நேதாஜி மரணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நேதாஜி மரணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நாம் ஏன் மர்மங்களினூடே நேதாஜியைப் பார்க்கிறோம்?


சுபாஷ் சந்திர போஸ் மரணம் தொடர்பான கோப்புகளை இந்தியா பகிரங்கப்படுத்துகிறதோ இல்லையோ, கூடிய சீக்கிரம் உக்ரைன் மூலம் ரகசியம் வெளியே வந்துவிடும் என்று சொன்னார் ஒரு நண்பர். சோவியத் ஒன்றிய காலத்திய 8 லட்சத்துக்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்களைப் பொதுப் பார்வைக்கு வெளியிடுவது என்று உக்ரைன் அரசு சமீபத்தில் முடிவெடுத்தது. ‘சுபாஷ் விமான விபத்தில் இறக்கவில்லை; அவர் ஸ்டாலின் காலத்தில் யாகுட்ஸ்க் சிறையில் அடைக்கப் பட்டிருந்தார்’ என்று நம்புபவர்களில் ஒருவர் அவர்.  ஸ்டாலின் அரசால் சுபாஷ் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சுப்பிரமணியன் சுவாமிபோலச் சந்தேகிப்பவர். ஆகையால், உக்ரைன் அரசு வெளியிடும் ஆவணங்களில் சுபாஷைப் பற்றிய குறிப்புகளும் வெளியே வரும் என்பது அவர் கணிப்பு.

இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றிய பெரியவர் ஒருவரிடம் சின்ன வயதில் சுபாஷின் மரணம்பற்றிப் பேசப்போய் அறை வாங்கியது நினைக்குவருகிறது. ஓங்கி அறைந்துவிட்டுத் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தார் அந்தப் பெரியவர். சுபாஷ் இறந்துவிட்டார் என்பது இந்தியாவில் பலரால் ஏற்றுக்கொள்ள முடியாதது. கடந்த ஆண்டு கொல்கத்தா போனபோது, சுபாஷ் நினைவு இல்லத்தில் வங்காளிகள் சிலருடன் பேசிக்கொண்டிருந்தேன். இன்னமும் துர்கா பூஜையின்போது சுபாஷ் திரும்புவார் எனும் நம்பிக்கை அங்கு செத்துவிடவில்லை. ஒருவேளை சுபாஷ் இப்போது திரும்பினால் அவருக்கு 118 வயதாகி இருக்கும்.