிடம் பேசலானேன்.

தஞ்சாவூர் பக்கம். விவசாயம் நொடித்ததும், இங்குள்ள சினேகிதர் அழைக்க வந்திருக்கிறார். சினேகிதரும் விவசாயிதான். அவர் இப்போது ஒரு அடுக்ககத்தில் காவலாளியாக இருக்கிறார். கோபாலசாமிக்கு அந்த வேலையும் கிடைக்கவில்லை. இங்கும் அவருக்கு எந்தச் சம்பளமும் கிடையாது. மது குடிக்க வருபவர்கள் கேட்கும் பண்டங்களை வாங்கி வந்து பரிமாறுகிறார். புறப்படுகையில் அவர்கள் கொடுத்துச் செல்லும் பத்து, இருபது அவருக்கான வரும்படி. ஒரு நாளைக்கு இருநூறு, முந்நூறு கிடைக்கும் என்றார். எங்கே தங்கியிருக்கிறார் என்ற போது பக்கத்திலுள்ள சேரியைச் சுட்டிக்காட்டினார். ஊரில் அவருக்கு நிலம் இருக்கிறது. பிள்ளைகள் இருக்கிறார்கள். ஆனால், யாரும் யாருக்கும் உதவிக்கொள்ளும் சூழலில் இல்லை.

‘‘எங்கப்பாவுக்கு பத்து ஏக்கர் நிலம் இருந்துச்சு. என்னோட அண்ணனுக்கும் எனக்கும் சரிபாதியா பிரிச்சுக் கொடுத்தார். எனக்கு ரெண்டு பிள்ளை, ஒரு மகள். பொண்ணு கல்யாணத்தப்போ ஒரு ஏக்கர் நிலத்தை விக்க வேண்டியதாச்சு. மிச்ச நாலு ஏக்கர் நிலத்தை ரெண்டு மவன்களுக்கும் ஆளுக்கு ரெண்டு ஏக்கரா கொடுத்தேன். அந்த ரெண்டு ஏக்கரா நெலத்துல விளையறது அவனவன் குடும்பத்துக்கே சாப்பாட்டுக்குக் காணாது. ஒரு போக சாகுபடிக்கு ஏக்கருக்கு உழுவுறது தொடங்கி அறுக்குற வரைக்கும் ஆறு ஆளுங்களுக்கு மூணு நாள் வேலை (18 வேலை நாட்கள்). டிராக்டரெல்லாம் வந்த பின்னாடி அதுவும் குறைஞ்சுடுச்சு. வயலுக்குச் சொந்தக்காரன் நெதமும் வயலுக்குப் போய் வந்தாலும் நாலு மாசத்துல நெல்லு விளைஞ்சுரும். விளைஞ்ச நெல்லு சோத்துக்குக் காணும். மிச்சத்துக்கு என்ன பண்ணுவான்? மிச்ச எட்டு மாசம் என்ன வேலைக்குப் போவான்? நம்ம யாருக்கும் சுமையா இருக்கக் கூடாது. இங்கே வந்தாச்சு. கிராமத்துல சேரியை நாம ஒதுக்குனோம். நகரத்துல சேரிதான் நம்மளைச் சேத்துக்குது.’’

எல்லாப் பார்ப்பனர்களையும் ஒழித்துவிடுவோம், சாதி அழிந்துவிடுமா?


நான் பிறந்த ஊரான மன்னார்குடியிலிருந்து அதிகபட்சம் இரண்டு மணி நேரப் பயணத் தூரத்துக்குள் இருக்கிறது கீழவெண்மணி. கூலி உயர்வாக ஒரு படி நெல்லை இரு படி நெல்லாக உயர்த்திக் கேட்டுப் போராடினார்கள் என்பதற்காக 20 பெண்கள், 19 குழந்தைகள் உட்பட 44 பேர் உயிரோடு கொளுத்தப்பட்ட ஊர் அது (1968, டிசம்பர் 25). அவமானகரமான விஷயம் என்னவென்றால்,கல்லூரிப் படிப்பை முடிக்கும்வரை கீழவெண்மணியைப் பற்றியோ, அங்கு நடந்த படுகொலையைப் பற்றியோ பெரிதாக அறியாதவன் நான். இத்தனைக்கும் திராவிட இயக்கப் பின்னணியைக் கொண்டது என்னுடைய குடும்பம். சாதி, மத, இனப் பாகுபாடுகளுக்கு எதிரான உணர்வுகளுடனேயே நான் வளர்ந்தேன். ஆனால், பலரையும்போல ‘சாதி இல்லை’ என்று சொல்வதாலும் எல்லோருடனும் பரஸ்பரம் சகஜமாகப் பழகுவதாலும் மட்டுமே சாதி ஒழிந்துவிடும் என்றும் நம்பிக்கொண்டிருந்தேன். ஒருமுறை கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனைச் சந்திக்கச் சென்றேன். சாதியின் முழுக் கொடூர முகத்தையும் எனக்கு அறிமுகப்படுத்தியது அவருடனான உரையாடல்தான்.