தமிழ்நாட்டில் இனியாவது அரசியல் நடக்குமா?


ஜெயலலிதா விடுதலை தீர்ப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? - இப்படிக் கேட்பவர்களிடம் எல்லாம் இந்தக் கேள்வியைத்தான் பதிலுக்குக் கேட்கிறேன்: இன்றைக்குத் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தால் யார் ஜெயிப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்?

எதிர்க்கட்சிகளின் அந்தராத்மாவிடம் கேட்டால், அதுகூட சொல்லும், ‘இன்றைய சூழலில் மீண்டும் அதிமுகதான் ஆட்சியைப் பிடிக்கும்’ என்று. இப்படிப்பட்ட சூழலில், இந்தத் தீர்ப்பை முன்வைத்து விவாதிப்பதில் அரசியல்ரீதியாக அர்த்தம் ஏதேனும் உண்டா?

வாழ்க வாய்தாவாலாக்கள்!


முதன்முதலில் இந்திய நீதித் துறையைப் பார்த்து மிரண்டுபோனது, ஷோவா பஷார் பரம்பரையின் வழக்கு தொடர்பாக செய்தி வெளியானபோது. 175 வருஷ பழமையான வழக்கு இது; இன்னும் நிலுவையில் இருக்கிறது என்று அந்தச் செய்தி சொன்னது. கொஞ்ச நாட்களில், “இந்தியாவில்தான் உலகிலேயே அதிகமான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. நாடு முழுவதிலும் 3.56 கோடி வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன; இவை தவிர ஒவ்வோர் ஆண்டும் புதிதாக 1.5 கோடி வழக்குகள் பதிவாகின்றன” என்று மேலும் அசரடித்தார் அன்றைய சட்டத் துறை அமைச்சர் ஹெச்.ஆர். பரத்வாஜ். ஒடிசா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த பி.எஸ். சௌகான் இன்னும் ஒருபடி மேலே போய், “இந்திய நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளை விசாரித்து முடிக்க இன்னும் 300 ஆண்டுகள் தேவைப்படும்” என்று பிரமிக்கவைத்தார்.